சாரல் 62 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 62

 


தன்னை புரிந்து கொண்டது போல பேசும் தன் தம்பியை எண்ணி மனதில் மகிழ்ந்தபடி,

 

"நான் தான் டா. என்னை நெனச்சு எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு."என்று அவனின் கரத்தின் மேல் தன் கரத்தைப் பதித்தாள்.

 

"அக்கா, எனக்கு புரியல" என்று அவன் விழிக்க,

 

"அம்மாவுக்கு என்னை பிறந்ததுல இருந்தே பிடிக்காது. அப்பா அவர் எல்லாருக்கும் இடையில் மாட்டிகிட்டு தவிக்கிற ஜீவன். நீ பக்குவப்படாதவன். இப்படி சூழ்நிலையில் தான் நான் என்னையும் என் மனசையும் எல்லாத்துக்கும் தயாரா வச்சிருந்தேன். அதான் அம்மா முன்னாடி கல்யாண ஏற்பாடு பண்ணின்னப்ப கூட நான் சம்மதம் சொன்னேன். என் மனசுல உன் மாமா எப்பாவோ வந்துட்டார். எங்க கல்யாணம் நடக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல. இப்ப வரைக்கும் உன் மாமாவுக்கு கூட அவரை நான் விரும்பினேன்னு தெரியாது. அவரோட சேனல் பார்த்து என் மனசுல அவர் மேல அன்பு வந்தது. நடக்காதுன்னு என்னை நானே சமாதானம் பண்ணிட்டு இருந்தேன். எதிர்பாராத விதமா அவர் இங்க வந்தது, எங்க கல்யாணம், உனக்கும் ராகினிக்கும் கல்யாணம் எல்லாமே நடந்தது. ஆனா அம்மாவோட இன்செக்யுரிட்டினால மறுபடி எதுவும் தப்பா நடந்திடுமோன்னு பயமா இருக்கு." என்று நிறுத்தினாள்.

 

"நீ மாமாவை விரும்பினதா சொல்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு கா. ஆனா இப்ப ஏன் உனக்கு தப்பா நடந்திடும்ன்னு பயம் வருது?" என்று அவனும் அவள் கரத்தை மென்மையாக பற்றிக்கொண்டு வினவினான்.

 

"அவர் இந்த புது வாழ்க்கைக்காக ரொம்ப மெனக்கெடுறார் டா. அகலக்கால் வைக்காம கையைக் கடிக்காம நாம எல்லாரும் மேல வர அவர் அவ்வளவு உழைக்கிறார். அவர் நினைச்சா வெறும் யூட்யூப் வருமானத்தை வச்சு சொகுசு வாழ்க்கை வாழ முடியும். எத்தனை பேர் இருக்காங்க அப்படி!

 

பொய் சொல்லி, கேவலமா தம்ப்நெயில் போட்டு மக்களை ஏமாத்தி காசு சம்பாதிக்கிறாங்க. ஆனா உன் மாமா ஒரு மாற்றத்தை கொண்டு வர சத்தம் இல்லாம முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காரு. அவரை புரிஞ்சுக்காம ராகினி உனக்கு கம்பெனி ஆரம்பிச்சு தரச் சொல்றா. அம்மா அதை வச்சு குடும்பத்துல குழப்பம் பண்ண பார்க்கறாங்க. ஏதோ ஒரு சூழ்நிலையில் இது பிரச்சனையா மாறினா எங்க உன் மாமாவை விட்டுட்டு வாழ வேண்டி வந்திடுமோன்னு பயமா இருக்கு. முன்னாடி இருந்த எழில் எல்லாத்தையும் விழுங்கிட்டு வாழுவா. ஆனா, இப்போ உன் மாமா என் வாழ்க்கையில வந்ததுக்கு அப்பறம் என்னால அப்படி வாழ முடியாது."என்று கூறியவள் தொண்டை கரகரத்தது.

 

"அக்கா என்ன பேசுற?" என்று அவளை தோளோடு அணைத்து நின்றான் புகழ்.

 

"இல்ல டா. என்னால உன் மாமா இல்லாம இருக்க முடியாது. உனக்கு கம்பெனி வச்சு நடத்த விருப்பம் இருந்தாலோ, இல்ல இந்த கடையை நடத்த கஷ்டமா இருந்தாலோ என்கிட்ட சொல்லு. நான் ஏதாவது செஞ்சு எல்லாத்தையும் சரி பண்றேன். ஆனா ராகினி, அவ கிட்ட வருத்தப்பட்டு நீ பேசினா அவ அவரை தொந்தரவு செய்யறா. பிடிவாதமா பேசுறா. அவருக்கு நிம்மதி இல்லாம போகுது." என்றவள் விழிகள் நீரால் நிறைந்திருக்க,

 

"அக்கா உன்கிட்ட நான் ஒரு உண்மையை சொல்லவா? நான் மாமாவை பார்த்து தான் எப்படி ஒரு ஆண் குறிக்கோளோட இருக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். இதை தான் நான் ராகினி கிட்ட வேற மாதிரி சொன்னேன். அவ நான் அவங்க அண்ணன் மாதிரி அறிவுல இருக்கணும்னு சொன்னத, பணத்துலன்னு தப்பா நினைச்சு இருப்பா. இனிமே இப்படி நடக்காது அக்கா" என்று அவள் தாடையைப் பற்றி அவள் கண்ணீரைத் துடைத்தான்.

 

எழில் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க, “இந்த கடை மூலமா எனக்கு நிறைய பேர் அறிமுகம் கிடைச்சு இருக்கு அக்கா. சேலத்துல ஒரு கம்பெனி சின்ன அளவுல காற்றாலை தயார் பண்ணுறாங்க. நான் அவங்க கிட்ட பேசி இருக்கேன். சின்ன அசம்பிளி யூனிட் மாதிரி இங்க செட்டப் பண்ணி சப் காண்ட்ராக்ட் மாதிரி கொடுக்க முடியுமான்னு கேட்டு இருக்கேன். நானே எனக்கான பாதையை தேடி கண்டு பிடிச்சுட்டேன் கா. ராகினி ஒரு குழந்தை மாதிரி. அவளுக்கு தெரிஞ்சது எல்லாம் நான் கஷ்டப்படுறேன் மட்டும் தான். அதை நான் சந்தோஷமா தான் செய்யறேன்னு புரியாது." என்று கூற, எழில் தன் மனபாரம் நீங்கிய நிம்மதியில் முகம் மலர்ந்து சிரித்தாள்.

 

"அக்கா ஒன்னு தெரிஞ்சுக்கோ நான் பழைய புகழ் இல்ல. ராகினியும் நிறைய மாறி இருக்கா. ஆனா அவளோட அந்த பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ஆட்டிடியூட் மாற ரொம்ப நாள் ஆகும்" என்று அவன் சிரிக்க அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

 

சரோஜாவின் எண்ணம் தெரியாமல் அக்காவும் தம்பியும் மனம் விட்டுப் பேசியதில் நிம்மதியாய் இருக்க அதில் வெடி வைக்க சரோஜா பெரிய திட்டத்துடன் வீட்டில் காத்திருந்தார்.

 

எழில் வீட்டில் இல்லாதது கண்டு புருவத்தில் ஒரு வித வினாவுடன் தோட்ட வேலைகளை கவனித்து வந்தான் ரவீந்தர்.

 

அவனுக்கு எழிலை நினைக்க பெருமையாக இருந்தது. ராகினி தன்னை இவ்வளவு கோவப்படுத்த முயன்றாலும் அவளை தடுத்து, அவனை சமாதானம் செய்து, இருவருக்கும் நன்மை தரும் தீர்வை வழங்கி இன்று வரை பெரிய அளவில் உறவில் விரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறாள். அவளைத் தவிர அவன் யாரை மணந்திருந்தாலும் மனநிம்மதியைத் தொலைத்திருக்கக் கூடும் என்று எண்ணியபடி ஓடை வரை நடந்துவிட்டு வரும் எண்ணத்தில் இருந்தான்.

 

"என்ன மாப்பிள்ளை சார் என் பொண்ணு உன்னை அம்போன்னு விட்டுட்டு ஊர் சுத்த போயிட்டாளா?" என்று நக்கலாக கேட்ட குரலில் திரும்பியவன் மாமியார் நிற்பதைக் கண்டு,

 

"இல்ல மாமியாரே, அவ வேலையா வெளில போயிருக்கா. நான் தான் வெட்டியா சுத்திட்டு இருக்கேன்." என்று அவரை கடுப்பில் ஆழ்த்த,

 

"அப்ப என் மருமக சொன்னது சரிதான். நீ உனக்கு வேண்டியதையும் ஒழுங்கா செஞ்சுக்க மாட்ட, அடுத்தவங்களுக்கு வேண்டியதையும் ஒழுங்கா செஞ்சு தர மாட்ட. அப்படி தானே?"என்று பேச,

 

அவரது பேச்சில் கோபம் கொண்ட ரவி, “உங்களுக்கு புரியுதா இல்லையா? நான், இசை, புகழ், மாமா எல்லாரும் சம்பாதிக்கிறது உங்களுக்கும் உங்க மருமகளுக்கும் சேர்த்து தான். எல்லாமே உங்க காசும் தான். ஆனா அதை ஆடம்பரமா வீசி எறியக் கூடாதுன்னு தானே உங்களுக்கு சில கட்டுப்பாடு வச்சோம். உங்க கையில பணமே இல்லாம விடல தானே? அப்பறமும் ஏன் இப்படி ரெண்டு பேரும் வேற வேற விதத்துல கொடச்சல் கொடுத்துக்கிட்டே இருக்கீங்க. அவளாவது வயசுல சின்னவ, வளர்ந்த விதம் அப்படின்னு சொல்லலாம். ஆனா அத்தை... நீங்க... நீங்களுமா?" என்று கேட்டவன் வெறுப்புடன் அங்கிருந்து அகன்று சென்றான்.

 

அவன் பேசியது எந்த வகையில் சரோஜாவுக்கு புரியும் என்று அவன் நினைக்க கூட தயாராக இல்லை. அவன் மனம் எல்லாம் தன் தங்கை தன்னையும் புரிந்து கொள்ளாமல், இசை மேல் நம்பிக்கையும் வைக்காமல் இப்படி மாமியார் பின் நின்று செயல்படுவதில் அவன் பெருத்த கோபம் கொண்டான். அதை காட்ட வழி தெரியாமல் கால் நோக நடக்கலானான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels