சாரல் 55 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 


சாரல் 55

 

ஶ்ரீதரன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். மகனும் மருமகளும் மறுவீடு சென்று ஒருநாள் கழிந்த நிலையில் சரோஜா அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை.

 

அதோடு அவர் வேலை நேரத்தை நீட்டிப்பு செய்து வீடு வந்ததே இரவு ஒன்பது மணிக்கு தான். வீட்டில் தனிமையில் அமர்ந்திருந்த ஶ்ரீதரன் உள்ளம் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தும் அவளை அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் தான் தன் மகளுக்கு எதுவும் உரிமையாக மணம் முடித்த மகளின் தகப்பனாக செய்முறைகள் செய்ய இயலவில்லையே என்று மன சோர்வு அடைந்திருந்தார்.

 

தாமதமாக வீட்டிற்கு வந்த சரோஜா அவரை கண்டுகொள்ளாமல் பின்னால் சென்று முகம் அலம்பி விட்டு வந்து, "எழிலு காபி கொண்டா" என்று அதிகாரமாக கேட்க,

 

ஶ்ரீதரன் அமைதியாக நிலைக்காலில் அமர்ந்து மனைவியின் செய்கையைப் பார்த்திருந்தார்.

 

பெருமூச்சு ஒன்றை விட்டு சேலைத் தலைப்பால் முகம் கழுத்து என்று துடைத்து நிமிர்ந்த சரோஜாவுக்கு தாமதமாகவே எழில் வீட்டில் இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

 

உச்சுக் கொட்டி எழுந்து கொண்டவர், அடுப்படியில் நுழைய, அது ஏதோ யுத்தபூமி போல காட்சியளித்தது.

 

பாலுக்கு ஒரு பாத்திரத்தை கண்டுபிடித்து எடுக்கவே சரோஜாவுக்கு பத்து நிமிடம் பிடிக்க,

 

"எனக்கும் சேர்த்து எடுத்துட்டு வா, சாயங்காலத்துல இருந்து நானும் எதுவும் குடிக்கல." என்று அமைதியாகக் கூறினார்.

 

கையில் கிடைத்த கிண்ணத்தை வாசல் நோக்கி விட்டெரிந்த சரோஜா,

 

"நானே ரெண்டு ஷிப்ட் வேலை பார்த்து ஓஞ்சு போயி வந்திருக்கேன், நேரேமே வந்த மனுஷன் ஒன்னு சாப்பிட ஏதாவது செஞ்சு வச்சிருக்கணும். இல்ல, கடையில போய் டீ காபி குடிச்சு எனக்கும் வாங்கிட்டு வந்திருக்கணும். எதுவும் செய்யாம ஜம்பமா உட்கார்ந்து இருந்துட்டு காபி வேணுமாம்ல?" என்று கோபத்தில் கத்தினார்.

 

ஶ்ரீதரன் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வாசலில் இறங்கி விட்டார். அவருக்கு மனம் வெறுத்துப் போனது. இது வாழ்க்கையா அல்லது சினிமாவா ஒரு பாடலில் ஏழை பணக்காரனாக மாற?

 

அவர் பியூசி முடித்தபோது அந்த ஜில்லாவில் வெளியூர் சென்று படிப்பை முடித்த முதல் ஆள் அவர் தான். மேலே படிக்க வசதி இல்லாத குடும்பம் என்பதாலும் குடும்பபாரம் சுமக்க வேண்டும் என்பதாலும் கிடைத்த வேலைக்குப் போனார்.

 

மிகவும் சிரமப்பட்டு அரசு வேலை அவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் சுகாதார ஊழியராக தான் வேலை கிடைத்தது. அவரது உழைப்பையும் நேர்மையையும் கண்ட அரசு மருத்துவர் அவரது பரிந்துறையின் பேரில் கம்பவுண்டராக பதவி உயர்வு பெற்றுக் கொடுத்தார்.

 

அன்று முதல் இன்று வரை வரும் வருமானத்தில் மகிழ்ச்சியாகப் பணியாற்றி வருகிறார் ஶ்ரீதரன்.

 

அவருக்கு உடை என்பது காக்கியும் வெள்ளையும் தான். அது போக வருடம் ஒரு வேட்டி எடுத்தால் அதுவே அவருக்கு அதிகம்.

 

ஆனால் பெண்களுக்கு அப்படி அல்லவே, அறிந்தவர் தெரிந்தவர் வீட்டு விசேஷங்களுக்கு கட்டிய நாலு புடவையை மாற்றி மாற்றி கட்டினால் நாலு பேர் கேலி பேசுவார்கள், அது மட்டுமல்லாது விதம் விதமாக உடுத்திப் பார்க்க யாருக்கு தான் ஆசையிராது?

 

சரோஜாவுக்கு இயல்பான அந்த ஆசைகள் கூட நிறைவேறவில்லை என்ற கோபம். நன்றாக வாழ்ந்த குடும்பம் என்ற பெயரில் இருந்த எரிச்சல், நாலு பேரிடம் லஞ்சம் பெற்று தனக்கு அணிமணிகள் வாங்கித் தராத கணவன் மேல் கட்டுக்கடங்காத கோபம். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பான கோபம் எல்லை மீறி பணக்கார குடும்பமாக கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்ற வெறி சரோஜாவை ஆட்டிப் படைத்தது.

 

பிள்ளைகள் தான் பெற்ற செல்வங்கள் என்பதை மறந்து யாரால் தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்ற கணக்குப் போட ஆரம்பித்தது மனது.

 

மகனை நம்பியவருக்கு கிடைத்த பரிசு என்னவோ கடன் தான். அந்த கடனை அடைத்து விட்டால் அதன் பின் வரும் பணம் எல்லாமே தனக்கு சுக போகத்தைக் கொடுக்கும் என்று எண்ணியே இரண்டு ஷிப்ட் வேலைக்கு ஒத்துக் கொண்டார் சரோஜா.

 

ஆனால் முதல் நாளே வீடிருக்கும் நிலையும், கணவன் கேட்ட காபியும் அவரை காளி அவதாரம் எடுக்க வைத்து விட்டது.

 

வெளியே சென்ற ஶ்ரீதரன் கால் போன போக்கில் நடக்க, மாலையே புகழின் கடைக்கு தேவையான உள் அலங்கார வேலைகளை செய்ய ஆள் வந்ததால் அங்கே சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர் ரவியும் எழிலும்.

 

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்வதும், ஸ்பீட் பிரேக்கர் இல்லாத இடத்தில் கூட ரவி பிரேக் போட்டு அவளை பொய் கோபம் மூட்டுவதும், அவள் முகத்தை தூக்கி வைத்தபடி அவனது இடுப்பை கிள்ளுவதும் என்று தங்கள் உலகில் சஞ்சரித்தபடி சாலையில் செல்ல, மகளின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை எண்ணி தன் மனதில் இருந்த வருத்தங்களைத் துடைத்து எறிந்தார்.

 

அவரைக் கடந்து சென்ற பின் தான் பக்கக் கண்ணாடியில் அவரைக் கண்ட ரவி,

 

"இசை, மாமா இந்த நேரத்துல எங்க நடந்து போறாரு?" என்று கேட்டபடி வண்டியை அவர் போகும் திசைக்குத் திருப்பினான்.

 

அவருக்குப் பக்கவாட்டில் நிறுத்தி, "என்ன மாமா இங்க?" என்று அன்பாய் அவன் வினவ,

 

"இல்ல வீட்லயும் யாரும் இல்ல, நீங்களும் இல்ல அதான் சும்மா நடந்து வந்தேன்." என்று சமாளித்தார்.

 

அவரது வாடிய முகமே ஏதோ நடந்துள்ளத்தை எழிலுக்கு உரைக்க,

 

"சாப்பிடுற நேரத்துல என்ன நடை? வாங்க பா சாப்பாடு தயாரா வச்சிட்டு தான் கடை வேலையா போனோம். சாபிட்டுட்டே பேசுவோம் வாங்க." என்று இறங்கி அவருடன் நிற்க,

 

ரவி அவளை ஏக்கமாக ஒரு நொடி நோக்கினான். பக்கத்தில் மாமனார் இருப்பதை உணர்ந்து பார்வையை மாற்றியவன்,

 

"நான் போய் கதவை திறக்கறேன், ரெண்டு பேரும் சீக்கிரம் வாங்க, இல்லனா கார் எடுத்துட்டு வந்திடுவேன்." என்று செல்லமாக மிரட்டி விட்டு வண்டியை வீடு நோக்கி செலுத்தினான்.

 

அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததும், "என்னப்பா ஆச்சு? அம்மா கூட சண்டையா?" என்று நேரடியாக கேட்டுவிட்டாள் எழில்.

 

அமைதியாக நடந்தவர், "ஆம்பிளையா இருந்தாலும் கொஞ்சமாவது வீட்டு வேலை தெரிஞ்சு வச்சி இருந்திருக்கணும் செல்லம். அவ இன்னிக்கு டபிள் ஷிப்ட் போயிட்டு வந்தா, நான் சாயங்காலத்துல இருந்து சும்மா தான் திண்ணையில உட்கார்ந்து இருந்தேன். ஏதாவது வீட்டுக்கு உதவியா செஞ்சு இருக்கலாம்." என்று உள்ளே போன குரலில் கூறினார்.

 

"அப்பா நீங்களும் தான் நாள் முழுக்க ஆஸ்பத்திரியில அங்கயும் இங்கேயும் ஓடிட்டு வர்றீங்க. சின்ன சின்னதா ஏதாவது வீட்டுக்கு உதவலாம் ஆனா அதை தாண்டி அம்மாவும் உங்ககிட்ட எதிர்பார்க்க முடியாது பா." என்று ஆதரவாக அவர் தோளில் கரம் பதித்தாள்.

 

"அவளும் தானே மா அந்த கடையில் நாள் முழுக்க நிக்கிறா. அவளுக்கு அவ நினைக்கிற அளவுக்கு பணம் காசு சம்பாதிச்சுக் கொடுக்க முடியலனாலும் இனிமே வீட்டுக்கு உதவியா ஏதாவது செய்து தரணும் மா." என்று விரக்தியாகக் கூறினார்.

 

"அப்பா எல்லாரும் அடுத்தவங்க ஆசைப்படுறது போல வாழ முடியாது. உள்ளவன், வச்சு வசதியா வாழறான். இல்லாதவன் உள்ளதை வச்சு வாழலாம். அம்மா ஆசைப்பட்டது தப்பில்லை ஆனா அதை உங்க மேல திணிக்க நினைக்கிறது தப்பு. வேலைக்கு போற உங்களால எப்படி லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்? வேலை போக மீது நேரத்துல ஏதாவது செய்து சம்பாதிக்கலாம் ஆனா அதுக்கும் மன நிம்மதி வேணும் பா." என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் தெருவுக்குள் திரும்பினாள் எழில்.

 

"நீ சொல்ற மாதிரி ஏதாவது செய்யணும்." என்று அவரும் யோசனையாக சொல்ல,

 

"நான் அவர்கிட்ட கேட்கிறேன் பா. அவர் நிறைய ஐடியா வச்சு இருப்பாரு."என்று பெருமையாக கணவனைப் பற்றி பேசிய மகளின் முகத்தில் இருந்த சிவப்பைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார் ஶ்ரீதரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels