சாரல் 80 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 80

 


எழிலிசையும் வைதீஸ்வரியும் ராகினியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினர். அவள் பழைய ராகினியாக இருந்திருந்திருந்தால் சுகமாக படுத்துறங்கி அதனை ரசித்து மகிழ்ந்திருப்பாள்.

 

ஆனால் இன்றைய ராகினி எறும்புடன் போட்டி போடும் அளவுக்கு சுறுசுறுப்பு நிறைந்தவளாக மாறி இருக்க, அவர்களின் அன்பைக் கனிவோடு அவ்வப்போது மறுத்து தன் தாய்மையின் சுகவேதனைகளைத் தாங்கிக் கொண்டு புகழின் கடையை முழுவதுமாக அவளே கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

புகழ் புதிதாக ஆரம்பித்த தொழிலில் கவனம் செலுத்த தன்னால் முயன்றவரை அவனுக்கு உதவினாள்.

 

எழில் அன்று பெரியவர்களை அழைத்து ராகினிக்கு வளைகாப்பு நடத்த நாள் பார்க்கக் கூறினாள்.

 

ஶ்ரீதர் தான் செலவுகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல,

 

"அப்பா நம்ம வீட்டு விசேஷம் நீங்க நடத்தி வைக்கணும்ன்னு மட்டும் தான் ஆசைப்படுறோம். செலவெல்லாம் இன்னார் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. இப்பவே நாம எல்லாரும் சேர்ந்து தான் பண்ணையில உழைக்கிறோம். நாளைக்கு அவர் கிட்ட சொல்லி சம்பளம் போட சொல்லவா?" என்றாள் உரிமைக் கோபத்துடன்.

 

"அப்படி இல்லம்மா. என் மருமகளுக்கு நான் செய்ய ஆசைப்பட்டேன்." என்றார் சிரிப்புடன்.

 

ரவி மனைவியின் பேச்சை ரசித்த வண்ணம் அமர்ந்திருக்க, ரகுராம் அவனிடம்,

 

"என்னப்பா அமைதியா இருக்க?"

 

"நான் நாளைக்கு இதைப் பத்தி பேசணும்னு இருந்தேன் பெரியப்பா. இவ எனக்கு முன்னாடி எல்லாத்தையும் செய்யறா. இவளுக்கு என்ன திருப்பி செய்ய போறேன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா அதுக்கு உங்க உதவி வேணும்." என்று மெதுவாக தன் மனதில் இருந்த திட்டத்தைத் தெரிவித்தான்.

 

"நல்ல விஷயம் தான் ரவி. தாராளமா செய்." என்று தட்டிக் கொடுத்து மகனைப் பெருமையாக நோக்கினார்.

 

நாள் குறிக்கப்பட்டு ஏற்பாடுகள் ஆரம்பமானது. திருமணத்தில் அதிக புகைப்படங்கள் எடுக்கவில்லை என்று வளைகாப்பு வைபவத்துக்கு போட்டோ வீடியோ எடுக்க ஆட்களை வரவழைக்க முடிவு செய்தான் புகழ். இதைக் கேள்விப்பட்ட ரவியின் மனம் தவித்தது.

 

'ஐயோ போட்டோ ஷூட் வச்சா அவ மனசு கஷ்டப்படும், பழசு நினைவுக்கு வந்து வருந்துவாளே!' என்று பயந்தான்.

 

ஆனால் அவளோ, "டேய் புகழ், கல்யாணத்தில் கூட ஆல்பம் ரொம்ப சிம்பிளா இருந்தது. ரெண்டு பேரும் நிறைய போட்டோ எடுத்துக்கோங்க." என்று கூறியதுடன்,

 

"நம்ம தோட்டத்தில் வச்சு எடுத்தா போதும், வெளில போக வேண்டாம்." என்று கண்டிப்புடன் கூறிவிட்டாள்.

 

ரவி அவளை தனியே அழைத்து, "நீ எதுவும் ஃபீல் பண்ணல தானே?" என்று கேட்க,

 

"நான் ஏன் ஃபீல் பண்ண போறேன்? அதெல்லாம் என் வாழ்க்கையோட கெட்ட கனவு மாதிரி. இப்ப என் ஆசையெல்லாம் புகழ், ராகினி சந்தோஷமா இருக்கணும். இந்த விழா சிறப்பா நடக்கணும். அவ்வளவு தான்." என்று அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

விழா நாளும் கோலாகலமாக விடிந்தது.

 

பெண்மைக்கே உரிய தாய்மையின் பூரிப்பில் இருந்த ராகினிக்கு சந்தனம் வைத்து வளையலிட துவங்க வேண்டிய நேரம்.

 

சரோஜா விழாவுக்கு வந்திருந்தவர் சரியாக அந்த நேரம் மேடையேறி வந்தார்.

 

வைதீஸ்வரியின் கையில் எழில் வளையலைக் கொடுக்க,

 

"ஏய் என்ன டி அவங்க கிட்ட கொடுக்குற? நீயும் தள்ளிப் போ. அவங்க பிள்ளை இல்லாதவங்க, இவளும் நீயும் ஒண்ணா தானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க, அவ விசேஷமாகி இருக்கா, நீ இன்னும் சும்மா தானே இருக்க? அவ நல்லபடியா பெத்து வரணும். ஊர்ல நல்லா வாழ்ந்தவங்க தான் வளை போடணும்." என்று வாய் பேசினார்.

 

வந்திருந்தவர்கள் அனைவரும் இன்று ராகினி காளியாக மாறப் போகிறாள் என்று எண்ணியிருக்க,

 

இன்று வரை அவ்வூர் எழிலிசையின் கோபத்தை ஒருமுறை தான் பார்த்திருந்தது. இன்று மறுமுறை மேலும் வீரியத்துடன் பார்க்க நேர்ந்த தருணமாக அது அமைந்தது.

 

"அம்மா... ச்சீ... உன்னை அப்படி கூப்பிடவே நா கூசுது. சுயநலமா இருக்கலாம். ஆனா இப்படியா? நீயும் ஒரு மனுஷி தானா? என்னை என்ன வேணாலும் நீ பேசிட்டு போ. நான் உன் மக. ஆனா என் மாமியாரை பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல. பெத்த என்னை வளர்க்கவே ஆயிரம் பாகுபாடு பார்த்த நீ எங்க? பெறாத இந்த ரெண்டு பேரையும் நெஞ்சுக்குள்ள வச்சு தாங்கற என் அத்தை மாமா எங்க? பெத்தவளா போயிட்டியேன்னு அவளுக்கு வளையல் போட நான் உன்னை விருந்தாளியா தான் கூப்பிட்டேன். உறவு கொண்டாட கூப்பிடல. வந்தியா வேடிக்கை பார்த்தியா, உன் மகன் கிட்ட பேசி இன்னும் ஏதாவது தேவையானதை வாங்கிகிட்டு போனியான்னு இருக்கணும். முதல்ல என் அத்தை கிட்ட மன்னிப்பு கேளு." என்று கத்தி விட்டாள்.

 

சபை என்று பாராமல் சரோஜா பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது என்றால் எழிலின் கோபம் பலரை ஆச்சரியப்படுத்தியது.

 

சரோஜா மகளென்றும் பாராமல் திட்டிக் கொண்டே அங்கிருந்து கிளம்பிச் செல்ல, ராகினி அண்ணியின் மேல் ஆதரவாக சாய்ந்தபடி,

 

"இப்ப கூட நீ இறக்கை வச்ச தேவதை தான். இந்த கோபம் கூட படலன்னா நீ கடவுளா தான் இருக்கணும்." என்று சிரித்தாள்.

 

"எல்லாரும் நடந்த இந்த விஷயத்தை மறந்திடுங்க. ஏதோ திருஷ்டி கழிஞ்ச மாதிரி." என்று புன்னகையுடன் கூறி, தங்க வளையலை வைதீஸ்வரியிடம் கொடுத்து ராகினிக்கு அணிவிக்கும் படி கூறினாள்.

 

கண்கள் பனிக்க அதனை அணிவித்தவர், தன் மருமகளைத் தழுவிக் கொண்டார். ரகுராமும் எழில் கைகளைப் பற்றிக் கொண்டு,

 

"எங்களுக்கு இந்த அவமானம் புதுசு இல்ல டா. ஆனா இதுநாள் வரை என்ன செய்தும் பொறுத்த உன் அம்மாவை அவளுக்காக பேசிட்டியே?" என்று வருந்த,

 

"பிறப்பால் வர்ற உறவுக்கு மரியாதையும் மதிப்பும் நாம மட்டும் கொடுத்தா போதாது மாமா. அவங்களும் கொடுக்கணும். நான் அம்மாவா நினைச்சு தான் வளைகாப்புக்கு கூப்பிட்டேன். ஆனா அவங்க என்னை அப்படி நினைக்கல. என் அத்தையை பேசுற தகுதி அவங்களுக்கு இல்ல மாமா. நீங்க மனசுல எதையும் வச்சுக்காம வந்தவங்களை கவனிங்க." என்று அவரை அனுப்பி வைத்தாள்.

 

புகழ் ராகினியுடன் இணைந்து பல புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள, அதில் ஒன்றை பெரிதுபடுத்தி அவர்கள் அறையில் மாட்டும்படி கணவனிடம் அன்பும் கட்டளை விதித்தாள்.

 

வந்த உறவுக் கூட்டம், மேலோட்டமாக அவள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாள் என்று கேள்வி கேட்டது.

 

"ராகினி நல்லபடியா பெத்து எடுக்கட்டும், நானும் அத்தையும் தான் அவளை பார்க்கணும். என் அம்மா என்ன அழகுன்னு நேர்லையே பார்த்திங்க இல்லையா? அவளுக்கு நானும் எனக்கு அவளும், எங்களுக்கு அத்தையும் தான் இருக்கோம். அப்ப நானும் உடனே பிள்ளை பெத்துக்கணும்ன்னு யோசிக்காம இருக்கிறது தப்பிலையே!" என்று சிரித்த முகமாக கூறிவிட யாரும் அதற்கு மேல் விசாரிக்கவில்லை.

 

உண்மையில் எழில் அதே காரணத்தைத் தான் வீட்டிலும் ரவியிடமும் கூறி இருந்தாள். இந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பெரிது. பல மதிப்பு கூட்டு தொழில்கள் வேறு துவங்கி நடந்து வரும் நிலையில் ராகினியோடு அவளும் கர்ப்பவதியாக நின்றால் வைதீஸ்வரி சிரமம் கொள்வார். அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் இரண்டு குழந்தை வளர்ப்பது அவளைப் பொறுத்தவரை இப்பொழுது சாத்தியமில்லை. வயது இருக்கிறது. இயல்பாக கருவுற்றால் சமாளிக்கலாம். அதுவரை அதைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று அனைவரையும் சமாதானம் செய்து வைத்திருந்தாள்.

 

ரவிக்கு அவள் மனது புரிந்தது. ராகினி வேறு எழிலிடம்,

 

"நான் இப்ப ஒரு பையனை பெத்து தருவேன். நீங்க கொஞ்ச நாள் கழிச்சு பொண்ணு பெத்து தாங்க. நாம சம்பந்தம் பண்ணிக்கலாம்." என்று கேலி செய்ய,

 

"ஒண்ணா வளர்ற பிள்ளைங்க சகோதர பாசத்தோட தான் இருக்கும். நீயா யார் மேலையும் எதையும் திணிக்காத." என்று அன்பாக கண்டித்தாள்.

 

அவளுக்கும் குழந்தை மேல் கொள்ளை ஆசை இருந்தும் இந்த பண்ணை முழுமை பெற, ராகினிக்கு அவள் ஆற்ற வேண்டிய கடமையை எண்ணி தன்னை கட்டுக்குள் வைத்திருந்தாள்.

 

விழா இனிமையாக முடிந்து நாட்கள் சில நேரம் நத்தையாகவும் சில நேரம் புயலாகவும் கடந்து போனது.

 

ராகினியின் ஆசைப்படியே அவள் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

 

அவள் வலியில் துடித்த ஒவ்வொரு முறையும் அவளுக்கும் மேல் துடித்தான் புகழ். தன் மனைவியின் வலியைக் கண்டவன் ஒரு குழந்தை போதும் என்று முடிவு செய்து தந்தையிடம் சென்று அவனுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய என்ன வழிமுறை என்று வினவ ஶ்ரீதர் சிரித்தார்.

 

"அவசரப்படாத டா. குழந்தை உன்னோட முடிவு மட்டுமில்ல. மருமக கிட்ட கலந்து பேசி அப்பறம் இதெல்லாம் மெதுவா முடிவு பண்ணலாம். இன்னும் குழந்தையை கையில் கூட வாங்கல. அதுக்குள்ள என்ன கேட்டுட்டு இருக்கான் பாரு." என்று அவர் கூற, தம்பி ராகினி மேல் கொண்ட காதலை கண்டு பூரித்தாள் எழில்.

 

அந்த குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. ஒரு குழந்தையின் வரவு ஒரு குடும்பத்தை அடியோடு மாற்றி விடும் என்ற வழக்குக்கு இணங்க,

 

வேலை, தொழில், தோட்டம் என்று அலைந்தவர்கள் கால்கள், அடிக்கடி குழந்தையின் தொட்டில் அருகில் இளைப்பாரியது. மனங்கள் அதன் பொக்கை வாய் சிரிப்பில் நிறைந்து போனது.

 

நல்ல நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா வைத்து, வீட்டிற்கு ஆனந்தத்தை அள்ளித் தந்ததால் ஆனந்தன் என்று பெயர் சூட்டப்பட்டது.

 

சரோஜா அழைத்த மரியாதைக்கு வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். இனி ஒரு வார்த்தை தேவையற்றது பேசினாலும் அவருக்கான சலுகைகள் எதுவும் கிடைக்காது என்று அறிந்ததால் வந்த அமைதி இது. சிலர் எப்பொழுதும் சுயநலவாதிகள் தான். மாற்றம் என்பது அவர்களுக்கு ஒவ்வாத ஒன்று.

 

அன்று மாலை மூன்று மாதம் நிறைந்த ஆனந்தன் குழந்தைகளுக்கான சாய்விருக்கையில் போடப்பட்டு அமர்ந்து கையில் ஒரு கிலுகிலுப்பை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, வெளியே இருந்த சின்ன சமையலறைக்கு எதிரே வேலைக்கு வரும் அனைவரும் அமர்ந்து உண்ண பெரிய டேபிள் போடப்பட்டிருக்கும் அதில் குடும்பம் மொத்தமாக அமர்ந்து அன்றைய நிகழ்வைப் பற்றி பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

 

அப்போது எழுந்து நின்ற ரவி,

 

"எனக்கு உங்க எல்லார் கிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும். அதே போல கொஞ்சம் உதவியும் வேணும்." என்று பீடிகை போட,

 

"மாமா என்ன பண்ணனும்னு சொல்லுங்க." என்று புகழ் உரிமையாக வினவினான்.

 

"எனக்கு இசை எவ்வளவோ செய்திருக்கா. அவ என் வாழ்க்கையில வரலைன்னா நான் இன்னிக்கு இப்படி நின்னுட்டு இருந்திருப்பேனான்னு தெரியல. இந்த இடத்தை வாங்கும்போது, இப்ப நீங்க பார்க்கறதுல பாதி தான் என்னோட கனவு. அதை சாத்தியப்படுத்த எப்படியும் அஞ்சு வருஷம் ஆகும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா என்னோட கனவை விட பெருசா இப்ப எல்லாம் கண்ணுக்கு முன்னாடி இருக்கு. அதுக்கு முதல் காரணமே இசை தான். அப்பா அம்மா விஷயத்துல அவ கொடுத்த தைரியம். இந்த கனவுல அவ கொடுத்த ஆதரவு, அதுக்கு அவ உழைச்ச உழைப்பு இதையெல்லாம் வெறும் நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லி முடிச்சிட முடியாது.

 

இப்ப வரைக்கும் எங்கேயும் போகணும், எதுவும் வேணும்ன்னு ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டேங்கறா. அப்படிப்பட்டவளுக்கு என்னால செய்ய முடிஞ்சது அவ மனசுல ஒளிச்சு வச்சிருக்கிற ஆசையை கண்டு பிடிச்சு நிறைவேற்றுவது மட்டும் தான். அதுக்கு தான் எனக்கு உங்க உதவி வேணும்." என்று அவன் அனைவரிடமும் அவனுக்கு தேவையான அந்த உதவியை வாய் விட்டுக் கேட்க, அனைவரும் திகைத்தனர்.

 

எழிலிசை முழுமையாக தன் மறுப்பைத் தெரிவித்தாள். அந்த நொடி குடும்பம் முழுவதும் ரவியுடன் ஒன்றிணைந்து அவன் ஆசைக்கு துணை நிற்க முடிவு செய்தது.

 

எழிலின் மறுப்புகளை கணக்கில் எடுக்காமல் ரவியின் எண்ணத்துக்கு உதவி புரிய அடுத்து வந்த இரண்டு நாளில் எல்லாம் தயார் நிலையை அடைந்தது.

 

எழில் அனைவர் முன்னும் சங்கடமாக நின்றாள்.

 

"அண்ணி ஏன் உன் முகத்தை இப்படி வச்சிருக்க? சந்தோஷமா இரு." என்ற ராகினியின் கையில் இருந்த ஆனந்தனை வாங்கி கன்னம் நிறைய முத்தங்கள் வைத்தாள் எழில்.

 

"பத்திரமா வச்சுக்கோ என் பால்கோவாவை. நான் வந்து பார்ப்பேன். சின்ன கீறல் இருந்தா கூடா நீ அவ்வளவு தான்." என்று ராகினியை மிரட்டி அவள் கையில் மீண்டும் ஆனந்தனைக் கொடுத்தாள்.

 

புகழ் தன் தமக்கையை அணைத்துக் கொண்டு "இரண்டு வாரம் தானேக்கா. நீ நிம்மதியா போயிட்டு வா. அப்பா, அத்தை மாமா எல்லாரையும் நான் நல்லா பார்த்துப்பேன். எல்லாரும் சேர்ந்து வீட்டையும் பண்ணையையும் பார்த்துப்போம்." என்று உறுதி கொடுத்தான்.

 

ஆடு, மாடு, கோழி, காடை, செடிகொடி, வேலையாட்கள் என்று அனைவரிடமும் அவள் பிரியா விடை பெற்று கேம்பர் வேனை அடைந்த போது அவளைக் கண்டு நகைத்தான் ரவி.

 

"நான் என்ன உன்னை பிரிச்சு தனியாவா கூட்டிட்டு போறேன். இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா இசை?" என்று கேலி செய்ய, சிணுங்கிக் கொண்டு அவனுடன் வாகனத்தில் ஏறிக் கொண்டாள்.

 

இருவரும் தங்கள் குடும்பத்தாருக்கு கையசைத்து விடை கொடுத்து வாகனத்தை எடுக்க, சீரான வேகத்தில் நெடுஞ்சாலையை நோக்கி விரைந்தது.

 

"என்ன சன்ஷைன் இதெல்லாம்? நான் உங்க கிட்ட எங்கயாவது போகணும்னு கேட்டானா?" என்று உரிமையாக அவன் தோளில் தலைசாய்த்து வினவ,

 

"நீ கேட்கல, கேட்கவும் மாட்ட. அதான் உன் ஆசை என்னனு தேடி கண்டு பிடிச்சேன். என் மனைவியா உன் ஆசையை சொல்லாத நீ, என்னோட வியூவரா சொல்லி இருந்ததை கண்டு பிடிச்சு தான் கூட்டிட்டு போறேன்."  என்றவன் அன்று அவள் எழுதி இருந்த கமென்ட் எடுத்து கண் முன்னே ஆட்டிக் காட்டினான்.

 

அதில் அவள், "உங்க மேகாலயா டிரிப் செமையா இருந்தது. நானே நேர்ல போனது போல ஒவ்வொரு இடத்தையும் ரசிச்சு பார்த்தேன். நானும் பையனா பிறந்திருந்தா வண்டியும் பையும் எடுத்துக்கிட்டு உங்க கூடவே வந்துடுவேன். இப்படி ஒரு வாழ்க்கை வாழ ஆசையா இருக்கு." என்று எழுதி இருந்தாள்.

 

ரவிக்குமே டிராவலாக் போடத் தான் ஆசை. ஊர் ஊராக அலைந்து அங்கிருக்கும் அழகை ரசித்து, மக்களை சந்தித்துப் பேசி, புதிய நாகரிகங்கள் கற்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பது தான் அவனது போதையே!

 

தாய் தந்தையின் மரணம் அவன் வாழ்க்கையை மாற்றி விட, புயலாக வீசிய அவன் வாழ்வில் தென்றாய் வந்து வருடியவள் எழிலிசை.

 

அவளின் ஆசை அறிந்தபின் அவன் சற்றும் தாமதிக்காமல் முடிந்தவரை அனைத்து வேலைகளையும் கைபேசியில் இருந்தே மேற்பார்வை செய்யும்படி மாற்றி அமைத்தான். பல சிஸ்டம்களை ஆட்டோமேட் செய்தான். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக பராமரிப்பு ஆள் நியமனம் செய்தான். இனி மாதத்தில் பதினைந்து நாள் பண்ணையில் தற்சார்பு வாழ்வும், அடுத்த பதினைந்து நாள் உலகம் சுற்றும் பயணமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

 

அவளின் ஆசையான மேகாலயா பயணம் தான் தற்போது அவர்கள் கிளம்பி இருப்பது.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட விதத்தில் காதல் என்ற ஒற்றை உணர்வு மட்டுமே இருந்தது என்று சொல்லிவிட முடியாது. உரிமை, அன்பு, நேசம் அனைத்தையும் தாண்டி 'நீ என்னவள், என்னவன்' என்ற பற்றுதல் தான் அவர்களை எந்த சூழ்நிலையிலும் கரம் கோர்த்து சிரம் உயர்த்த உதவியாக இருந்தது.

 

வழியில் ஆங்காங்கே வாகனம் இளைப்பாறும் போதெல்லாம் அவன் அவளின் மடியில் இளைப்பாரினான். அவன் அவளை மீண்டும் மீண்டும் நாடும்போதெல்லாம் பெண்ணவளுக்கு இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே!

 

வாழ்க்கையில் இடி இறங்கிய தருணத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு புகலிடம் தேடி வந்த ரவிக்கு மேற்கே சாரல்மழையாக இதயத்தில் வந்து இதம் சேர்த்திருந்தாள் எழிலிசை.

 

************ சுபம் ************


நாவலை பொறுமையுடன் இறுதி வரை வாசித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்! 

தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என்னை வளர்த்துக்கொள்ள அவை உதவியாக இருக்கும் என்பதால் தயக்கமின்றி தங்களை பதிவு செய்துகொண்டு கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels