சாரல் 57 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 57
அன்று புகழின்
கடைக்கான உள் அலங்கார வேலைகள் முடிவுக்கு வந்திருந்தது.
இரவு வீட்டுக்கு
திரும்பிய எழிலும் ரவியும் சற்றே சோர்வுடன் காணப்பட்டனர்.
"ஏங்க
உங்க சேனல் வீடியோ இன்னிக்கு போடணும்ல ரெடி பண்ணியாச்சா?" என்று கேட்டபடி அன்றைய
இரவுக்கு பழ சால்ட் செய்ய பழங்களை நறுக்கியபடி வினவினாள் எழில்.
சோர்வாய் கையை
உயர்த்தி சோம்பல் முறித்த ரவீந்தர்,
"இல்ல
இசை, புகழ் கடையோட வேலை முடியணும். அதான் இப்போ முதல் பிரியாரிட்டி. அப்ப தான் நாம
நம்ம பிளானுக்கு வர முடியும்." என்று கூறி அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்தான்.
"அவன்
வேலை நமக்கு முக்கியம் தான் ஆனா நம்ம வேலையும் அதே அளவுக்கு இல்ல, அதை விட முக்கியம்
சன்ஷைன். இந்தாங்க, இந்த சாலட் சாப்பிட்டுட்டே லேப்டாப் ஓபன் பண்ணி எடிட்டிங் வேலையை
ஆரம்பிங்க. நான் போய் பால் எடுத்துட்டு வர்றேன்." என்று அவனை எழுப்பி அவன் கையில்
பழக்கலவையை திணித்து விட்டு எதிரில் இருந்த கவுண்ட்டர் டாபில் அடுப்பை பற்ற வைத்து
பாலைக் காய்ச்சலானாள்.
அவளை வியப்பாக
பார்த்தபடி பழங்களை உட்கொண்ட ரவிக்கு அவள் அருகாமை புதிய தெம்பை அளித்தது.
தன் சோபாவின்
பின் புற ஸ்டோரேஜில் இருந்து லேப்டாப்பை எடுத்தவன் இடது கையில் ப்ரூட் போர்க் கொண்டு
பழத்தை உண்ட படி எடிட்டிங் வேலையில் மும்முரமானான்.
பாலை அவன் அருகில்
அவள் வைத்ததைக் கூட கவனிக்காமல் வேலையில் ஆழ்ந்திருக்க அவன் தோளில் தட்டி அதனை கொடுத்துவிட்டு,
"நீங்க
வேலையை முடிங்க. நான் அப்பாவை பார்த்துட்டு வர்றேன்." என்று வெளியே சென்றாள்.
அவர்கள் வீட்டில்
நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி விசித்திரமாகத் தோன்றியது. சரோஜா இருக்கும் இடத்தில்
ஒன்று அவர் யாரையாவது திட்டி சண்டை போட்டுக் கொண்டிருப்பார் அல்லது அவர் வாழ்வை எண்ணி
புலம்பிக் கொண்டிருப்பார்.
அவர் குரல்
எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் இன்று வீட்டில் நிலவும் அமைதி எழிலுக்கு அச்சத்தைக்
கொடுத்தது.
"அப்பா...
அம்மா..." என்று அழைத்தபடி வேகமாக அங்கும் இங்கும் செல்லலானாள்.
பின் வாயிலில்
சரோஜா எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார். ஶ்ரீதரன் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.
வேகமாக தாயின்
அருகில் வந்து அமர்ந்தாள் எழில்.
"அம்மா
என்னம்மா இங்க உட்கார்ந்து இருக்க? சாப்டியா?" என்று அவரது கையைப் பற்ற,
"கையை
எடு டி. நீ தான் நாங்க யாரும் வேண்டாம்னு அவன் கூப்பிட்டதும் தலையை ஆட்டிகிட்டு கல்யாணம்
பண்ணிட்டு போனியே! அவன் வேற என்னை இளக்காரமா பேசும்போது வேடிக்கை பார்த்தல்ல. இப்போ
என்ன அக்கறையா வந்து விசாரிக்கற?" என்று கோபமாக வினவினார்.
"அம்மா
இன்னும் எத்தனை நாளைக்கு இதையே பேசுவ மா?" என்று எழில் சலுத்துக் கொள்ள,
"பேசுவேன்டி.
மறுபடி மறுபடி பேசுவேன். என் மனசு ஆறுற வரைக்கும் பேசுவேன். ஆனா அது ஆறாது. ஆறவே ஆறாது."
என்று சேலைத் தலைப்பை எடுத்து வாயில் பொத்திக் கொண்டு அழுதார்
"மா என்ன
ஆச்சுன்னு சொன்னா தானே நான் ஏதாவது செய்ய முடியும்?" என்று அவள் மீண்டும் பொறுமையாக
வினவினாள்.
"என்ன
ஆகணும்? உங்க அப்பா இன்னிக்கு ராத்திரி ஷிப்டுக்கு போயிட்டார் அவ்வளவு தான்."
என்று கூற எழிலுக்கு எதுவும் விளங்கவில்லை.
"இல்லையே
அப்பா காலைல தானே வேலைக்கு போனாரு?" என்று சந்தேகமாக கேட்க,
"ஆமா டி
நான் பொய் சொல்றேன் பாரு. அந்த ஆளுக்கு அன்னிக்குல இருந்து இன்னிக்கு வரை என்னை பிடிக்கல.
சகிச்சு தான் வாழ்ந்துட்டு இருக்காரு. உனக்காக தான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தாரோ
என்னவோ? நீயும் கல்யாணம் பண்ணி போகவும், அவரும் அப்படியே போயிட்டாரு போல" என்று
ஏதேதோ பேச எழிலுக்கு கோபம் உச்சம் தொட்டது.
"இங்க
பாரு மா. அப்பா ஒன்னும் நீ சொல்ற மாதிரி இல்ல. வேலைக்கு மாத்தி விடுற வார்டு பாய் வந்திருக்க
மாட்டாரு. அதான் அப்பாவே வேலையை தொடர்ந்து செய்யுறாரோ என்னவோ? நான் கல்யாணம் பண்ணினேன்
பண்ணினேன்னு வாய் ஓயாம சொல்றியே, இதை நடக்க வச்சது உங்க அருமை பிள்ளைன்னு மட்டும் மறந்து
போச்சா? அவன் அந்த பொண்ணோட போகலன்னா நான் ஏன் அவரை கல்யாணம் பண்ணுற சூழல் வரப்போகுது?"
என்று கோபமாக அவரை வறுத்து எடுத்தாள்.
"அவனைப்
பத்தி நீ பேசாத. இன்னிக்கு வரைக்கும் கடன் கட்ட ஒத்தை ரூபாய் நீ கொடுத்து இருக்கியா?
ஆனா என் புள்ள, கல்யாணம் ஆனாலும் இதோ சம்பாத்தியம் வரப் போகுதுன்னு நேரா கடன் கொடுத்தவன
பார்த்து இனிமே மாசா மாசம் அவனே பணம் தர்றதா சொல்லி இருக்கான். அவன் பிள்ளையா இல்ல
நீ பிள்ளையா? நீ சுயநலவாதி டி. காசுள்ள புருஷன் கிடைச்சதும், இந்த வீட்டு நிலமையை மறந்துட்டு
அவன் கூட சந்தோஷமா வாழப் போனவ தான நீ?" என்று கோபத்தில் சரோஜா வாய்க்கு வந்ததை
பேசிவிட்டார்.
அமைதியாக அவரிடம்
இருந்து எழுந்த எழில் பதில் பேசாமல் வாசலை நோக்கி நடக்க,
"பேச முடியலல்ல.
இவ்வளவு நேரம் அந்த பேச்சு பேசினியே இப்போ எங்க போச்சு அதெல்லாம்?" என்று சரோஜா
நக்கலாக வினவ,
அவரை வெறுமையாக
பார்த்த எழில், "அவன் கடனை கட்டுறான்னா அது நீ அவனுக்காக வாங்கின கடன். அவன் தான்
கட்டணும். நான் ஏன் உனக்காக கடன் கட்டணும்? நீ எனக்கு என்ன செலவு செஞ்ச? இப்படி நானும்
நிறைய பேச முடியும் மா. ஆனா இதையெல்லாம் நான் உன்கிட்ட பேச மாட்டேன். ஏன்னா… எங்கப்பா
இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லி தான் என்னை வளர்த்தார். அப்பறம் இப்ப எப்படி
சொல்லிக் காட்டினேன்னு உனக்கு கேள்வி வரலாம். என்ன பண்றது? நானும் சரோஜாவோட பொண்ணு
தானே! உங்க புத்தி கொஞ்சமாவது எனக்கும் இருக்கும்ல?" என்று ஏளனமாக கூறிவிட்டு
தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
அவள் மனம் சொல்ல
முடியாத வேதனையில் உழன்றது. புகழ் இந்த அளவுக்கு மாறி பொறுப்பை எடுத்துக் கொண்டது அவளுக்கு
மகிழ்ச்சி அளித்தாலும் தாயின் பேச்சும் செயலும் அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
கதவைத் திறந்து
அவள் உள்ளே நுழைய "வீடியோ போட்டுட்டேன் இசை" என்று பின்னால் இருந்து அணைத்து
அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான் ரவி.
கண்களில் வழிந்த
கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரிப்பது போல முகத்தை எழில் மாற்றிக்கொள்ள, எதிரில் இருந்த
கண்ணாடியில் இதனை கவனித்த ரவி,
"ஏய் என்ன
ஆச்சு?" என்று அவளை தன் மார்போடு சேர்த்துக் கொண்டு வினவினான்.
எழில் முயன்று
அழுகையை அடக்கி நின்றிருந்தவள் அவனது அன்பில் கரைந்து நடந்தவைகளை அழுகையோடு கூறினாள்.
அதனைக் கேட்ட
ரவி, "நான் ஒன்னு நினைச்சு செஞ்சேன். அது உனக்கு இப்படி வந்து விடியும்ன்னு நான்
யோசிக்க கூட இல்ல இசை." என்று அவளை தன்னோடு சேர்த்து அறைக்கு அழைத்துச் சென்றான்
"நீங்க
என்ன செஞ்சீங்க?" என்று புரியாமல் வினவிய எழிலிடம்,
"நான்
தான் அந்த ராமசாமியை நேத்து பார்த்து இனிமே பணத்தை நான் தர்றேன் எங்க அத்தை கிட்ட கேட்காதீங்க.
அவங்க கிட்ட புகழ் தர்றதா சொல்லிடுங்கன்னு சொன்னேன். நான் ராகினி வாழ்க்கை நல்லா இருக்கணும்,
அத்தையும் சிரமம் இல்லாம இருக்கணும்னு யோசிச்சு இப்படி செஞ்சேன். ஆனா உங்க அம்மா உன்னை
இப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல இசை." என்று அவளை தன்னோடு சேர்த்துக்
கொள்ள,
தன் கணவன் தன்
குடும்பத்தின் மீதும், அவன் தங்கை மீதும் கொண்டிருக்கும் அன்பைக் கண்டு மனம் நிறைந்தவளாக
அவன் நெஞ்சத்தை தன் மஞ்சம் ஆக்கினாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக