சாரல் 26 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 26

 


ராகினியை கீழே இறங்கச் சொல்லி அழைத்து வந்த காவலர் கூற, கோபத்துடன் இறங்கியவள் வேகமாக சென்று நின்றது ரவியிடம் தான்.

 

"என்ன உன் திட்டம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு போலீஸ் வச்சு மிரட்டுறியா?" என்று எடுத்தவுடன் சண்டைக்கு நிற்க, அங்கிருந்த யாருக்கும் விஷயம் புரியவில்லை, ரவி உட்பட.

 

இவர்களை அழைத்து வந்தது குறித்து வி.ஏ.ஒவுக்கு தகவல் கொடுக்க, ஊர் பிரமுகர்கள் வேகமாக அவ்விடம் அடைந்தனர்.

 

"என்ன பேசுற ராகினி? நேத்து இந்த நேரம் காணாம போன நீ. உன்னை காணலன்னு நாங்க எல்லாரும் துடிச்சு போய் உட்கார்ந்து இருக்கோம். நீ என்னடான்னா வந்ததும் ஏதேதோ பேசுற?" என்று வைதீஸ்வரி அவள் தோளைத் திருப்பிக் கோபமாக வினவ,

 

"நீங்க சும்மா இருங்க பெரியம்மா. உங்களை பத்தி எல்லாம் எங்கம்மா சொல்லி இருக்காங்க. காரணம் கிடைச்சதும் இவனை பாக்கெட்ல போட்டுகிட்ட மாதிரி என்னையும் போட்டுக்க டிரை பண்ணுறீங்க. இதுல என் அப்பா அம்மா சாவை தற்கொலைன்னு ஃப்ரேம் பண்ணுறீங்களா?" என்றதும்,

 

தன்னை தவறாக பேசியதைக் கூட உணராதவர், "உன் அப்பா அம்மா பத்தி உனக்கு யாரு சொன்னாங்க டா? முழுசா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகிட்ட பின்னாடி நீ என்ன வேணாலும் பேசு." என்று அவளுக்கு ஆதரவாக அவர் பேச, மீண்டும் ரவியிடம் பாய்ந்தாள் ராகினி.

 

அவன் அவளது எந்த கேள்விக்கும் பதில் கூறாமல், "நீ ஏதோ காரணத்துக்காக வீட்டை விட்டு போன, சரி. பக்கத்து வீட்டு பையனை ஏன் கூட்டிக்கிட்டு போன?" என்று அழுத்தமாக வினவ,

 

"நான் என்ன கேட்கிறேன், நீ என்ன என்னை கேள்வி கேட்டுட்டு இருக்க? நான் என்ன குற்றவாளியா? போலீஸ் வச்சு பிடிச்சிட்டு வந்திருக்க? நான் மேஜர். நீ என்னை இங்க அடச்சி வைக்கிறது பிடிக்காம நான் தான் வெளில போனேன். எனக்கு அந்த ரைட்ஸ் இருக்கு." என்று ராகினி கத்த,

 

அமைதியாக அவளருகில் வந்த ரவி, "புகழை ஏன் கூட்டிக்கிட்டு போன?" என்றான் மேலும் அழுத்தமாக,

 

ஆனால் பதில் அவளிடமிருந்து வராமல் புகழிடம் இருந்து வந்தது.

 

"சார் என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் சென்னையில நல்ல ஜாப் ஆஃபர் இருக்குன்னு சொல்லி போன் பண்ணினான் சார். ஆரம்பத்துல வேலை கிடைச்சு போனப்ப, முதல் முதல்ல சம்பளம் வாங்கின திமிர்ல ரொம்ப தப்பு பண்ணிட்டேன் சார். அது அப்பாவையும் அக்காவையும் எவ்வளவு பதிச்சு இருக்குன்னு அவங்க பேசினதுல எனக்கு தெரிஞ்சது. அதான் பிரெண்ட் சொன்ன வேலைக்கு போய் அக்காவோட வருத்தத்தையும் அப்பாக்கு என் மேல போன நம்பிக்கையும் மீட்க சென்னை கிளம்பினேன். இவங்க வழில பயந்து பயந்து நடந்து போய்ட்டு இருந்தாங்க. நான் என்னனு கேட்டேன், சென்னை போகணும்னு சொன்னாங்க. சென்னை பொண்ணு, தனியா போயிட்டு வர்றது ஒன்னும் புதுசு இல்லையே! நீங்க தான் அனுப்பி இருப்பீங்கன்னு நெனச்சு தான் நான் பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டிட்டு போனேன். சென்னை தானே போறோம், சேர்ந்து போகலாம்னு சொன்னாங்க.  வேண்டாம்னு சொன்னேன். அப்பறம் தனியா போக பயமா இருக்குன்னு சொன்னதால துணைக்கு போனேன் சார்." என்று விளக்கினான்

 

"சரி சென்னையில இறங்கினதும் நீ உன் வேலையை பார்க்க போகாம இவ கூட ஏன் போன?" என்று ரவி மீண்டும் கேள்வி எழுப்ப, ராகினி குறுக்கே வந்து,

 

"என் செல்லுல சார்ஜ் இல்ல. நம்ம டிரைவர் யாரையும் கூப்பிட முடியல. அதான் வீட்ல ட்ராப் பண்ண சொல்லி கேட்டேன். ஆனா அங்க போனா, வேற யாரோ இருக்காங்க. கேட்டா, நீ வீட்டை வித்துட்டன்னு சொல்றாங்க. எனக்கு தெரியாம என் சொத்தை நீ எப்படி விற்கலாம்?" என்று ராகினி குதிக்க,

 

இவளுக்கு போய் உதவி செய்து போலீசில் மாட்டினோமே என்று புகழ் நொந்து கொண்டான்.

 

"நான் அந்த வீட்டை விற்கல. அப்பா அடமானம் வச்சது மூழ்கி போச்சு. உன்கிட்ட கையெழுத்து வாங்கினது அப்பா. என்கிட்ட வந்து கேட்காத. புரியுதா?" என்று கோபத்துடன் ரவி நிற்க,

 

"அவளுக்கு  உண்மை எல்லாம் சொன்னா தானே புரியும் ரவி. அதுக்குள்ள ஏன் கோபப்படுற?" என்று ரகுராம் அவனை சமாதானம் செய்ய,

 

"என்ன சொல்ல போறீங்க? நீங்க சொல்ற கட்டுக் கதை எல்லாம் நான் நம்ப மாட்டேன். என் அப்பா கடன் வாங்கினாரா? வாய்ப்பே இல்ல. நான் கூடவே இருந்திருக்கேன். அவர் எவ்வளவு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ்மேன் தெரியுமா?" என்று கொந்தளித்த ராகினியை முதல் முறை வெறுப்பாக நோக்கினான் ரவி.

 

ராகினி வேகமாக தன் செல்போனை எடுத்து சார்ஜரில் போட, ரகுராம் போலீஸ்காரர்களுக்கு நன்றி சொல்லி அனுப்ப முனைந்து காவல்நிலையத்தில் வந்து பின்னர் கையொப்பம் இடுவதாக கூறி, கையில் கத்தையாக பணத்தை திணித்து அனுப்பி வைத்தார்.

 

ஊர் பெரியவர்கள் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் ரவியை நோக்க, அவனோ, "எனக்கு கொஞ்சம் யோசிக்கணும். அந்த பையன் புகழ் மேல தப்பில்லை. நான் என்ன பண்றதுன்னு முடிவு பண்ணிட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன்." என்று கைகூப்பி கேட்க அவர்களும் கலைந்து சென்றனர்.

 

புகழிடம் வந்த ரவி, "சாரி பா. நீ உதவியா நெனச்சு செஞ்சு இருக்கலாம். ஆனா உனக்கு அது பிரச்சனையா முடிஞ்சுடுச்சு. வேலையை பத்தி கவலைப்படாத. என்னோட சேர்ந்து சேனல் வேலை பாரு. நானே நல்ல சம்பளம் கொடுக்கிறேன்." என்று அவள் கைகளைப் பிடித்து கூறிய ரவியிடம்,

 

"ரொம்ப நன்றி சார். என்னை புரிஞ்சுக்காம ஏதும் பிரச்சனை வந்திடுமோன்னு நேத்துல இருந்து மனசு அடிச்சிட்டு இருந்தது. நான் வர்றேன் சார்." என்று தன் வீட்டை நோக்கி நடக்க, அப்பொழுது தான் அவன் வந்த தகவல் அறிந்து வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள் எழிலிசை.

 

அவளை கண்களால் பருகியபடி பெருமூச்சுடன் தன் வீட்டை நோக்கி திரும்பியவன் அங்கே ராகினி மடங்கி அமர்ந்திருக்க அவள் காதில் தெரிந்த அவன் செல்போனை கண்டு அலட்சியமாகப் புன்னகைத்தான்.

 

போனை எடுத்து ஸ்பீக்கரில் போட, அவர்களது தாய் மாமா தான் அந்தப்பக்கம் பேசிக் கொண்டிருந்தார். இல்லை இல்லை… கத்திக் கொண்டிருந்தார்.

 

"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா எனக்கே போன் பண்ணி உங்க அப்பா கடன் வாங்கலன்னு சொல்லுவ. அவர் ஷுரிட்டி போட்டதுக்கு, போன வருஷம் நாய் மாதிரி அலஞ்சது நான். இதுல என் வீட்டுக்கு வர்றேன்னு சொல்ற? உன் அண்ணன் கிட்ட அன்னைக்கு பேசின பேச்சுக்கு அவன் என்னவோ உங்களுக்கு எனக்கும் உறவே இல்லன்னு சொன்னான். ஏன் உன்னை வச்சு சோறு போட மாட்டேன்னு சொல்லிட்டானா?" என்று ஏளனமாக வினவ அழைப்பைத் துண்டித்தான் ரவி.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels