சாரல் 60 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 60
காலை வேளையில்
ஆட்களை வரவழைத்து மலர் கொத்தில் வைக்கும் பிரத்யேக மலர்களை பயிரிடும் வேலைகளை ஆரம்பித்திருந்தாள்
எழில்.
ரவி அவளுக்கு
துணையாக நின்று கொண்டிருந்தான்.
"என்ன
இசை திடீர்னு போக்கே ஃபிளவர்ஸ் வைக்கலாம்ன்னு உனக்கு யோசனை வந்தது?" என்று கைகளை
குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாக வினவினான்.
"எனக்கு
எதுவும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா சன்ஷைன்? உங்க கிட்ட இருந்த பணம்
மொத்தமும் கல்யாணம், புகழ் கடைக்குன்னு செலவு செஞ்சுட்டீங்க. இந்த மாசமே இத்தனை நாளா
வெளில எடுக்காத ஷேர்ஸ் பணம் வச்சு தான் அடுத்தடுத்த செலவுக்கு பிளான் பண்ணி இருக்கீங்க"
என்று அவளும் கையைக் கட்டிக்கொண்டு ரவியை குற்றப்படுத்தும் பார்வை பார்த்தபடி வினவினாள்.
"ஆமா இசை
ஷேர்ஸ் பணமும் நம்மளுது தானே? இப்போ போட்டு இருக்குற மீன், கீரை எல்லாம் இன்னும் ரெண்டு
மாசத்துல பலன் கொடுக்கும் தானே? அதெல்லாம் யோசனை பண்ணி தான் பவர் சோர்ஸ் போட பணம் எடுக்க
நினைச்சேன்." என்று பொறுமையாக பதில் கூறினான்.
"நம்ம
பணம் தான். ஆனா அள்ள அள்ள குறையாம இருக்க உங்க பேங்க் அக்கவுண்ட் ஒன்னும் அட்சய பாத்திரம்
இல்ல மிஸ்டர் ரவி. நாம அதுல பணம் போட்டு வைக்க வைக்க தான் செலவுக்கு எடுக்க முடியும்.
தற்சார்பு வாழ்க்கைக்கு மூவ் ஆகுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கையை கடிக்காத
வருமானத்தையும் நாம ரெடி பண்ணிக்கணும்."
"எனக்கு
ரொம்ப வருஷமாவே இந்த கிளைமேட்டுக்கு போக்கே ஃபிளவர்ஸ் பயிர் பண்ணனும்னு ஆசை. ஆனா எனக்கு
அப்ப சூழல் இல்ல. இப்போ இடம் இருக்கு. பிளவர் பெட், கிரீன் ஹவுஸ் எல்லாமே இப்போ என்கிட்ட
உள்ள பணத்துல செய்ய முடியும். அதே மாதிரி நான் எம்பிராய்டரி ஆர்டர் செய்த கம்பெனி அவங்களுக்கு
தெரிஞ்ச ஹோட்டல்ஸ் அண்ட் போக்கே ஷாப்ஸ் லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. அளவா ஆர்டர் வந்து
நாம அனுப்பி வச்சாலே ஆரம்ப கட்டத்துக்கு போதுமான பணம் நமக்கு கிடைக்கும். எல்லாத்தையும்
ஹார்டிகல்சர் ஆபிஸ்ல விசாரிச்சிட்டு வந்துட்டேன்" என்று விளக்கம் கொடுத்தாள்.
"ஓகே.
நீ சொல்றதும் சரி தான். நான் கொஞ்சம் சேனல் வீடியோ மேல கான்சன்ரேட் பண்றேன் இசை. நல்ல
இன்கம் வருது. அடுத்த பேமென்ட் வந்ததும் சோலார் அண்ட் வின்ட் மில் போட ஏற்பாடு பண்ணுறேன்."
என்று அவளிடம் பேசிக்கொண்டிருக்க,
"இப்போ
அதெல்லாம் ரொம்ப முக்கியமா? புகழ் நேத்து ரொம்ப ஃபீல் பண்ணினான். கடையில இருக்கறது
அவனுக்கு கஷ்டமா இருக்கும் போல. நீ முதல்ல அவனுக்கு ஒரு கம்பெனி வச்சு கொடு. ஏசி ரூம்ல
வேலை செஞ்சா போதும். அவன் ஏன் ஏதேதோ எலக்ட்ரானிக் ஐட்டம் எல்லாம் ஏஜென்சி எடுத்து அலையணும்?"
என்று கோபமாகக் கேட்டபடி வந்து நின்றாள் ராகினி.
அவளைக் கண்டதும்
எழுந்த மகிழ்ச்சி அவளது பேச்சால் சுத்தமாக வடிந்து போனது ரவிக்கு.
ஆனால் எழில்
பொறுமையுடன், “என்ன சொல்ற ராகினி, அவன் ரொம்ப விரும்பி எல்லாமே செய்யறதா நேத்து பேசும்போது
கூட சொல்லிட்டு இருந்தானே?" என்று அவளை அருகே அழைத்து பேச,
"கையெடுங்க
அண்ணி. அப்ப நான் பொய் சொல்றேனா?" என்று கோபமாகக் கத்தினாள்.
அவள் குரல்
கேட்டு பின் வாசல் வழியாக எட்டிப் பார்த்தார் சரோஜா. பின் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
இதை கவனித்த
ரவி தங்கையின் செயல் பிடிக்காத கடுப்புடன்,
"இப்போ
உனக்கு என்ன வேணும்? என்னால புகழுக்கு கம்பெனி எல்லாம் வச்சு தர முடியாது. என்கிட்ட
இப்போ பணம் இல்ல. ஆனா அவன் கம்பெனி ஆரம்பிப்பான். தன்னோட சொந்த முயற்சியால அவன்
சீக்கிரமே அதை நடத்தி காட்டுவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. உனக்கு உன் புருஷன்
மேல நம்பிக்கை இல்லன்னா அது என் பிரச்சனை இல்ல. உன்னோட பிரச்சனை புரியுதா?" என்று
விரல் நீட்டி எச்சரித்து விட்டு ரவி கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
"அவன்
போவதைப் பார்த்த ராகினி, பணம் இல்லையாம். எப்படி பொய் சொல்றான் பாருங்க அண்ணி. இந்த
மீன் தொட்டிக்கு பணம் இருக்கு. இப்போ போடுற அந்த வெள்ளை டெண்ட்டுக்கு பணம் இருக்கு.
ஆனா எனக்கு செய்ய மட்டும் பணம் இருக்காது. என் அம்மா மட்டும் இருந்திருந்தா என்னை இப்படி
விட்டு போய் இருப்பாங்களா?" என்று கோபத்துடன் ஆரம்பித்து கண்ணீரில் முடித்தாள்.
எழிலுக்கு சலிப்பாக
இருந்தது. ஒவ்வொரு முறையும் சிறுபிள்ளை போல முகம் காட்டும் இவளுக்கு எத்தனை விளக்கினாலும்
புரியுமா என்பது சந்தேகமே. அதனால் இதைப் பற்றிய சிந்தனையை ஒதுக்கிவிட்டு வேலையை கவனிக்க
முடிவு செய்தாள்.
"நீ உள்ள
போய் ரெஸ்ட் எடு ராகினி. நான் அப்பறமா அவர் கிட்ட பேசுறேன்" என்று சமாதானம் செய்ய,
"நீ மட்டும்
எனக்கு அண்ணியா வரலைன்னா இவர் என்னை அப்படியே கை கழுவி விட்டு இருப்பார் தெரியுமா!"
என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு சென்றாள்.
அவள் போவதை
ஒருவித வெறுமையோடு கண்டாள் எழில். சில நாட்களாக ராகினிக்கு பக்குவம் வந்து கொண்டிருக்கிறது
என்று நம்பியதற்கு, அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று உச்சியில் ஆணி அடித்தது போல சொல்லி
விட்டுச் செல்பவளை என்ன செய்வதென்று அவளுக்கும் புரியவில்லை.
எது எப்படி
ஆனாலும் வாழ்க்கையை நகர்த்த வண்ணக் காகிதமாம் பணம் என்னும் பரமன் வேண்டும். இவளோடு
போராடுவதை விட, இவளுக்கு வேண்டியதை செய்து கொடுக்கும் பணத்தை சம்பாதிக்க போராடலாம்.
பலனாவது கிடைக்கும் என்று மலர்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பெண்களோடு சேர்ந்து
அவளும் வேலையில் இறங்கினாள்.
மருமகள் கத்தியதும்,
மருமகன் எகிறியதும், மகள் சமாளித்ததும், என்று அனைத்தையும் ஜன்னல் அருகில் நின்று கவனித்த
சரோஜாவுக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.
அவரும் இது
போன்ற சூழ்நிலை வரவேண்டும் என்று தானே காத்திருந்தார். இதோ வந்துவிட்டது. இதை பயன்படுத்திக்
கொள்ளவேண்டும் என்று அவரது குறுக்கு புத்தி அறிவுறுத்தியது.
வேகமாக காலையில்
காய்ச்சிய பாலில் காபியை கலக்கி எடுத்து ஒரு பிளாஸ்கில் நிரப்பிக் கொண்டார்.
புகழின் கண்டெய்னர்
வீட்டுக்கு சென்று வாயில் கதவை அவர் தட்ட, எழுந்து வந்து கதவைத் திறந்த ராகினி மாமியார்
நிற்பதைக் கண்டு,
"என்ன
வேணும்?" என்றாள் எங்கோ பார்த்தபடி.
"உன்கிட்ட
கொஞ்சம் பேசணும் மா" என்று தன்மையாக வெளிவந்த சரோஜாவின் குரலில் தெளிந்தவள், கதவை
அகலமாக திறந்து,
"உள்ள
வாங்க" என்று அழைக்க,
தன் மகள் வாழ்க்கைக்கு
வேட்டு வைக்கும் எண்ணத்துடன் மகிழ்ச்சியாக உள்ளே நுழைந்தார் சரோஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக