மேற்கே உன் சாரல்மழை 7
சாரல் 7
தங்கள் வேனை நோக்கி சற்று வயதான மனிதர் கரடு முரடான பாதையில் நடந்து வருவதை கவனித்த ரவீந்தர் அவருக்கு வெளிச்சம் தெரிவது போல விளக்கைத் தூக்கிப் பிடித்தான்.
"தம்பி, வணக்கம் பா" என்று அவர் கை கூப்ப, அவனும் விளக்கை அங்கே இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு,
"வணக்கம் சார்" என்று அவனும் மரியாதையாக கரம் குவித்தான்.
"என்ன தம்பி இப்படி வெட்ட வெளில வண்டில வந்து தங்கி இருக்கீங்க?"என்று நேரடியாக விஷயத்துக்கு வர,
அவன் லேசான தயக்கத்தோடு, "சார் நீங்க?" என்று இழுத்தான்.
"நான் பக்கத்துல, அதோ தெரியுதே... அந்த வீட்ல இருக்கேன் பா. இங்க தான் சேது மடை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில கம்பவுண்டரா இருக்கேன். தனியா ஏன் பா இருக்கீங்க?" என்று அறிமுகம் செய்து கொண்டு வினவினார்.
"நல்லது சார். இடம் வாங்கி கட்டி இங்கேயே செட்டில் ஆகப்போறோம். வண்டில தங்கிக்க வசதி இருக்கு. அதுனால நான் கிளம்பி வந்தோம். ஒரு பிரச்சனையும் இல்ல." என்று வேனை திறந்து காட்டினான்.
அதில் பின் புறம் முழுவதும் படுக்கை வசதி செய்யப்பட்டு இருக்க,
"நீங்க தங்கலாம் சரிதான் தம்பி. ஆனா வயசுப் பிள்ளை இருக்காமே!" என்று அவர் தயங்க,
அவரை ஒரு மாதிரி பார்த்தவன், "அதுவும் ஒன்னும் இல்ல சார். டென்ட் கட்டி இருக்கேன். ராகினி அங்க சேஃபா இருப்பா" என்று பின்னால் கட்டப்பட்டிருந்த டென்ட்டைக் காட்டினான்.
"என்ன இருந்தாலும் பாதுகாப்பு இல்லையே தம்பி. வெறும் துணி தானே! எனக்கும் பொண்ணு இருக்கு பா. அதான். அவ தான் உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமான்னு கேட்க சொன்னா." என்று அவர் சொன்னதும் ரவீந்தர் மனதில்,
'ஓ. காலைல அந்த பையனுக்கு அட்வைஸ் பண்ணின பொண்ணு. பரவாயில்லை யாரோ என்று நினைக்காம, பொண்ணு இருக்குன்னு உதவி வேணுமான்னு கேட்டு அவங்க அப்பாவை அனுப்பி இருக்கு' என்று எண்ணியவன்,
"இல்ல சார். எங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு. உங்க மகளுக்கு எங்க நன்றியை சொல்லிடுங்க." என்று அவன் மீண்டும் கரம் குவிக்க, அவரும் விடைபெற்று வந்தாலும் அவனை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வாசல் திண்ணையில் துண்டை உதறி விட்டு அமர்ந்தவர், சட்டை பட்டன்களை கழட்டிக் கொண்டே,
"செல்லம் இங்க வா டா" என்று அழைக்க, கையில் தெரு நாய்க்கு உணவை எடுத்துக் கொண்டு வந்தாள் எழில்.
"என்னவாம் பா? ஏன் அங்க தங்கி இருக்காங்க?" என்று கேட்டபடி நாய்கென்று திண்ணை ஓரத்தில் கவிழ்த்து வைத்திருந்த பாத்திரத்தில் உணவை இட்டு சற்று தள்ளி கொண்டு போய் வைத்தாள்.
"அவங்க எல்லாமே ஏற்பாடா தான் வந்திருக்காங்க மா. அந்த பையன் வண்டிக்குள்ள தூங்க படுக்கை எல்லாம் இருக்கு. அந்த பொண்ணுக்கு வெளில டென்ட் காட்டி வச்சிருக்கான். ஆனா மரியாதையான பையன் மா. பொறுமையா பதில் சொன்னான். நீ யாரு யா கேள்வி கேட்கன்னு அவன் சொல்லி இருந்தா கூட அவன் கிட்ட இருக்குற பணத்துக்கு அதெல்லாம் ஒன்னுமில்ல. இருந்தாலும் பணிவு காட்டினான் பாரு, அது தான் மா குணம்." என்று பெருமூச்சு விட்டவர்,
"நான் என் பையன் சம்பாதிக்கணும் இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்தணும்னா மா கனவு கண்டேன்? நான் ஆசைப்பட்டது எல்லாமே என் பையன் பண்பாளனா இருக்கணும்னு தானே! சிகரெட், தண்ணி, போற வர்ற பொண்ணுங்களை கேலி செய்யுறது.. இதெல்லாம் வயசு காலத்துல வர்றது தான், நானும் இல்லன்னு சொல்லல. ஆனா எதுவும் எல்லை மீறாம இருக்க வேண்டாமா? எனக்கு மட்டும் ஏன் செல்லம் இப்படி நடக்குது? அவனை நல்லவனா வளர்க்க நினைச்சேன், இப்படி தறுதலையா நிக்கிறான். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க நினைச்சேன், அதுவும்.. " என்று அவர் பேசி முடிக்கும் முன் "வ்ரூம்..." என்ற உறுமலுடன் வீட்டு வாசலில் தாறுமாறாக வந்து நின்றது புகழின் வாகனம்.
"டேய் புகழு!" என்று எழில் பதறி முன்னே வர,
"விடு செல்லம் அவன் விழுந்து எழுந்து வரட்டும்." என்று சொன்னவர்,
"இவனுக்காகவா நீ அவ்வளவு பேசின? இங்கேயே குடிச்சிட்டு விழுந்து கிடக்கட்டும் மா. ஊருக்கு அனுப்பினா இவன் எங்க கிடக்குறானோன்னு பெத்த மனசு தினமும் உயிரோட சாகும்." என்று கூறியவர் விழியோரம் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
எழில் புகழின் நிலை பார்த்து, அருகே வர, "அதான் சொல்லிட்டார்ல கா, நீ என்கிட்ட வராத. என்னையும் விட மாட்டாரு. இப்படியே என்னை சாகடிக்காம இவர் போக மாட்டாரு. என்னையும் இவரைப்போல இந்த ஊர்ல ஏதோ உருப்படாத வேலை பார்க்க வைக்க தான் ஆசைப்படுறாரு. எனக்கு அப்ப என்ன சம்பளம் தெரியுமா? நான் அந்த ரெண்டு மாசம் எப்படி வாழ்ந்தேன் தெரியுமா?" என்று குடி போதையில் அவன் புலம்ப,
அவன் குடிக்கவில்லை என்பது அவன் பேச்சு குழறாத போதே எழிலுக்குப் புரிந்தது.
"புகழ், உன் நடிப்பை நிறுத்து, நீ குடிக்கல. அப்பறம் ஏன் அப்பா முன்னாடி அப்படி நடந்துக்கற?" என்று கண்டிப்புடன் வினவ,
"என்ன பண்ண சொல்ற கா? நீ குடிக்காதன்னு சொல்ற, அவர் வெளியூர் போகாதன்னு சொல்றாரு, அம்மா காசு சம்பாதிசிட்டு வான்னு சொல்றாங்க. நான் என்ன செய்ய? அதான் அவரை கடுப்பேத்தி பார்க்க குடிச்ச மாதிரி வண்டியை முறுக்கினேன்." என்று விளக்கம் கொடுத்தான்.
சலிப்பாக அவனை நோக்கிய எழில், "கஷ்டபட்டு பேசி நீ சென்னை போக அவரை சம்மதிக்க வச்சிருந்தேன் டா. இப்படி நீயே அதை கெடுத்துட்ட. போ. கொஞ்ச நாள் ஊருக்குள்ள ஏதோ வேலையை பாரு புகழ். மறுபடி அப்பாவை நான் சமாதானம் பண்ணுறேன்." என்று அவன் தோளில் தட்டிவிட்டு, வாசல் வரை சென்ற எழில் பின்னால் திரும்பி,
"அக்கா சொன்னதுக்கு மரியாதை கொடுத்து குடிக்காம வந்ததுக்கு ரொம்ப நன்றி டா புகழ். எங்க இந்த ஊரு மாதிரி நீயும் என்னை ஏதாவது பேசுவியோன்னு அப்பப்ப மனசுக்குள்ள படபடப்பா இருக்கும்." என்று சொல்லி அவள் முன்னே நடக்க,
"அக்கா" என்று அவளை பின்னால் வந்து அணைத்துக் கொண்டான் புகழேந்தி.
"எனக்கு தெரியும் கா, நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன். ஆனா ஒரு நாளும் தப்பா போக நினைச்சது இல்ல கா. ஒரு ஆர்வத்துல ஏதாவது செய்வேன். ஆனா உன்னை என்னைக்கும் நான் குறைவா நினைச்சது இல்ல கா" என்று அவள் தோளில் தலை சாய்த்துக் கொண்டான்.
"தேங்க்ஸ் டா புகழ். அப்படின்னா நாளைக்கு நான் சொன்ன கடையை போய் நாமளே விசாரிக்கலாமா?" என்று அவன் தலையில் லேசாக அவள் தலை சாய்த்துக் கேட்க,
"சரிக்கா. ஆனா பிடிக்கலன்னா என்னை எதுவும் சொல்லக் கூடாது" என்று நிபந்தனை விதித்தபின் ஒப்புக் கொண்டான்.
இருவரும் மகிழ்ச்சியாக உள்ளே சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கினர்.
காலை வழக்கம் போல இருள் விலகியும் விலகாமலும் அவ்விடம் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க,
கோலம் போட வந்த எழில் அன்னையின் வார்த்தைகள் மனதில் கொடுத்த வலி காரணமாக, வாசலில் ஒரு நட்சத்திரம் வரைந்து அதனை சுற்றி பூக்களை வரைந்து முடித்தாள். நிமிரும் நேரம் அவர்கள் வீடு இருக்கும் பாதையில் கையில் செல்ஃபி ஸ்டிக்குடன் ஜாகிங் செய்தபடியே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் ரவீந்தர்.
அவனது இனிய குரலில் "புலராத காலை தனிலே" என்று ராகமிழுக்க, அவனது குரல் அவள் மனதில் எப்பொழுதும் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவன் அவள் கண்களில் இருந்து மறையும் வரை நின்றுவிட்டு உள்ளே தன் வேலைகளை கவனிக்கச் சென்றாள்.
அங்கே தனியாக இருந்த ராகினியோ கோபத்தில் உச்சத்தில் இருந்தாள்.
- பொழியும்
Comments
Post a Comment