சாரல் 56 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 56
ரகுராம் வீட்டில்
மாப்பிள்ளை மரியாதை அபிரிமிதமாக கிடைக்க, புகழ் சற்று திக்குமுக்காடித் தான் போனான்.
முதலில் விருப்பம்
இல்லாமல் கிளம்பி வந்த ராகினி, பெரியம்மாவின் அன்பிலும் பெரியப்பாவின் பாசத்திலும்
வியந்து இத்தனை ஆண்டுகள் இதனை அனுபவிக்காமல் போனோமே! என்று மெல்லிய வருத்தம் கொண்டாள்.
ரகுராம் அவர்
வேலை செய்த பொள்ளாச்சியிலேயே இடம் வாங்கி வீடு கட்டி குடியேறி இருந்தார். பணி நிறைவுக்குப்
பின் அவருக்கு அந்த வீடும், அவரது பென்ஷனும் போதுமானதாக இருக்க, ரவியுடன் சேர்ந்து
செய்த முதலீடுகளும் அவருக்கு நிறையவே பொருள் ஈட்டிக் கொடுத்தது.
சற்றே ஒதுக்குப்புறமான
பகுதியில் அமைந்திருந்த வேந்தன் நகரில் அவர்கள் வீடு நடுவில் இடம் பிடித்திருந்தது.
இயற்கையும்
பசுமையும் புகழுக்கு பழகிய ஒன்று என்பதால் அவன் பெரியவர்கள் அவனை கவனித்துக் கொள்ளும்
விதத்தில் கூச்சம் கொண்டு தன்னை சாதாரணமாக நடத்தும் படி கேட்டுக் கொண்டிருந்தான்.
"அப்படி
இல்ல மாப்பிள்ளை, வீட்டுக்கு வந்த மருமகன் மனம் கோணாம நடந்தா மக வாழ்க்கை அமோகமா இருக்கும்."
என்று அவனுக்குக் காபியை கொடுத்தபடி கூறினார் வைதீஸ்வரி.
"அத்தை
எனக்கு சங்கடமா இருக்கு." என்று அவன் கூச்சம் கொள்ள,
"புகழ்,
மாடில நின்னு பார்த்தா பக்கத்துல நிறைய தோட்டம் எல்லாம் தெரியுது. அழகா இருக்கு."
என்று அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள் ராகினி.
அவளது செய்கை
கண்டு வைதீஸ்வரி சிரித்தபடி அடுப்படிக்குச் செல்ல,
"ராணி
இப்படி எல்லாருக்கும் முன்னாடி மேல இடிச்சுக்கிட்டு உட்கார கூடாது. தப்பா நினைப்பாங்க."
என்று தள்ளி அமர்ந்தான்.
"இது நல்லா
இருக்கே, அன்னைக்கு சும்மா உன் பக்கத்துல உட்கார்ந்து சென்னை போனதுக்கு என்னை உனக்கு
கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. இப்போ நான் உன் பொண்டாட்டி தானே, இப்போவும் பக்கத்துல
உட்காரக் கூடாதா? என்னங்க டா உங்க நியாயம்?" என்று சலிப்பாகக் கேட்டாள் ராகினி.
"ராகினி
குளிச்சு தயாரா இரும்மா. இன்னிக்கு பக்கத்துல உள்ள அம்மன் கோவில்ல பூச்சொரிதல். எல்லாரும்
போயிட்டு வருவோம்" என்று வைதீஸ்வரி கூறிவிட்டு மீண்டும் உள்ளே மறைந்தார்.
"இந்த
பெரியம்மா ஏன் பாதி பேச்சுல இப்படி வெட்கப்பட்டு உள்ள ஓடுறாங்க? ஆமா என்ன சொன்னாங்க
பூச்சொரிதலா? அப்படின்னா என்ன?" என்று சலிப்பாக ராகினி வினவ,
"ஏன் ராணி
எல்லா விஷயத்துக்கும் உனக்கு சலிப்பு வருது? கோவில் திருவிழா காலத்துல நடக்குற
முக்கியமான விஷேசம் தான் அது. பூவால அலங்காரம் பண்ணி பார்க்கவே அழகா இருக்கும்."
என்று மனைவிக்கு அதில் ஆர்வத்தை புகுத்த நினைத்தான் புகழ்.
ஏனெனில் ஊருக்கு
கிளம்பும் போது எழில் அவனை தனியாக அழைத்து முடிந்தவரையில் ராகினிக்கு சாதாரண வீட்டு
நிகழ்வுகள், சமூக வரையறைகள், சிற்சில நாசுக்கு, நாகரிகங்கள் கற்றுக் கொடுத்து அழைத்து
வரும்படி கூறி இருந்தாள். ஆயிரம் தான் அவளது பேச்சுக்கு ராகினி மரியாதை கொடுத்தாலும்
புகழ் தான் ராகினி வாழ்வின் ஆதரமானவன். அவனது இன்ப துன்பங்களை அவனுடன் இணைந்து அவளும்
ஏற்று வாழவும், அவனது கஷ்ட நஷ்டங்களை புரிந்து நடக்கவும் புகழ் மீது ராகினிக்கு பிடிப்பையும்
தாண்டிய பிணைப்பு இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
புகழுக்கும்
ராகினியிடம் அன்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையாகவே கூறி
இருந்தாள் எழில்.
"அக்கா
இப்போ தான் கடைக்கு இடம் பார்த்து இருக்கோம். கடைக்கு சரக்கு ஆர்டர் பண்ணியாச்சு. வேலை
எல்லாம் நிறைய இருக்கும் போது இந்த மறுவீடு தேவையா?" என்று வினவிய தம்பியிடம்,
"கடைக்கு
வேண்டியதை பார்த்து செய்ய நானும் அவரும் இருக்கோம். நாங்க பிடிச்சு தான் கல்யாணம் பண்ணினோம்.
எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கு. எங்களுக்குள்ள சண்டைக்கான சாத்தியக்கூறு இல்ல டா.
ஆனா உனக்கும் ராகினிக்கும் அப்படி சொல்ல முடியாதுல்ல. ரெண்டு நாள் மாமா வீட்ல இருந்துட்டு
தனியா எங்காவது போய் மனசு விட்டு பேசுங்க. என்ன? கடை அது இதுன்னு உன் தலையை ரொம்ப உடைக்க
ட்ரை பண்ணாத. வெளியூர் போகணும்னு அடம் பிடிச்ச என் தம்பி எங்க? இப்போ போன்னு சொன்னாலும்
யோசிக்கிற நீ எங்க? நம்ப முடியல டா." என்று அறிவுரையுடன் கிண்டலும் சேர்த்தே செய்தாள்
எழில்.
அவர்கள் எண்ணியது
போல ரகுராம் வீட்டில் இருவரும் பெரியவர்களிடம் வாயாடுவதும், அவர்களது கவனிப்பில்
சற்று நாணுவதுமாக இருந்தனர்.
கோவிலுக்குப்
புடவையில் கிளம்பச் சொன்ன பெரியம்மா மேல் ராகினிக்கு கோபம் தான். இழுத்துப் பிடித்து
புடவையுடன் போராடி தெருவில் நடப்பதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று இருந்தது.
ஆனால் அவர்களுக்கு
இணையாக நடந்து வந்த அந்த தெரு பெண்களுக்கு புடவை அத்தனை கடினமானதாக இல்லை என்பதை அவர்களின்
நளினமான நடையும், பக்கத்தில் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியாக உரையாடி வருவதிலும் கண்டு
வியந்து போனாள்.
"எனக்கு
மட்டும் தான் சேரி கட்ட இவ்வளவு கஷ்டமா இருக்கா?" என்று புகழ் காதில் அவள் முணுமுணுக்க,
"நீ புடவையைப்
பத்தியே யோசிக்காம வேடிக்கை பார்த்து நடக்க ஆரம்பி. நீயும் அப்படி தான் நடப்ப"
என்று அவளுக்கு ஆதரவாக பேசி அவளது கையைப் பற்றிக்கொண்டான்.
இத்தனை நேரம்
இடுப்பு மடிப்பில் ஒரு கையும், கொசுவத்தில் ஒரு கையும் வைத்து சங்கடத்துடன் நடந்து
வந்தவள் கைகோர்த்து அவன் காட்டிய காட்சிகளை ரசித்து நடக்கத் துவங்கினாள்.
ராகினியின்
செய்கைகளில் மெல்ல மெல்ல மாற்றம் வந்து கொண்டிருந்தது.
ஆனால் இங்கே
சரோஜா கோபத்தில் உச்சத்தில் இருந்தார்.
இரண்டு ஷிப்ட்
வேலை அவருக்கு தீராத உடல் வலியைக் கொடுத்திருக்க, தன்னை நல்லபடியாக வைத்து வாழாத கணவன்
மேலும், இப்படி மாட்டிவிட்டு மகிழ்ச்சியாக கணவனுடன் வாழும் மகள் மேலும், துணையாக இருப்பான்
என்று நம்பிய பாவத்திற்கு கடனாளியாக்கி விட்டு மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு போன
மகன் மீதும் கோபம் எல்லை இல்லாமல் மிகுந்து வந்தது.
அதிலும் காலை
அவர் எழும் முன் கணவர் எழுந்து வீட்டின் சில வேலைகளை முடித்து வைத்து விட்டு இட்லியும்
சட்னியும் செய்து வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பி இருந்தது அவரை வெகுவாக கோபத்தில் ஆழ்த்தியது.
காரணம் இல்லாத
கோபம். போன வாரமே கொடுத்திருக்க வேண்டிய தவணையை கேட்டு ராமசாமி இன்று வருவான் என்ற
கவலையும் சேர்ந்து கொள்ள, இட்லியை சாப்பிடாமல் டப்பாவில் அடைத்துக் கொண்டு வேலைக்குக்
கிளம்பி விட்டார்.
அவர் பஸ் ஏறி
கடைக்கு செல்லும் முன்பே வாயிலில் ராமசாமி காத்திருப்பதைக் கண்டு அவருக்கு வியர்க்க
ஆரம்பித்தது.
அனைவர் முன்னும்
தன்னை அசிங்கமாகக் கேட்பானே என்ற எண்ணமே அவமானத்தில் அவரைக் குறுக வைத்தது.
ஆனால் இதே போல
தான் அவர் பல தருணங்களில் பலரிடம் நடந்து கொண்டுள்ளார் என்பது அவருக்கு நினைவுக்கு
வராதது தான் மனித மனதின் ஆச்சரியம்!
தனக்கு வராதவரை
அதனைப் பற்றிய எண்ணமே இருக்காது. வலியின் தன்மையை உணராது. தான் என்ற அகங்காரம் நிரம்பப்
பெற்றிருக்கும் மனித மனதுக்கு அவ்வப்போது பலமாக விழும் அடிகள் தான் வாழ்க்கையையும்
அதில் வலிகளின் தன்மையையும் உணர்த்திடும்.
சரோஜா இன்னுமே
உணராமல் தான் அந்த வலிகளுடன் உழன்று கொண்டிருக்கிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக