சாரல் 24 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 24
புஷ்பாவின்
பேச்சை அங்கிருந்த பலரும் ஆதரிக்க ஆரம்பித்தனர்.
"உங்க
பொண்ணு ஊருக்கு போக அந்த பையன் ஏன் கூட போகணும் தம்பி? உங்க வீடு வரை போயிருக்கான்.
காரணம் இல்லாம போகுமா?" என்று ஊர்த் தலைவர் கேட்க ரவிக்கு பதில் சொல்ல முடியவில்லை.
அதை விட அந்த
மதிய நேரத்தில் பளபளப்பான காரின் வந்து இறங்கிய இருவரைக் கண்டு பெரியப்பா பெரியம்மா
இருவரும் தயங்கி, தவித்து நிற்பதைக் கண்டு அவன் புரியாமல் பார்க்க,
நிலைமையை மேலும்
கவலைக்கிடமாக மாற்ற அந்த பிரதேசத்திற்குள் ஓடி வந்தார் சரோஜா.
"அடப்பாவிகளா
ஒரு நாள் தானே என் பிள்ளையை வேலைக்கு கூப்பிட்ட, அதுக்குள்ள உன் வீட்டு பொண்ணு என்
பையனை மயக்கி கூட்டிகிட்டு போயிட்டாளா? தெய்வமே நான் என்ன செய்வேன்?" என்று கத்தி
கூப்பாடு போட, ஊரார் அவளை முறைத்துக் கொண்டு நின்றனர்.
அதில் அந்த
புதியவர்கள் ரகுராமை நெருங்கி, "வாட்ஸ் ஆல் திஸ் மிஸ்டர். ரகு? உங்க தம்பி பசங்க.
ரொம்ப நல்ல குணம்னு நீங்க சொல்லவும் தானே நாங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னோம்?
இங்க வந்தா பொண்ணு யார் கூடவோ ஓடினதா சொல்றாங்க. இந்த பையன் இப்படி இடிஞ்சு போய் நிக்கிறான்.
நோ. நோ. என்னால என் பொண்ணை கல்யாணம் பண்ணி இப்படி பிரச்சனை உள்ள குடும்பத்துல கொடுக்க
முடியாது. அதுவும் இல்லாம என் பையன் ரொம்ப உண்மையை எதிர்பார்க்கற குணம் உள்ளவன். ஓடிப்போனது
எல்லாம் தெரிஞ்சா எங்களை உண்டு இல்லன்னு பண்ணிடுவான்." என்று நிறுத்தாமல் பேச,
ரவிக்கு ஒன்றும்
புரியவில்லை. அவன் பெரியப்பாவின் கைகளைப் பற்றி, "யார் பெரியப்பா இவங்க? என்ன
பேசிட்டு இருக்காங்க? எனக்கு ஒண்ணும் புரியலயே!" என்று சோர்வாக கேட்க,
"உனக்கும்
ராகினிக்கும் பொண்ணு கொடுத்து எடுக்குறது போல சொந்ததுல சம்பந்தம் பார்த்துட்டு தான்
இங்க வந்தோம் ரவி. இன்னிக்கு இவங்களை வரவும் சொல்லி இருந்தோம். நைட்டுல இருந்து ராகினியை
தேடுறதுல பிசியா இருக்கவும் இவங்க விஷயம் எனக்கு மறந்து போயிடுச்சு ரவி." என்று
வருத்தமாக கூறினார்
"விடுங்க
பெரியப்பா" என்று அவரை சமாதானம் செய்தவன்,
"சாரி
சார். தங்கச்சி கோவிச்சிட்டு தான் போயிருக்கா, வேற ஒன்னும் இல்ல. இதுக்காக நீங்க கன்வின்ஸ்
ஆகி கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்னு அவசியம் இல்ல சார். உங்க அலைச்சலுக்கு மன்னிப்பு
கேட்டுக்கறேன்." என்று கைகூப்பி அவர்களை அனுப்பி வைத்தான்.
போலீசார் அவனை
நெருங்கி, "சார் உங்க சிஸ்டரை கண்டுபிடிச்சாச்சு. இங்க கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்க
சார்." என்றதும் ரவி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அப்படியே நாற்காலியில் சரிந்து
அமர்ந்தான்.
உலகம் இருண்டது
போல, இனி அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சென்னையில் வாழ்ந்திருக்க முடியும்,
ஆனாலும் ஒரு அமைதியான சூழல் வேண்டி இங்கு வந்தவனுக்கு இன்று ஊரார் முன் தலை தாழ்த்தி
அவமானக் கன்றலுடன் நிற்பதைத் தாள முடியவில்லை.
கூடுதல் வலியாக
ராகினி தன் பெயரைத் தானே கெடுத்துக் கொண்டதோடு பக்கத்து வீட்டு பையனின் பெயரையும் சேர்த்துக்
கெடுத்து விட்டாள். அவன் மனதில் புகழ் மேல் எந்த சந்தேகமும் இல்லை. அவன் எதற்கு போனான்
என்பது தெரியாது என்றாலும் கண்டிப்பாக ஊரார் சொல்வது போல இல்லை என்று சர்வ நிச்சயமாக
நம்பினான்.
இப்பொழுது தான்
அவன் கண்கள் எழிலைத் தேடியது.
அவளது அன்னை
வந்து கத்தியது நினைவுக்கு வர, கண்கள் பரபரப்புடன் அவளைத் தேடத் துவங்கவே, அவர்கள்
வீட்டுத் திண்ணையில் தந்தையும் மகளும் சரோஜாவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் காட்சி
கண்களில் விழுந்தது.
ஊரார் மெல்லக்
கலைந்து செல்ல ஆரம்பிக்க, வேகமாக கணவரைத் தள்ளிக்கொண்டு ஓடி வந்தார் சரோஜா.
"யோவ்
என்ன எல்லாரும் கிளம்பி போறீங்க? என் பையன் வாழ்க்கைக்கு என்ன வழி?" என்று அவர்
வினவ,
"பொம்பள
பிள்ளை வீட்ல அவரே எங்க பொண்ணு மேல தப்பு இருக்காதுன்னு சொல்றாரு. நீ என்னம்மா வழி
கேட்டுட்டு இருக்க?" என்று ஒருவர் கோபமாக வினவ,
"ஏன் இதை
இவ அழகான வாயால என் பையன் தான் அவங்க வீட்டை பொண்ணை கூட்டிகிட்டு ஓடினான்னு சொல்லும்போது
அடுத்த வீட்டு பையனை தப்பா பேசாதன்னு சொல்ல வேண்டியது தானே? அப்ப சும்மா இருந்துட்டு
இப்போ வந்து பேசுற? ஊர் முழுக்க இவங்க வீட்டு பொண்ணும் என் பையனும் ஓடிப்போனதா தான்
பேச்சு இருக்கு. இப்போ இவரு கமுக்கமா அவங்க வீட்டு பொண்ணை எங்கயாவது கூட்டிகிட்டு போயி
கட்டிக் கொடுத்திடுவாரு. நான் என் பையனுக்கு நாளைக்கு பொண்ணு தேடினா, நீங்க யாராவது
உங்க வீட்டு பொண்ணை கொடுப்பீங்களா? இல்ல பொண்ணு வீட்ல விசாரிக்க வர்றப்ப இதை பத்தி
சொல்லாம இருப்பீங்களா? கடனை உடனை வாங்கி என் பிள்ளையை இன்ஜினியரிங் படிக்க வச்சது அவன்
வாழ்க்கை முழுக்க தனிக் கட்டையா வாழவா?" என்று அவர் கண்ணீர் விட, ரவிக்கு அவரது
கற்பனையும் கேள்வியும் புதிதாகவும் விசித்திரமாகவும் இருந்தது.
"இங்க
பாரு சரோஜா, பொண்ணு வீட்ல ஒத்துக்கிட்டா உன் பையனுக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்.
அதை விட்டுட்டு ஊர் ஆளுங்க கிட்ட நீ நியாயம் கேட்க முடியாது. உங்க வீட்டு பஞ்சாயத்து
இது. எங்களை உள்ள இழுக்காத. ஏற்கனவே உன் பொண்ணு விஷயத்துல நீ செஞ்சதை எங்களால ஜீரணிக்க
முடியல. இதுல இன்னோன்னு எல்லாம் வாய்ப்பில்லை." என்று நகர, சரோஜா நேராக வந்து
வைதீஸ்வரியிடம் நின்றாள்.
"என்னங்க
இது அநியாயம்? உங்க வீட்டு பொண்ணு பண்ணின தப்புக்கு என் பையன் வாழ்க்கை முழுக்க ஓடிப்போனவன்
பட்டம் வாங்கணுமா?" என்று கேட்க,
அவர்கள் ஏன்
இணைந்து சென்றார்கள் என்று இந்த நொடி வரை தெரியாத காரணத்தால் என்ன பதில் சொல்வதென்று
தெரியாமல் அவர் அமைதியாக,
அவள் ரவியைப்
பிடித்துக் கொண்டாள்.
"ஏன் தம்பி
நீங்க நல்லவர்ன்னு நேத்து தான் என் பையன் வந்து சொன்னான். இப்படி என் பையன் வாழ்க்கையை
கெடுக்க தான் வேலைக்கு கூப்பிட்டிங்களா?" என்று அழுத அவருக்கு பதில் சொல்லாமல்
ரவி நிற்க,
"அம்மா
போதும். இதுக்கு மேல எதுவும் பேசாத" என்று அன்னையை அடக்கினாள் எழில்.

கருத்துகள்
கருத்துரையிடுக