சாரல் 58 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 58



நாட்கள் அதன் போக்கில் கடந்து செல்ல புகழும் ராகினியும் வீடு திரும்பி இருந்தனர்.


ராகினியிடம் நிறைய மாற்றம் தென்பட்டது. வாசலில் சாக்பீஸ் கொண்டு ஏதோ வரைந்தாள். சமையல் என்ற பெயரில் உப்பு புளி வைத்து ஏதோ செய்தாள்.


அடிக்கடி எழிலிடம் எப்படி வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு செய்து வந்தாள். ரவிக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் அதை மிஞ்சிய ஆச்சரியம் நிரம்பி வழிந்தது.


எழிலிடம் இதைப் பற்றி வினவ, "இன்னிக்கு நைட் அவங்களுக்கு விருந்து வைக்கிறேன்னு வர சொல்லி இருக்கேன். அப்ப நீங்களே உங்க தங்கச்சி கிட்ட நேர்ல கேட்டுக்கோங்க" என்று சிரித்துக் கொண்டே விலகிச் சென்றாள்.


அன்று பக்கத்தில் இருந்த விவசாயக் கல்லூரியில் இருந்து அவன் தெரிந்து கொண்டு வந்த பண்ணைக் குட்டை என்பதை செயல்படுத்த எக்ஸ்கவேட்டர் இயந்திரம் கொண்டு வீட்டை விட்டு சற்று தள்ளி அந்த பேராசிரியர் குறிப்பிட்ட இடத்தில் குட்டைக்காக குழி வெட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது.


ஆட்கள் கொண்டு குழி தோண்டுவது என்றால் குறைந்தது நான்கு நாட்கள் ஆகும் வேலையை அந்த இயந்திரம் அதன் போக்கில் நான்கு மணி நேரத்தில் முடித்து விட்டுச் சென்றது.


அதனை மேற்பார்வை இட்டபடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ரவி, மோட்டர் கொண்டு அந்த குழியில் நீரை நிரப்பினான்.


நீர் அதில் தேங்கி நின்று இரண்டு நாட்கள் நிலை பெற்றதும் அதில் மீன் விதைகளை விட வேண்டும். விதைகள் என்றால் ஏதோ மரம் முளைக்கும் என்று எண்ணி விட வேண்டாம்!


அவை கெண்டை மீன் குஞ்சுகள். அதனை அந்த பண்ணைக் குட்டையில் வளர்ப்பதன் மூலம் அவர்கள் உணவுத் தேவைக்கான மீன் மட்டும் அல்லாது அதனை தொழிலாகவும் செய்ய முடியும் என்று முதலில் மீன் வளர்ப்பை ஆரம்பித்தனர் ரவி - எழில் தம்பதி.


ஏனெனில் இந்த மீன் வளர்ப்பை சார்ந்து தான் அவர்களின் அடுத்த  திட்டம் இருந்தது.


ரவி நீரை நிரப்பிவிட்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது வண்டியில் வந்து வாசலில் இறங்கிய புகழ்,


"மாமா குழி தோண்டி முடிச்சாச்சு போல!" என்று ரவியை நோக்கி வந்தான்.


"ஆமா புகழ். இப்போ தான் தண்ணி நிரப்பிட்டு வர்றேன்" என்று வாசலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.


"அச்சோ நான் நீங்க நிரப்பிடக் கூடாதுன்னு தான் மாமா வேகமா வந்தேன்." என்று சலிப்பாக அவன் அருகில் அமர்ந்தான் புகழ்.


"ஏன் என்ன ஆச்சு?" என்று ரவி புகழை நோக்க,


"அக்கா காலைல தான் சொல்லிச்சு, பண்ணைக் குட்டைக்கு மேல மெட்டல் ஃப்ரேம் போட்டு கீரை வளர்க்க போறீங்கன்னு" என்று புகழ் தன் சட்டைப் பையில் இந்த பேப்பரை எடுத்தபடி கூற,


"ஆமா ஹைட்ரோபோனிக்ஸ் மெத்தட் மூலமா மேல ஒரு ஃக்ரோ பெட் போட்டு கீரை, காய்கறி வளர்க்க முடியும்னு வேளாண் கல்லூரியில சொன்னாங்க." என்று ரவி ஆர்வமாக புகழை நோக்கினான்.


"அதுல சின்ன மாற்றம் பண்ணினா நமக்கு உபயோகமா இருக்குன்னு தோணுச்சு மாமா. நார்மலா மீன் தொட்டில தண்ணியை சுத்தம் பண்ண யூஸ் பண்ணுற பிராசஸ்ல சின்ன மாற்றம் மட்டும் பண்ணினா அந்த ஃப்ரேம் வேலை எல்லாம் இல்லாம பண்ணைக் குட்டையும் காற்றோட்டமா இருக்கும். நமக்கு பயிர் செய்யவும் வசதியா இருக்கும்" என்று பேப்பரை ரவியிடம் காட்டினான்.


அதில் குட்டை நீரை ஒரு பம்ப் மூலம் வெளியே எடுத்து குட்டைக்கு அருகே உள்ள நிலத்தில் வரிசையாக ஃகிரோ பெட்கள் அமைத்து அதன் கீழ் பகுதி வழியாக அந்த நீர் சென்று மீண்டும் குட்டையின் மறுபுறம் குட்டைக்குள் சேர்வது போல படம் வரையப்பட்டு இருந்தது.


"இது எப்படி சாத்தியம் புகழ்?" என்று ரவி புரியாமல் வினவ,


"மாமா குட்டைக்கு மேல கிரோ பெட் போட்டா குட்டையில உள்ள மீனுக்கு காத்து பத்தாது. அது மேல உள்ள காத்தை தான் சுவாசிக்கும். அதே போல செடியோட வேர்கள் நீருக்குள்ள போகும்போது அதுக்கு அதிக ஊட்டச்சத்து தான் இருந்தாலும் நம்ம வளர்க்கப்போற அளவுக்கு மீன்களுக்கு நீந்த சிரமமா இருக்கலாம். அதுக்கு தான் இந்த மெத்தட். இதுல மீன் கழிவு, மீன் நீந்திய தண்ணி மூலமா கிடைக்கிற அதிகப்படியான சத்து செடிகளுக்கு போக ஹைட்ரோபோனிக்ஸ் போலவே அக்வாபோனிக்ஸ் முறைப்படி நீர் ஓடிக்கிட்டு இருக்குற ஃக்ரோ பெட்ல செடிகளை வளர்க்க முடியும். ஓடுற நீர் மறுபடி குட்டைக்கே போகும்போது வேர்ல பட்டு மீனுக்கு தேவையான சத்தை அது கொண்டு சேர்க்கும். இது மூலமா குட்டையில உள்ள தண்ணி சுத்தமாகவும், செடி வளர்ப்புக்கு எந்த அதிகப்படி தண்ணி தேவையும் இல்லாம இருக்கும்." என்று விளக்கினான்.


"நல்ல ஐடியா டா புகழ்.  இந்த ஃபில்டர் பம்ப் சிஸ்டம் இப்போ வாங்கணும் இல்லையா?" என்று அவர்கள் இருவருக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்து அருகே அமர்ந்தாள் எழில்.


"அக்கா அதெல்லாம் காலைல ஆர்டர் கொடுத்துட்டு தான் வர்றேன். மதியம் வந்திடும். மீன் விடும்போது அப்படியே ஃக்ரோ பெட் போட எல்லாம் தயார் பண்ணிடுங்க. இந்த எலக்ட்ரிகல் வேலை எல்லாம் நான் பண்ணிடுறேன்.' என்று ஆர்வமாக கூறினான் புகழ்.


"நல்ல ஐடியா புகழ். நான் இதை சேனல்ல போடும்போது இதே போல யாருக்காவது வேணும்ன்னா உன்னை காண்டாக்ட் பண்ண சொல்லி உன் நம்பர் கொடுக்கறேன்." என்று சொல்லிவிட்டு எழுந்து கொண்டான் ரவி.


"என்னக்கா மீன், செடி எல்லாம் செட் ஆகிடுச்சு. அடுத்து என்ன?" என்று புகழ் எழிலிடம் பேச்சுக் கொடுக்க,


"மீன் வளர்க்க ஆசைப்பட்டா போதுமா டா அதுக்கு சாப்பாடு வேணும்ல? அதான் சின்னதா ஸ்பிருலினா தொட்டி ஒன்னு போடலாமான்னு காலைல இருந்து யோசனை. மீனுக்கு சாப்பாடும் ஆச்சு, இன்னிக்கு தேதில ஒரு கிராம் ஸ்பிருலினா பொடி ரெண்டு ரூபாய்க்கு விற்குது. பெரிய அளவுல விற்கலன்னாலும் கொஞ்சம் போனாலும் நமக்கு லாபம் தான்." என்று எழில் தான் யோசித்துக் கொண்டிருந்ததை தம்பியிடம் கூறினாள்.


அவளை ஆச்சரியமாக நோக்கிய ரவியின் மனதில் ஆயிரம் கேள்விகள். இந்த பெண்கள் எப்படி சூழ்நிலைக்கு தகுந்தது போல தன்னைப் பொருத்திக் கொள்கிறார்கள் என்று புரியாமல் வியப்பில் ஆழ்ந்திருந்தான்.


வீட்டைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த ராகினி இன்று வீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறாள்.


வீட்டில் இருந்து எம்பிரய்டரி போட்டுக் கொண்டிருந்த எழில் இப்பொழுது அவனது ஆசைக்காக தற்சார்பு வாழ்க்கை முறையோடு சேர்ந்து மாடர்ன் விவசாயம் கற்று கரை காண நினைக்கிறாள்.


பெண்களுக்குள் இருக்கும் இந்த புரியாத சக்தியை எண்ணிக் கொண்டிருந்தவன் விழிகளில் தன் அன்னை மேகலாவின் உருவம் வந்து போனது. 


தந்தை வியாபாரத்தில் தோல்வி கண்டு கடன்பட்ட காலத்தில் அன்னை இப்படி கை கொடுத்திருப்பாரா? இருக்கலாம். ஆனால் அதனை தந்தை அவருக்கு கூறி இருந்தால் மட்டுமே அது சாத்தியம். தன்னிடம் கூறாத தந்தை தாயிடம் கூறி இருப்பாரா? அப்படி என்றால் தற்கொலை முடிவு அவருடையது மட்டும் தானா?


அவர் மட்டும் இறக்காமல் தாயையும் சேர்த்து விபத்தில் சிக்க வைத்திருப்பாரா? சடசடவென பொழியும் மழை போல கேள்விகள் அவன் மனதுக்குள் விழுந்து எழுந்து கொண்டிருந்தது. அதற்கான பதில்கள்???


ரவி அதனை அறிந்து கொள்ள விழைவானா? 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels