சாரல் 61 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 61
தன்னிடம் நிறுத்தாமல்
அவருடைய மகளைப் பற்றி குறைத்துப் பேசும் மாமியாரை வெற்றுப் பார்வை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்
ராகினி.
"இங்க
பாரு மா, நீ பெரிய இடத்தில வளர்ந்த பொண்ணு, உன்னை இப்படி தகர கொட்டகைல உங்க அண்ணன்
உட்கார வச்சு இருக்கான். அவன் நினைச்சு இருந்தா வாடகைக்கோ, ஒத்திக்கோ ஒரு பெரிய வீடு
எடுத்து கொடுத்து இருக்கலாம். அவனும் செய்வான் தான். உன் கல்யாணத்துல அவ்வளவு உறுதியா
இருந்தானே! ஆனா செய்யல. ஏன்? அவ செய்ய விட மாட்டா. அவளுக்கு தான் நல்லா வாழலன்னாலும்
நாங்க நல்லா வாழ்ந்திட கூடாதுன்னு ஒரு எண்ணம்."என்று பெருமூச்சு விட்டார்.
ராகினி நுனி
நாக்கு வரை, 'அந்த எண்ணம் அவங்களுக்கா இல்ல உங்களுக்கா?' என்று கேட்க காத்திருந்த கேள்வியை
சிரமப்பட்டு விழுங்கினாள்.
அவளுக்கு எழில்
மேல் ஒரு வித நம்பிக்கை இருந்தது. தன் அண்ணன் மேல் தான் அது இல்லை. ஆனால் இன்றைய தேதியில்
எழில் கூறினாலும் ரவி அவள் கோரிக்கையை ஏற்று புகழுக்கு கம்பெனி வைத்துத் தருவான் என்ற
நம்பிக்கை அவளுக்கு இல்லை.
தன் கணவன் என்ற
பிடிப்பு அவன் மேல் தோன்றாவிட்டாலும் அவன் மேல் ஏற்பட்டுள்ள அந்த ஈர்ப்புக்காக அவனை
நல்ல நிலைக்கு உயர்த்தினால்தான் தான் எண்ணியபடியான உயர்மட்ட வாழ்வை வாழ முடியும் என்று
நம்பினாள் ராகினி.
மாமியாரின்
வார்த்தைகளை ஏற்றது போலவும் காட்டிக் கொள்ளாமல், அவரை எதிர்த்தும் பேசாமல் அவரை வைத்து
தன் காரியத்தை சாதிக்க எண்ணினாள்.
"நீங்க
சொல்றது இருக்கட்டும். உங்களால அவங்ககிட்ட சண்டை போட்டு புகழுக்கு கம்பெனி வச்சு தர
வைக்க முடியுமா?" என்று கேட்டு,
"உங்க
பாச்சா அங்க பலிக்காது தானே? அப்பறம் எதுக்கு என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கீங்க?
கிளம்புங்க." என்று அமைதியாக கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
சரோஜாவுக்கு
தான் எண்ணி வந்தது நிறைவேறவில்லை என்ற எரிச்சல் இருந்தாலும், அடுத்து எடுத்து வைக்க
வேண்டிய அடியின் நுனியை மருமகள் அவளுக்கு கொடுத்துவிட்டுச் சென்றதாகத் தோன்றியது.
இனி அவர் எழிலிடம்
மல்லுக்கு நிற்கலாம். கேட்டால் மருமகளின் ஆசை என்று இவளை விரல் நீட்டி, தான் தப்பிக்கலாம்.
எது எப்படி போனாலும் எழில் இடையில் சிக்கித் தவிப்பாள் என்று எண்ணினார் சரோஜா.
சில பெண்களுக்கு
தான் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் அதற்கு காரணம் தான் என்ற புரிதல் இல்லாமல்
அதை மற்றவர் மீது திணித்து, அவரை எதிரியாக பாவிக்கும் மனோபாவம் இருக்கும். சரோஜா விஷயத்தில்,
பிடிக்காத திருமணத்தால் விளைந்த முதல் குழந்தையான எழில் தன்னை காக்கும் ஆணாக இல்லாமல்
பெண்ணாக பிறந்ததால் அவள் தான் தன் வாழ்க்கை ஏழ்மையில் இருக்க காரணம் என்று மனதில் எண்ணிக்
கொண்டு அவளை எதிரியாக மனதில் வரித்து விட்டார். இதை அவரே உணர்ந்திருக்க வில்லை. இது
ஒரு விதமான மனநோய். தான் வெறுப்பது தன் சொந்த இரத்தம் என்ற புரிதல் கூட இல்லாத ஒரு
வித ஆழமான மனநிலை.
இவர் சிந்தனை
குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்க, எழில் சிந்தனையோ எப்படியாவது புகழுக்கு
நிலைமையை புரிய வைத்து ராகினியை சமாதானம் செய்து சண்டை சச்சரவு இல்லாத சூழ்நிலையை உருவாக்குவதில்
இருந்தது.
பணிக்கு வந்த
ஆட்கள் கிளம்பிச் சென்றதும் தன் காலணியை மாட்டிகொண்டு எழில் தன் தம்பியைக் காணப் புறப்பட்டாள்.
அவள் மனம் அன்று
ஏனோ நிலைகொள்ள முடியாத தவிப்புடன் இருந்தது. ரவி இயல்பாக இருப்பது போலத் தோன்றினாலும்
அவன் மனதில் ஆழமான வலி இருப்பதையும் அதனை மறைத்து அவன் நடமாடுவதையும் அவளால் புரிந்து
கொள்ள முடிந்தது. அவனிடம் கேட்டால் அவன் சொல்லிவிடக் கூடும். ஆனால் அவனை சங்கடம் கொள்ள
வைக்க அவளுக்கு விருப்பம் இல்லை.
இதில் ராகினி
வேறு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாள். அவளுக்கு புகழ் மேல் பிரியம் உள்ளது என்று
மகிழ்வதா, இல்லை அவனை வைத்து வேறு பிரச்சனைகளுக்கு வித்திடுகிறாள் என்று கவலை கொள்வதா
என்று புரியவில்லை.
சிந்தனை செய்தபடி
புகழின் கடை வாசலுக்கு வந்துவிட்டாள் எழில், கடையின் ஷட்டர் பாதி மூடப்பட்டு இருக்க,
புரியாமல் சுற்றிமுற்றிப் பார்த்தவள் அவளைக் கண்டு நகைமுகத்துடன் வரும் சாலமன் தாத்தாவைக்
கண்டு புன்னகைத்தாள்.
"தாத்தா"
என்று அவள் அன்புடன் விளிக்க,
"வாம்மா
எழில். தம்பியை பார்க்க வந்தியா? அவன் ஏதோ வேலையா வெளில போயிருக்கான். வருவான். இப்படி
பெஞ்ச்ல உட்காரு." என்று காம்ப்ளெக்ஸ்சில் உள்ள பெஞ்ச்சை கை காட்டினார்.
"ஆமா தாத்தா.
அவனோட கொஞ்சம் பேசிட்டு ஒரு வேலை இருக்கு அதையும் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்."
என்றபடி அமர்ந்த அவளருகில் அமர்ந்தார் சாலமன்.
"நான்
கூட உன் தம்பியை உன் அம்மா மாதிரின்னு தப்பா நினைச்சுட்டேன் எழில். நல்ல உழைப்பாளியா
இருக்கான். வேலையும் சுத்தமா செய்யறான். இப்படியே கவனமா இருந்தான்னா நாளைக்கு
நல்ல நிலைமைக்கு வந்திடுவான். தர்மா தம்பி கூட இப்பல்லாம் அவனை எதுவும் கேட்கறது இல்ல."
என்று பேச்சில் தர்மாவை இழுக்க,
"அண்ணன்
எப்படி இருக்கு? இன்னும் என் மேல கோவமா தான் இருக்கா?" என்று வாடிய எழில் முன்
திடீரென்று வந்த தர்மா,
"உன் மேல்
கோவப்பட்டா உன் புருஷன் சண்டைக்கு வருவார் எழிலு. சரியான ஆளைத் தான் தேர்ந்தெடுத்து
இருக்க. போன வாரம் நேர்ல பார்த்தப்ப உன்னைப் பத்தி என்கிட்ட சொல்லி, மனசுல பழசை எதுவும்
நினைவு வச்சுக்காதீங்கன்னு கேட்டுக்கிட்டார். உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கார் மா."
என்று கூறினான்.
"உண்மை
தான் அண்ணா. நான் என்ன பண்ணினேன்னு எனக்கும் புரியல. ஆனா அவர் மனசுல என் மேல ஒரு பெரிய
நம்பிக்கை வச்சிருக்காரு. அதை நான் கவனமா காப்பாத்தணும்." என்று உணர்ந்து கூறினாள்
எழிலிசை.
இவர்களின் பேச்சுக்கு
இடையே தன் வண்டியில் வந்து அங்கே இறங்கினான் புகழேந்தி. அவனைக் கண்டதும் எழிலிடம் கண்களால்
விடைபெற்றுக் சென்றான் தர்மா.
"இன்னும்
இவருக்கு என் மேல கோவம் போகல போல அக்கா. என்ன செஞ்சு இதை சரி பண்றது?" என்று தன்
தமக்கை அருகில் அமர்ந்த புகழின் முன் வந்த சாலமன்,
"நீ எப்பவும்
போல உன் வேலையை கவனிச்சுகிட்டு உன் வாழ்க்கையை பாரு புகழ். தர்மா தம்பிக்கு தானே எல்லாம்
புரியும்." என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அவனைக் கடந்து சென்றார்.
அவரை பார்த்தபடி
இருந்த எழிலைக் கண்டு புகழ் மென்மையாக,
"என்னக்கா
இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்திருக்க. யாரு காரணம்? அம்மாவா இல்ல ராகினியா?"
என்று அவள் கரத்தை அன்போடு பற்றிக் கொண்டு வினவினான்.
கீற்றாய் முகத்தில்
புன்னகையை தாங்கிய எழில், "நான் தான் டா." என்று தயக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக