கவிதைகள்

 


காவியமே


காதலே...

உன் வெண்ணிற தேகம் தீண்டி தழுவிய நாட்கள் எத்தனை ..

உன்னை என் கூர் நாசியால் உளம்வரை முகர்ந்து வாசம்பிடித்த  நாட்கள் எத்தனை..

என் உயிர் தீண்டிய செய்திகளை நீல உதிரத்தால் உன் மேனியில் உதிர்த்த நாட்கள் எத்தனை..

மனம் வெதும்ப கண்ணீர் கரையோடு உன்னை கட்டி அணைத்து உறங்கிய நாட்கள் எத்தனை..

உன்னிடம் நான் உரைத்த உண்மைகளை ஒருநாளும் உலகுக்குச் சொன்னது இல்லை..

உன்னிடம் பகிர்ந்த நகைச்சுவைகள் இன்றும் என் இதழ் கடையில் சிறு பூவாய் மலர்ந்திடும்..

நீ என்னை அறிந்தது போல் உலகில் என்னை அறிந்தார் யாரும் உளரோ..

உன்னை மார்போடு அணைத்திட , உன்னில் உணர்ந்திருக்கிறேன் என் இதயத்துடிப்பை..

என் பிரதிபிம்பமே, நீ நாட்குறிப்பு அல்ல என் நினைவுகளை மீட்டெடுக்கும் காவியம்..

இன்று உன்னை மீட்டெடுக்க தெரியாமல் தொலைத்துவிட்டு தேடும் நான்..


தனிமை


விரும்பும் இதயத்திற்கு வானவில்..
வெறுக்கும் இதயத்திற்கு இருள்..
தேடும் இதயத்திற்கு விடியல்...
நாடும் இதயத்திற்கு தோழி..
மொத்தத்தில் நம் பார்வைக்கு
தன்னை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி ..
தனிமை..


விண்மீன் பறிக்கும் பெண்ணே!



விண்மீது வெண்பிறைக்கு மட்டுமே இடமென்றால்
வெள்ளிகள் நாங்கள்
வெளியே செல்வதா?

விண்மீது ஏறி
வீணாக்காமல் பறித்திடம்மா
கூடைக்குள் சேர்த்துவிடு
கூட்டமாய் குடியிருப்போம்

செவ்வானின் செதில்கள் நாங்கள்
செங்கதிரோன் செய்கையினால்
செலவில்லாமல் உனக்கு
செய்தி சொன்னோம்

நீலவானில் நீங்காத
நட்சத்திரங்கள் நாங்கள்
நீளமாய் நின்று நீ
பறிக்கும் அழகினில்

கூடைக்குள் கூட்டமாய்
குழுமியே வருகிறோம்
கூடத்தில் வைத்தாலும்
கூந்தலில் சூடினாலும்

காரிகை உன் கைகளில்
காந்தமாய் சேர்ந்துவிட்டோம்
காரிருள் போய் காலை வருவதற்குள்
கன்னிகையே காத்திடுவாய்
கதிரவன் போனதும்
மீண்டுமே சேர்த்திடுவாய்

விண்மீது வெண்பிறை
அழகென்றால்
இமை தட்டும் நாங்களும்
இயல்பிலே அழகன்றோ

கூடைக்குள் கூடி நின்று
நாங்களில்லா வானம் காண
விழிகள் நிறையவில்லை
விண்ணும் முழுமையில்லை.



Comments

Popular posts from this blog

மேற்கே உன் சாரல்மழை -1

மேற்கே உன் சாரல்மழை 2

மேற்கே உன் சாரல்மழை 7