சாரல் 20 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 20
"இன்னும் ஏன் இங்கேயே சுத்திகிட்டு இருக்க? போ என் கண்ணுல படாம போய் தொலை." என்று எதிரில் நின்ற மகன் மேல் மொத்த கோபத்தையும் கொட்டி விட்டு திண்ணை ஓரத்தில் சாய்ந்து அமர்ந்தார் ஶ்ரீதரன்.
இவன் ஒருவனை மையமாக வைத்து சரோஜா செய்த செயல்கள் தான் எத்தனை? நல்லது செய்கிறாள் என்று நம்பி அவளுக்கு துணை போய், இன்று அவமானப்பட்டு நிற்கும் போது விழித்துக் கிடக்கும் புத்தி அன்று அவள் ஆடியபோது ஏன் உறங்கிக் கொண்டிருந்தது என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு அப்படியே சரிந்து படுத்தார்.
புகழ் அவர் அருகில் வந்து மன்னிப்பு வேண்டியதோ, அவர் அவனை கவனிக்காமல் இருந்ததால் அழுதபடி வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனதோ அவர் அறியவில்லை.
இந்த வீட்டில் நிலவரம் இப்படி இருக்க, பெரியப்பா பெரியம்மா வந்ததும் அவர்களை உபசரித்து விட்டு அருகில் அமர்ந்தான்
ரவீந்தர்.
"இந்த இடம் போதுமா ரவி?" என்று மனம் பொறுக்காமல் வினவினார் வைதீஸ்வரி.
"பெரியம்மா வீடு சின்னதோ பெருசோ, மனசு நல்லா இருந்தா போதும் எனக்கு." என்றான்
புன்னகை முகமாக.
"சரியா சொன்ன ரவி." என்ற ரகுராம், மனைவியிடம் இப்பொழுது பேசு என்பது போல சாடை காட்ட,
"என்னாச்சு பெரியப்பா?" என்று வினவியவன் முன் இரண்டு புகைப்படங்களை வைத்தார் வைதீஸ்வரி.
"இது நமக்கு வேண்டப்பட்ட குடும்பத்து பொண்ணுங்க தான் ரவி. ஒரு பொண்ணு எம். பி.ஏ பண்ணிட்டு வேலைக்கு போகுது. இன்னொரு பொண்ணு பி. ஈ பண்ணிட்டு காலேஜ்ல வேலை செய்யுது. நல்ல குடும்பம், நல்ல பொண்ணுங்க. உனக்கு யாரை பிடிச்சிருக்குன்னு சொல்லு, இந்த வாரம் போய் பார்த்து பேசி முடிச்சிடலாம்." என்று அவர் கூற,
"என்ன பேசுறீங்க பெரியம்மா, அப்பா அம்மா இறந்து ஒரு மாசம் தான் ஆகுது. நீங்க ராகினிக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேட்டப்பவே வேண்டாம்னு சொன்னேனே! அப்பறம் நான் எப்படி கல்யாணம் பண்ண முடியும்?" என்றான்
கோபமாக,
"இங்க பாரு ரவி, எனக்கு அது தெரியாதா? இப்போ சாஸ்திரம் சம்பரதாயம் பார்க்கறதை விட உன்னோட மனநிலை தான் முக்கியம். உனக்கு இந்த நேரம் தோள் கொடுக்க மனைவின்னு ஒருத்தி இருந்தா கண்டிப்பா இந்த சூழ்நிலையை நீ கடந்து வந்திடலாம்." என்று ரகுராம் கூறினார்.
"அது எப்படி பெரியப்பா? ஒரு கல்யாணம் எல்லாத்தையும் மாத்துமா?" என்றான்
விரக்தியாக.
"மாத்தும் ரவி. நம்ம இணை நம்மளை அந்த மாதிரி உணர வைப்பாங்க. ராகினிக்கு கல்யாணம் பண்ணி வைக்க கேட்டப்ப என்ன சொன்ன? ஊர் மெச்ச கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு சொன்ன தானே! அப்படி செய்ய உனக்கு முதல்ல கல்யணமாகி, உரிமையா எல்லாத்தையும் எடுத்து செய்ய ஒருத்தி வரணும் ரவி. ராகினி குணத்துக்கு சட்டுன்னு கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாது. உனக்கு வர்றவ எப்படி இருக்கான்னு பார்த்து பழகினா தான் அவளுக்கும் நாளைக்கு போற வீட்டுல எப்படி இருக்கணும்னு புரியும்." என்றார்
வைதீஸ்வரி.
"நீங்க சொல்றபடி நான் ஒத்துக்கிட்டாலும் ஒருவேளை அவங்க வீட்ல எங்க அப்பா, அம்மா விஷயம் தெரிஞ்சு கல்யாணம் வேண்டாம்னு சொன்னா எனக்கு தான் அவமானம் பெரியப்பா. அப்பறம் நான் வாழ்நாள் முழுக்க கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்."
என்று திட்டவட்டமாகக் கூறினான்.
இவன் இப்படி பேசும்போது கன்டெய்னர் வாயிலை அடைந்த ராகினி, பெற்றோர் பெயர் அடிபடவும் உள்ளே வராமல் வாயிலில் நின்றாள்.
"டேய் உங்கப்பன் ஒரு பைத்தியக்காரன். அவ்வளவு சம்பாதிச்சவனுக்கு ஒரு சரிவு வந்தா அதை சமாளிக்கத் தெரிய வேண்டாமா? இல்லன்னாலும் நம்ம கிட்ட சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு காரைக் கொண்டு மோதி செத்து... எத்தனை பிரச்சனை தெரியுமா?" என்றார்
ரகுராம் எரிச்சலாக.
அவர் மனதில் இத்தனை நாளாகத் தேங்கி இருந்த உணர்வுகள் வெளியே வந்து கொண்டிருந்தது.
"அதை தான் சொல்றேன் பெரியப்பா. ஏற்கனவே சென்னையில இந்த பிரச்சனை வரவும் தானே நான் இங்க வந்து இருக்கேன். இப்போ நாமளே தேடி போய் மறுபடி மனசளவுல காயப்படணுமா?" என்றான்
ரவி உருக்கமாக.
வெளியே நின்ற ராகினிக்கு அவர்கள் பேசுவது புரியவில்லை. முக்கியமாக தந்தை தாயின் இறப்பு பற்றிய அவர்கள் பேச்சு புதிராக இருக்க, அப்படியே நின்றாள்.
"எல்லாத்துக்கும் பயப்பட முடியாது ரவி. அன்னைக்கு பயந்து நின்றிருந்தா இந்நேரம் நீ இங்க இருக்க முடிஞ்சு இருக்காது. அன்னைக்கு எப்படி தைரியமா எல்லாத்தையும் நின்னு செஞ்சியோ அப்படியே நினைச்சு இன்னிக்கும் நாங்க சொல்றத செய்." என்று ரகுராம் அவன் தோளில் கரம் பதித்தார்.
"ஆனாலும் பெரியப்பா, அப்பா அம்மா இல்லாம இப்படி உடனே கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்ல. எப்படி இருந்தாலும் இனிமே நான் இங்க தான் இருக்க போறேன். அதுக்கு முதல்ல பொண்ணு வீட்ல சம்மதிக்கணும். அம்மா அப்பா விஷயம் வேற இருக்கு. அடுத்து ராகினி.
அவளைப் பத்தி நானா சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்ல. அவ கிட்ட இப்போ வரைக்கும் இங்க தான் இருக்கப் போறோம்ன்னு நான் சொல்லவே இல்ல. வர்ற பொண்ணுக்கும் ராகினிக்கும் ஒத்து வரணும்.
இதெல்லாம் விட, எனக்கு யூட்யூப் வருமானம் மட்டும் தான் இப்போ இருக்கு. இதை சொன்னாலே பொண்ணு வீட்ல வேண்டாம்னு சொல்லிடுவாங்க." என்றான்
திடமாக.
"டேய். அதெல்லாம் பொண்ணு தருவாங்க. அப்பா அம்மா விஷயமும் அவங்களுக்கு தெரியும். உன் வருமானம் ஒன்னும் பிரச்சனை இல்ல. இப்போதைக்கு உன் தங்கச்சி மட்டும் தான் பிரச்சனை. ஆனா அதையே நெனச்சுட்டு இருக்க முடியாது ரவி. உனக்கும் வயசு ஆகுது. இப்ப உனக்கு துணையும் தேவையான சூழல். சென்னையில் இருக்க முடியாத நிலைமை. இதை ராகினி புரிஞ்சுக்க தான் வேணும். சும்மா அவளையே காரணம் காட்டாத ரவி. இத்தனை நாள் அவளோட அம்மா அவளை கெடுத்து வச்சது போதும். இனிமேலாவது நீ அவகிட்ட கொஞ்சம் கண்டிப்பா இருந்து வழிக்கு கொண்டு வா. நம்ம நிலமைக்கு தான் நாளைக்கு அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க முடியும். சும்மா உங்க அப்பா மாதிரி வானத்துல கூரை போட முடியாது, உங்க அம்மா மாதிரி இருந்த இடத்தில இருந்தே காரியம் சாதிக்க முடியாது. அவளுக்கு அதை புரிய வச்சுத் தான் ஆகணும்." என்று மகனை திருமணத்துக்காக சம்மதிக்க வைத்துவிடும் நோக்கில் முதல் முறையாக சற்று கடுமையாகப் பேசிவிட்டார் வைதீஸ்வரி.
ஆனால் இவர்கள் அறியாதது என்னவென்றால் இதயெல்லாம் காதில் வாங்கிய ராகினி, கேம்பர் வேனில் இருந்த தன் கைப்பையுடன் அங்கிருந்து கிளம்பி விட்டாள் என்பது தான்.

கருத்துகள்
கருத்துரையிடுக