சாரல் 74 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 74
எழிலும் ரவியும்
ஊர் திரும்பி இருந்தனர். ரகுராமிடம் அமைதியாக நடந்தவைகளை விளக்கினான் ரவி.
அவர் கூட அமைதியாக
அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டார். ஆனால் வைதீஸ்வரி மிகவும் உடைந்து போனார்.
"யாருக்கு
என்ன பாவம் செய்தோம் மா நாம? தம்பிக்கு அறிவு இருந்தது திறமை இருந்தது நேர்மை இருந்தது,
அதோட சேர்த்து தன் உழைப்பையும் போட்டு தானே பணம் சம்பாதிச்சாரு. யாரையும் அவர் ஏமாத்தலையே,
ஏன் அந்த ஜனகராஜை கூட தம்பி ஏமாத்தலையே. அவன் பங்கு பணத்தை கொடுத்துட்டு தானே அவன்
கையாடல் பண்றான்னு வெளில அனுப்பினார்? ஆனா மனித மனம் எவ்வளவு இழிவா இருக்கு பாரு எழில்!
தனக்கு நேர்மையா இருந்தவனை ஏமாற்றின குற்றவுணர்வு இல்லாம தன் மனைவி முன்ன முகத்திரையை
கிழிச்சிட்டான்னு தம்பியையும் மேகலாவையும் கொன்னு, ரவியை இப்படி ஏமாத்தி பணத்தை பிடுங்கி.
அது போதாதுன்னு ராகினி வாழ்க்கையைக் கெடுக்க நினைச்சு. நல்ல வேளை அவனுக்கு ஒரு பொண்ணு
இருக்க போய் ராகினியை நாசம் பண்ணுற எண்ணம் அவனுக்கு வரல போல. இல்லன்னா அந்த ஈனப் பய
அதையும் செய்திருப்பான்" என்று கண்ணீரில் வாய் ஓயாமல் அழுது கரைந்தார்.
"நம்மளால
இனி எதையும் மாத்த முடியாது அத்தை, அழுகாதீங்க" என்று அவரை சமாதானம் செய்து உண்ண
வைத்து உறங்க வைத்தாள்.
பின் ரவியிடம்
கூறிக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு செல்ல வாசலில் அமர்ந்திருந்த சரோஜா அவளைக் கண்டதும்,
"என்ன
உங்க அப்பா கிட்ட ரகசியமா சொல்லிட்டு ஓடிப்போன உன் புருஷனை தேடி கூட்டிட்டு வந்துட்ட
போல" என்று வம்புக்கு இழுத்தார்.
அவரை அற்பமாக
ஒரு பார்வை பார்த்த எழில் கண்டு கொள்ளாமல் வீட்டினுள் செல்ல, கட்டிலில் தன் கையை மடித்து
அதில் தலை சாய்த்து கண் மூடிப் படுத்திருந்தார்.
"அப்பா"
என்று எழில் அருகே சென்றதும் கண் விழித்தார்.
அவர் எழுந்து
வராதது அவளுக்கு ஏதோ உறுத்த என்னவென்று வினவினாள்.
"மாப்பிள்ளை
போன் பண்ணி சொன்னதா புகழ் எல்லாத்தையும் சொன்னான் மா, என்னால தாங்க முடியல." என்று
கண்ணீர் விட்டார்.
"என்னப்பா?"
அன்று அவள் அவர் கையை அழுத்த,
"நான்
ஆஸ்பத்திரியில பலர் உயிருக்கு போராடுறத பார்த்திருக்கேன். மறுபிறப்பு எடுத்து பொம்பளைங்க
பிள்ளை பெத்ததை பார்த்திருக்கேன், எத்தனையோ பேர் வியாதி வந்து செத்தும், விபத்துல அடிபட்டு
போயும் பார்த்திருக்கேன். ஒரு உயிர் போறது எப்படியும் மாசத்துல சில தடவை பார்த்தவன்
நான். ஆனா மாப்பிள்ளையோட அம்மா அப்பா சாவை என்னால ஜீரணிக்க முடியல. திட்டம் போட்டு
கொல்லற அளவுக்கு மனிதம் அழிஞ்சு போச்சா மா?" என்று நொந்தார்.
"இப்ப
தான் என் பெரிய மாமியாரை சமாதானம் செய்துட்டு வர்றேன். இப்ப நீங்களா? நீங்க உங்க மருமகனுக்கு
ஆறுதல் சொல்லணும். நீங்க என்னடான்னா அவர் வந்து உங்களுக்கு ஆறுதல் சொல்ற மாதிரி வச்சுடுவிங்க
போல." என்று கேலி செய்ய,
"நான்
ஒரு மடையன். எனக்கே இப்படி இருக்கே அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அதான் அன்னைக்கு
அவசரமா கிளம்பி போனியா நீ?" என்று மகளை வினவினார்.
"அதுக்கு
முன்னாடியே நான் போயிட்டேன் பா. அவருக்கு மனசுல வலியும் வேதனையும் இருந்தது. இன்னும்
இருக்கு. ஆனா இதை ராகினிக்கு புரிய வைக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்குன்னு சொல்லவும்
அவரே தன்னை தேத்திகிட்டாரு. பொறுப்பு வரும்போது கூடவே சகிப்பும் வர்றது இயற்கை தானே!"
என்றதும்,
அதுவரை அவர்களது
பேச்சை சுவருக்குப் பின் நின்று கேட்ட சரோஜா,
"நீங்க
என்ன பேசுறீங்க? அவங்க செத்து இத்தனை நாளுக்குப் பிறகு ஏன் இந்த பேச்சு?" என்றார்.
அவர் மேல் கோபமிருந்தாலும்
அவரிடம் அதனை காட்டிக் கொள்ளாமல் நடந்ததை விவரிக்க,
"ஏய் உங்களுக்கு
அறிவு இல்லையா? இப்படியா ரெண்டு பேரும் கூமுட்டை மாதிரி போலீஸ்காரன் போன்னு சொன்னதும்
கிளம்பி வருவீங்க? சட்டமா அவன் பிடுங்கினத வாங்கிட்டு வரத் தெரியாதா?" என்று குரல்
ஓங்கக் கத்தினார்.
வீட்டு வாயிலில்
புகழின் தோளில் அழுதபடி இருந்த ராகினி மாமியாரின் பேச்சைக் கேட்டு வெகுண்டாள்.
"நீங்க
உண்மையிலேயே மனுஷ ஜென்மம் தானா? வாழ்க்கையில பணம் முக்கியம் தான். நானும் பணம் பணம்ன்னு
என் அண்ணனை அரிச்சவ தான். என் புருசன் சம்பாதிக்கணும்ன்னு அவரையும் பிடுங்கி தான் எடுத்தேன்.
ஆனா இப்படியா ஒரு மனுஷி ரெண்டு பேரை ஒருத்தன் கொலை செஞ்சு எங்களை ஏமாத்தி பிடுங்கிட்டான்னு
கேள்விப்படும் போது கூட பணத்தை பத்தி மட்டுமே பேசுறது?
உங்க பேச்சு
நடவடிக்கை எனக்கு பிடிக்காது. நான் அண்ணிக்காக தான் உங்களை பொறுத்து போனேன். என்னை
மேனிபுலேட் பண்ணி வீட்டுல நீங்க சண்டை மூட்டணும்ன்னு பல தடவை முயற்சி பண்ணினது புரிஞ்சும்
புகழுக்காக அமைதியா இருந்தேன். ஆனா இனி உங்க முகத்துல கூட நான் முழிக்க மாட்டேன். உங்க
வீட்டுக்கு வாழ வந்த என்னையோ, இல்ல உங்க பொண்ணு வாழ போன என் அண்ணனை பத்தியோ துளி கூட
கவலைப்படாத நீங்களும் அந்த கொலைகார பாவியும் ரொம்ப ஒன்னும் வேறுபட்டு போகல. அவன் உயிரை
கொன்னான். நீங்க அனுதினமும் மனசை கொல்றீங்க.
உங்க கூட இனிமேலும்
பொறுத்துக்கிட்டு பழகுனா நானும் உங்களை போல மாறிடுவேன்னு பயமா இருக்கு. புகழ் வாங்க
போலாம். இனிமே உங்க அம்மா பேச்சு என்கிட்ட வரக் கூடாது." என்று அவனையும் கூடவே
எழிலையும் இழுத்துக் கொண்டு வெளியேறப் போனவள்,
"மாமா
நீங்களும் வந்துடுங்க. அண்ணன் வீட்டுக்கு மேல இருக்குற கன்டெய்னரை உடனே உங்களுக்கு
ரெடி பண்ணி தரச் சொல்றேன். அதுவரை வேன்ல தங்கிக்கோங்க. இந்தம்மா பேசியே உங்களையும்
ஒன்னும் இல்லாம பண்ணிடும்." என்று மாமனாரையும் அங்கிருந்து கிளப்பி சென்று விட்டாள்.
புயல் அடித்து
ஓய்ந்தது போல அவ்விடம் காட்சியளிக்க சரோஜா வீட்டில் தனியாக நின்றார்.
அனைவரையும்
அழைத்துக் கொண்டு ரவியிடம் சென்ற ராகினி ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
அவன் அவளை சமாதானம்
செய்ய, எழில் ஏதும் பேசாமல் நின்றிருந்தாள்.
அதை உணர்ந்த
ராகினி, "அண்ணி நான் உங்க அம்மாவை அப்படி பேசினது கோவமா?" என்று கேட்க,
"உன் மாமியார்
கிட்ட நீ பேசுற, நான் ஏன் கோவப்படணும்? என் சிந்தனை எல்லாம் உங்க எல்லாரையும் இந்த
மனநிலையில இருந்து எப்படி மாத்துறதுன்னு தான்" என்றவள் குறுக்கும் நெடுக்குமாக
நடந்து,
"அத்தை,
மாமா ஒரு மாசம் நீங்க ஊருக்கு போகலன்னா பரவாயில்லையா?" என்று ரகுராம் அருகில்
சென்று வினவ, அவரோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தவர்,
"அங்க
போய் என்ன பண்ண போறோம் எழில்? நீ சொல்ற வரைக்கும் இங்கேயே இருக்கோம்." என்று தளர்வாகக்
கூறினார்.
புகழிடம் “டேய்
உன் புது பிஸ்னஸ் போக கொஞ்ச நேரம் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?"
"உனக்கு
செய்யாமலா?" என்றவன் “என்ன பண்ண போற?” என்றது தான் தாமதம்,
"வீடு
கட்ட வேண்டாமா டா? இது இப்போதைக்கு போதும்ன்னாலும் விளைஞ்ச பொருளை வச்சு, நம்ம
வீட்டுக்கு யார் வந்தாலும் தங்க வச்சு பார்க்க, நல்ல நாள் வந்தா எல்லாரும் சேர்ந்து
கொண்டாட வீடு வேண்டாமா?" என்றாள் எழில் வேகமாக.
"அக்கா
வீடு பெரிய பட்ஜெட் கா. உடனே இறங்கி செய்ய சிரமம். அதுவும் இல்லாம இப்ப இவ்வளவு செடி
எல்லாம் வச்ச பின்னாடி கட்டுமான பொருளை கொண்டு வந்து போட்டா செடி எல்லாம் கஷ்டப்படும்".
அதற்கு தன்
மனைவி அருகில் வந்து அவள் தோள் மேல் கை போட்டு சிரித்த ரவி,
"என்ன
இசை புகழுக்கு நம்ம ஐடியா எதையும் நீ சொல்லலையா?" என்றதும்,
"இனிமே
தான் எல்லாருக்கும் சொல்லணும். நீங்களே சொல்லுங்க, உங்க ஐடியா தானே அது?" என்று
அவனை அவள் ஊக்க,
அவன் கூறியதை
கேட்டு அத்தனை நேரம் வருத்தம், வெறுமை, சோகம் என்று பல்வேறு மன நிலையில் இருந்தவர்கள்
அனைவரும் சிறு உற்சாகம் அடைந்து அவனோடு தோள் கொடுக்கத் தயாராகின்றனர்.
அதை கண்டு மகிழ்ந்த
ரவி எழிலை மையலாக நோக்க,
பிரதீஷ் அவர்கள்
ஊர் சென்று சேர்ந்தார்களா என்று தெரிய கைபேசியில் அழைத்தான்.
நலம் விசாரித்த
பின் இனி எந்த ஒரு விஷயத்திலும் அனைவரும் இணைந்து குடும்பமாக பேசி மகிழ வேண்டும் என்று
உறுதி செய்த போது, வீட்டை கட்டி முடிக்க அவனின் உதவியும் தேவைப்படலாம் என்று கூறி பெற்றோர்
விஷயத்தில் தனக்கு ஆதரவாக இருந்தது போல வாழ்நாளில் எப்பொழுதும் இருக்க வேண்டுமென்ற
கோரிக்கை வைத்தான் ரவீந்தர்.
மகிழ்வோடு அதனை
அவன் ஏற்றிக்கொண்டு கைபேசியை வைக்க, இங்கே எந்தெந்த வேலையை யார் பங்கிட்டு செய்வதென்று
பேச்சு வந்தது.
யாரும் எதிர்பாரா
வண்ணம் ராகினி முன்னே வந்து, "தினமும் எல்லாருக்கும் நான் சமையல் பண்ணிடுறேன்"
என்றது தான் தாமதம். அங்கிருந்த அனைவரும் சிதறி ஓடினர்.
ராகினி சிரித்தபடி
"நல்லவேளை ஓடிட்டாங்க, இல்லன்னா இப்போ காபி கொடுத்து சாம்பிள் காட்டி இருப்பேன்"
என்று ஒய்யாரமாக நடந்து அவள் வீடு சென்றாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக