சாரல் 68 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 68

 


ரவியின் பெரியப்பா ரகுராம் தன் மனைவி வைதீஸ்வரியுடன் கிளம்பி ரவியின் பண்ணைக்கு வந்து அதிகாலையில் இறங்கினார்.

 

ஏனோ முதல் நாள் காலை முதலே வைதீஸ்வரி ரவியைப் பார்க்க வேண்டும், ஏதோ தவறாக மனதுக்கு தோன்றுகிறது என்று கூறிக்கொண்டே இருக்க மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு ரவிக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை.

 

அவருக்குமே அதன் பின் மனம் அலைப்புற எழிலுக்கு அழைத்தார். அவள் அனைவரும் நலமென்று கூறினாலும் ஏனோ அவள் குரலில் சிறு தயக்கம் இருப்பது போல உணர்ந்தவர் தாங்களே நேரில் செல்வது தான் சரியாக இருக்குமென எண்ணி இரவோடு இரவாக கிளம்பி வந்துவிட்டார்.

 

இன்னும் பகலவனின் வெளிச்ச ரேகைகள் பாரில் பரவவில்லை. இருள் விலகலாமா வேண்டாமா என்று சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது.

 

காரை கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கி உள்ள வர முயன்றார்.

 

நிறைய புதிய செயல்பாடுகள் நடைபெற்றிருப்பது அவ்விருளில் கூட அவருக்குப் புலப்பட்டது.

 

கோழிகளின் கொக் கொக் சத்தமும் கொக்கரிக்கலாமா வேண்டாமா என்ற சேவல்களின் சந்தேக கீதமான 'கொக்கொரக்' என்று பாதியில் நிறுத்தி மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருக்க, அவைகளை அடையில் இருந்து திறந்து விட்டு பயிர்களுக்கு நீர் பாய்ச்ச கையில் டார்ச்சுடன் நடந்து சென்று கொண்டிருந்தாள் எழிலிசை.

 

"அம்மா எழிலு" என்று ரகுராம் அழைக்க, சட்டென்று  திரும்பியவள்,

 

"வாங்க, வாங்க மாமா" என்று பரபரப்பாக அவரருகில் வந்தாள்.

 

வைதீவரியையும் கண்டு வரவேற்று தங்கள் கன்டெய்னர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றவள் சூடாக தேநீர் கலந்து கொடுக்க, அந்த குளிருக்கு அவர்கள் இருவரும் இதமாக இருந்தது.

 

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்குப் பின் ரவியைப் பற்றி அவர் வினவியதும்,

 

"கோழி எல்லாம் இப்போ தான் மாமா வாங்கி தயார் பண்ணினோம். அடுத்து மாடு ஆடெல்லாம் வாங்கணுமாம். பார்த்து வாங்கிட்டு வர்றேன்னு போனாரு. வந்திடுவார். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் தண்ணி திறந்து விட்டுட்டு வர்றேன்" என்று கூறிவிட்டு தன் கைபேசியுடன் வெளியே வந்தாள் எழில்.

 

உடனடியாக ரவிக்கு அழைத்தவள் ரகுராம் வந்திருப்பதை தெரிவித்தாள்.

 

"பெரியப்பாவுக்கு தெரியாம செய்றது எனக்கு தப்பா தான் தெரியுது. ஆனாலும் இப்போ தான் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு இசை. பிரதீஷ் ஹெல்ப் பண்றேன்னு சொல்லிருக்கான். மாமாவும் ஊர்ல இருந்து நேத்து சாயங்காலம் வந்துட்டாறாம். இன்னும் இரண்டு நாள் சமாளிக்க முடியுமா இசை? பிளீஸ்" என்றான்.

 

"சரிங்க. ஆனா மாமா போன் பண்ணினா தவிர்க்காம எடுத்துப் பேசுங்க. சீக்கிரம் வந்துட்டு அப்பறம் கூட மறுபடி போயிட்டு வாங்க." என்றாள் சிந்தனையாக.

 

"பார்க்கலாம் இசை, நீ கவனமா இரு. வெளிச்சம் வந்ததும் வேலை பார்க்க போனா போதும், எல்லா வேலையும் நீயே செய்ய வேண்டாம், ஆள் வச்சுக்கோ"என்று கரிசனையாக கூறினான்.

 

சரியென்றவள் ரகுராமிடம் அதன் பின் கவனமாகவே பேசினாள்.

 

அங்கே பிரதீஷ் முதல் நாள் இரவில் வந்திறங்கிய தந்தையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு காரணம் புரியாமல் இருந்தான்.

 

"என்னப்பா முகமெல்லாம் ஒரே சந்தோஷம்? என்கிட்ட சொல்லலாமா?" என்று என்றும் இல்லாத திருநாளாக ஒரு ஒயிட் வைன் பாட்டிலை அவர் முன்னே வைத்து வினவினான்.

 

"என்ன டா பழக்கம் இது?" என்று கண்டித்தவர் அவனை முறைக்க,

 

"எப்பவுமா அப்பா? என்னைக்கோ ஒரு நாள். அதுவும் ரொம்ப சந்தோஷமா இருக்கும் போது ஒரே ஒரு பெக். வெளில கூட போகலையே நம்ம வீட்டுக்குள்ள தானே?" என்று சமாதானம் சொல்லி ஐஸ் க்யூப்கள் நிறைந்த ஜாடி ஒன்றையும் கொண்டு வந்தான்.

 

"உன் வயசு பசங்க குடிச்சுட்டு ரோட்டுல விழுந்து கிடக்கும் போது நீ பொறுப்பா பிஸ்னஸ் பார்க்கற, என்னை எல்லார் முன்னாடியும் பெருமைப்பட வச்சிருக்க, அதுனால இந்த ஒரு தடவை விடறேன். இனிமே ஏதாவது பார்டில சும்மா கிளாஸ் வச்சுட்டு பேசிட்டு வந்துடணும். இந்த பழக்கம் நம்மளையும் அறியாம புதைகுழிக்குள் தள்ளிடும் பிரதீஷ்." என்றார் அழுத்தமான குரலில்.

 

அவனுக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல் ஏற்பட்டது. இந்த அளவுக்கு புத்தியோடு பேசும் ஒருவர் தன் உடன்பிறந்தவளின் சாவுக்கு காரணமாக இருக்க முடியுமா என்று.

 

ஆனால் ரவியின் பேச்சை மட்டும் கேட்டு பிரதீஷ் இந்த முடிவுக்கு வரவில்லையே! போகும் போக்கில் போவோம். இறுதியில் என்ன தான் ஒளிந்து கிடக்கிறது என்று அறிந்து கொள்வோம் என்று எண்ணினான்.

 

அவன் குடிக்காமல் தந்தைக்கு முதலில் கொடுத்துப் பார்த்தான். அவர் பழக்கமே இல்லை என்று கூறிவிட, அவனே ஒரு மதுக் கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு,

 

"ராகினியை மிஸ் பண்ணிட்டேன்னு தோணுது பா. ஒருவேளை அவளோட கல்யாணம்ன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவளை வர சொல்லி மெசேஜ் அனுப்பி இருப்பேன்" என்று மதுவை வெறிப்பது போல தந்தையை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே கூறினான்.

 

"ச்சீ, அதெல்லாம் பாவம் டா. நமக்கு வேண்டாம்ன்னு முடிவு பண்ணி தானே ஒதுங்கி இருந்தோம். அப்படி செய்திருந்தா அது பெரிய பாவம் டா. நல்லவேளை அந்த நேரம் பார்த்து நான் உன்னை டெல்லிக்கு அனுப்பினேன். இல்லன்னா நீ இந்த கிறுக்குத்தனம் ஏதும் செய்திருப்பியா?" என்று பெருமூச்சு விட்டார்.

 

பிரதீஷ் அவர் பேச்சில் குழம்பினான்.

 

"ஏன் பா என் போனை எதுக்காவது நீங்க பயன்படுத்தியிருக்கீங்களா?" என்றான் சந்தேகமாக

 

"ம்ம். ஒரே ஒரு தடவை ஏதோ ஆப் பார்க்க எடுத்தேன். பார்த்துட்டு வச்சுட்டேன்" என்றார் சிந்தனையுடன்.

 

"ஏன் உங்க போன்ல பார்த்து இருக்கலாமே?" என்று அவன் மடக்க,

 

"உன்னோடது ஐபோன் டா. என்கிட்ட ஸ்மார்ட் போன் தானே இருக்கு. அந்த ஆப் ஐபோனுக்கு உரியது. அதான். இதெல்லாம் எதுக்கு டா இப்ப பேசிக்கிட்டு. நாளைக்கு ஜனா சாரை பார்க்க போகணும். கொஞ்சம் நீயும் என்னோட வா" என்றவர் அவன் கையில் இருந்த மதுக் கிண்ணத்தைப் பிடுங்க வந்தார்.

 

"போய் படு பிரதி. நாளைக்கு ஒரு முக்கிய மீட்டிங் வேற இருக்கு" என்று மகனை அனுப்பிவிட்டு அவரும் உறங்கச் சென்றார்.

 

தந்தையின் பேச்சை நம்பவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் குழம்பித் தவித்தான் பிரதீஷ்.

 

மறுநாள் தந்தையுடன் ஜனகராஜை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றான்.

 

இடத்தைக் கண்டதும் திகைத்தான். அது பரசுராம் அலுவலகமாக வைத்து இயக்கிக் கொண்டிருந்த கட்டிடம். இன்று ஜனா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருப்பதைக் கண்டு துணுக்குற்றான்.

 

அவனைக் கண்டதும் ஜனகராஜ் தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து வரவேற்றார்.

 

"கம் மை பாய். உங்க அப்பாவுக்கு எப்பவும் உன்னைப் பத்தி பேசுறது தான் டைம்பாசே. என் பையன் இப்படி, அப்படின்னு. உனக்கு எங்க வட்டத்துல பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருக்குன்னா பாரு." என்று அவனை அணைத்துக் கொள்ள ஏனோ அவரைக் கண்டதுமே பிரதீஷுக்கு பிடிக்கவில்லை.

 

மரியாதை நிமித்தம் சின்னதாக புன்னகை ஒன்றை வெளியிட்டவன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

 

ஆரம்பத்தில் அவரும் பத்ரியும் பேசிக்கொண்டிருக்க அலுவலகத்தை கண்களால் அளவெடுத்தான் பிரதீஷ். பணத்தின் செழுமை தெரிந்த அளவுக்கு நிர்வாகத்தில் ஆளுமை தெரியவில்லை. வேலையாட்களிடம் பரபரப்பு இருந்ததே அன்றி புத்திசாலித்தனம் இல்லை. ஏதோ தவறாகப் பட்டது அவனுக்கு.

 

"என்ன பிரதீஷ் ஆபிஸ் நல்லா இருக்கா?" என்று அவன் பார்வையை வைத்து ஜனா வினவ,

 

"ஏன் அங்கிள் போன வருஷம் நீங்க இந்த கம்பெனி ரன் பண்ணல தானே?  புது இண்டஸ்ட்ரி புது ஆர்டர்ஸ். யாருக்கும் ஸ்டெபிலைஸ் பண்ண கொஞ்ச நாள் ஆகுமே. உங்களுக்கு எப்படி?" என்று மெல்ல கொக்கி போட்டான்.

 

ஹாஹாஹாஎன்று ஹாஸ்யம் கேட்டது போல சிரித்தவர், "நான் இதே ஃபீல்டுல தான் முன்னாடி இருந்தேன். கிளையண்ட்ஸ் எல்லாருமே என்னோட பழைய பழக்க வழக்க நண்பர்கள் மாதிரி தான்" என்று ரகசியம் போலக் கூறினார்.

 

"ஓ, அப்ப நீங்க என்னோட மாமா பரசுராம் கூட பார்ட்னரா இருந்தப்ப இவங்கெல்லாம் உங்களுக்கு நண்பர்களா?" என்று கொக்கியை சற்று இறுக்கமாக அவன் போட,

 

"இப்போ எதுக்கு அவன் பேச்சு? நான் உங்களை என் மருமகனா ஆக்கிக்கலாம்ன்னு உங்க அப்பா கிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா என் நதிமூலம் ரிஷி மூலம் எல்லாம் தேடிட்டு இருக்கீங்க போல" என்று கலவையான குரலில் பேசினார்.

 

"நோ நோ அங்கிள். ஜஸ்ட் ஒரு கியுரியாசிட்டி" என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்,

 

"இப்போ என்னென்ன பிஸ்னஸ் பண்றிங்க அங்கிள்?" என்று கேள்வி கேட்டபடி அங்கிருந்த கோப்புகளை கண்களால் அளவெடுக்க ஆரம்பித்தான்.

 

"இம்போர்ட் எக்ஸ்போர்ட், அசம்ப்ளி யூனிட், ஸ்குரு மெனுப்பேக்சரிங் யூனிட், ஒரு பிபிஓ இன்னும் சின்னச் சின்ன பிஸ்னஸ் கூட இருக்கு. உங்களுக்கு வேண்டியது எல்லாம் தெரிஞ்சிடுச்சா? உங்க அப்பா மாதிரி நீங்களும் பணத்துல கண்ணு தானு சொல்லுங்க. என்ன பத்ரி பையனை நல்லா டியூன் பண்ணி வச்சிருக்கீங்க போல" அவரை பேச்சில் இழுத்து வைத்து சிரித்தார்.

 

‘நீ என்னவும் நெனச்சுக்கோ ஆனா இங்க எனக்கு வேண்டியது கண்டிப்பா கிடைக்கணும்' என்று எண்ணியபடி விழிகளை சுழற்றியவன் கண்ணுக்கு அங்கிருந்த இரும்பு ஷெல்பில் பல பைல்கள் தெரிய,

 

மெல்ல அவர்கள் கவனத்தை கவராமல் எழுந்து அதனை நோட்டமிட ஆரம்பித்தவன் சற்று நேரத்தில் கண்ட ஒரு பெயரைக் கண்டு திகைத்தான்.

 

பத்ரியிடம் தனக்கு அவசர வேலை இருப்பதாக கூறிவிட்டு ஜனாவிடமும் விடைபெற்றவன் வெளியே வந்ததும் முதலில் ரவிக்கு தான் அழைத்தான்.

 

"மாமா நான் கண்டுபிடிச்சிட்டேன்" என்றான் அவசரமாக.

 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels