சாரல் 53 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 53
ரவி வீட்டில்
நுழையும் போது உணவு மேசையில் ரகுராமும் வைதீஸ்வரியும் அமர்ந்து காலை உணவை உட்கொண்டு
இருக்க,
அவர்கள் அருகில்
நின்று பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் எழில்.
"வாசல்ல
கோலம், ருசியா சாப்பாடு, பக்கத்துல இருந்து பரிமாறும் பக்குவம், நீ ரொம்ப நல்ல பொண்ணு
மா" என்று வைதீஸ்வரி எழிலை புகழ,
"எனக்கு
இதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது அத்தை. அதான் செய்றேன். இதை செய்யாத பொண்ணுங்களும் நல்ல
பொண்ணுங்க தான். இதெல்லாம் தெரிஞ்ச நான் உயர்ந்தவளும் இல்ல, தெரியாத பெண்கள் குறைஞ்சவங்களும்
இல்ல." என்று சிரித்த முகமாக கூறினாள் எழில்.
"சூப்பர்
அண்ணி. நல்லா சொல்லு. இந்த புகழ் காலைலயே வந்து நாளைக்கு நீ தான் சமைக்கணும். இன்னிக்கு
என் அக்கா கொடுத்தது சரி, இனியும் அக்காவை எதிர்பார்க்க முடியாதுன்னு காதுல இரத்தம்
வர பேசுறான்." என்று குற்றம் கூறிக்கொண்டு அமர்ந்தாள்.
எழில் அவளுக்கும்
ரவிக்கும் தட்டை எடுத்து வைக்க,
ரவி எதுவும்
கூறாமல் எழில் கொடுத்த உணவை உண்டான்.
ராகினி சாப்பிட்டாலும்
வாய் என்னவோ என்னால் வேலை செய்ய முடியாது நீயே என்னையும் பார்த்துக்கொள் என்று விதம்
விதமாக எழிலிடம் கூறிக்கொண்டு இருந்தது.
ரவி பொறுமை
பறந்தவனாக, "இங்க பாரு ராகினி சொல்றேன்னு தப்பா நினைக்காத, நான் இங்க இடம் வாங்கி
வந்தது என் சேனல் விஷயமா தான். இனி இசையும் எனக்கு ஹெல்ப் பண்ணுவா, அப்ப தான் என்னை
அன்னைக்கு குறைவா பேசினவங்க முன்னாடி நான் தலை நிமிர்ந்து நிற்க முடியும். உனக்கு கல்யாணம்
பண்ணி வச்சுட்டேன். இனி நீயும் உன் புருஷனும் தான் உன் குடும்பம். என் பொண்டாட்டி எனக்கு
தான் செய்வா. உனக்கு உன் மாமியார் எல்லாருக்கும் செய்ய முடியாது. பாரு பெரியம்மா வந்ததும்
இசை எப்படி பார்த்து செய்யுறா. இனி உன் மாமியார் வீட்டை நீயும் இப்படி தான் பார்க்கணும்."
என்று சொல்ல,
"அப்ப
நான் அவங்களுக்கு நாத்தனார் எனக்கும் அவங்க செய்யலாம் தப்பில்லை." என்று பட்டென்று
கூறிய தங்கையை முறைத்த ரவி,
"அப்படி
பார்த்தா அவளும் உனக்கு நாத்தனார் தான். நாளைக்கு அவளை உன் வீட்டுக்கு அனுப்புறேன்
இன்னிக்கு அவ உன்னை பார்த்துக்கறது போல நீயும் பார்த்துக்கணும். என்ன சரியா?"
என்று காட்டமாக வினவினான்.
"என்னங்க!"
என்று எழில் அவன் அருகில் வர,
"நீ சும்மா
இரு இசை. இதை முதல்லயே கட் பண்ணனும். இல்லன்னா வாழ்க்கை முழுக்க உன் நிழல்ல நிற்க பழகுவா."
என்று கோபமாக கூறினான்.
"என்ன
அண்ணி நீ அன்னைக்கு என்ன சொன்ன? நான் உன்னை பார்த்துப்பேன் ராகினின்னு சொன்னல்ல..."
என்று அண்ணனிடம் காரியம் நடக்காது என்று அண்ணியிடம் வந்தாள்.
ஆனால் இசையோ
ராகினியின் கையில் லேசாக தட்டிக்கொடுத்து,
"அவருக்கு
என் உதவி தேவைப்படுது டா ராகினி. நீ எனக்கு ஹெல்ப் பண்ணு பிளீஸ். உனக்கு தெரிஞ்ச வேலையை
செய், நான் முடியும் போது சொல்லி தர்றேன். எப்பவும் நாம யாரையும் சார்ந்து வாழ கூடாது
டா. அது யாரா இருந்தாலும்..." என்று அன்பாக கூறியதும்,
"ம்ம்.
சரி நீ சொல்ற, நான் கேட்கறேன் அண்ணி. அதுக்காக இங்க வந்து சாப்பிடவே கூடாதுன்னு அண்ணன்
சொல்லுது பாரு..." என்று அண்ணனை அண்ணியிடம் போட்டுக் கொடுக்க,
சிரித்த எழில்,
"சாப்பிட்டியா? புகழ் சாப்பிட்டானா?" என்று பேச்சை மாற்றினாள்.
"ம்ம்
ஏதோ வேலை விஷயமா வெளில போகணும்னு கிளம்பிட்டு இருந்தான். மாமா வந்தாரு, ரெண்டு பேரும்
பேசிட்டு இருந்தாங்க. அதான் போர் அடிக்குதுன்னு இங்க வந்தேன்." என்று ராகினி ராகம்
பாட,
"மாமா
அங்க வந்தாரா? அவருக்கு சாப்பிட கொடுத்தியா? காபி ஏதாவது போட்டுத் தரவான்னு கேட்டியா?"
என்று கோபமாக வினவினான் ரவி.
"விடுங்க.
அப்பா அதெல்லாம் எதிர்பார்க்க மாட்டாரு." என்று ரவியை சாந்தம் செய்தவள் அவளும்
காலை உணவை உண்டு வேலைகளை முடிக்க,
ரகுராம் ரவியிடம்
தீவிரமான குரலில் பேசிக்கொண்டு இருந்தார்.
அவர்களுக்கு
காபி எடுத்து வந்த எழிலையும் அமர்த்தியவர்,
"நீ சொல்லு
மா எழில், புகழையும் ராகினியையும் மறுவீடு விருந்துக்கு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு
போறேன்னு சொல்றேன் ரவி வேண்டாம்னு சொல்றான்." என்று அவளது கருத்தை கேட்டார்.
"கூட்டிட்டு
போங்க மாமா. அவங்களுக்கும் மாற்றமா இருக்கும். உங்களுக்கும் அவங்க வந்தா மகிழ்ச்சியா
இருக்கும்." என்று அவள் பதிலளிக்க,
"என்ன
சொல்ற இசை? இன்னும் அவங்க ஒழுங்கா சொல்றதை கேட்கவே இல்லை. இதுல அங்க போய் எதுவும் பிரச்சனைன்னா
நாம என்ன பண்றது?" என்று ரவி கவலையாகக் கூறினான்.
"அவங்க
வாழ்க்கையை நாம வாழவோ, தீர்மானிக்கவோ முடியாதுங்க. இப்படி போய் வந்தா தான் ராகினிக்கு
குடும்ப அமைப்பை பத்தி ஒரு ஐடியா கிடைக்கும். புகழுக்கும் வீட்டு ஆம்பளையா நின்னு செய்ய
வேண்டியது என்னனென்னன்னு அப்ப தான் புரியும்." என்று கூறிவிட்டு,
"இது என்னோட
எண்ணம் தான். முடிவு உங்களோடது." என்று சொல்லி காலி தம்பளர்களைப் பெற்றுக்கொண்டு
கிளம்பினாள்.
அவள் போனதும்,
"ரொம்ப பொறுப்பான பொண்ணு ரவி. உனக்கு ஏத்த பொண்ணு. உன் சொல்லுக்கு அடங்காத உன்
தங்கச்சி இவ சொன்னா சரி அண்ணின்னு கேட்டுக்கறா. எங்களுக்கும் ராகினி எங்க கூட
இருந்ததே இல்லன்னு வருத்தம் இருக்கு ரவி. இந்த மறுவீடு மூலமா அதுவும் தீர்ந்து போகும்.
அவங்களுக்கும் புது இடம், பழக வசதியா இருக்கும். அப்படியே நான் அவங்களை ஹனிமூன் அனுப்பி
விட்டுட்டு அப்பறமா இங்க அனுப்புறேன். அதுக்குள்ள உன் மாமியார் பிரச்சனையை முடிச்சு
விட்டு நீங்களும் சந்தோஷமா எங்காவது போயிட்டு வாங்க." என்று தட்டிக் கொடுத்தார்.
"சரி பெரியப்பா
கூட்டிட்டு போங்க. நான் எங்கேயும் போகுற ஐடியால இல்ல. சேனல்ல தான் இனி என் கவனம். அதை
நான் இசை கிட்ட சொல்லிட்டேன். அவளும் ஹெல்ப் பண்ணுறேன்னு சொன்னா. ரெண்டு வருஷம் பெரியப்பா.
அதுக்குள்ள என் ஆசை நிறைவேறிடும்." என்று கண்ணில் கனவு மின்னக் கூறினான்.
எழிலும் அவன்
கனவை புரிந்து கொண்டவளாக அவனுக்கு உறுதுணையாக நிற்க தயாராக இருந்தாள்.
புகழும் ஶ்ரீதரனும்
ரவியின் வீட்டினுள் நுழைய, அவர்களை வரவேற்ற ரவி அவர்கள் வந்த விஷயம் கேட்டு புரியாது
மனைவியை நோக்கினான்.
"அப்பா
இது என்ன பா மறுவீடு? பக்கத்து வீட்டுக்கு வர்றது மறுவீடா? புகழும் ராகினியும் பெரிய
மாமா வீட்டுக்கு போறதுல ஒரு நியாயம் இருக்கு. அடுத்த வீட்டுக்கு நாங்க வர்றது... வேண்டாமே!
எங்களுக்கும் கொஞ்சம் வேலை இருக்கு. புகழ் கடைக்காக கொஞ்சம் அலைய வேண்டி இருக்கு. அப்பறம்
இந்த நிலம், சேனல்னு… புரிஞ்சுக்கங்க பா. வந்தாலும் அம்மா எங்களை நல்லா நடத்த மாட்டாங்க."
என்று வெளிப்படையாகவே கூறிவிட்டாள் எழில்.
ஶ்ரீதரன் மகள்
பேசியதில் உள்ள நியாயம் புரிந்தாலும் அவளை அழைத்து சீராட்ட இயலாத தன் நிலையை எண்ணி
நொந்து கொண்டு மகனையும் மருமகளையும் ரகுராம் வீட்டிற்கு சென்று வரும்படி கூறிவிட்டு
விடைபெற்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக