சாரல் 72 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 72



தன் கைவளைவில் இருந்த மனைவியைக் கண்டு ரவியின் மனம் நிறைந்து இருந்தது.


அன்று போனில் அவன் பேசி வைத்ததும் கடைசி பஸ்சில் ஏறி காலை விடியும்போது சென்னை வந்து விட்டாள்.


அதிகாலை அவளது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் அரைத்தூக்கத்தில் "என்ன இசை?" என்று கேட்டவனிடம் "கொஞ்சம் வேன் கதவைத் திறங்க சன்ஷைன்" என்றாள்.


பரபரவென்று எழுந்து கேம்பர் வேனின் கதவைத் திறக்க மலர்ந்த முகமாக கையில் பையுடன் நின்றிருந்தாள்.


அவளது வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ரவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான்.


அவளை அருகே இழுத்து மார்போடு அணைத்து நின்றபோது நேற்றிருந்த நிராதரவான மனநிலை காற்றில் மறைந்து யானை பலம் கூடியது போல உணர்ந்தான் ரவி.


அவன் இயல்புக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.


"எப்படி இசை?" என்று அவன் வியந்து கேட்க, 


"நேத்து உங்களுக்கு பக்கத்துல நான் இருக்கணும்ன்னு தோனி இருக்கு. அதான் உங்களை அறியாம அது வெளில வந்தது. நானும் வந்துட்டேன்." என்று சின்னதாக சொல்லி முடித்தாள்.


அதன் பின் தான் பிரதீஷ் அவனிடம் காட்டிய கோப்புகள் பற்றி அவளுக்கு விளக்க,


"எனக்கென்னவோ உங்க மாமா மேல தப்பு இருக்கும்ன்னு தோணல சன்ஷைன். நீங்களும் பிரதீஷும் கோபமா பேசினா கண்டிப்பா நாளைக்கு முகத்துல முழிக்க முடியாம போயிடும். அவசரம் இல்லாம பொறுமையா பேசுங்க" என்றாள் அவன் நெஞ்சைத் தடவியபடி.


"எப்படி இசை பொறுமையா இருக்க முடியும்? நேத்து நைட்டு அவர் வீட்டுக்கு போய் கேட்டிருப்பேன் ஆனா என்னவோ மனசு இன்னிக்கு போக சொல்லிச்சு" என்று அவளது கைகளை தன் நெஞ்சோடு பொத்திக் கொண்டான்.


"இவ்வளவு நாள் பொறுத்த உங்களால உங்க மாமா கிட்ட நிதானமா பேசி விஷயத்தை வாங்குறது வரைக்கும் பொறுக்க முடியாதா?"


"அவர் என்னை மதிக்கவே மாட்டார் இசை. இப்போ போய் கேட்டா மட்டும் பதில் சொல்லுவாரா? இதுல நாம நிதானமா கேட்டா கண்டிப்பா பதில் கிடைக்காது" என்றதும்,


"அவர் ஏன் உங்களை மதிக்கலன்னு யோசிங்க. அதுல நீங்க மதிப்பான ஆளுதான்னு அவருக்கு காட்டுங்க. தன்னைப்போல அவரே பதில் சொல்லுவாரு பாருங்க" என்று அவனுக்கு யோசனை கூறி அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.


விடிந்ததும் அவர் வீட்டு வாயிலில் சென்று நிற்க வேண்டாம் என்று மனைவியுடன் கடற்கரையில் காற்று வாங்கிவிட்டு பத்ரி வீட்டுக்கு சென்றவன் மனைவி கோடிட்டு காட்டிய மதிப்பை அவர் பணத்தால் அளக்கிறார் என்றுணர்ந்து தான் நிதிநிலையைக் காட்டி பின் அவர் வாயிலிருந்து அனைத்தையும் வாங்கி விட்டான்.


ஆனால் அவர் கூறியதில் இருந்து அனைவருக்கும் புரிந்தது என்னவென்றால் மனிதன் பணம் என்னும் காகிதத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வான் என்பதே.


பத்ரி கூறிய அனைத்தையும் கேட்ட பின் காவல்துறை உயரதிகாரியை தொடர்பு கொண்டு அனைத்தையும் கூறினான் ரவி.


துரித கதியில் அவர்களும் நேரில் வந்து பத்ரி கூறிய நிகழ்வுகள், ரவியின் வாக்குமூலம், பிரதீஷ் கண்டுபிடித்த ஆதாரங்களை எல்லாம் பெற்று மேஜிஸ்திரேட் முன் சமர்ப்பித்து ஜனகராஜை கைது செய்ய வாரன்ட் வாங்கி விட்டனர். 


அதனைக் கேட்ட பின் தான் ரவி சமநிலை அடைந்தான்.


ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று அங்கே நடந்தது.


பத்ரி தான் செய்த செயல் எத்தனை அறிவீனமானது என்பதனை வாய் விட்டுப் புலம்பியதோடு ஏதோ ஒரு வகையில் உடன்பிறப்பின் இறப்புக்கு காரணமானேன் என்று கரைந்து மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்தார்.


பிரதீஷும் ரவியும் அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் மனைவி கற்பகத்துக்கு எழில் துணையாக இருந்தாள்.


அதிகப்படியான இரத்த அழுத்தம் தான் காரணம் என்று மருத்துவர் அறிக்கை தந்த பின் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.


ஜனகராஜ் பற்றி இனி காவல்துறை விசாரித்து தகவல் தரும் வரை ரவி காத்திருக்க வேண்டும் என்று கூறிவிட பிரதீஷ் எத்தனையோ கேட்டும் அவர்கள் வீட்டில் தாங்காமல் தங்கள் கேம்பர் வேனை எடுத்துக் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே உள்ள கேம்பிங் சைட்டில் தங்கி விட்டனர்.


வெளியே கூடாரம் அமைத்து இருவரும் சற்று நேரம் அமர்ந்திருக்க என்ன பேசினாலும் பேச்சு மீண்டும் மீண்டும் பெற்றோரிடம் செல்வதை தவிர்க்க முடியாமல் சலித்துக் கொண்டனர்.


மீண்டும் வேனுக்குள் வந்ததும் எழில் எதையோ முன்பக்கம் எட்டி எடுக்க முயல, அவளது பளிங்கு போன்ற இடுப்பு ரவியை கிறுகிறுக்க வைத்தது.


மனைவியை அருகே இழுத்து கைவளைவில் வைத்துக் கொண்டான்.


மனம் இத்தனை நேரம் காணாத பேரமைதி இப்பொழுது கிடைத்துவிட்டது போல மகிழ்ச்சி பரவ அவளது நெற்றியில் அன்பாய் முத்தமிட, அவளது அன்பும் ஆதரவும் நெஞ்சம் நிறைந்து அவளை மீண்டும் மீண்டும் நாடச் செய்தது.


அவனது தீவிரம் உணர்ந்தவள் போல ஒரு கட்டத்தில் அவனை அன்பால் கட்டி நிறுத்தினாள்.


"என்ன பண்றீங்க சன்ஷைன்? உங்க அன்பும் காதலும் எனக்கு புரியுது. ஆனா இது சரியில்ல” என்று நெற்றியில் ஆள்காட்டி விரல் வைத்து அவனை தள்ளி விட்டாள்.


அவனும் அவள் கூற்று புரிந்தவனாக,


"உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல இசை. நீ மட்டும் சென்னை போய் விசாரிச்சு உங்க மனசுல உள்ள குழப்பத்தை தீர்த்துட்டு வாங்கன்னு என்னை அனுப்பாம போயிருந்தா வாழ்நாள் எல்லாம் என் அம்மா அப்பா கடன் தொல்லையால தற்கொலை செய்ததா தானே நான் நம்பிட்டு இருந்திருப்பேன்" என்று மனம் வருந்திப் பேசினான்.


"எங்க சுத்தினாலும் இங்கேயே தான் நம்ம பேச்சு வந்து நிக்குது. பேசாம மிச்சம் வைக்காம பேசி முடிச்சிடுவோம். அப்பவாவது உங்களுக்கு மனசுக்கு நிம்மதி கிடைக்குதா பார்க்கலாம்." என்று கணவனை தன் அருகே இழுத்து அவன் பேசி அவள் கேட்க ஏதுவாக அவன் தோளில் தாடையைப் பதித்துக் கொண்டாள்.


"போலீஸ்ல அந்த ஜனகராஜ் ஒவ்வொண்ணா சொல்ல சொல்ல எனக்கு ரத்தமெல்லாம் சூடாகிடுச்சு இசை. ஒருத்தன் பணத்துக்காக என்ன வேணாலும் செய்வானா? நீ அத்தை கூட இருந்ததால நானும் பிரதீஷும் ஸ்டேஷனுக்கு போனோம். அப்ப.." என்று அங்கே நடந்ததை அவள் முன்னே காட்சியாக விவரித்தான். 


"உண்மையிலே என்ன நடந்ததுன்னு சொல்லு, இல்ல வயசு பார்க்காம லத்தி எடுத்து வெழுத்துடுவேன்" என்று இன்ஸ்பெக்டர் லத்தியை தரையில் தட்ட, அந்த ஜனகராஜ் அதற்கெல்லாம் அசரவில்லை.


"என்ன பெயில் வாங்கிட்டு உன் வக்கீல் வருவாரு ஓடிப் போயிடலாம்ன்னு நெனச்சியா? உன் மேல எக்கனாமிகல் அஃபன்ஸ் கேஸ் இருக்கும்ன்னு கனவா? உன் மேல இருக்குறது டபிள் மர்டர் சார்ஜஸ். ஆகிடென்ட் போல உனக்கு தெரிஞ்ச லாரி டிரைவர் வச்சு செட் பண்ணி இருக்க, அவன் அவங்க கார்ல ஏற்கனவே பிரேக்கை கொஞ்சமா லூஸ் பண்ணி விட்டு லாரியை அப்பப்ப இடிப்பது போல நெருங்கி வந்து ஒரு புள்ளில அவன் பின்னாடி இடிச்சிடுவானோன்னு அவங்களை பயப்பட வைக்கும் போது கார் கண்ட்ரோல் மிஸ் ஆகி ஆக்ஸிடென்ட் ஆகி இருக்கு. 


அந்த லாரி டிரைவர் உன் பேரை சொல்லிட்டான். அவனுக்கு நீ அனுப்பின பணமும் சாட்சியா இருக்கு. உண்மையை சொல்லு இல்லன்னா நீ கோர்ட் வாசலை மிதிக்க மாட்ட" என்று அவர் லத்தியை அவர் அமர்ந்திருந்த சேரில் ஒரு போடு போட்டதும் ஜனகராஜ் வாயிலிருந்து உண்மை வரலாயிற்று.


பரசுராம் ஒரு தேர்ந்த தொழிலதிபர். அவரிடம் பார்ட்னராக சேரவேண்டும் என்று குட்டிக்கரணம் அடுத்து ஒரு வழியாக ஒரே ஒரு தொழிலில் இணைந்து கொண்டார் ஜனகராஜ்.


பரசுராம் அந்த தொழில் தீட்டிய லாபங்களை நியாயமாக பங்கிட்டு அவருக்கு கொடுக்க, மற்ற அத்தனை தொழில் லாபங்கள் பரசுராமுக்கு இருக்கும் போது இதனை தனக்கு முழுமையாக கொடுத்தால் என்ன எண்ணம் ஜனகராஜுக்கு வர சத்தமில்லாமல் கம்பெனியில் சுரண்டி பணம் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்.


இதனை அறிந்த பரசுராம் அவரை கண்டித்ததோடு உடனே தொழில் முறிவு செய்து கொள்ள, ஜனகராஜ் அதற்கு மேல் தொழில் செய்ய முடியாமல் முடங்கிவிட்டார்.


சில ஆண்டுகளாக மீண்டும் தன்னை சேர்த்துக் கொள்ளும்படியும் தான் நியாயமாக நடந்து கொள்வதாகவும் ஜனகராஜ் கேட்டும் பரசுராம் அதற்கு சம்மதிக்கவில்லை.


அந்த கோபத்தில் இருந்தவர் சின்னச் சின்ன தொந்தரவுகளாக பரசுராம் கம்பெனிக்கு ஏற்படுத்தி வர, ஒருமுறை அவரது அலுவலகத்துக்கு ஒருவர் கொடுக்க வேண்டிய பணத்தை ஆள் வைத்து ஜனகராஜ் அவரது பங்குதாரர் என்று சொல்லி வாங்கிச் சென்று விட்டார்.


இதை அறிந்து பரசுராம் கொதித்தெழுந்தார். அன்று அவர் செய்த ஒரு தவறுதான் அவர் உயிரை பலி வாங்கி விட்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels