மேற்கே உன் சாரல்மழை 2
சாரல் 2
சென்னையின் அதிவிரைவு வாழ்க்கைக்குப் பழகிப் போன ராகினி காலையில் இந்த சேதுமடை வந்தது முதலே அண்ணனைக் குடைந்து கொண்டு இருந்தாள்.
"அண்ணா எப்ப ஊருக்கு போவோம்?எதுக்கு என்னையும் கூட்டிகிட்டு வந்த? எனக்கு எவ்வளவு போர் அடிக்குது தெரியுமா?" என்று ஒரு மணி நேரத்திற்குள் பத்து முறை கூறி விட்ட தங்கையை உக்கிரமாக முறைத்தான் ரவீந்தர்.
"இங்க பாரு, நானே உன்னால தேவையில்லாம நாலு முறை டேக் எடுக்க வேண்டியதா போச்சுன்னு கடுப்புல இருக்கேன் ராகினி. தயவு செஞ்சு என் ஸ்க்ரீன்ல வராத. இடையில பேசாத. நான் டப்பிங் எல்லாம் பண்ண மாட்டேன். எல்லாமே லைவ் வாய்ஸ் தான். உன் குரல் இடையில கேட்டுக்கிட்டு இருக்கு. அப்பறம் அதுக்கு தனியா நான் ஆடியோ எடிட் பண்ணனும்." என்று கூறியவனைக் கண்டு ராகினி கோபத்துடன்,
"நானும் அதை தான் சொல்றேன். இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது உன்னோட டிரிப்புக்கு என்னை கூட்டிகிட்டு போயிருக்கியா? இப்போ மட்டும் ஏன் என்னை கூட்டிகிட்டு வந்த?" என்று சிறு குழந்தை போல கால்களை தரையில் உதைத்து அவனை விட்டு விலகிச் சென்றாள்.
போகும் அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு,
"அடுத்த வீடியோல உங்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் நியூஸ் சொல்லப் போறேன் டியர்ஸ். இந்த பசுமையான இடம், குளுமையான காத்து எல்லாத்தையும் நான் அனுபவிச்சிட்டு உங்களை அடுத்த வீடியோல சந்திக்கிறேன். அது வரை உங்க கிட்ட இருந்து பயணம் போறது உங்க ரவீந்தர் பரசுராம். இது உங்க ஃபேவரட் தொடரும் பயணங்கள் சேனல். மறக்காம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க, வீடியோவை லைக் பண்ணுங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க. சீ யூ. பை" என்று ஒளிப்பதிவை முடித்துக் கொண்டு தன் கேம்பர் அருகில் சென்றான். அவன் வைத்திருப்பது டாடா விங்கர். அதில் பின் இருக்கை இல்லாமல் இருவர் தங்கி உணவு உண்ண தேவையான வசதிகளை அந்த வாகனத்தில் செய்து வைத்திருந்தான் ரவீந்தர்.
ரவீந்தருக்கு இப்படி வீடியோக்கள் தயாரிப்பது தொழில் அல்ல. அது அவனது பொழுதுபோக்கு. ஆனால் இன்றைய அவன் நிலை.. ஹ்ம்ம் நினைக்க நினைக்க அவனுக்கே சற்று மலைப்பாகத் தான் இருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் நின்று விட்டால் அவர்கள் வாழ்க்கை என்ன ஆவது?
தெரியாமலா கவிஞர் நா.முத்துகுமார் எழுதி வைத்தார்,
"வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் ஆற்றும்..."
அவர்களின் காயங்கள் ஆறுமா என்று அவனுக்கு தெரியாது. ஆனால் தன்னை விட இளையவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இருக்கிறது. அதுவே அவனை வாழ்க்கையை நோக்கி ஓட வைக்கும் என்று நம்பினான்.
தன் கேமரா, ட்ரைபாட், செல்ஃபி ஸ்டிக் என்று அவன் இத்தனை நேரம் உபயோகித்த உபகரணங்களை அவைகளை வைக்கும் இடத்தில் வைத்து வேனின் பின் பகுதியை மூடும்போது தான் ராகினி அங்கு இல்லாதது அவனுக்குப் புலப்பட்டது
புதிய இடம், யாருமில்லாத வெட்ட வெளி, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு ஓட்டு வீட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவள் எங்கே போனாள்? என்று அவன் சிந்திக்க,
அவனுக்கு பின்னால் வந்த லாரியில் இருந்த ஓட்டுநர்,
"தம்பி சமான் இறக்கி வைக்க ஆள் வந்தாச்சு, இங்க எங்க அடுக்கணும்?" என்று கேட்டதும்,
கேட்டின் வலது பக்க மூலையை கைகாட்டி, "எல்லாத்தையும் இங்க இறக்கி வைங்க அண்ணா" என்று சொன்னவன், விழிகள் தங்கையை தேடுவதில் கவனமாக இருந்தது.
வேகமாக அவன் கால்கள் அந்த ஓட்டு வீட்டை நோக்கி நடை போட , அவர்கள் வீட்டின் வெளியே ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள் ராகினி. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கத்திக் கொண்டு இருந்தாள்.
"ராகினி" என்று அழைத்துக்கொண்டு ரவீந்தர் அவள் அருகில் வர,
"பிலோமினா நீ பேசுறது சுத்தமா கேட்கல டி. இங்க டவர் இல்ல " என்று அவள் கத்த,
அவளிடம் இருந்த போனை பறித்தவன், "சொல்லாம கொள்ளாம இங்க வந்து உட்கார்ந்து இருக்க?" என்று கடுமை காட்ட,
"அண்ணா திஸ் இஸ் டூ மச். கிட்ட இருந்தா வீடியோ எடுக்க டிஸ்டர்ப் பண்றேன்னு சொல்ற. தள்ளி வந்தா சொல்லாம வந்துட்டேன்னு திட்டுற. திஸ் இஸ் டூ பேட்." என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
"சரிம்மா. புரியுது. ஆனா தெரியாத இடத்தில உன்னைக் காணோம்னா அண்ணா பயப்பட மாட்டேனா?" என்று தலையை கோதி விட்டான்.
"ம்ம். சரி. எனக்கு பசிக்குது அண்ணா" என்று அவள் கூறியதும்,
"இங்க பக்கத்துல நல்ல ஹோட்டல் எல்லாம் இல்ல தம்பி. டாப்சிலிப் போகற வழில வேணா கடை இருக்கும்." என்று கூறியபடி வந்தார் சரோஜா.
அவர் கட்டி இருந்த புடவை ஏதோ ஒரு வேலையிடத்தின் சீருடை என்பது தெரிய,
"இல்ல.. நானே சமையல் பண்ணிடுவேன்.." என்று அவரை எப்படி அழைப்பது என்று புரியாமல் குழம்பினான்.
"சும்மா ஆன்ட்டி, அம்மா எப்படி வேணாலும் கூப்பிடுங்க." என்று அவனது தயக்கம் புரிந்து கூறியவர்,
"ஆமா இந்த வெட்ட வெளில எங்க சமையல் பண்ணுவீங்க?" என்று அதிசயமாக வினவினார்.
"எங்க வண்டில எல்லா வசதியும் இருக்கு ஆன்ட்டி." என்று கூறி தங்கையை கண்களால் எழுந்து கொள்ளும்படி சமிஞை செய்தவன்,
"வர்றேன் ஆன்ட்டி" என்று விடைபெற்றான்.
அவர்கள் சென்றதும் வீட்டின் உள்பக்கமாக பார்த்து குரல் கொடுத்தார் சரோஜா
"எழிலு.. ஏ எழிலு. நான் கிளம்புறேன். நீ பார்த்து இருந்துக்க." என்று சொல்லிவிட்டு,
"இன்னிகாவது முன்பணம் தர்றானான்னு பார்ப்போம். பேரு மட்டும் பெத்த(பெரிய) பேரு ஓம் முருகா எண்டர்பிரைஸ். ஆனா மனுஷனுக்கு பெத்த(பெரிய) குணம் இல்லையே. நான் சம்பாதிச்ச காசை கொஞ்சம் முன்னக்கூட்டி கொடுன்னு கேட்டா என்னமோ அவன் காசை எடுத்துட்டு ஓடப்போறவ மாதிரி ரெண்டு நாளா குறுகுறுன்னு பாக்குறான் அந்த சூப்பர்வைசர். நாளைக்கு காலைல நான் வட்டிக்காசு கொடுக்கலன்னா ராமசாமி அண்ணே என்னை நாக்கை பிடுங்குற மாதிரி கேள்வி கேட்கும். அம்மா தாயே மகமாயி, எப்படியாவது என்னை இந்த இக்கட்டுல இருந்து காப்பாத்து" என்று புலம்பிக் கொண்டே நடந்து மெயின் ரோட்டை அடைந்திருந்தார்.
இன்னும் இரண்டு நிமிடத்தில் ஒரு மினிபஸ் வரும் ,அதில் ஏறி சேதுமடையில் இருக்கும் ஓம் முருகா எண்டர்பிரைஸ் கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் சரோஜா.
அங்கே தான் ஆறு வருடங்களாக விற்பனை பெண்மணியாக வேலை செய்கிறார். சில வருடங்களுக்கு முன் வீட்டில் அமர்ந்து ராஜாங்கம் செய்தவர். எல்லாம் மகன் ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அவர் இழுத்து தலையில் போட்டுக்கொண்ட சிரமம் தான் இவையெல்லாம்.
அப்படி சிரமத்துடன் படிக்க வைத்த மகன் படிப்பு முடிந்ததும் தன் குடும்பத்தின் சுமையை தீர்த்து தங்களை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று நம்பிய அவரது எண்ணத்தில் லாரி லாரியாக மண்ணைக் கொட்டினான் புகழேந்தி.
படிப்பு முடிந்து ஏதோ கேம்பஸ் தேர்வில் வேலை கிடைத்து பெங்களூரு சென்றவன் அடுத்த இரு மாதங்கள் வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருக்க அவனைப் பார்க்கப் போன ஶ்ரீதரன் கையோடு சேதுமடைக்கு அவனை இழுத்து வந்தார்.
இன்று வரை அப்பனும் ஏன் என்று வாய் திறக்கவில்லை. பிள்ளையும் அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை.
ஶ்ரீதரனின் ஒரே ஆறுதல் அவர்களின் மகள் எழிலிசை மட்டுமே. ஆனால் யாருடைய கண் பட்டதோ இன்று அவளை சரோஜா கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்ற ஔவையார் வாக்குப் போல வறுமையின் கோரப் பிடியில் இருந்தது ஶ்ரீதரன் சரோஜாவின் குடும்பம்.
இந்த வறுமையை மீறி வாழ்கையில் முன்னேறத் துடிக்கும் எழில் பற்றி அவளது தாய்க்கே சரியான புரிதல் இல்லாத போது, அவளை யார் முழுமையாக நம்புவார்?
- பொழியும்
Comments
Post a Comment