சாரல் 67 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 67

 


தன் தந்தை ஊர் திரும்புவதாக தகவல் கிடைத்ததுமே அன்னையை அழைத்துப் பேசி விட்டான் பிரதீஷ்.

 

"அம்மா போலீஸ் வந்ததோ அப்பாவைக் கேட்டதோ, மாமா இன்ஸ்டாகிராம் பத்தி சொன்னது எதுவும் அப்பாவுக்கு தெரிய வேண்டாம். நான் அப்பாவுக்கு தெரியாம எல்லாத்தையும் விசாரிச்சு சரி பண்ணிடுறேன். நேத்து ஏதோ யோசனையில பேசிட்டேன். நீ எதுவும் அப்பா கிட்ட சொல்லிடாத" என்று அன்னையை சமாளித்தான்.

 

அந்த அப்பாவிப் பெண்மணிக்கோ எங்கே மகன் தன் தந்தையை தவறாக நினைத்து ஏதும் செய்து விடுவானோ என்று முதல் நாளிலிருந்து மனதில் இருந்த பயம் சற்று மறைந்தது.

 

"ரொம்ப நல்லது டா தம்பி. நான் ரொம்ப பயந்துட்டேன்" என்று கூறிவிட்டு இனி மகன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதியுற்றார்.

 

பிரதீஷ் மனதில் வேறு இருந்ததை அவர் அறியவில்லை. ஏனெனில் அவன் தன் தந்தையின் மறுபக்கத்தையும், ரவி ஏன் தன் அத்தை மாமாவின் மறைவைப் பற்றி மறுபடியும் விசாரிக்க வந்திருக்கிறான், அதற்கும் தன் தந்தைக்கும் என்ன தொடர்பு என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.

 

ரவியை அழைத்துப் பேச முடிவு செய்திருப்பவனுக்கு தந்தைக்கு இந்த விஷயமெல்லாம் இப்பொழுதே தெரிந்தால் உண்மை வெளிவராமல் போய் விடுமோ என்ற சந்தேகம் வர, தந்தைக்கு தெரியாமல் இருக்க அன்னையை சரி கட்டினான்.

 

ரவியை அலைபேசியில் அழைத்து அவனிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கேட்டிருந்தான். ரவியும் இன்னும் அரை மணி நேரத்தில் ஓ. எம். ஆரில் உள்ள ஒரு உணவகத்தில் சந்திக்கலாம் என்று கூறி இருந்தான்.

 

அன்னையையும் சரி செய்தாகிவிட்டது. இனி ரவியிடம் பேசி முழு விபரம் அறிந்தபின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய எண்ணி இருந்தான். இதோ அதன் ஆரம்பமாக ரவியை சந்திக்க கிளம்பி விட்டான் பிரதீஷ்.

 

இருவரும் பரஸ்பர நல விசாரிப்புக்களுக்குப் பின் அங்கே நிலவிய கனமான அமைதியை எப்படி கலைப்பது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

 

பிரதீஷ் தான் அந்தத் மெளனத்திரையை விலக்கினான்.

 

"மாமா எனக்கு... எப்படி சொல்றதுன்னு தெரியல. நீங்க நம்புவிங்களான்னும் தெரியல. ஆனா இதை உங்க கிட்ட சொல்லாம இருந்தா எனக்கு நிம்மதி இருக்காது. எனக்கு அத்தையை ரொம்ப பிடிக்கும். ஏனோ உங்க கூட பழக்கம் இல்லாம போச்சு. நேத்து நீங்க வந்ததுல எனக்கு சில விஷயம் தலையில அடிச்சது போல புரிஞ்சது. என் அப்பாவே விலகி இருக்கச் சொல்லி இருந்தாலும் அத்தை மாமா இறந்தப்ப நான் உங்களுக்கு ஆறுதலா பக்கத்துல நின்னு இருக்கணும். சாரி" என்று மனதில் இருந்ததை மடை திறந்த வெள்ளமாகக் கூறினான்.

 

"ஹே, பிரதீஷ் இட்ஸ் ஆல்ரைட். நீ ரொம்ப பழையது எல்லாம் யோசிச்சு குழப்பிக்க வேண்டாம்" என்று அவனது கையில் லேசாகத் தட்டிக் கொடுத்தான்.

 

"இல்ல மாமா. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு." என்று தலையைப் பிடித்து அமர்ந்தான்.

 

பின்னர், "மாமா நடந்த எல்லாத்தையும் முழுசா சொல்லுங்க மாமா. அப்ப தான் என்னால ஒரு முடிவுக்கு வர முடியும். என் அப்பா பணம் தான் எல்லாம்ன்னு இருக்கறவர் தான். ஆனா அதுக்காக சொந்த தங்கை மகள் விஷயத்துல தப்பு பண்ணுவாரா? எனக்கு ராகினியை கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு அவர் பணத்துக்காக நினைச்சிருந்தார்ன்னா ஏன் அவளோட கல்யாணத்தை நிறுத்த பார்க்கணும். அது தான் மாமா என்னை குழப்புது. எல்லாமே தெரிஞ்சா நானும் உங்களுக்கு இந்த விஷயங்களை கண்டுபிடிக்க உதவியா இருப்பேன்".

 

அவன் வார்த்தைகளில் துளியும் பொய்மை இல்லாதது ரவிக்கு புரிந்தது. என்ன தான் அவனுக்கு தன் மாமா பத்ரி மேல் சந்தேகம் இருந்தாலும் பிரதீஷ் மேல் அது வரவே இல்லை என்பதால் இந்த விசாரணையில் ஒற்றை ஆளாக அல்லாடுவதற்கு பதிலாக அவனையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்தான்.

 

"எனக்கு ஒரே ஒரு உறுதி மட்டும் கொடு பிரதீஷ், ஒருவேளை உன் அப்பா தப்பு பண்ணி இருந்தா நான் சட்டத்துக்கு முன்னாடி அவரை நிறுத்த நீ துணையா இருக்கணும். அப்ப வந்து அப்பாவுக்கு பிள்ளையா என்கிட்ட சமாதானம் பேசக் கூடாது. ஏன் சொல்றேன்னா, இதை என் அப்பாவுக்கு பிள்ளையா அவர் சாவுக்காக நான் போடப் போற சண்டை. அதுல கடைசி வரைக்கும் நீ துணையா வந்துட்டு முடியும் போது என்னை வில்லானாக்கக் கூடாது." என்று தெளிவாகக் கூறினான்.

 

"கண்டிப்பா மாமா. நான் அப்பா பிஸ்னஸ் மட்டும் பார்த்துட்டு அவர் நிழல்ல நிக்கிறவன் இல்ல. எனக்குன்னு சுயமும் இருக்கு. அவர் தப்பு பண்ணி இருந்தா கண்டிப்பா நான் உங்க பக்கம் தான் நிப்பேன்." என்று உறுதி கொடுத்தான்.

 

அவன் வார்த்தைகளில் இருந்த உண்மை ரவியை அவனிடம் அனைத்தையும் சொல்ல வைத்தது.

 

பொறுமையாகக் கேட்ட பிரதீஷ், "மாமா என் அப்பா சொன்ன ஒரே காரணத்துக்காக நீங்க கடனுக்கு காட்டின எல்லா பத்திரத்திலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தீங்களா?" என்று வியப்புடன் வினவினான்.

 

"அவர் என் மாமா பிரதீஷ் நான் அவரை எப்படி சந்தேகப்படுவேன்? அதான் போட்டேன். ஆனாலும் எல்லா பத்திரத்தையும் படிச்சுப் பார்த்தேன் பா. எல்லாமே அப்பா கடன் வாங்கின ஃபைனான்ஸ் கம்பெனி பேர்ல தான் இருந்தது. இப்பவும் சொத்து போனதுக்காக நான் தேடி வரல. அப்பா தற்கொலை செய்துக்கிட்டதா போலீஸ் சொல்றாங்க. அது எப்படிப்பா தன் மனைவியையும் கூட்டிகிட்டு போய் அப்படி சாவாரு அவரு. என்னால முதல்ல இதை இந்த கோணத்துல யோசிக்க முடியல. ஆனா என் மனைவி வந்த பின்னாடி தான் புரிஞ்சுது, அப்படி நடந்திருக்க வாய்பில்லன்னு. அவரும் அவங்களும் தனிமையில் ஊரெல்லாம் சுத்த தான் சின்ன பிள்ளையா இருந்த என்னை விட்டுட்டு போனாங்க. அப்படிப்பட்ட அன்பு தான் அவங்களோடது. அப்ப அப்பா தற்கொலை, அம்மாவையும் சேர்த்துட்டு சொல்றதெல்லாம் இப்ப சுத்த ஹம்பக் மாதிரி இருக்கு" என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.

 

"சரி மாமா, நாம இதை கண்டுபிடிப்போம். என் அப்பா, எனக்கு இன்னும் சரியா தெரியல. ஆனா இதுல அவர் ஏதோ ஒரு ரோல் ப்ளே பண்ணி இருக்காரு. சீக்கிரமே எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்" என்று ரவிக்கு ஆறுதல் கூறினான்.

 

"சரி, இதெல்லாம் விடுங்க. உங்களை பத்தி சொல்லுங்க. உங்க ஒய்ஃப். அதான் என் அக்கா அவங்களை பத்தி சொல்லுங்க".

 

இத்தனை நேரம் வேதனையிலும் குழப்பத்திலும் மூழ்கி இருந்த ரவி அவன் இதழ் விரித்து மென்மையாக சிரித்தான்.

 

"என்ன மாமா உங்க முகமே இவ்வளவு பிரகாசமாக மாறிடுச்சு?" என்று பிரதீஷ் கேலி செய்ய,

 

"என் இசை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் பா. நான் ஒவ்வொருமுறை என்னோட பொறுமையை இழந்து எந்த விஷயத்துல தடுமாறி நின்னாலும் தோள் கொடுப்பா. முக்கியமா ராகினி விஷயத்துல. மத்தவங்க எப்படியோ, ஒரு நாளும் ராகினிக்கு செய்ய அவ தயங்கினதே இல்ல. நான் கோவப்பாட்டா கூட என்னை சமாதானம் பண்ணிட்டு அவளுக்கு செய்யறது மட்டுமில்ல, அவளோட தப்பை அவளுக்கு சொல்லவும் செய்வா.

 

அவளுக்கு இப்ப வரைக்கும் நான் என்ன செஞ்சிருக்கேன்னு யோசிச்சா, அவளோட அடிப்படை தேவைகளை கணவனா இருந்து கொடுத்திருக்கேன் ஆனா அவ எனக்கு எல்லாமே செய்யறா. அவ இல்லன்னா நான் தான் ஒன்னும் இல்ல. இப்ப கூட பாரு இங்க வந்து ரெண்டு நாள் ஆகுது. ஆனா அவளை விட்டு என்னால இருக்க முடியல. இந்த நிமிஷம் விட்டாலும் அவ கிட்ட ஓடிடுவேன். ஆனா அவ அவ்வளவு கட்டுப்பாடு. எனக்காக என் கனவை சுமந்துகிட்டு, என்னை அங்க இருந்தே இங்க இயக்குறா." என்று மனம் பூரிக்க விவரித்தான்.

 

"அக்கா சூப்பர் தான் போல. ஆனா நீங்க உங்க கல்யாணக் கதையெல்லாம் சொன்னதை கேட்டப்ப எனக்கு என்னவோ ராகினிக்கு புகழ் ஏத்தவர் இல்லையோன்னு தோணுது, மாமா நான் பொறமையில சொல்லல." என்றும் வேகமாகக் கூறினான். ஆனால் அதற்கு ரவி சொன்ன பதிலில் அசந்து போனான் பிரதீஷ்.

 

"உனக்கு புகழை பத்தி கேட்கும்போது ஏதோ பொறுப்பில்லாத பையனா தோனி இருக்கும். ஆனா உண்மையில் அவன் வேற. தப்புப் பண்ணாத மனுஷன் யார் இருக்கா சொல்லு. அவன் கிடைச்ச சுதந்திரத்தை தப்பா புரிஞ்சுக்கிட்டு முதல்ல தப்பு செஞ்சான். ஆனா அதை உணர்ந்து திருந்தி மறுபடியும் வேலைக்கு போறேன்னு சொன்னப்ப என் மாமனார் அவனை நம்பல. அந்த கோபத்துல தன்னைத் தானே ஹர்ட் பண்ணிக்க தான் குடிச்சுட்டு சுத்திட்டு இருந்தான்.

 

அப்ப தான் ராகினி அவனோட போனது. அவன் நினைச்சு இருந்தா அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவன் வெளியூர் வந்ததும் வேலை தேடி போயிருக்க முடியும். ராகினியை விட்டுட்டு போயிருக்கலாம். ஆனா போகல. அதே நேரம் என்கிட்ட பணம் இருக்குன்னு அவனுக்கு தெரியும். அவனே ராகினி மனசை மாத்தி அவளை மேனிபுலேட் பண்ணி இருக்கலாம். ஆனா அவன் அதை செய்யல. திரும்பி வந்தான். அதுவும் என் தங்கச்சியோட.

 

நானே கல்யாணம் பண்ணித் தர்றேன்னு சொல்லியும் அவன் மறுத்தான். இப்பவும் ராகினி அவனுக்கு கம்பெனி வச்சுக் கொடுக்க சொல்றா. ஆனா அவன் சின்ன கடையில வர்ற வருமானத்தை வச்சு நானே மேல வருவேன் மாமான்னு உறுதியா சொல்றான். அதான் புகழ். என்ன இருந்தாலும் என் இசையோட இரத்தம்ல்ல தெரியாம கூட என் இசைக்கு தப்பு பண்ண வராது. ஆனா புகழ் தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டு அதை சரி செய்ய என்ன செய்யவும் தயாரா இருக்கான். அவனை விட ராகினிக்கு ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டான் பிரதீஷ்" என்று விளக்கினான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels