சாரல் 63 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 63
எழில் தன் தம்பியுடன்
பேசிய நிம்மதியான மனதுடன் வீடு வந்து சேர, ரவி இருப்பதற்கான சுவடே இல்லாமல் வீடும்
முன்னால் இருந்த இடமும் காலியாக இருந்தது.
ரவியோ ஒருவித
வெறுமையான மனநிலையில் இருந்தான். ஆரம்பத்தில் சரோஜாவிடம் கோபம் காட்டி, ஆளுமை கூட்டி
பேசியவனுக்கு புகழும் ஶ்ரீதரனும் கொடுக்கும் மரியாதையும் அன்பும் அதனை தொடர முடியாமல்
சங்கடத்தில் ஆழ்த்தியது.
மாமியாரின்
கடன் தீர்ந்தால் மாறிவிடுவார் என்று நம்பி அதையும் புகழ் பெயரில் செய்த பின்னும் அவர்
மாறாமல் போனது அவனுக்கு வருத்தத்துடன் அயர்வைக் கொடுத்தது.
சிறுபிள்ளையின்
விரல் சூப்பும் பழக்கத்தை மாற்றுவது கூட எளிது தான் போல, சரோஜாவின் எண்ணத்தை மாற்ற
இயலாமல் ரவி அனைத்தையும் எழிலிசை பார்த்துக் கொள்வாள் என்று தன் பணியின் கவனம் செலுத்தினான்.
ஆனால் இன்று மாமியாரைத் தூண்டி விட்டு பிரச்சனைக்கு வித்திட்டது தன் தங்கை என்று தெரிந்தும்
அவனுக்கு வெறுத்து விட்டது.
இவர்கள் எல்லாம்
நன்றாக வாழத் தானே இந்த அளவுக்கு கடினமான காரியங்களைக் கூட தயங்காமல் செய்கிறோம் ஆனால்
ஏன் இவர்களுக்கு அது புரியவில்லை என்று நொந்தவன் மனதில் மீண்டும் தன் தாயின் எண்ண அலைகள்.
அவரும் இப்படி
தந்தையைப் புரிந்து கொள்ளாமல் பேசி தான் தந்தை தற்கொலை முடிவை தேடி இருப்பாரோ என்று
சந்தேகம் முளைக்க தன்னை பைத்தியக்காரன் போல எண்ண வளையங்களில் சிக்க வைத்ததை நினைத்து
அவனே நொந்து கொண்டான்.
கணவனின் நிலை
அறியாது அவனைத் தேடி வந்த எழில் அவன் ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கண்டு விளையாட்டாக
பின்புறமாக தாவி வந்து அணைத்தாள்.
ஏதேதோ எண்ணங்கள்
சூழ்ந்த மனம் தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் இருந்திருக்க, மனைவியின் திடீர் செய்கையில்
எரிச்சல் வந்தவனாக,
"என்ன
விளையாட்டு இது? அறிவில்ல? அம்மாவுக்கு இருந்தா தானே பொண்ணுக்கு இருக்கும்?" என்று
கோபத்திலும் ஆத்திரத்திலும் இயலாமையிலும் பேசிவிட்டான் ரவீந்தர்.
தான் வந்தபோது
இருந்த மகிழ்ச்சியை முற்றிலும் தொலைத்தவளாக எழில் இறுகிய முகத்துடன் ரவியை விட்டு விலகி
நடந்தாள்.
அவள் நினைத்து
பயந்த ஏதோ ஒன்று நிகழ்ந்து விட்டதன் அடையாளம் தான் ரவியின் இந்த சுடு சொற்கள் என்று
உணர்ந்தவள் மனம் தன் துடிப்பை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு வலியைச் சுமந்தது.
'எத்தனை மென்மையானவன்
அவளது கணவன் ரவி, அவளின் சன்ஷயின்'. இப்படி தன் வாழ்வை இருளச் செய்து விட்டாரே தன்
தாய் என்று மனம் உடைந்து வாயிலை நோக்கி நடந்தாள்.
வீட்டினுள்
செல்லப் பழகி இருந்த கால்களை சிரமப்பட்டு வெளிப்புறமாக செலுத்தினாள்.
தன் எண்ணங்களின்
பிடியில் சுயவுணர்வு இல்லாமல் எரிச்சல் மண்டிக் கிடந்த ரவிக்கு சற்று நேரம் சென்று
பின்பு தான் அங்கே வந்தது அவனது இசை என்பதும் அவள் மனம் நோக அவன் பேசியதும் உறைத்தது.
சிதறிய சொற்களை
அள்ள முடியுமா? நமது நாவெண்ணும் சாட்டை பல நேரங்களில் எதிராளியை காயப்படுத்துவதோடு
நம்மையும் குற்றவுணர்வில் தள்ளிவிடும்.
ரவியும் தான்
செய்த முட்டாள்தனம் புரிந்தவனாக எழிலிசையைத் தேடி வீட்டை நோக்கி விரைந்து வந்தான்.
ஆனால் வீட்டில்
அவள் இல்லை என்பதை வாயிலில் அவள் காலணி இல்லாமல் இருப்பதை வைத்து அறிந்தவன் மனம் அச்சத்தில்
ஆழ்ந்தது.
அவன் அறிந்த
எழிலிசை தைரியமான பெண். அதே நேரம் பொறுமைசாலி. தன்னை விட்டு பிரிவதோ, அல்லது தவறான
வேறு முடிவோ எடுக்கும் ரகம் அல்ல என்று ரவி நன்கு அறிவான். ஆனாலும் அவளது இருப்பு இல்லாமல்
இருப்பதை ரவியால் நொடியும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தனது அவசர புத்தியையும்,
மூடத்தனத்தையும் நினைத்து வெட்கினான். ஆனால் இது எதுவும் எழிலை அவனிடம் மீண்டும் கொண்டு
வந்து இணைக்காது என்பதை உணர்ந்த அவன் அறிவு அவளைத் தேடி மன்னிப்பை வேண்ட அவசரம் காட்டியது.
ஆனால் அவன்
எண்ணங்களுக்கு அதிர்வையும் ஆச்சரியத்தையும் தருவது போல எழில் அவனை நோக்கி நடந்து வந்து
கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில்
மெல்லிய புன்னகை வேறு அமர்ந்திருக்க, ரவிக்கு தான் நிகழ்ந்தது கனவா அல்லது நிகழ்வது
கனவா என்று புரியாத குழப்பமான நிலை நிலவியது.
"என்ன
சன்ஷயின் வெயில்ல நின்னுட்டு இருக்கீங்க?" என்ற அவளது இயல்பான பேச்சு அவனது சந்தேகத்தை
மேலும் தூண்ட, அருகில் வந்து நின்ற மனைவியை காற்றுப் புகா வண்ணம் இறுக்கமாக அணைத்துக்
கொண்டான் ரவி.
அவளை அவன் அணைத்த
விதத்தில் அவனது மன்னிப்பு அப்பட்டமாக தெரிந்தது. எழில் விழிகள் அன்பில் நனைந்து போனது.
ஆனால் அதனை தன் கணவன் முன் காட்டிக்கொள்ளாமல் மதிய உணவைப் பற்றிப் பேசியபடி வீட்டினுள்
நுழைந்தாள்.
அவளை அப்படியே
அள்ளிக்கொண்டு படுக்கையில் கிடத்தியவன் அவள் பாதங்களை இறுக்கமாக அணைத்து,
"என்னை
மன்னிச்சிடு இசை. நான் ஏதோ சிந்தனையில இருந்தேன். வந்தது நீ, நான் அவ்வளவு கடுமையா
பேசினது உன்கிட்டன்னு நான் உணர முடியாத அளவுக்கு குழப்பத்துல இருந்தேன். பிளீஸ் என்னை
விட்டு போயிடாத இசை. ஐ ஆம் சாரி." என்று அவளை எழுந்து கொள்ள முடியாமல் அமர்த்தி
அழுது கரைந்தான்.
"ஷ்..
சன்ஷைன் இப்போ எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க பேசினதும் நான் மனசு உடைஞ்சு
போனது உண்மை தான். ஆனால் வாசலுக்கு போனதுமே என் மண்டையில உறைச்ச விஷயம் என்னன்னா நீங்க
என் கண்ணைப் பார்த்து பேசவே இல்ல. அப்ப ஏதோ சரியில்லைன்னு தோனி திரும்பி பார்த்தா அம்மா
வாசல்ல ஒரு மாதிரி சிரிச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க தான் உங்க குழப்பத்துக்கு விதை
போட்டதுன்னு புரிஞ்சதும் நான் உங்களை தேடி வந்துட்டேன்."என்று மடங்கி அமர்ந்து
அவனை பக்கவாட்டில் அணைத்தாள் எழில்.
மனம் தெளிந்த
ரவி மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டி மனைவி இறுக்கிக் கொண்டான்.
"உங்களை
விட்டு எங்கையும் போக மாட்டேன் சன்ஷைன். ஆனா நீங்க இப்போ நான் சொல்றத கேட்டு சென்னைக்குப்
போகணும்." என்றாள் அவன் முகத்தை நிமிர்த்தி்யபடி.
குழப்பமான முகத்துடன்
மனைவியை நோக்கியவன், "சென்னைக்கா? அங்க யாரு இருக்காங்க? நான் ஏன் போகணும்? அதுவும்
உன்னை விட்டுட்டு?" என்று எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான்.
"உங்க
குழப்பம் எங்க ஆரம்பம் ஆச்சோ அங்க தான் அதுக்கான விடை கிடைக்கும். உங்க மனசுல இருந்ததெல்லாம்
தூக்கத்துல நீங்க பேசிட்டு இருந்தீங்க. உங்க அம்மா அப்பாவோட இறப்பு உங்களுக்கு இன்னும்
நிறைய கேள்விகளை மனசுக்குள்ள எழுப்பிக்கிட்டே இருக்கு. இந்த புதுவிதமான வாழ்க்கை உங்களை
உள்ள இழுத்தாலும் விடை தெரியாத கேள்விகள் உங்களை ரொம்பவே சங்கடப்படுத்துது. நீங்க சென்னை
போய் அதெல்லாம் நல்லா விசாரிச்சிட்டு வாங்க." என்று அவன் தலை கோதி அவள் கூற,
"ஆனா உங்க
அம்மா.." என்று இழுத்தான்
"அவங்க
ஏதாவது பிரச்சனை பண்ண தான் பார்ப்பாங்க. நானும் புகழும் அவங்களையும் ராகினியையும் சமாளிப்போம்.
நீங்க இதை கவனிங்க." என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
"உனக்கு
என் மேல கோபமே வரலையா இசை?" என்று ரவி தொண்டை அடைக்க வினவ,
"என் மேல
எனக்கு எப்படி கோபம் வரும் சன்ஷைன்? நான் வேற நீங்க வேற இல்ல. " என்று அவன் கழுத்து
வளைவில் அவள் முகம் புதைக்க, அவளது சூடான கண்ணீர் சொன்னது அவள் அவன் மீது கொண்டிருந்த
காதலை.

கருத்துகள்
கருத்துரையிடுக