சாரல் 51 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 51
ரவி எழில் அருகில்
அமர்ந்து தன் கல்லூரி கதைகள் பேசி சிரிக்க, எழிலும் தன் அனுபவங்களையும் அங்கே நிகழ்ந்த
நகைச்சுவைகளையும் பகிர்ந்து கொண்டாள்.
பல இடங்களில்
இருவரின் ரசனை, எண்ணம், செயல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க, ஆச்சரியமாக அதனை எண்ணிக்கொண்டு
ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்த வண்ணம் பேச்சை வளர்த்தனர்.
நடுநிசி தாண்டியும்
ரவி பேசிக்கொண்டிருக்க எழிலின் கண்கள் சொருகத் துவங்கியது.
"இசை,
போதும் அப்பறமா எல்லாத்தையும் பேசுவோம். வந்து தூங்கு" என்று கட்டிலில் தலையணையை
அவளுக்கு வாகாக போட்டுக் கொடுத்தான்.
அவளோ அவனது
செயலில் வியந்து, "உங்களுக்கு தூக்கம் வரலையா?" என்று கேட்க,
"ரொம்ப
நாள் கழிச்சு நிம்மதியா ஃபீல் பண்ணுறேன் இசை. அதை சொல்ல என்கிட்ட சரியான வார்த்தைகள்
கூட இல்ல. கண்டிப்பா கொஞ்ச நேரம் தூங்கினாலும் ஆழ்ந்து தூங்குவேன்னு நம்பிக்கை இருக்கு.
நீ படு. எனக்கு பறக்கற ஃபீல். தூக்கம் இப்ப வரல" என்று அவளை படுக்க வைத்து கெட்டியான
போர்வையை போர்த்தி விட்டான்.
அவள் அவனை அருகே
அமர்ந்து கொள்ளச் சொல்லி அவனது கால்களுக்கு போர்வையை சேர்த்து மூடிவிட்டு,
"ரொம்ப
குளிருது சன்ஷைன். அப்பறம் பாதம் மறத்து போயிடும்" என்று அக்கறையாகக் கூறி அவனது
இடையோடு கட்டிக் கொண்டு உறங்க முற்பட்டாள்.
அவளது தலையைக்
கோதியவாறு சிவந்திருந்த அவளது கன்னங்களை ரசித்துக் கொண்டிருந்தான் ரவி.
அவனுக்கு ஒருவர்
அருகாமையில் உறங்குவது இதுவே முதல்முறை.
ஆம்! பிள்ளைப்
பருவத்தில் வேலைக்காரர்கள் கதை சொல்லி உறங்கச் செய்து சென்று விடுவர், அதன் பின்னான
விடுதி வாசம் எல்லாமே அவனுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் படியான பிரத்யேக அறை.
பெரியப்பா வீட்டிற்கு சென்றாலும் இரவில் அவனுக்கு தனி அறை. ஆக அவன் வாழ்வில் அவனை தழுவிக்
கொண்டு உறங்கும் முதல் உயிர் அவனது இசை தான்.
இதயத்தை யாரோ
மயில்பீலி கொண்டு வருடியது போல சுகமான உணர்வு மேலோங்க தலையை பின்னால் சாய்த்து கண்களை
மூடியவனின் விழிகளில் வெம்மையாய் கண்ணீர் வழிந்தோடியது.
அது சரியாக
எழிலின் நெற்றியில் பட்டுத் தெறிக்க, சட்டென்று கண் திறந்தவள் கண்ணீரில் இருக்கும்
ரவியை காணச் சகியாமல் அள்ளி அணைத்துக் கொண்டாள்.
அதில் தாயின்
அன்பிருப்பதை உணர்ந்து கொண்ட ரவிக்கு கண்ணீர் பெருகியதே அன்றி வற்றவில்லை.
"என்னப்பா?"
என்று உடைந்த குரலில் எழில் வினவ,
"அம்மா
கிட்ட கூட இந்த ஆறுதலான அணைப்பை உணர்ந்தது இல்ல இசை, நீ என் மனைவி தான். ஆனா என் அம்மாவாவும்
இருப்பியா?" என்று கேட்க,
தாய்மையோடு
அணைத்துக் கொண்டவள் மனதில் தோன்றியது ஒன்றே. இனி இவன் எதற்கும் கலங்கக் கூடாது. எந்தத்
துயர் வந்தாலும் அவனுக்கு முன்னே கேடயமாக நின்று அவள் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்
என்று தான்.
அவள் அவன் தலையைக்
கோதி, தோளில் அன்பாய் தட்டிக் கொடுக்க, சற்று நேரத்தில் சீரான மூச்சுடன் உறக்கத்தைத்
தழுவினான் ரவி. அவன் முகத்தில் தெரிந்த நிறைவும் நிம்மதியும் எழிலை அவன் பால் மீண்டும்
மீண்டும் காதலில் விழ வைத்தது.
என்றோ சற்று
வயது மூத்தவருக்கு மனைவியாக இருக்க வேண்டியவள், கடவுள் கடைசி நேரத்தில் அதை தடுத்தது,
இப்படி ஒரு உத்தமனை மணக்கத் தான் என்று எண்ணியவள் மனதில் சொல்லத் தெரியாத உணர்வு.
திருமணம் முடிந்த
இரவில் ஆண்கள் பலரும் மனைவியை தாசியாக எண்ணி அவளது வலி, பயம் பற்றிய சிந்தனை இல்லாமல்
தன் ஆசையையும் தாபத்தையும் தீர்த்துக் கொள்ள முனையும் உலகில் அவளை எவ்விதத்திலும் சங்கடத்தில்
ஆழ்த்தாமல், அவனது முத்தங்கள் கூட அவளது உணர்வுகளை சீண்டி பாதிக்காமல் கதைகள் பல பேசி
அவளை உறங்கச் செய்து, பாதுகாப்பாய் அணைக்கும் மனம் கொண்ட அவளது மணவாளன், இனி எந்த நிலையிலும்
வருந்த அவள் அனுமதிக்கப் போவதில்லை என்று முடிவு செய்து கொண்டாள்.
அவளையும் அறியாமல்
அவன் மார்பில் சரிந்து உறங்கி விட, அவர்களின் முதல் இரவு, அவர்களின் உறவை இறுக்கி மனதை
கட்டிப் போட்ட அழியா இரவாக அமைந்தது.
புகழும் ராகினியும்
இவர்கள் போல அறிந்து தெரிந்து காதல் வளர்க்க நினைக்கவில்லை.
முதல் முறையாக
ஒரு ஆணுடன் ஒரே அறையில் தங்குவது ராகினிக்கு வெட்கத்தையும் மெல்லிய பயத்தையும் கொடுத்திருக்க,
புகழ் அவனது அருகில் இருந்த மெத்தையில் கைவைத்து அவளை அமரும்படி அழைத்துக் கொண்டான்.
அவளிடம் பேச
எண்ணிய அவனுக்கு வார்த்தைகள் தான் கிடைக்கவில்லை.
"அது,
அது" என்று அவன் இழுக்க,
"ம்ம்…
என்ன? ஹ்ம்ம்" என்று இவளும் வார்த்தைகள் இல்லாமல் திண்டாட,
அவளது தோளில்
அவன் கரம் பதித்ததும் ராகினியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. அவள் அவன்
புறம் திரும்ப, கண்ணோடு கண் கலக்க, வார்த்தைகளுக்கு இடமில்லாமல் போய் இதழ்கள் ஒன்றோடொன்று
பேசிக்கொள்ள அதில் ஆரம்பித்த தேடல் கூடலில் முடிந்து இருவருக்கும் திருமண பந்தத்தில்
அடுத்த நிலைக்கு அவர்களை வரவேற்றுச் சென்றது.
இருவரும் ஒருவரை
மற்றவர் காண நாணி திரும்பிப் படுத்துக் கொள்ள,
"தப்பா
நினைக்கலை தானே?" என்று வினவினான் புகழ்.
"இதுல
தப்பென்ன?" என்று இவளும் அவனுக்கு சார்பாக பேச, அவளை அள்ளி தன்னோடு அணைத்துக்
கொண்டு உறங்க ஆரம்பித்தான் புகழ்.
ராகினி அவனது
தோளில் தாடையை பதித்து அவனது வதனத்தை கண்களால் அளந்து கொண்டிருந்தாள்.
அவளது தகுதிக்கு
இவன் சற்றும் பொருத்தம் இல்லை என்ற அவளது முதல்நாள் வாதம் ஏனோ இப்போது அவளுக்கே அபத்தமாகத்
தோன்றியது.
அழுத்தமான முகம்,
அகன்ற நெற்றி, அலைபாயும் கண்கள், அவ்வப்போது அவன் கைவிரல் கொண்டு மீசையை வேகமாக தடவி
மூச்சை இழுக்கும் நடத்தையை இயல்பில் கொண்டிருப்பது இந்த இரண்டு நாட்களில் அவளுக்கு
புரிந்தது.
தன்னைப் போலவே
அவனும் பிடிவாத குணமென்றாலும் தன்னைப் போல அளவில் அத்தனை தூரம் நின்று சாதிக்கும் பிடிவாதம்
அல்ல என்றும் உணர்ந்திருந்தாள்.
இன்று அவன்
சரோஜாவை எட்ட நிறுத்திய விதத்தில் அவன் மேல் காதலையும் தாண்டி மெல்லிய இழையாய் மரியாதை
வேறு எட்டிப் பார்த்தது.
ஆனாலும் இவனை
இனிமேல் சரோஜா இருக்கும் திசைக்கே செல்ல அனுமதிக்க கூடாது என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
அது அழுத்தமான பிடிவாதமாக அவள் மனதில் குடிகொண்டது.
ஏதேதோ சிந்தனைகளுக்கு இடையில் அவளும் உறக்கத்தைத் தழுவ இவர்களின் முதல் இரவு இனிய உறவோடு தாம்பத்தியத்தை அவர்கள் இடையில் வேர் விடச் செய்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக