சாரல் 76 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 76

 


வாசலில் வந்து நின்ற சரோஜாவை கண்டு அனைவரும் புரியாது விழிக்க, முதலில் சுயவுணர்வுக்கு வந்தது வைதீஸ்வரி தான்.

 

"வாங்க சம்மந்தி அம்மா" என்று அழைத்து வரவேற்பாக முன்னே சென்றார்.

 

ராகினி யார் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்று நாசூக்கு பார்க்கும் ரகமல்ல என்பதால் அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

 

புகழும் எழிலும் அமைதியாக நிற்க, ஶ்ரீதர் மருமகளைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.

 

வந்த சரோஜா நேராக மகனிடம் சென்று நின்றார்.

 

"கடனெல்லாம் கட்டிட்டன்னு அதோட என்னை மறந்துட்டல்ல புகழு? அம்மா என்ன செய்யிறேன்னு பார்க்க கூட வரலையே!" என்று கண்ணீரை முந்தானையில் துடைத்தார்.

 

புகழுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் வீட்டில் நல்ல விஷயங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இப்பொழுது இவரோடு சண்டையிட்டு நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.

 

அதனால் அவன் அமைதியாக நின்றான்.

 

"இரண்டு நாள் முன்ன வீட்டு ஓனர் வந்திருந்தாரு புகழு. அவருக்கு ஏதோ புது வீடு அதான் லீவுக்கு வந்தா தங்குவாங்கல்ல அது கட்டப் போறாராம். என்னை காலி பண்ணித் தர சொல்றாரு" என்றது தான் தாமதம்,

 

உள்ளே இருந்த ராகினி வில்லினிலிருந்து புறப்பட்ட அம்பு போல அவர் முன்னே வந்து நின்றாள்.

 

"அதானே பார்த்தேன், எங்க மனசு மாறி நம்ம எல்லாரும் வேணும்ன்னு புத்தி வந்துடுச்சு போலன்னு நினைச்சுடேன்" என்றவள்,

 

"நீங்க ஏதாவது பேசினா அப்பறம் நான் நார்மலா இருக்க மாட்டேன் புகழ். இவங்க இவ்வளவு சுயநலமா இருக்காங்க, இவங்களுக்கு நீங்க எதுவுமே செய்யக் கூடாது" என்று கோபமாகப் பேசினாள்.

 

சாதாரண நாட்களிலேயே மனைவி சொன்னால் அதிகம் மறுத்து பேசுவதில்லை என்பது தான் புகழின் குணம். இப்பொழுது மனம் மாறி குடும்பம், அன்பு, பொறுப்பு என்று அவள் சிறந்தவளாகத் திகழும் போது அவள் வார்த்தைக்கு அவனிடம் மறுப்பு இருக்குமா என்ன?

 

பல வீடுகளில் பெரியவர்கள் புரிந்து கொள்ளாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது ‘நான் சொல்வதை என் மகன் எந்த நிலையில் இருந்தாலும் கேட்க வேண்டும் ‘ என்பதும், ‘அது எப்படி மனைவி பேச்சைக் கேட்டு அவன் நடக்கலாம்?’ என்பதும் தான்.

 

ஆனால் அவர்களுக்கு தன் மகனை ஒரு நிர்பந்தத்தில் பிடித்து நிறுத்துகிறோம், அது அவனை அழுத்தி மூச்சு விட முடியாமல், வாழ்க்கையை வெறுக்கும் அளவுக்கு மன அமைதியை இழக்க வைக்கிறது என்பது புரிவதில்லை.

 

அன்று அந்த சின்ன இளக்கம் அன்றைய சூழலில் அந்த ஆண்மகனுக்கு தேவைப்படும் போது அதனை அனேக அன்னையர் கொடுப்பதில்லை. இதுவே பல குடும்பங்கள் பிரியவும், உறவுகள் முறியவும் காரணமாக அமைகிறது.

 

ஆனால் மனைவி ஏதோ ஒரு கட்டத்தில் 'சரி போங்க, நான் உங்களுக்காக பொறுத்து போறேன். ஆனா இனி என் மரியாதை குறையும்படி இந்த குடும்பத்தில் எதுவும் நடக்கக் கூடாது' என்று கணவருக்காக விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். பண உதவியை பிறந்த வீட்டில் இருந்தோ, கடனாகவோ, சுயஉதவிக் குழு போல தவணையிலோ, அல்லது வேலைக்கு சென்றோ கணவனின் சிரமமான நேரத்தில் தோள் கொடுத்து விடுகிறார்கள்.

 

அதன் பொருட்டு அவன் எந்த சூழல் வந்தாலும் மனைவியின் பக்கம் நின்றாக வேண்டியதாகிறது.

 

சில பெண்கள் இதை சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கணவரின் உறவுகளுக்கு அவர்களது எண்ணம் போல திருப்பி செய்வதும் உண்டு அல்லது இரண்டாவது ரகமாக வைத்து அவர்களை சம்பவமாக செய்வதும் உண்டு.

 

இன்று ராகினி இரண்டாவது விதமான மனைவியாக மாறி சரோஜாவுக்கு உதவக் கூடாது என்று புகழிடம் தன் எதிர்ப்பை முன் வைத்து விட்டாள்.

 

புகழும் இப்பொழுது உள்ள நிம்மதியான வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள விரும்பாமல் மௌனியாக நிற்கிறான்.

 

ராகினி பேசியதும் சரோஜா தன் மகன் தனக்கு ஆதரவாக பேசுவான் என்று நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்க அவன் வாய் திறவாமல் நின்றது அவரை பலமாகத் தாக்கியது.

 

"ஏன்டா உன்னை எப்படி வளர்த்தேன்? நீ ஆசைப்பட்ட எல்லாமே செய்து கொடுத்து, பிடிச்ச படிப்பை படிக்க வச்சேன்ல, இப்ப இப்படி அவ பின்னாடி போயிட்டியே!" என்று கண்ணீர் விட,

 

ரவி இத்தனை நேரம் அமைதியாக நின்றவன் அவரருகில் வந்தான்.

 

"அவங்க கேட்டது போல வீட்டை காலி பண்ணிக் கொடுங்க. இங்க இந்த வீடு காலியா தான் இனி இருக்கும். இங்க தங்கிக்கோங்க. உங்க வீட்டு பச்சை பீரோல ஒரு மஞ்சள் பை இருக்கும் போய் பாருங்க. அதுல ஒரு பேங்க் பாஸ் புக் இருக்கும். அந்த அக்கவுண்ட்ல மாச மாசம் எழில் உங்க செலவுக்கு பணம் போட்டு வச்சது பதிவாகி இருக்கும். இந்த ரெண்டு மாசம் கணக்கு மட்டும் ஏத்தி இருக்காது. பேங்க் பேனா பிரிண்ட் பண்ணித் தருவாங்க. நீங்க எந்த கவலையும் இல்லாம இங்கேயே இருக்கலாம். இல்ல தனியா போகணும்னு எண்ணம் இருந்தா சொல்லுங்க. பிரஸிடென்ட் வீட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு காலியா தான் இருக்கு. விஷேஷத்துக்கு யாரும் திடீர்னு வந்தா தங்க வைக்க நான் வாடகைக்கு எடுத்து வச்சிருக்கேன். அங்கேயே கூட வீட்டை மாத்திக்கோங்க. இனி உங்க விருப்பம்.” என்று கூறிவிட்டு தன் மனைவிக்கு அருகில் சென்று நின்று கொண்டான்.

 

எழில் மெல்ல தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள். அவளது விழிநீர் வழிந்து ரவியின் சட்டையை நனைத்தது.

 

சரோஜா பேச முடியாத அதிர்வில் நின்றிருந்தார்.

 

ராகினி அண்ணனை முறைத்து விட்டு,

 

"நீங்க உண்மைலேயே மனுஷி தானா? பின்னாடி ரெக்கை வச்ச தேவதை எதுவும் இல்லையே!" என்று எரிச்சலாக எழிலிடம் வந்து நின்றாள்.

 

எழிலுக்கு அவள் கேள்வி கேட்ட விதத்தில் சிரிப்பு வந்துவிட, கண்ணீரை துடைத்தபடி,

 

"ஏன் உனக்கு இந்த சந்தேகம்?"

 

"பின்ன என்னவாம்? அந்தம்மா கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடிச்சு? இந்த ரெண்டு மாசத்துல நாம யாராவது வேலை செய்யாம ஒருநாள் இருந்திருப்போமா? வீடு, தோட்டம், ஆடு, மாடு, கோழி, பூ, அது, இதுன்னு ஆளுக்கு ஏதோ வேலை ஆனா செய்தோம்ல! இது எல்லாமே யாரோடது? அவங்க பிள்ளைங்க, அவங்களோட துணை எல்லாருக்கும் உள்ளது தானே! நாம தானே வேலை பார்த்தோம். ஒருநாள்... ஒரே ஒரு நேரம்… எல்லாருக்கும் குடிக்க இவங்க ஒரு வாய் தண்ணி கொண்டு வந்து கொடுத்திருப்பாங்களா?, சொல்லு அண்ணி.

 

இதோ அந்த வீட்டு பின்னால உள்ள ஜன்னல் பக்கத்துல அந்த துரு பிடிச்ச சேரை போட்டுட்டு கருப்பு ஸ்கிரீனுக்கு பின்னாடி உட்கார்ந்து வேவு பார்க்க தெரிஞ்சது தானே! வந்து பேசினா என்ன? அப்ப வராத ஒருத்தர், தனக்கு ஒதுங்க இடமில்ல, இனி அதை உருவாக்க தேவையான பணவசதி இல்ல, அதுக்கு உழைக்க உடம்புல வலு இல்லன்னு ஆனதும் வந்து நேரா அவங்க பையன் கிட்ட போய் நிக்கிறாங்க.

 

அப்ப கூட உன்னைத் தேடி வரல அண்ணி. அது உன் புத்திக்கு ஏன் எட்டல? ஏன் ரக்சிக்க பிறந்த தேவதை மாதிரி நடந்துக்கற? கொஞ்சமாவது சாதாரண மனுஷியா அவங்க கிட்ட கோவப்படு. கத்து. பாரு உன் பிள்ளை அவன் பொண்டாட்டி பின்னாடி போயிட்டான். என் புருஷன் சொன்ன வார்த்தையை கேட்டியா? அது என் பணம், நான் உழைச்சு சேர்த்து வச்சு உனக்கு கொடுக்கறேன். பொம்பளையா பிறந்தது என் தப்பில்ல, அப்படிப் பார்த்தா நீயும் பொம்பள தானேன்னு அவங்களை நறுக்குன்னு கேளு அண்ணி" என்றவள் கடைசி வரியில் கண்ணெரோடு எழில் மீது சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

 

அவளை அணைத்துக் கொண்டே எழில் அவளது கண்ணீரை துடைத்து, "அப்படிக் கேட்டா எனக்கும் அவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது டா ராகினி. அவங்க பணக்கார வீட்டுல பிறந்து, அப்பறம் காசெல்லாம் போய் வறுமையை அனுபவிச்சு, கல்யாண வாழ்க்கையும் கையுக்கும் வாயிக்கும் சரியா போகவும், ஆண் பிள்ளை தான் நல்லா சம்பாதிச்சு தன்னை இந்த வறுமையிலிருந்து காப்பத்துவன்னு முழுசா நம்பிட்டாங்க. ஒரு பொண்ணா அவங்க வேலைக்கு போயும் அவங்க ஆசைக்கு வாழ முடியல. அப்ப அதே மாதிரி ஒரு பொண்ணான என்னாலையும் அவங்களை அப்படி வாழ வைக்க முடியாதுன்னு அவங்க நம்பினாங்க.

 

நீ உன் இடத்தில் இருந்து அவங்களை அனுமானிக்கிற. அவங்க பக்கத்துல நின்னு பாரு. நான் அவங்க செஞ்சது சரின்னு சொல்லல. ஆனால் இப்படி சூழல்ல இருந்த ஒருத்தர் செய்த எதையும் நாம குற்றப்படுத்த முடியாது. இது என்னோட கருத்து.

 

நீ சொன்ன மாதிரி நான் அவங்களை கேள்வி கேட்கல தான். ஆனா இப்ப வரையிலும் அவங்க கிட்ட நான் பேசவே இல்ல கவனிச்சியா? பணமோ, தங்குற இடமோ அது அவங்களுக்கு பிள்ளைகளா நாங்க செய்ய வேண்டிய கடமை. அதை தான் நானும் செய்ய நினைச்சேன். உன் அண்ணன் அதை அவங்க கிட்ட தகவலா சொன்னாரு அவ்வளவு தான்".

 

கடைசியாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்த சரோஜாவை ஆழமாகப் பார்த்து,

 

"கடமைக்கும் அன்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ராகினி. உனக்கு இப்ப அது புரியல. ஒருநாள் புரியும்" என்று கூறினாள்.

 

தன் மகள் கடைசியில் குறிப்பிட்ட வரிகள் தனக்குச் சொல்லப்பட்டவை என்று உணர்ந்த சரோஜா அமைதியாக அங்கிருந்து வெளியேறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels