சாரல் 21 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 21

 


ராகினி கடுங்கோபத்துடன் குளிரடிப்பதை உணர முடியாத அளவுக்கு உள்ளே வெம்மை ஏற நடந்து கொண்டிருந்தாள்.

 

தன் அண்ணன் ஏதோ மனமாற்றத்திற்காக சென்னையில் இருந்து சில நாட்கள் இங்கே தங்க வந்திருக்கிறான் என்று அவள் நம்பிக் கொண்டு அமர்ந்திருக்க, அவனோ தன்னுடைய தனிமை பயணத்துக்கு தாய் தந்தையின் தொழில் தடையாக வந்து விடுமோ என்று எண்ணி அவர்களையே காரணம் காட்டி இங்கே வந்து முழுவதுமாக இடம்பெயர்ந்து இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

 

அதிலும் அவனுடைய முடிவை திணிப்பதற்காக தாய் தந்தை விபத்தில் இறந்ததை தற்கொலை என்று பேசும் அவனது கிறுக்குத்தனத்தை ஏற்கவே முடியாது என்று எண்ணியவள் இனி அவனுடன் இங்கே தங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

 

சென்னை வீட்டின் சாவி எப்படியும் காளியம்மாளிடம் தான் இருக்கும். இனி எதுவாகிலும் அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இடத்தில் இருந்து மெயின் ரோடு செல்லும் சாலையில் வந்து நின்றாள்.

 

இது வரை வீரமாக வந்து விட்டவளுக்கு இதை கடந்து எப்படி சென்னை செல்வது என்று யோசனை பிறந்தது.

 

வேகமாக ஒலா, ஊபர் போன்ற மகிழுந்து சேவையை தேடியபோது அவளது செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் எந்த சேவையையும் இப்பொழுது பெற இயலாது என்றது.

 

கடுப்புடன் கால்களை உதைத்துக் கொண்டு மேலும் சில எட்டுக்கள் நடந்தாள்.

 

இன்று மோசமான நாள் என்று எண்ணியது அவள் மனம். பிறந்தது முதல் இத்தனை தூரம் அவள் நடந்ததே இல்லை எனலாம். வீட்டில் கூட அவள் இருக்கும் இடத்தில் அனைத்தையும் கொண்டு வந்து கொடுக்க வேலையாட்களை வைத்திருந்தார் மேகலா. ஆனால் இன்று ரவியால் அவள் எத்தனை தூரம் அலைந்து களைத்துப் போய் விட்டாள் என்று நொந்தபடி வந்தவள், சற்று தொலைவில் பேருந்து நிறுத்தம் தெரிய, மகிழ்வுடன் வேகமாக அங்கே சென்று பார்த்தாள்.

 

அதன் சுவர்கள் முழுவதும் கரியால் கிறுக்கப்பட்டு, ஆங்காங்கே உடந்த கண்ணாடி பாட்டில்களும், சிகரெட் துண்டுகளும், பான்பராக் துப்பிய எச்சிலும் அவளால் அவ்விடத்தை நொடியும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

 

வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள், சாலையில் எரிச்சலுடன் நடையைத் தொடர்ந்தாள்.

 

யாரோ பின்னால் வரும் சத்தம் கேட்க நெஞ்சில் பயப்பந்து எழுந்து வந்து மூச்சை அடைத்தது.

 

கால்கள் வேகமெடுக்க, பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடியவள் யார் மீதோ மோதி அப்படியே சரிந்தாள்.

 

ரவியின் வீட்டில் நெடு நேரமாகியும் ராகினி திரும்பாததை கவனித்து ரவியிடம் கேள்வி எழுப்பினார் வைதீஸ்வரி.

 

"என்ன ரவி இது? மணி என்ன ஆகுது பாரு. தெரியாத இடத்தில இந்த குளிர்ல போய் யாராவது ஊர் சுத்துவாங்களா?" என்று கேட்க,

 

"பக்கத்து வீட்ல எழிலிசைனு ஒரு பொண்ணு இருக்காங்க. அவங்க கூட நம்ம இடத்தில உள்ள சின்ன மேட்டுக்கு தான் போயிருக்கா. வந்திடுவா. நான் அவளை நம்பி அனுப்பல பெரியம்மா அவங்களை நம்பி தான் அனுப்பி இருக்கேன்" என்றான் அமைதியாக.

 

"என்ன இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு ரவி." என்று வெளியே போய் நின்று பார்க்க ஆரம்பித்தார் ஈஸ்வரி.

 

அவனும் அவருடன் வந்து உள்ப்பக்கமாகப் பார்த்தவன் திரும்பி வெளியே பார்க்க, கேம்பர் வேனில் உள்ளே விளக்கு எரிவதை கவனித்தான்.

 

"அவ வந்துட்டா போல பெரியம்மா. வேன்ல லைட் எரியுது பாருங்க." என்று அதை நோக்கி அவன் நடக்க,

 

"வெளில போயிட்டு வந்தா வந்துட்டேன்னு சொல்லணும்னு கூட உன் அம்மா இவளுக்கு சொல்லித் தரலையா ரவி? எப்படிப்பா இவளை கரை சேர்க்க போறோம்?" என்று பயமும் வருத்தமுமாகக் கூறினார்.

 

"விடுங்க பெரியம்மா. மெதுவா சொல்லி மாத்திக்கலாம். அதான் வந்துட்டால்ல" என்றபடி வேன் கதவைத் திறந்தவன் அங்கே படுக்கை விரிக்கப்பட்டு அவளுக்காக அவன் கொடுத்த க்வில்ட் நடுவில் மொத்தமாய் சுருண்டு இருப்பதைக் கண்டு,

 

"தூங்குறா போல பெரியம்மா" என்றான்.

 

"என்ன டா உளற்ற? மணி ஏழு தான் ஆகுது. இந்நேரம் யார் தூங்குவா?" என்று கேட்டவரிடம் , சிரித்தபடி,

 

"அவ தூங்குவா, சின்ன பிள்ளை மாதிரி வாயில விரல் போட்டுட்டு நேரம் காலம் இல்லாம தூங்குவா பெரியம்மா" என்று சொன்னவன் குரல் வெகுவாக இளகி இருந்தது.

 

"இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ரவி." என்று அவர் கண்டிப்புடன் கூற,

 

"ஏன் பெரியம்மா இப்படி சொல்றீங்க? என்னை நீங்க தானே வளர்த்தீங்க. ஒருநாளும் என்னை இப்படி திட்டுனது இல்லையே! அவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கண்டிப்பு காட்ட சொல்றீங்க? அவ பொண்ணுன்னு தானே?" என்று மனதில் இருந்த ஐயத்தை வினவினான்.

 

"இல்ல ரவி. சில பழக்கங்கள் நம்ம உடம்புல ஊறி போயிடும். அப்பறம் அதை வாழ்க்கை முழுக்க மாற்றவே முடியாது. அதான் அவளை இப்போவே சரி பண்ணனும்னு துடிக்கிறேன். எனக்கு நீயும் அவளும் வேற இல்ல ரவி. நாளைக்கு கல்யாணமாகி போற வீட்ல அவ கஷ்டப்பட்டா நாம தானே அதை பார்த்து வருத்தப்பட வேண்டியது வரும்?" என்று கூற,

 

"அப்படி கஷ்டப்படுற வாழ்க்கையை என் தங்கச்சிக்கு அமைச்சுக் கொடுக்க மாட்டேன் பெரியம்மா." என்றான் அன்போடு.

 

அவன் மனதில் பல கணக்குகள் போட்டு வைத்திருக்க, ராகினி அவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி அவள் ஒரு கணக்கைப் போட்டாள்.

 

இவர்கள் எல்லாம் தங்கள் விருப்பத்துக்கு கணக்கு போட்டு காய் நகர்த்த நினைக்க விதி இவர்களைக் கண்டு சிரித்தபடி தன் ஆட்டத்தை அழகாக ஆடத் துவங்கி இருந்தது.

 

அங்கே பயத்தில் விழுந்தவளை ஒரு பெண் தாங்கிப் பிடிக்க,

 

"இங்க பஸ் எங்க வரும்?" என்று பயத்துடன் வினவினாள் ராகினி.

 

"அதோ அங்க" என்று அவர் கை காட்டிய திசையில் வேகமாக அவள் நடக்க, சற்று தொலைவில் ஒரு இரு சக்கர வாகனம் அவளருகில் நின்று அவள் அதில் இருந்தவரிடம் பேசிவிட்டு அதிலேயே ஏறிச் சென்றது கண்டு புரியாமல் அந்த பெண்மணி விலகி தன் வீடு இருக்கும் பாதையில் நடந்தார்.

 

இங்கே வீட்டில் கோபத்துடன் பின்னால் உள்ள கல்லில் அமர்ந்திருந்த எழிலிசை, தன் அன்னையை மன்னிக்க முடியாமல் மனதிற்குள் போராடினாள்.

 

அவர் தனக்கு செய்ய நினைத்த அநியாயங்கள் ஒன்றா இரண்டா? தம்பிக்கு நல்லது செய்யத் தானே என்று அவளும் கூட அவரது எண்ணத்துக்கு முதலில் சம்மதம் கூறினாள். ஆனால் நாள் செல்லச் செல்ல தாயின் அலட்டல்களும் தம்பியின் ஊதாரித்தனமும் அவளுக்கு புலப்பட ஆரம்பித்ததும் இனி அன்னையின் பேச்சைக் கேட்பதில்லை என்ற முடிவுக்கு வந்தவள், அந்த கோர சம்பத்தின் பின் அதன் தாக்கத்தில் இருந்த தனக்காக யோசிக்காமல், அப்பொழுதும் அவரையும் புகழையும் மட்டுமே எண்ணி கணக்குப் போட்ட அன்னையின் மேல் வெறுமையான உணர்வு தோன்றியதும், அவர் பேச்சைக் கேட்கவே முடியாது என்று மறுத்து அவருக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாள். அன்று ஆரம்பித்த அன்னையின் பேச்சை இன்றும் அவளால் நிறுத்த முடியவில்லை.

 

ஏதோ யோசனையில் இருந்தவள் அப்படியே திரும்பி ரவியின் வீட்டை நோக்க, அங்கே ரவி அங்கும் இங்கும் பதற்றமாக ஓடுவதும் அவன் பின்னால் வயதானவர்கள் இருவர் படபடப்புடன் அலைவதும் புலப்பட, வேகமாக அவ்விடம் நோக்கி ஓடினாள் எழில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels