சாரல் 69 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 69
பிரதீஷ் அழைத்து
தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறியதும் ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை.
"என்ன
கண்டுபிடிச்ச?" என்று அவன் ஆர்வமாக வினவ,
"போன்ல
வேண்டாம் மாமா. நாம அதே இடத்துல மீட் பண்ணுவோம்" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட
ரவிக்கு அங்கு சென்று அவன் வந்து சேரும் வரும் பரபரப்பாக இருந்தது.
பிரதீஷ் சற்று
நேரம் சென்று தான் அங்கு வந்தான். கையில் சில பைல்களை அவன் வைத்திருக்க ரவி அவனிடம்
ஆர்வமாக,
"என்னன்னு
சொல்லு பிரதீஷ், எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு" என்று அவசரம் காட்டினான்.
"உங்களுக்கு
ஏன் மாமா அந்த ஜனகராஜ் மேல சந்தேகம் வந்துச்சு?" என்று இவன் கேள்வி எழுப்ப,
"அதுக்கு
தனிப்பட்ட காரணம் இல்ல. அவரோட ஒத்துவராம அப்பா அவரை விலக்கினதா அவர் சொல்லி கேட்டிருக்கேன்.
இத்தனை வருஷம் இல்லாம இப்ப திடீர்னு அவர் புது கம்பெனி, பிஸ்னஸ் எல்லாம் பார்க்கும்
போது மனசுல ஒரு வித நெருடல். மத்தபடி அவர் மேல நான் சந்தேகப்பட சாலிடான எவிடென்ஸ் எதுவும்
இல்ல" என்றான் தாடையை தேய்த்தபடி.
"இப்போ
இருக்கு." என்று தன் கையில் இருந்த கோப்பை அவன் முன்ன வைத்தான்.
அதை எடுத்துப்
பார்த்த ரவி புரியாமல் பிரதீஷை நோக்க,
"நீங்க
ஏதோ ஃபைனான்ஸ் கம்பெனில மாமா வாங்கின கடனுக்கு எல்லாத்தையும் எழுதிக் கொடுத்ததா சொன்னிங்கல்லயா
அது வேற யாரோடதும் இல்ல. அந்த ஜனகராஜ் கம்பெனி தான்." என்று கூறி அமைதியானான்.
"ஹ்ம்ம்.
அப்ப அவர் கிட்ட அப்பா கடன் வாங்கி தான் இப்படி ஆச்சா? ஆனா அப்பா அவர் கிட்ட எதுக்கு
பணம் வாங்கணும்? பிஸ்னஸ்ல நிரந்தர எதிரின்னு இல்லனாலும் வேண்டாம்னு ஒதுங்கின இல்ல ஒதுக்கின
ஆள் கிட்ட யாராவது பணம் வாங்குவாங்களா?" என்றான் யோசனையாக.
"எனக்கும்
இதே கேள்வி தான் வந்துச்சு. அதுக்கான பதில் அடுத்த ஃபைல்ல இருக்கு பாருங்க" என்று
தலையைத் தாங்கி அமர்ந்தான்.
அதைப் பிரித்த
ரவியின் கண்கள் நிலை குத்தியது. அதில் வஜ்ரா பைனான்ஸ் என்ற கம்பெனி பதிவு செய்யப்பட்ட
நாளின் தகவல்கள் அடங்கி இருந்தது.
"இதே கம்பெனி
தான் பிரதீஷ். ஆனா அப்பா அம்மா இறப்புக்கு ஒரு மாசம் முன்னாடி தான் கம்பெனி பதிவு பண்ணி
இருக்காங்க. ஆனா நான் கையெழுத்து போடும்போது அந்த நிறுவனத்துகிட்ட அப்பா மூணு வருஷம்
முன்னாடி ஐம்பது கோடி வாங்கியதாகவும் கிட்டத்தட்ட இரண்டு வருஷமா வட்டியும் கட்டல அதுனால
ஜப்தி நோட்டீஸ் அனுப்பி இருந்ததாகவும் டாக்குமென்ட்ல தெளிவா போட்டிருந்தது" என்றான்
தலையைப் பிடித்தபடி.
"அது மட்டுமில்ல
மாமா. இன்னும் நிறைய இருக்கு. உங்க வீடு வஜ்ரா பைனான்ஸ்ல இருந்து ஜனா தான் வாங்கி இருக்கிறாரு.
மாமா ஆபிஸையும் அவர் வாங்கினதா தான் டாக்குமென்ட் இருக்கு. ஆனா நானும் இந்த பைனான்ஸ்
எங்க இருக்குன்னு வலை போட்டு ஒரு மணி நேரமா தேடுறேன், ஒரு தகவல் கூட சிக்கல" என்றான்
எரிச்சலாக.
"ஏதோ தப்பா
இருக்கே பிரதீஷ்" என்றான் புரியாமல்.
"ஆமா மாமா
ஏதோ ரொம்ப ரொம்ப தப்பா இருக்கு. இதெல்லாத்தையும் விட ராகினி விஷயத்தை மனசுல வச்சு எங்கப்பா
கிட்ட நூல் விட்டுப் பார்த்தேன். அவர் என்னவோ ‘நல்ல வேளை நீ அந்த பொண்ணு வாழ்க்கையை
தொந்தரவு செய்யாம போன, அதெல்லாம் பெரிய பாவாம்’ன்னு பேசறார். இவருக்கும் ஜனகராஜுக்கும்
எப்படி பழக்கம்? மாமா கடன் வாங்கினது இவருக்கு எப்படி தெரியும் இப்படி நிறைய கேள்வி
இருக்கு மாமா. ஆனா இதை நேரடியா தான் அவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க முடியும்"
என்று சிந்தனையுடன் கூறினான்.
"இதுக்கு
மேல கேட்காம இருக்கறதும் தப்பா போயிடும். நான் உங்க வீட்டுக்கு வர்றேன். நேரடியா இல்லாம
மறைமுகமா உங்க அப்பா கிட்ட பேசுறேன். எனக்கு வேற வழி தெரியல. இப்போதைக்கு நீ கொண்டு
வந்த எதையும் நான் போலீசுக்கு தெரியப்படுத்தல. உங்க அப்பா சொல்ற பதிலை வச்சு தான் இனி
எதுனாலும் முடிவு செய்யணும்." என்றான் ஒரு பெரிய பெருமூச்சுடன்.
"அப்பா
கண்டிப்பா உங்க குடும்பம் கெட்டுப் போகணும்னு எதுவும் செய்திருக்க வாய்பில்லன்னு தோனுது
மாமா. இதுல அவர் எந்த அளவுக்கு மாட்டி இருக்கார்ன்னு அவர் சொன்னா தான் தெரியும்"
"சரி நீ
கிளம்பு பிரதீஷ் நான் நாளைக்கு உன் வீட்டுக்கு வர்றேன்" என்றவன் தலையை தாங்கிப்
பிடித்தபடி அமர்ந்துவிட்டான்
தான் எவ்வளவு
பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம்? தன் தாய் மாமாவே ஆனாலும் கடன் கட்ட காட்டப்பட்ட
பாத்திரத்தில் உள்ளதை மட்டும் வாசித்து சொத்துக்கள் முழுவதையும் எழுதிக் கொடுத்திருக்கிறோம்.
உண்மையில் அப்பா கடன் வாங்கினாரா? அதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை? கம்பெனி உண்மையில்
நஷ்டத்தில் இருந்ததா? ஏன் கடனை திருப்பி அடைக்கவில்லை என்று தான் யோசித்திருக்க வேண்டாமா?
இப்படியா அறிவு மழுங்கிப் போய் கையெழுத்துப் போடுவது என்று தன்னையே நொந்து கொண்டான்.
தன் பண்ணைக்காக
சிலரை சந்திக்க முன்னமே சந்திப்புக்கு நேரம் வாங்கி இருந்ததால் தாமதிக்காமல் அங்கிருந்து
கிளம்பினான்.
அவர்கள் நிலத்தின்
கடைசியில் இருக்கும் ஓடையில் இருந்தும், பின்னாளில் தோண்ட இருக்கும் கிணற்றில் இருந்தும்
எப்படி மின்சாரம் தயாரிக்கலாம் என்று அதில் நிபுணத்துவம் வாய்ந்தவரை சந்திக்கச் சென்றான்.
"சார்
இதை சின்ன அளவுல செஞ்சு ரெண்டு பல்பு எரிய வச்சு கரெண்ட் சேமிக்கலாம். பெரிய அளவுல
மின்சாரம் தயாரிக்க செலவாகும் சார். அதுனால தான் இன்னும் இந்த ரின்யுவபிள் எனர்ஜி பத்தி
பெருசா விவசாயம் பண்றவங்க கிட்ட வரவேற்பு இல்ல"என்று கூறினார்.
"சார்
நான் செலவை பத்தி யோசிக்கல. மாற்று சக்தியை எப்படி எளிய முறையில் பயன்படுத்தலாம்னு
ஓரளவு நான் தெரிஞ்சுகிட்டா அதை மக்கள் பயன்படுத்த தயங்காத அளவுக்கு புரிய வைக்க முயற்சி
பண்ணுவேன். ஸ்கூல் படிக்கும்போது ஹைட்ரோ எலக்ட்ரிசிட்டி ஜெனரேட்டர் அப்படின்னு
சைன்ஸ் எக்ஸிபிஷன்ல குட்டி குட்டியா பிராஜெக்ட் பண்ணினவன் தான் நானும். ஆனா அதை பெருசா
செஞ்சு பார்க்க எல்லாருக்கும் தயக்கம் இருக்கலாம். இல்ல பெருசா செய்யும்போது இன்னும்
திறம்பட செயல்படுத்த உங்களைப் போல உள்ளவங்களோட வழிகாட்டுதல் தேவைப்படலாம்.
இப்போ என் கேள்வி
என்னனா புதுசா நானே டி.ஐ. ஒய் மாதிரி செய்து பார்க்கவா? இல்ல செலவானா பரவாயில்லன்னு
சோலாருக்கு வாங்குறது போல இதுக்கு ரெடிமேடாக வாங்கி ஆரம்பிக்கவா சொல்லுங்க." என்று
அவரிடமே அறிவுரை கேட்டான்.
"உங்க
இடத்தில நீரோட வேகம் என்னன்னு தெரியாது. அது தெரியணும். நீ கம்பெனி கிட்ட ஜெனரேட்டர்
வாங்குறது உடனே பலன் கொடுக்கும். ஆனா நீங்களா செய்து பார்க்கும் போது உங்களுக்கும்
அது தொடர்பா நல்ல நாலேஜ் கிடைக்கும், உங்க விருப்பம் தான்" என்றார்.
"சரிங்க
சார் இரண்டு இடத்துல ஓடை நீர் சின்னதா விழுந்து ஓடுது. ஒண்ணுல கம்பெனி மோட்டார் மெத்தடும்,
ஒன்னுல நானே செய்தும் பார்க்கறேன். ரெண்டும் தற்காலிகமானது தான். எப்படி ரிசல்ட் வருதோ
அதைப் பொறுத்து பெரிய அளவுல அதுல முதலீடு பண்றேன்" என்று கூறி அவரிடம் விடை பெற்றான்.
அங்கிருந்து
கிளம்பி கடற்கரை சாலைக்கு வந்தபோது எழிலிடமிருந்து அழைப்பு வந்தது.
"சொல்லு
இசை" என்று அவன் அழைப்பை ஏற்றுக் கூறியதும்,
"நான்
எங்க எம்பிராய்டரி சார் கிட்ட பேசினேன். அவர் மதிப்புக் கூட்டுப் பொருள் செய்து விவசாயத்துல
நிறைய பேர் லாபம் பார்க்கிறாங்க. அதுக்கான ஒரு மணி நேர ஆன்லைன் ஆலோசனை க்ளாஸ் இருக்கு
நீ அட்டென்ட் பண்றியான்னு கேட்டாரு. நானும் அட்டென்ட் பண்ணினேன். நிறைய தகவல் கிடைச்சது.
நாம பொக்கே
ஃப்ளவர்ஸ் இல்லாம, செம்பருத்தி, ரோஸ் எல்லாம் சாகுபடி செய்தா ஸ்கின் கேர் பிராடெக்ட்ஸ்
கம்பெனி வாங்கிப்பாங்க. இல்ல நாமளே அதெல்லாம் தயார் செய்து விற்பனை செய்யலாம்.” என்று
அவள் தன் கனவு கோட்டைக்குள்ளிருந்து பேசிக்கொண்டே போனாள்.
"இசை,
நான் தற்சார்பு முறைக்கு மாறலாம்ன்னு தான் சொன்னேன் முழு நேர விவசாயியா இல்ல. இருந்தாலும்
நீ சொல்றது வருமானத்துக்கு ஒரு நல்ல வழி தான். இடம் எப்படி இருக்குன்னு முழுசா பார்த்து
பிரிச்சிட்டு இதெல்லாம் யோசிக்கலாம்" என்று கூறியவன் சிறு தயக்கத்துக்குப் பின்,
"நீ நாளைக்கு
காலைல சென்னைக்கு வர முடியுமா இசை? ஐ நீட் யூ" என்றான் ஆழ்ந்த குரலில்.

கருத்துகள்
கருத்துரையிடுக