சாரல் 12
சாரல் 12
மறுநாள் விடியல் அனைவருக்கும் இயல்பாக தத்தமது வேலைகளுடன் கழிய புகழ் மட்டும் அதிசயமாக வீட்டில் இருந்தான்.
அவனை பார்த்தபடியே சாமிக்கு பூ வைத்து பூஜித்த ஶ்ரீதரன், வெளியில் இருக்கும் விளக்குப் பிறையில் பணத்தை வைத்துவிட்டு,
"செல்லம், உன் தம்பிக்கு விளக்கு மாடத்துல காசு வச்சிருக்கேன். எடுத்துட்டு கிளம்ப சொல்லு.” என்று உரக்க கூறினார்.
எழில் அவ்விடம் இல்லாததால் அவருக்கு பதில் வராமல் போக, புகழ் எழுந்து தந்தையிடம் வந்தான்.
"அப்பா, நான் தப்பு பண்ணினேன் தான். ஆனா இப்போ மாறிட்டேன் பா. உள்ளூர்ல வேலை கிடைக்க மாட்டேங்குது பா. நேத்து அக்கா கூட கடை வைக்க இடம் பார்க்க போன இடத்தில அவமானம். என் நண்பன் கிட்ட வேலைக்கு கேட்டதுக்கு மானங்கெட்டு போச்சு பா. நான் வெளியூர் போய் ஒழுங்கா படிச்சு சம்பாதிச்சு கடனை அடைக்கிறேன் பா. என்னை நம்பி அனுப்புங்க பா" என்று நா தழுதழுக்கக் கூறினான்.
அவனை ஆழ்ந்து நோக்கிய ஶ்ரீதரன், "நீ சொல்றதெல்லாம் சரி தான். இந்த பேச்சு இங்க மட்டும் தானே துடிப்பா இருக்கு. வெளியூர்
போனதும், அந்த ஊர் சோக்கு பிடிச்சு போகுது. வீடு மறந்து போகுது. அது கூட போகட்டும். ஆனா ஒழுக்கம்... அது போகலாமா டா? சொல்லு. நீ செஞ்சது எத்தனை அசிங்கமான வேலை. புதுசா காசு வந்ததும் அப்பன் ஆத்தா சொல்லிக் கொடுத்த அத்தனை நல்லதும் காத்துல பறந்து போய் ... நீ செஞ்ச காரியம் என்ன? இப்போ நீ பேசுறத நம்பி அனுப்பி வச்சா நாளைக்கே போலீஸ்காரன் என்னைக் கூப்பிட்டு பிள்ளை வளர்த்திருக்குற லட்சணம் பாருன்னு காறி துப்புவான்" என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.
"அப்பா நான் தான் திருந்திட்டேன்னு சொல்றேன்ல", என்று அவன் மீண்டும் அவரை சமாதானம் செய்ய முயல,
"இப்படித்தான் எழில் கல்யாணத்துக்கு முன்னாடி கூட சொன்ன. நான் உன்னை நம்ப தானே செஞ்சேன். நீயும் உன் அம்மாவும் செஞ்ச எல்லாத்துக்கும் நம்பி தானே தலையை ஆட்டினேன். ஆனா என்ன டா செஞ்சிங்க ஆத்தாளும் மகனும்?? என் அருமை மகளை.. என் செல்லத்தை இப்படி மூலையில முடக்கி போட்டுட்டீங்க. மறுபடி உன்னை நம்பி அனுப்பினா என்னை போல முட்டாள் யாரும் இல்ல டா", என்று தோளில் கிடந்த துண்டை உதறிக் கொண்டு பின் பக்கமாகச் சென்றார்.
தந்தையின் ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடி போல இருந்தது புகழுக்கு. அவர் சொல்வதில் துளி பொய் இல்லையே! அவன் அப்படிப் பட்டவனாகத் தானே இருந்தான். ஆனாலும் மாறக் கூடாதா? இவர் தன்னை நம்பக் கூடாதா என்ற நொந்து கொண்டான்.
சரோஜா அன்று அவசரமாக கிளம்பிச் சென்றார். அன்று தான் தண்டல் பணம் கட்ட கடைசி நாள். முதல் நாள் இரவு சமையலறை நிலையின் மேல் ஶ்ரீதரன் பணம் வைத்திருந்தார். அவருக்கு சம்பளம் வந்து விட்டதன் அறிகுறி தான் இது. அவர் வீட்டுச் செலவுக்கு கொடுக்கும் பணத்தை தண்டல் கட்டி விட்டு அவருக்கு பத்தாம் தேதி சம்பளம் வந்தவுடன் வீட்டுக்கு தேவையானதை அளந்து அளந்து வாங்கி வைப்பார்.
வட்டிப்பணம் கொடுக்க ராமசாமியின் வீட்டுக்கு சென்றார் சரோஜா.
"இன்னிக்கு தேதி என்ன? உன்னை ஒன்னாம் தேதி காசு தர சொன்னா அஞ்சான்தேதி தர்ற?", என்று கத்தினாலும் காசை சரியாக வாங்கிக் கொண்டார் ராமசாமி.
"இங்க பாரு இப்படியே நீ வட்டி மட்டும் கட்டிகிட்டு இருந்தா என் அசல் எப்ப வர்றது? ஒழுங்கா வாங்கின அஞ்சு லட்சத்தை இன்னும் ரெண்டு மாசத்துல எடுத்து வை" என்று கறாராக அவர் கூறியதும்,
"ஏண்ணே, என் நிலைமை தெரியாதா உங்களுக்கு? மகனும் வேலைக்கு போகல, நானும் அவரும் சம்பாதிச்சு தானே வட்டி கட்டுறோம்" என்று அவர் இழுக்க,
"மகன்.. அவன் என்னமோ சீமைக்கு ராஜாவாக போறான்னு கிடந்து துள்ளுன? இப்போ காசு கட்ட முடியலன்னு சொல்ற. ஏன் அப்பறம் வேற இளிச்சவாயன் யாரும் கிடைக்கலையா?" என்று நக்கல் செய்தார்.
"அண்ணே வேண்டாம்ண்ணே, நடந்த கொடுமைக்கு எங்களை கேலி செய்யாதீங்க" என்று மனம் பொறுக்காமல் அவர் கண்ணீர் விட,
"இங்க பாரு மா, நான் ஒன்னும் வீடு தேடி வந்து உனக்கு கடன் கொடுக்கல. நீ தான் உன் மக கல்யாணத்துக்கு சுளையா ரெண்டு லட்சம் வாங்கின. ஏற்கனவே மகன் படிப்புக்கு வாங்கின மூணு லட்சம் தொக்கி நிக்க, நீ கேட்டதும் நான் காசு கொடுத்தேன்ல. அது மட்டுமா? தர்மா பேரைச் சொல்லி வைத்தியலிங்கம் கிட்ட வட்டியில்லாம மூணு லட்சம் வாங்கி இருக்க. நீ எவ்வளவு பெரிய டக்கால்ட்டின்னு எனக்கும் தெரியும் சரோஜா. ஒழுங்கா பணத்தை எண்ணி வை. ஊருக்கு ஒதுக்குப்புறமா வீட்டை பார்த்து போன மாதிரி ஊரை விட்டு போயிட்டா என் காசுக்கு வழி என்ன?" என்று பாயிண்ட் பாயிண்டாக பேசி சரோஜாவின் வாயை அடைத்து விட்டார்.
"ஏற்பாடு பண்ணுறேன் அண்ணே", என்று சொல்லிவிட்டு, தளர்ந்த நடையோடு கடை நோக்கிச் சென்றார்.
அவர் நினைத்ததெல்லாம் வேறாக இருக்க, நடந்தது என்னவோ அவரை புதைகுழியில் தள்ளி விட்டது.
ஆரம்பம் முதலே புகழ் படித்து வேலைக்கு சென்று தங்களை சவுகரியமாக வாழ வைப்பான் என்று அவர் கோட்டை கட்டி இருக்க, அவன் பணம் அனுப்பாமல் இருந்ததும் கணவரை அனுப்பியவருக்கு மகனை அவர் கையோடு இழுத்து வந்து உள்ளூரில் இருக்க வைத்தது அதிர்ச்சி என்றால் அதன் பின் அவர் பார்த்து பார்த்து கணக்குப் போட்டு குடும்பமாக பணக்கவலை இல்லாமல் வாழ வகுத்த திட்டம் அவரை பாதாளத்தில் தள்ளி பேரதிர்ச்சியை பரிசளித்து விட்டது.
வள்ளுவர் சொல்லாத வாழ்வியல் உண்டா?
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
திருட்டுத் தனத்தால் உருவாகிய செல்வம், அளவு குறைந்து வளர்வதுப் போல் கெட்டுவிடும் என்று 'கள்ளாமை' என்ற அதிகாரம் முழுவதும் அவர் சொல்லியும் சரோஜா போன்ற போராசை குணமுடையவர்களுக்கு புத்திக்கு எட்டுவதே இல்லை.
அடுத்தவர் நிழலில் இளைப்பாரலாம், ஆனால் அதற்கும் ஒரு காலக்கெடு உண்டு. ஒருவரை அண்டிப் பிழைப்பதே அசிங்கம் என்றால் ஒருவரிடமிருந்து அட்டையாக உறிஞ்சி வாழ நினைத்த சரோஜா தான் கெட்டதும் இல்லாமல் எழில் வாழ்க்கையையும் சேர்த்தே கெடுத்து வைத்தார்.
Comments
Post a Comment