சாரல் 66 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 66
பிரதீஷ் மிகுந்த
கோபத்துடன் சோஃபாவில் தலையை சரித்து அமர்ந்திருந்தான். அவனது அன்னை அவனருகில் வந்து,
"ஏன்டா
யாரோ ஏதோ சொன்னா அப்பாவை தப்பா நினைக்கலாமா? அவர் பணம் பணம்ன்னு ஓடுவாரு தான். ஆனா
இவங்க சொல்ற மாதிரி அவருக்கு குடும்பத்தைக் கெடுக்கத் தெரியாது டா." என்று கணவருக்காகப்
பேசினார்.
"அம்மா
நீ சொல்றது உண்மைன்னு வச்சுக்கிட்டாலும் அது எப்படி மா சரியா மாமாவோட பார்ட்னருக்கு
வீட்டை வித்து, அவர் கூடவே சில பிஸ்னஸ் டையப் எல்லாம் வச்சு… எப்படி பார்த்தாலும் இடிக்குது.
அதை கூட விடு, ராகினி விஷயம். உனக்கே தெரியும் அத்தை நம்ம வீட்டுக்கு வந்து ராகினி
உனக்குத்தான்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்காங்க. அவங்க சொத்து போனா என்ன? அவங்க சொந்தம்
விட்டுப் போகுமா? மாமாவும் அத்தையும் இறந்ததும் அப்பா அப்படியே அவங்களை கட் பண்ணி விட்டுட்டார்.
ராகினி பத்தி இப்போதைக்கு எதுவும் பேசாதன்னு என்னை அடக்கி வச்சதும் அவர் தான். அவளுக்கு
எப்படி மெசேஜ் அனுப்பி, அதான் புரியல!" என்று எரிச்சலடைந்தான்.
இவர்கள் இங்கே
குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஜனகராஜின் புதிய நிறுவனத்தின் திறப்பு விழாவில்
கலந்து கொண்டு அவருடன் பேசிக்கொண்டிருந்தார் பிரதீஷின் தந்தை பத்ரி.
"என்ன
பத்ரி நான் அடுத்த கம்பெனி கூட ஆரம்பிச்சுட்டேன். நீங்க இன்னும் கல்யாணப் பேச்சை எடுக்கவே
மாட்டேங்கறீங்களே! என்னோட ஸ்டேட்ஸ் இன்னும் உங்க அளவுக்கு வரலன்னு ஃபீல் பண்றீங்களா?"
என்று ஜனகராஜ் நேரடியாகவே தன் மனதில் இருந்ததைக் கேட்டு விட்டார்.
"அச்சச்சோ!
அப்படி எல்லாம் இல்ல ஜனா சார். என் பையனுக்கு என் தங்கச்சி பொண்ணை தான் பேசி வச்சிருந்தோம்.
அவங்க இறந்து போகவும் நான் அந்த பேச்சை அப்படியே விட்டுட்டேன். என் மாப்பிள்ளையும்
என்னைப் பத்தி தெரிஞ்சு தான் அவளுக்கு வேற எடத்துல முடிச்சிட்டான். ஆனா என் பையன் தான்
இன்னும் அதுல இருந்து வெளில வராம இருக்கான். எப்ப கல்யாண விஷயம் பேசினாலும் தட்டி விடுறான்.
அவன் கிட்ட சம்மதம் வாங்காம எப்படி உங்க கிட்ட பேச முடியும் சொல்லுங்க? அதான் நீங்க
உங்க பொண்ணு கல்யாணப் பேச்சை எடுக்காத வரை நானும் அமைதியா இருக்க முடிவு பண்ணி இருந்தேன்"
என்று விளக்கினார்.
"ஓ, அப்ப
உங்களுக்கு என்னோட சம்பந்தம் பண்ண சம்மதம் தான். மாப்பிள்ளை தான் கல்யாணத்துக்கே சம்மதிக்கல.
ஹ்ம்ம்" என்று தாடையை நீவி யோசித்தவர்,
"பிரதீஷை
வர சொல்லுங்களேன். நான் சாதாரணமா பேசுறது போல பேசி என் பொண்ணு பத்தியும் சொல்லிப் பாக்கறேன்"
என்று கேட்டார்.
"நாளைக்கு
சென்னை ஆபிஸ் வந்துடுவிங்க தானே? என்னோட வர்ற மாதிரி அவனை அழைச்சிட்டு வர்றேன்"
என்று உறுதி கொடுத்துவருக்குத் தெரியாது நடக்க இருக்கும் சங்கடங்கள்.
***
ரவி சொல்லத்
தெரியாத வலியை சுமந்தபடி அவனது கேம்பர் வேனின் படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தான்.
மேலே வெட்ட
வெளியான வானத்தை ரசிக்க ஸ்கை லைட் விண்டோ வைத்திருந்ததால் வானத்தின் நட்சத்திரங்கள்
எல்லாம் கண்களைச் சிமிட்டி சிமிட்டி விளையாடிக் கொண்டிருப்பதை கண் நிறையக் கண்டும்
மனம் நிறைய மகிழ முடியாமல் தவித்திருந்தான்.
பிரதீஷின் குணம்
பற்றி அவனுக்கு கொஞ்சமும் தெரியாது. அவன் சென்னை வந்து தங்கும் சில நாட்களில் அன்னையின்
பிடிவாதத்துக்காக மாமா வீட்டிற்கு அரை மணி நேரம் சென்று வருவான். அதில் ஒரு முறை அவன்
பிரதீஷை பார்த்ததுண்டு. கல்லூரி நண்பர்களுடன் வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்.
ஒரு ஹாய் சொல்லி விட்டு சென்றுவிட்டான்.
இவன் டிராவலாக்
வீடியோ போடுவதை மட்டுமே வெளியே அனைவரிடமும் கூறி இருந்ததால் அவனது பங்குச் சந்தை முதலீடுகள்,
அதன் லாபங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை அவனது அன்னை
மேகலா உட்பட.
படித்து முடித்துவிட்டு
சம்பாதிக்காமல் ஊர் சுற்றும் வாலிபனாக ரவியை கருதிய பத்ரி அவனை பிரதீஷுடன் பழக விடாமல்
பார்த்துக் கொண்டார்.
அவரைப் பொறுத்த
வரையில் சம்பாதிப்பது என்பது ஒருவனின் கடமை. அதிலும் அவர் பழக நினைப்பவர்கள் எல்லாம்
லட்சங்களிலும் கோடிகளிலும் லாபம் பார்க்கும் பண முதலைகளாகத் தான் இருக்க வேண்டும்.
அவர் பழகத் தகுதி பணம் ஒன்று மட்டுமே. அப்படிப்பட்டவர் ரவி வீட்டிற்கு வந்தாலும் அதிகம்
கண்டுகொள்ள மாட்டார். பகட்டான பேச்சோ பழக்க வழக்கங்களோ இல்லாத ரவி அவரைப் பொறுத்த வரையில்
பெரும் பண முதலையின் உபயோகம் இல்லாத மகன். அவ்வளவே!
ரவி அவரைக்
கண்டுகொண்டது கூட கிடையாது. அவனைப் பொறுத்தவரை மனிதர்கள் பலவிதம். அதில் இவரும் ஒருவிதம்
என்று ஒதுங்கிச் சென்றுவிடுவான்.
ஆனால் இன்று
பிரதீஷ் கூறுவதைப் பார்த்தால் தன் தாய் தந்தை இறப்புக்கு இவர் காரணமாக இருப்பாரோ என்று
ஐயம் எழுந்ததோடு ராகினி திருமணத்தை நிறுத்த இவர் ஏன் முயல வேண்டும் என்ற கேள்வியும்
முளைத்தது.
சங்கடத்தில்
உழன்றவனை சடுதியில் வந்து சரணடைந்து கொண்டாள் அவனது காதல் மனைவி எழிலிசை.
அவளது அழைப்பை
ஏற்றவன், "என்ன இசை நான் கால் பண்ணினப்போ எடுக்கவே இல்லையே?" என்று சற்று
முன் அழைத்தது பற்றி ரவி வினவ,
"நானும்
புகழும் தோட்டத்துல கொஞ்சம் வேலையா இருந்தோம் சன்ஷைன். கோழி காடை எல்லாம் அடைய
அந்த அண்ணாவே கொஞ்சம் ஏற்பாடு பண்ணி கொடுத்திருந்தார். ஆனாலும் நம்ம வசதிக்கு சிலது
மாத்த வேண்டி இருந்தது." என்றாள் அமைதியாக.
மீண்டும் பெற்றவர்கள்
பேச்சு வேண்டாம் என்று தவிர்க்க நினைத்த இருவரும் தங்கள் திட்டம் வீடு பற்றிய கனவை
நனவாக்க அடுத்து என்ன செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டத் துவங்கினர்.
"தற்சார்புக்கு
அவசியத் தேவையான வீடு, உணவுக்கு கீரை, காய் கறி, கோழி, காடை, முட்டை, மின்சாரத்துக்கு
சோலார், காற்றாலை இதெல்லாம் முடிஞ்சது. நம்ம வருமானத்துக்கு யூட்யூப் வீடியோ, பொக்கே
ப்ளவர்ஸ், ஸ்பிருலினா எல்லாம் தயார் பண்ணியாச்சு. அடுத்து என்ன?" என்று எழில்
கேள்வி எழுப்ப,
"இப்போ
இருக்குற இந்த கன்டெய்னர் வீடு நிரந்தரமா இருக்க பத்துமான்னு தெரியல. மரபு வீடு பத்தி
நிறைய தேடி வச்சிருக்கேன். சீக்கிரம் வீடு கட்ட ஆரம்பிக்கணும்" என்று ரவி தன்
மனதில் இருந்ததை கூறினான்.
அவன் கனவு வீடு
மட்டுமல்ல, இசையுடன் அவனோடான வாழ்வின் அடுத்த கட்டங்கள் அழகாய் வளர வீடு என்ற அமைப்பு
அவனுக்கு அவசியமாகத் தோன்றியது.
ஆனால் எழில்
வேறு கூறினாள்.
"வீடு
முக்கியம் தான் பா. ஆனா நாம இன்னும் நிறைய செய்யணும். அதுக்கு அப்பறம் வீட்டை பத்தி
யோசிக்கலாம். இன்னும் மாடு, ஆடு வாங்கணும், இடத்தை வகை பிரிச்சு, மரங்கள் எங்க, பயிர்
எங்கன்னு பார்க்கணும், கிணறு ஒண்ணு தோண்டனும், ஓடையிலையும் கிணத்துலயும் சின்ன ஹைட்ரோ
பவர் பிளாண்ட் போடணும்" என்று அவளது பட்டியல் நீண்டு கொண்டே போனது.
"ஹே நிறுத்து
நிறுத்து… லிஸ்ட் பெருசா போகுது. நாம இதெல்லாம் இப்பவே செய்யணும்னு அவசரம் ஒன்னும்
இல்ல" என்று சிரித்தான்.
"அவசரம்
எதுவும் இல்ல தான். ஆனா அவசியம் இருக்கு. நம்மளோட கனவுக்கு நாம எவ்வளவு சீக்கிரம் உயிர்
கொடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதே போல பலரும் கனவு காண நாம விதை விதைக்கலாம்."
என்று ஆழமான குரலில் கூறினாள் எழிலிசை.
தன்னுடைய கனவை
அவளுடையதாக மாற்றிக்கொண்டு அதற்கான செயல்திட்டங்களில் சற்றும் சுணங்காமல் பம்பரம் போல
வேலை செய்வதோடு, இந்த கனவை பலருக்குள் விதைக்கும் ஆசை கொண்ட அவனது மனைவியை நினைக்க
நினைக்க ரவிக்கு நெஞ்சு முட்டக் காதல் பொங்கியது.

கருத்துகள்
கருத்துரையிடுக