சாரல் 65 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 65


சென்னை வந்து சேர்ந்த ரவிக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இது அவன் போட்ட திட்டமன்று. அதனால் முதலில் இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாமல் முதல் நாளை ஒரு கடற்கரை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தான்.


அவன் எண்ணங்கள் எல்லாம் பின்னோக்கி சென்றவண்ணம் இருந்தது. அவனது தாய்தந்தை இறந்த தினத்தை அமைதியாக அசைபோட்டபடியே இருந்தான்.


எழில் மதியம் அவனை அழைக்கவே நிகழ்வுக்கு வந்தவன் அவளுடன் பேசிவிட்டு உணவருந்த ஒரு ஓட்டலை நோக்கிச் சென்றான்.


போகும் வழியில் சில போஸ்டர்கள் அவனை கவனிக்க வைத்தது. அது அவனது தந்தையின் முன்னாள் தொழில் பங்குதாரர் ஒருவரின் நிறுவன விளம்பரங்கள்.


அவன் கேள்விப்பட்டவரை சில வருடங்களுக்கு முன் இவர் தனியே ஆரம்பித்த தொழில் சரிவடைந்து மிகவும் நலிந்து போனதாக தந்தை பேச்சு வாக்கில் கூறி இருந்தார்.


இன்று அவர் வளர்ந்துவிட்டது அவனது எந்த வித பொறாமையையும் கொடுக்கவில்லை என்றாலும் ஏதோ ஒன்று அவன் மனதை நெருடியது. பல நாட்களாக பேசாமல் இருந்த தாய் மாமாவுக்கு அவன் போன் செய்ய அவரோ அவன் அழைப்பை ஏற்கவில்லை.


அவர் குணம் அறிந்தது தான் என்று நினைத்து அந்த பங்குதாரரின் நிறுவனத்தைப் பற்றி வலைதளங்களில் தேடலானான். சமீபத்திய வளர்ச்சி என்று தெரிந்ததும் அவனது நெருடல் அதிகமானது.


உணவை முடித்துக்கொண்டு தங்கள் யூடியூப் நண்பர்கள் குழுவில் முதல்முறையாக உதவி வேண்டி செய்தி அனுப்பினான் ரவி.


ரவீந்தர் என்பவன் எத்தனை பெரிய பணக்காரன் என்பதும், அவனது யூடியூப் வருமானம் இவ்வளவு என்பதும், இதையெல்லாம் மீறியும் அவனிடம் இருக்கும் எளிமையும் உற்சாகமும் அங்கிருந்த பலரும் அறிந்ததே! அதனால் அவன் உதவி என்றதும் உடனே அனைவரும் முன்வந்தனர்.


அவன் வைத்திருந்த குழு உறுப்பினர்கள் பணத்திற்காக பொய்யான தம்ப்நெயில்கள் பதிவிடும் மூன்றாம் ரக ஆட்களோ, அல்லது ஒருவர் இறந்த துக்கத்தை அடுத்தவர் மனம் புண்பட துரத்தி துரத்தி படமெடுத்து பணம் பார்க்கும் கூட்டமோ அன்று.


அவர்கள் யாவரும் தொழில் முனைவோராக, பயணங்கள் செய்து அதை பதிபவராக, உணவு முறைகளை, கணினி அறிவை, புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு பகிர்வோராக மட்டுமே இருந்தனர். அதனால் அவர்களை நம்பி தன்னுடைய பிரச்சனையை முன்வைத்தான்.


ஒருவர் உதவி கமிஷனர் தனக்கு மிகுந்த நாட்களாக நண்பர் என்று அறிமுகம் செய்து வைக்க முன்வர, தலைசிறந்த துப்பறிவு நிறுவனத் தலைவர் ஒருவரின் நண்பர் என்று அவரது தனித் தொலைபேசி எண்ணை கொடுத்து உதவினார்.


இப்படி அவனது ஒரு கை ஓசை ஆகாது போனாலும் பல கைகள் உதவிக்கு வர, அவனது பெற்றோரின் தற்கொலை மரண வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அதனைப் பற்றி விசாரிக்க அவனது தாய்மாமாவின் வீட்டிற்கு செல்ல வேண்டி அவனும் போலிசாருடன் சென்றான். அவர் வெளியூர் சென்றிருப்பதாக அவர் மனைவி கூற போலீசார் ரவியை நோக்கினர். 


ஆனால் அவனோ அங்கே இருந்த அவனது மாமா மகன் பிரதீஷைக் கண்டதும் இரத்தம் கொதித்து நின்றான். பலநாள் கண்டுகொள்ளாமல் இருந்தவன் எப்படி சரியாக தங்கை திருமணத்திற்கு முன் அவளை குழப்ப எண்ணினான் என்று தெரிந்து கொள்ள அதனைப் பற்றி போலீசாரிடம் உரைத்தான் ரவி.


"என்ன பேசுறீங்க நீங்க? நான் ஏன் அவளுக்கு அப்படி மெசேஜ் பண்ண போறேன்? அதுவும் அவளுக்கு கல்யாணம் ஆனதே யூடியூப்ல நிறைய வீடியோ வந்த பின்னாடி தான் தெரியும். உங்களுக்கு இந்த குடும்பத்தோட எந்த பிடிப்பும் இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு என் அத்தை மேல நிறையவே அன்பு இருந்தது. கண்டிப்பா அவங்களுக்கு கொடுத்த வாக்குக்காக நான் ராகினியை கல்யாணம் பண்ணி இருப்பேன்." என்று பிரதீஷ் கூற அங்கிருந்த அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.


அவனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் இருந்து தான் செய்தி வந்ததென ரவி அடித்துக் கூற, அதனை திறந்து பார்த்த பிரதீஷ், விழித்தான். ஏனெனில் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் அவளுக்கு ஏதோ செய்தி அனுப்பப்பட்டு பின் அழைக்கப்பட்டு இருந்தது. அவன் அதனை கவனிக்கவேயில்லை என்று கூறினான்.


ரவிக்கு அவன் வார்த்தைகளில் பொய்மை தெரியாது போக, போலீசாரிடம் அங்கிருந்து கிளம்பலாம் என்று கூறினான்.


ஆனால் பிரதீஷ் அதனை விடுவதாகயில்லை.


"என் போனை யாரோ எடுத்து மிஸ்யூஸ் பண்ணி இருக்காங்க. எனக்கு இதுக்கான காரணம் தெரிஞ்சு ஆகணும். ஆனா நீங்க எங்க வீட்ல எதுக்கு விசாரிக்க வந்தீங்க?" என்று அவர்களை அமர்த்தி வினவினான்.


"எங்க அப்பாவோட பிஸ்னஸ் லாஸ்ல போனாதா மாமா தான் என் பெரியப்பாவுக்கு தகவல் சொன்னது.  அது மட்டுமில்ல. அப்பவே மாமா என்கிட்ட நிறைய டாகுமெண்ட்டில சைன் வாங்கினார். எல்லாமே அப்பா கடனை அடைக்கன்னு சொன்னதும் நானும் கொடுத்துட்டு கிளம்பிட்டேன். வீட்டை யாருக்கோ வித்து இருப்பாருன்னு நினைச்சேன். ஆனா அதை அப்பாவோட பழைய பார்ட்னர் தான் வாங்கி இருக்காரு. இப்போ அவர்கிட்ட நிறைய பணப்புழக்கம் இருக்கு. புது பிஸ்னஸ், நிறைய விளம்பரம்… ஏதோ உறுத்துது" என்று ரவி நிறுத்த,


"அப்ப என் அப்பா தான் என் போன் எடுத்து ராகினிக்கு மெசேஜ் அனுப்பி இருக்கணும்." என்றான் யோசனையாக.


"ஏன் அப்படி சொல்றீங்க?" என்று உடன் வந்த போலீஸ் அதிகாரி விசாரிக்க,


"ராகினி கல்யாணம் நடந்த போது நான் டெல்லில்ல ஒரு கம்பெனி மீட்டிங்ல இருந்தேன். அது அப்பா போக வேண்டியது, முதல் நாள் ராத்திரி தான் வந்து அவரால போக முடியாதுன்னு என்னை அனுப்பி வச்சாரு. அப்படி வரும்போது என் போன்ல மெசேஜ் அனுப்பி இருக்கணும்." என்றான் தாடையை தேய்த்தபடி.


"ஆனா ஏன்?" என்று ரவி வினவ,


"என் அப்பா கிட்டயும் இப்ப நிறைய பணப்புழக்கம் இருக்கு மாமா. நீங்க சொன்ன அந்த ஜனகராஜ்… அதான் மாமாவோட பழைய பார்ட்னர்... அவரோட அப்பா நெருக்கமா பழகிட்டு இருக்காரு. என்னவோ நடந்திருக்கு. அப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டாருன்னு என் மனசு துடிக்குது. ஆனாலும் ஏதோ தப்பா இருக்கு" என்று கூறி நிறுத்த, அவனை அருகில் அழைத்த ரவி,


"உன்னை நான் அதிகம் பார்த்ததோ பழகினதோ இல்ல. ஆனா நீ பொய் சொல்லலன்னு என் மனசு சொல்லுது. உன் அப்பா தப்பு பண்ணி இருக்க கூடாதுன்னு நானும் வேண்டிக்கிறேன்" என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேறினான்.


தன் தாய் தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தோன்றிய ஒரு உணர்வு அவனை இங்கு வரை இழுத்து வந்து ஏதோ ஒரு உண்மையை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதை உணர்ந்தான். இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த தன் மனைவிக்கு அழைத்து நடந்தவைகளைக் கூறினான்.


எழில் ஆழ்ந்த யோசனைக்குப் பின், "ஒருவேளை உங்க மாமாவுக்கு உங்க பேரெண்ட்ஸ் மரணத்துல சம்மந்தம் இருந்தா என்ன செய்யப் போறீங்க சன்ஷைன்?" என்று ஆழமான குரலில் வினவ,


"யாரா இருந்தாலும் அவங்க சாவுக்கு நீதி வேணும். உண்மையிலேயே மனசு நொந்து அவர் அம்மாவையும் சேர்த்து கூட்டிட்டு போய் ஆக்ஸிடென்ட் பண்ணி இருந்தாலும் அதுவரைக்கும் அவரை தள்ளினது எது, யாருன்னு எனக்கு தெரிஞ்சு தான் ஆகணும் இசை. நான் யாரையும் விட மாட்டேன்."என்று உறுதியோடு கூறினான் ரவீந்தர்.


இன்னும் அவன் அதிரும்படியான உண்மைகள் காத்திருப்பது காலம் மட்டும் அறிந்த உண்மை. நாமும் அதனை விரைவில் தெரிந்துகொள்வோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels