சாரல் 79 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 79
புதிய வீட்டின்
முதல் நாள் இரவு. புகழ் ராகினியை தான் மேல் சாய்த்துக் கொண்டு அவள் பேசியதைக் கேட்டுக்
கொண்டிருந்தான்.
இதற்கு முன்
அவர்கள் இருக்குவருக்கும் அதிக நெருக்கம் இருந்ததில்லை. காதல் என்ற எண்ணம் வளர்ந்ததில்லை.
திருமணம் முடிந்து விட்டது என்பதால் பரஸ்பர அன்போடு இருந்தனர். ஆனால் தாய்மை அடைந்த
பின் தான் புகழ் மேல் அவளுக்கு தனி பிரியம் எழுந்தது.
தன் அண்ணன்
பல கனவுகளுடன் இருந்தவன் என்று அவளறிவாள். ஆனால் புகழ் அப்படிப்பட்டவன் அல்ல. அவன்
தன்னைப் போலவே பொறுப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவன் தானே! ஆனால் இன்று
தன் அண்ணனுடன் இணைந்து புது புது விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பது, செலவுகளை கட்டுக்குள்
வைப்பது, ஊராரின் மரியாதையை ஈட்டிக் கொண்டது என்று அவனது பட்டியல் நீண்டு கொண்டே போனது.
அதிலும் அவள்
என்ன சொன்னாலும் ‘சரி ராணி’ என்ற அவனின் பதில் அவளை குளுமையின் உச்சிக்கு அழைத்துச்
சென்றது என்பதே உண்மை. அவள் மீது தவறே இருந்தாலும், அவளே சண்டை போட்டாலும் பொறுத்து,
நிதானமாக அந்த தவறை சுட்டிக் காட்டுவதும், எழிலிடம் சென்று குறையாகக் கூறாமல் அறிவுரை
வாங்குவதாக இருக்கட்டும். அவளை விட்டுக் கொடுக்காமல் நடத்திய விதத்தில் இரும்பு போல
பிடிவாத குணத்தில் இருந்தவள் தற்போது அவனுக்காக நாணலாக வளைகின்றாள்.
அதிலும் மகவை
சுமக்கத் துவங்கியதும் அவளின் இளமைக் காலங்களை நினைவு கூர்வது, தாய் தந்தை தனக்கு அளித்த
அபரிமிதமான பாசத்தை விவரிப்பது என்று அவள் வேலை நேரம் போக மீதம் இருந்த பொழுதுகளை புகழின்
மார்பில் தலை சாய்த்து கதை பேசுவதில் கழித்தாள்.
தம்பதிகளின்
நெருக்கம் என்பது கட்டிலில் கூடும் நேரம் மட்டும் அல்லவே! நெருக்கப் பொழுதுகள் என்பது
உடலையும் தாண்டி உள்ளத்தால் நெருங்கிய பொழுதுகளாக இருக்க வேண்டும். அதை உணர்ந்து புகழுடன்
நேரம் செலவு செய்தாள் ராகினி.
அவளின் தாய்மையின்
அழகை ரசித்து கதை கேட்டு, அவ்வப்போது அவளுக்கு முத்தங்களை பரிசாகக் கொடுத்து அவளது
அயர்ச்சியை அடித்து விரட்டுவான் புகழ்.
தன் அக்கா மாமா
போல கண்களால் தங்களுக்குள் காதல் செய்து கொள்ள இயலாதென்று அவன் அறிவான். அதனால் அவர்கள்
காதலை வித்தியாசமாய் அமைத்துக் கொண்டார்கள்.
----
எழில் தன்னவன்
மார்பில் தலை சாய்த்து உறங்கி விடியலில் எழுந்து தன் பணிகளை கவனிக்கச் சென்று விட்டாள்.
இரவின் குளிர்
சற்றும் வாட்டாத அவ்வறையில் தன்னையும் அறியாமல் நெடு நேரம் உறங்கி விட்டான் ரவீந்தர்.
அவன் எழுந்து
வெளியே வந்தபோது புதிதாக அமைத்திருந்த மாட்டுத் தொழுவத்தில் இருந்த பசுவையும் கன்றையும்
கொஞ்சிக் கொண்டிருந்தாள் எழிலிசை.
அவளை தொலைவில்
இருந்து ரசித்தவன், அன்றைய பணிகள் என்னவென்று தன் கைபேசியில் ஏற்கனவே பதிவு செய்து
வைத்திருந்ததை பார்த்து கவனிக்க ஆரம்பித்தான்.
அவன் தோட்டத்தில்
வேலை செய்து கொண்டிருந்தவர்களை மேற்பார்வை பார்த்துவிட்டு வந்தபோது ராகினி மாடியில்
இருந்த சமையலறையில் இருந்து காபியை எடுத்து வந்தாள்.
"அண்ணா
யோசிக்காம மாடில சமையல் கட்டை வச்சுடேனா மா? உன்னால முடியலையா?" என்று கரிசனையாக
கேட்டபடி எழுந்து சென்று அவளிடம் அதனை பெற்றுக்கொள்ள,
"இந்த
படி என்ன வழுக்கவா போகுது, மரம் தானே, வசதியா தான் இருக்கு. மாடில வெளிச்சம் நல்லா
வருது, அண்ணி சொன்னப்ப கூட தெரியல. காற்றோட்டமாக பெரிய இடமா இருக்குறதால வேலை செய்யுற
அலுப்பே தெரியல. அழகா டைனிங் டேபிள்ல காய் வெட்டி, சப்பாத்திக்கு தேய்ச்சு, கையோட எழுந்து
வேலையும் செய்ய முடியுது. இன்னும் கொஞ்சம் மாசம் கூடினா தான் கஷ்டமா இருக்கும்"
என்று கடைசியில் உண்மையையும் கூறினாள் ராகினி.
எழில் அப்பொழுது
தான் உள்ளே வந்தவள், "வெளில சின்னதா ஒரு அடுப்படி செட் பண்ண சொல்லி இருக்கேன்.
அதிக நேரம் வெளில தான் இருக்கோம். வேலைக்கு வர்றவங்களுக்கும் காபியோ, டீயோ போட ஒவ்வொரு
தடவையும் மாடி ஏற வேண்டாம். தேவைப்பட்டா சிம்பிளா சமையலையும் அங்கேயே பண்ணிக்கலாம்"
என்று கூறி ராகினியின் தலையை ஈரம் போக துடைத்து தளர்வாக நுனியில் பின்னலிட்டாள்.
"சூப்பர்
ஐடியா தான்.” என்றவள்
“புகழ் கடைக்கு
போயிட்டான். நானும் கிளம்புறேன். அவனுக்கு ஏதோ சேலத்தில் வேலை இருக்காம்" என்று
கூறிக் கொண்டு தன் கைப்பையை எடுத்தாள்.
"அவளை
ட்ராப் பண்ணிட்டு வாங்க" என்று கணவனிடம் கூறிவிட்டு தன் வேலையில் எழில் மூழ்க,
தங்கையை விட்டுவிட்டு
வழியில் பிரசிடென்ட் வீட்டிற்கு சென்று அவருடன் பேச வேண்டியதை முடித்துவிட்டு வீடு
வந்தான். வெளியில் இருந்த கூரியர் பெட்டியில் பெரிய பார்சல் இருக்க, அதனை எடுத்துக்
கொண்டு உள்ளே வந்தவன் கண்டெய்னர் வீட்டின் முன்னே அமர்ந்து அதனை பிரித்துப் பார்த்தான்.
யூடியூப்பில்
இருந்து அவனுக்கு கோல்டன் பிளே பட்டன் அனுப்பி இருந்தனர். அவசரமாக தன் கைபேசியை எடுத்து
சரிபார்க்க, அதில் பத்து லட்சத்து இருபதாயிரம் பின் தொடர்பாளர்கள் இருக்கக் கண்டு திகைத்தான்.
வீட்டின் கட்டுமான
வீடியோ, அதற்கு உபயோகித்த பொருகள், அவை கிடைக்கும் இடங்கள், என்று இரண்டு மாதமாக அவ்வப்போது
வீடியோ எடிட் செய்து போடுவது, தோட்ட வேலைகள், ஆடுகளின் சேட்டைகள், காடை முட்டைகளை எடுப்பது,
கோழிகள் ஒய்யாரமாக மேய்வது என்று பல வீடியோக்களை ஷார்ட்சாகவும் போட்டு வைத்திருந்தான்.
நெடு நாட்களுக்குப்
பின் நேற்று புதுமனை புகுவிழாவை லைவ் போட்டு விட்டிருந்தான். ஆனால் பதில் கூற முடியாது,
விழாவில் இருக்கிறேன் என்று முன்னரே கூறி விட்டான். அந்த வீடியோ அவன் எதிர்பார்த்ததை
விடவும் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்ப்பட்டதோடு அது ஒன்று மட்டுமே ஐந்தாயிரம் புதிய
சப்ஸ்கிரைபர்களை அழைத்து வந்திருக்க, எப்பொழுது பத்து லட்சத்தைக் கடந்தது என்று அவன்
கவனிக்கவே இல்லை.
சேனல் ஆரம்பித்த
புதிதில் பலர் சில்வர் பட்டன் வீடியோக்கள் போடும்போது அவனுக்கு ஆசையாக இருக்கும். ஆனால்
இன்று அவன் கோல்டன் பட்டன் பெற்றிருக்கிறான். அதுவும் இந்த ஒரு ஆண்டில் அவனது வளர்ச்சி
அவனே எதிர்பாராத ஒன்று.
அம்மகிழ்ச்சியை
வெளிப்படுத்த தன் மனையாளைத் தேடி ஆர்வமாக சென்றவன் அவள் சமீபத்தில் அமைக்கப்பட்ட கிளாஸ்
ஹவுசில் செடிகளின் பராமரிப்பை கவனித்து கொண்டிருப்பதைக் கண்டு சுற்றிலும் யார் இருக்கிறார்கள்
என்று கவலை கொள்ளாமல் தன்னவனை இடையோடு வளைத்து தூக்கி இரு கைகளிலும் ஏந்தி தூக்கிச்
சுற்றினான்.
"ஹே ஹே...
சன்ஷைன்... என்ன பண்றீங்க? இறக்கி விடுங்க. எல்லாரும் பார்த்து சிரிக்கிறாங்க"
என்று அவள் வெட்கத்தில் தவிக்க, அவனோ அவள் மட்டுமே தன் உலகத்தில் இருப்பதைப் போல பாவித்து
தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். மெல்ல அவளை இறக்கி விட்டு மூச்சு
வாங்கினான்.
"இசை,
இங்க பாரு" என்று முதுகில் சொருகி மறைத்து எடுத்து வந்த அதனை அவளிடம் நீட்ட, அதனைப்
பெற்றவள்,
"அட வந்துடுச்சா?
போன வாரமே வந்துடும்ன்னு ஆசையா எதிர்பார்த்தேன்." என்று கூறியதும்,
"உனக்கு
தெரியுமா?" என்றான் ஆச்சரியமாக,
"நான்
தான் நீங்க வீடியோ போட்டாலே பார்ப்பேன். இப்ப நம்ம இடம், வீடு எல்லாம் போடுறீங்க பார்க்க
மாட்டேனா? முன்னாடியே வந்துடுச்சு" என்று மகிழ்வோடு கூறினாள்.
"உனக்கு
என்ன இசை வேணும்? எங்க போலாம்ன்னு கேட்டாலும் வேண்டாம்னு சொல்ற! நான் என்ன தான் செய்ய?"
என்று சிறுபிள்ளை போல சிணுங்க,
"அட நீங்க
போதும்ங்க" என்று மையலாக சிரித்தாள்.
ஆனால் அவனுக்கு
அது போதுமானதாக இல்லை. தன்னுடைய மனைவியின் ஆசைகளை அவன் அறியாமல் போகலாம். ஆனால் அவனது
முதல் சப்ஸ்கிரைபரான அழகியின் ஆசைகள் தான் கமென்ட்டில் வெளிபட்டனவே! அன்று இருந்த வேலைகளை
ஒதுக்கி அந்த பழைய வீடியோக்களில் வந்த கமென்ட்களைத் தேடித் தேடிப் படித்தவனுக்கு பொன்
தேடிச் செல்ல புதையலே கிட்டியதைப் போன்றதொரு தகவல் கிடைத்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக