சாரல் 50 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 50



ராகினி புகழை நோக்கி பேசலாமா? என்று கண்ணால் கேட்க, 


‘பேசு’ என்று தலையசைத்தான் புகழ்.


"என்ன மாமியாரே! போஸ்டிங் கிடச்சதும் பொங்கிட்டிங்க போல? யூடியூப் முழுக்க உங்க பேச்சு தான்", என்று நக்கல் தொனியில் கேட்டாள் ராகினி.


சரோஜா மகனை முறைத்தவாறு, "என்ன புகழ் இதெல்லாம்?" என்று கேட்க,


அவனோ கைபேசியை எடுத்து யூடியூபை காட்டி "என்னம்மா இதெல்லாம்?" என்று அவரைப்போலவே வினவினான்.


"உங்க விஷயமெல்லாம் ஊரறிஞ்ச ரகசியம். யார் சொன்னாங்களோ?" என்று சம்மந்தம் இல்லாதவர் போல பேசிய அன்னையை எரிச்சலாக நோக்கினான் புகழ்.


ராகினி ஏதோ பேச வாயெடுக்க வேண்டாம் என்று அழுத்தமாக அவள் கையை பற்றியவன் அங்கிருந்து விலகி நடந்தான்.


சரோஜாவுக்கு தெரியவில்லை அவன் அங்கிருந்து விலகவில்லை, மனதளவில் அன்னையை விட்டு விலகிச் செல்கிறான் என்று.


ஊரார் புகழ ரவி எழில் தம்பதி இன்முகமாக அவர்களை கவனித்தவண்ணம் இருந்தனர்.


"உங்களுக்கும் இன்னிக்கு தானே கல்யாணம் ஆச்சு, போய் மேடையில நில்லுங்க" என்று ஒருவர் பரிவாகக் கூற,


"ரெண்டு வீட்லயும் மூத்த பிள்ளைங்க நாங்க, அடுத்த பிள்ளைகளுக்கும் இன்னிக்கு கல்யாணம் ஆகி இருக்கு. நாங்க நின்னு எல்லாத்தையும் கவனிக்கணும் ஐயா" என்று எழில் பதிலுரைக்க அவளை பெருமையாக நோக்கினான் ரவீந்தர்.


புகழும் ராகினியும் காதல் திருமணம் புரிந்தவர்கள் போலவே ஓட்டிக்கொண்டு இருக்க ரவிக்கு தன் முடிவு சரியானது என்ற நம்பிக்கை பிறந்தது.


புகழும் பிடிவாதக்காரன், ராகினி அதன் மொத்த உருவம். எப்படியும் இருவருக்குள்ளும் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடத்தில் அவனுக்கு பெருமகிழ்ச்சி.


மாலை வரவேற்பு எளிதாக நிகழ்த்தி ஊரார் அனைவரையும் உணவு உண்ண வைத்து அனுப்பினர்.


ஶ்ரீதரனும் ரகுராமும் வயது மறந்து ஓடியாடி வேலை செய்ய, சரோஜா அமைதியே உருவாக ஓரத்தில் நின்றிருந்தார்.


"ஏன் புகழ் உங்க அம்மா ரொம்ப சைலண்ட்டா இருக்காங்க? பெருசா பிரச்சன வருமோ? நான் என் மம்மியை ரொம்ப மிஸ் பண்ணுறேன்." என்று ராகினி அவன் தோளில் சாய்ந்து கொள்ள,


"வேண்டாம் டா. வருத்தப்படாத. என் அக்கா இருக்கா. உனக்கு அண்ணன் மனைவியா வேற ஆகிட்டா. இனிமே உன்னை நல்லா கவனிச்சுப்பா." என்று சமாதானம் செய்தான்


‘நான் இருக்கிறேன்’ என்று அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் அவனும் இன்று வரை சார்ந்தே வாழ்ந்து பழகி விட்டான். இந்த குணம் இவனுக்கு ஏதேனும் பின்னடைவை கொடுக்குமா என்று அவன் எண்ணவில்லை.


ரவி இரவின் ஆரம்பத்தில் சோர்வாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனுக்கு சூடான ஏலக்காய் டீயை கொண்டு வந்து எழில் நீட்ட,


"ஹே இசை, நீயே எனக்காக போட்டியா? கல்யாண வீட்டுல உனக்கு ஏன் டா சிரமம்?" என்று அன்பாய் வினவி, அதனை பெற்றுக்கொண்டான்.


"டீ போடுறது என்ன மலையை பிரட்டுற பெரிய வேலையா? குடிங்க" என்று அருகே அமர்ந்தாள்.


"இன்னிக்கு தான் உரிமையா பக்கத்துல உட்கார்ந்து இருக்க இசை, ஐ ஆம் சோ ஹேப்பி" என்று மலர்ந்து அவன் சிரிக்க,


"நாம பார்த்து பத்து நாள் கூட இல்லங்க. இன்னிக்கு தானே கல்யாணம் ஆகி இருக்கு. உரிமை வந்ததும் உட்கார்ந்தேன்." என்று தலை சாய்த்து கூறியவளை அன்புடன் பார்த்தவன்,


"எனக்கு தான் மனசுல உன்னோட ஜென்ம ஜெனமமா பந்தம் இருக்குற உணர்வு" என்று கூறி தேநீரை நிதானமாகப் பருகினான்.


வைதீஸ்வரி அவர்களுக்கு அருகில் வந்து நிற்க, வேகமாக எழுந்த எழில், "சொல்லுங்க பெரியத்தை" என்றதும்,


"சாப்டிங்களா பா? எல்லா யூடியூப் பிரபலங்களும் கிளம்பியச்சு தானே? சாப்பிட்டு வந்தா உங்களை ரூமுக்கு அனுப்பிட்டு நானும் அவரும் ஹோட்டலுக்கு கிளம்பிடுவோம்" என்று கூறினார்.


"பெரியம்மா நீங்க ஏன் வெளில தங்கணும்" என்று ரவி அவரிடம் வர,


"சும்மா இரு டா. ராகினியை தயார் பண்ணி உட்கார வச்சிருக்கேன். நீங்க சாப்பிட்டதும், அனுப்பிட்டுன் கிளம்ப நினைத்தேன். அவரும் ரெண்டு நாள் அலைச்சல்ல சோர்வா இருக்காரு" என்று கணவன் மேல் கரிசனையாக கூறவும்,


"அதானே பார்த்தேன், இதெல்லாம் எங்களுக்காக இல்ல, பெரியப்பா ரெஸ்ட் எடுக்கவா?" என்று வைதீஸ்வரியை ரவி கேலி செய்ய,


"உன் பொண்டாட்டி உனக்காக பரிஞ்சுகிட்டு வருவால்ல அப்ப இருக்கு உனக்கு." என்று செல்லமாக அவன் தலையில் தட்டிவிட்டு எழிலை அழைத்துச் சென்றார்.


"அவளே இப்போ தான் பக்கத்துல வந்து உட்கார்ந்தா, காலைல தாலி கட்டிட்டு, வீடியோ எடுக்கும் போது அவளை பக்கத்துல பார்த்தது. அப்பறம் வேலை பொறுப்புன்னு நிக்காம ஓடிட்டு இருந்தா, ம்ம்ஹ்ம்ம் எனக்கு காதல் செய்ய வராது போல" என்று தனியே பேசிக்கொண்டிருந்தான்.


"என்ன டா மகனே கல்யாணம் நடந்ததும் தனியா பேச ஆரம்பிச்சுட்ட?" என்று ரகுராம் ரவியின் அருகில் அமர,


"எல்லாம் உங்க வைஃப் பண்ணின வேலை தான், இசையை கூட்டிட்டு போயிட்டாங்க." என்ற சிறுவனாக குற்றம் சாட்டினான்.


ரகு சிரித்துவிட்டு அவனையும் தயாராகச் சொல்ல, விளையாட்டுத் தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு அவருடன் சென்றான்.


சரோஜா வீட்டின் அறையை விட்டு வெளியே வரவில்லை.


அவரை யாரும் தேடவும் இல்லை. ஶ்ரீதரன் மகனுக்கு சில அறிவுரைகள் சொல்லி அவர்களுக்கான கன்டெய்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்க அங்கே ஏற்கனவே ராகினி அமர்ந்திருந்தாள்.


இங்கு எழிலை வைதீஸ்வரி அவர்களின் அறைக்கு அனுப்ப அங்கே அவளின் வரவுக்காக ரவி காத்திருந்தான்.


உள்ளத்தில் எழுந்த உணர்வுகளுக்கு எழிலுக்கு பெயர் தெரியவில்லை. ஆனால் ரவியை நிமிர்ந்து பார்த்து விட முடியாத அளவுக்கு நாணம் குடிகொண்டு கன்னத்தில் செம்மையை பரப்பி இருந்தது.  


மெல்ல அவளை அருகே அழைத்தான்.


அவளுக்கு தன்னை நகர்த்தி அவனிடம் செல்ல அத்தனை சிரமமாக இருந்தது. கால்கள் பின்னிக் கொண்டது, கண்கள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. கையில் இருந்த பால் செம்பின் விளிம்பை அத்தனை கெட்டியாக அவள் பற்றி இருக்க, அதனை இயல்பாக வாங்கிய ரவியின் செயல், அவளது உடும்புப் பிடியால் வெடுக்கென்று பறிக்கப்பட்டது போல வேகமாக தளும்பி கீழே கொஞ்சமாக சிந்தியது.


"அச்சோ" என்றவள் குனிந்து பார்க்க, "பாலுக்கு கிடைக்குற உன் முகத்தோட தரிசனம் எனக்கு கிடையாதா இசை?" என்று ரவி அவளை நாடி தொட்டு நிமிர்த்த,


கண்களில் காதல், எதிர்பார்ப்பு அனைத்தையும் மீறி மெல்லிய சோகம் ஒன்று இழையோட கண்ணீர் கரையை மறைக்க எழில் முயன்றாள்.


"என்னாச்சு இசை", என்று பதறிவிட்டான்.


"எங்கம்மா செய்த வேலைக்கு உங்களுக்கு கோபம் வராம இருக்கு பாருங்க, அதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு" என்று கண்ணீரை மறைக்க வழி இல்லாமல் கன்னத்தில் கோலம் போட அனுமதித்தாள்.


"இசை நான் ஒன்னு சொன்னா செய்வியா?" என்று சம்மந்தம் இல்லாமல் ரவி கேட்க, சரியென்று தலையசைத்தாள். 


"இங்க வா" என்று அருகே இழுத்து கட்டிலில் அமர்த்தியவன், கன்னத்தை சுட்டு விரலால் சுட்டிக் காட்ட, என்னவென்று புரியாமல் எழில் விழிக்க,


"ஏதோ கோபம் வராம இருப்பது ஆச்சரியம்னு சொன்னியே, இப்போ நீ இந்த இடத்தில ஒரு முத்தத்தை பரிசா கொடு பார்ப்போம், அது தான் ஆச்சரியம்" என்று அவளது தயக்க சுபாவம் புரிந்து ரவி கேலி செய்ய,


அவள் தான் அப்படியல்ல என்று நொடியில் அவன் கன்னத்தில் இதழ் ஒற்றி எடுத்து தன் காதலை நிரூபித்துவிட்டு அமைதியாக தலை கவிழ்த்துகொள்ள, ரவி தான் அவனின் செய்கையில் ஸ்தம்பித்தான்.


அவளது இதழ்களின் மென்மை அவனை காதல் தீயில் தள்ளி விட, மெல்ல மெல்ல எழிலை தன்னருகே இழுத்து அவள் காதருகில் சென்று "உனக்கு சம்மதமா?" என்று மென்மையாக வினவினான்.


அவளின் ஒப்புதல் மெல்லிய தலையசைப்பில் கிடைக்க, அன்பும் காதலும் ததும்ப ‘இசை இசை’ என்று பிதற்றியபடி அவளது முகமெங்கும் முத்தமிட்டான்.


இறுதியாக அவன் அவளது இதழில் இளைப்பார, எழில் செங்கொழுந்தாகி சிவந்து போனாள்.


அவளை விட்டு நகர்ந்து அமர்ந்த ரவி அவளது தோளைச் சுற்றி கைபோட்டுக் கொண்டு தன் யூடியூப் சேனலில் நடந்த காமெடி கதைகளை அவளுக்கு சொல்ல, கேட்டு வயிறு வலிக்க சிரித்தவள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பி இருந்தாள்.


"வாழ்க்கை எங்கேயும் போகாது. இனி இந்த பண்ணை தான் நம்ம வாழ்க்கை. எனக்கு நிறைய கனவு இருக்கு. அதுல முதல் கனவு என் மனைவியை திகட்ட திகட்ட காதல் செய்யணும்." என்று மென்மையாக அணைத்துக் கொண்டான்.


படித்த, பலராலும் புகழ்ந்து பேசக்கூடிய தகுதிகள் நிறைந்த தன் கணவன், அவளிடம் காட்டும் அன்பும் காதலும் தனக்கே சொந்தமானது என்று கர்வம் பொங்க அவனை ஏறிட்டவள், எக்கி அவனின் கன்னத்தில் இதழ் பதிக்க, ஏதோ விருது பெற்றவன் போல அத்தனை பற்களையும் காட்டி புன்னகைத்தான்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels