சாரல் 49 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 49
சரோஜாவின் வேலையால் யூடியூப் முழுவதும் இரவியின் திருமணம் வீடியோவுக்கு பதிலாக வதந்தி வீடியோ தான் பரவிக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் டிரெண்டிங் வீடியோக்களாக அவை மாற அவனுக்கு தோழர்களாக இருக்கும் யூடியூப் சேனல்கள் ரவிக்கு தகவல் கொடுத்தனர்.
திருமணம் முடிந்த மகிழ்வில் இருந்த ரவிக்கு இந்த செய்தி உவப்பானதாக இல்லையென்றாலும் அதே நேரம் மனதை பாதிக்கும் அளவுக்கு உளைச்சலானதாகவும் இல்லை.
அவன் எழிலின் காதருகில் சென்று நிலையை அடுத்தவர் அறியாவண்ணம் நடந்தவைகளை விவரித்தான். அதிலும் ஒரு சேனலில் சொன்னது பெண்ணின் அன்னை என்றே வெளியிட்டிருக்க, எழில் தீப்பிழம்பானாள்.
அவள் சரோஜாவை முறைப்பதைக் கண்டு ரவி அவளிடம்,
"அவங்களை முறைச்சு என்ன ஆகப் போகுது இசை. இது புகழ் செய்த செயலுக்கான எதிரொலி. நாம தான் இதை சமயோஜிதமா ஹேண்டில் பண்ணனும்." என்று சொன்னவன் அவளையும் புகழ், ராகினி இருவரையும் அழைத்துக் கொண்டு தனியே சென்றான்.
சரோஜா அவன் செயல்களை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருக்க, அவரை நோக்கி மந்தகாச புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு கடைசியாக அவன் நடக்க சரோஜாவின் உள்ளம் தடதடத்தது. இதுவரை அவன் நினைத்தது போல தான் எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது. அவர் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை.
பணம், பகட்டுக்கு ஆசைப்பட்ட காலம் போய், என் குடும்பம் என்னை மதிக்காமல் போக இவன் காரணமாகி விட்ட கடுப்பு மேலோங்கி, அவனது புகழும் பணமும் அவர் கண்களுக்குப் புலப்படாமல் போனது.
தனியே வந்த நால்வரில் இளையவர்கள் இருவரும் காரணம் புரியாமல் அமைதியாக இருக்க, எழில் முகத்தில் கோபம் கனலாக இருந்தது.
அவள் கைகளை இறுக்கமாக பற்றியவன், "புகழ் தப்பா நினைக்கலன்னா ஒரு அஞ்சு நிமிஷம் என் சேனல்ல லைவ் வீடியோ போயிட்டு அப்பறம் மத்ததை பார்ப்போமா?' என்று அன்பாக வினவினான் ரவீந்தர்.
"அண்ணா… என்ன நீ கல்யாண நேரத்துல மேடையில இல்லாம உன் சேனல்ல வீடியோ போட கூப்பிடுற? அவ்வளவு அவசரமான விஷயமா இது?" என்று சிடுசிடுத்தாள் ராகினி.
ரவி அமைதியாக இருக்க, எழில் அழுத்தமான குரலில் "அவசரம் மட்டும் இல்ல அவசியமான விஷயமும் கூட ராகினி. உங்க அண்ணன் கேட்டது போல சேனல் வீடியோல நீங்க நீங்களா சந்தோஷமா சிரிச்சு பேசினா போதும்." என்று கூற,
"ஏன் அண்ணி உன் முகம் இப்படி இருக்கு? உனக்கு பிடிக்கலன்னா அண்ணா இதெல்லாம் செய்ய மாட்டான். நீ ஏன் அதுக்காக எங்களை நிற்க சொல்ற?" என்று உரிமையாக வினவ, எழில் லேசான கோபத்துடன் ராகினியை ஏறிட்டாள்.
புகழுக்கு ஏதுவோ சரியில்லை என்று புரிய,
"ராணிமா! அக்காவும் மாமாவும் கண்டிப்பா காரணம் இல்லாம சொல்ல மாட்டாங்க. நாம ஜஸ்ட் சிரிச்சு பேசி எப்பவும் போல இருப்போமே!" என்று அவளை சமாதானம் செய்தாலும் அவன் கண்கள் சகோதரியும் மாமனும் என்ன காரணம் கொண்டு இதை செய்கிறார்கள் என்று கூர்மையாக கணிக்கத் துவங்கியது.
தன் கேமராவை ஆன் செய்த ரவி, "ஹலோ வியுவர்ஸ். எல்லாரும் என் கல்யாண வீடியோவை லைவா பார்த்து இருப்பீங்களே! உங்களுக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்ட கோபம் உங்கள்ல பலருக்கும் இருக்கும். ஆனா பாருங்க என் தேவதையைப் பார்த்ததும் உடனே கல்யாணம் பண்ணி கூடவே வச்சுக்க தோணுச்சு. அதன் சீக்கிரம் மேரேஜ் பண்ணிட்டேன். "என்று சொல்லி இடைவெளி விட்டவன்,
"பலருக்கும் நான் இப்படி சொன்னதும் நீங்க பார்த்த வீடியோ எல்லாம் மனசுக்குள் ஓடி இருக்குமே! பிடிச்சதும் மிரட்டி கல்யாணம் பண்ணிட்டான் போலன்னு... ம்ம்?" என்று ரவி சிரிக்க அவனுக்கு எதிரே நின்று அவன் அழைக்கும் போது உள்ளே வர இருந்த இளையவர்கள் முகம் இறுகியது.
"சரி அதெல்லாம் இப்போ எதுக்கு? நான் லைவ் வந்தது என் அன்பு மனைவியை உங்களுக்கு அறிமுகம் செய்ய தான். எழிலிசை இங்க வா மா" என்று அன்புடன் அவன் அழைக்க,
புன்னகை முகமாக பிரேமில் வந்தாள் எழில். அவள் கண்களில் காதல் பொங்க ரவியை பார்த்தபடி,
"கல்யாணம்ன்னு சொன்னப்ப கூட நான் நம்பலங்க. ஆனா என் கழுத்துல இப்போ இருக்கே இந்த மஞ்சள் கயிறு, இதை பார்க்கும் போது இவர் மனசு எவ்வளவு அன்பானதுன்னு புரியுது. இவர் பக்கத்துல நிக்கவே தகுதி இல்லன்னு நினைச்ச எனக்கு, அவர் வாழ்கையில் இடம் கொடுத்து இருக்கார்ன்னா, அது எனக்கு கிடைச்ச பாக்கியம். " என்று லேசாக கண்கலங்க இருந்தவள்,
யூடியூப் உலகம் பற்றி அறிந்திருந்ததால் முகத்தில் புன்னகையை மட்டுமே காட்டினாள். இல்லாவிட்டால் அவளது கண்ணீரை மட்டும் தம்நெயிலாக்கி 'கண்ணீர் விட்டார் ரவியின் மனைவி, நடந்தது என்ன?' என்று மீண்டும் சர்ச்சையை கிளப்புவார்கள் என்று அவள் தான் நன்கறிவாளே!
அவளை தோளோடு அணைத்தவன், “என் மேல உள்ள அன்புல அவங்க மிகப்படுத்தி சொல்றாங்க ஃப்ரெண்ட்ஸ். இனிமே சேனல் வீடியோல அவங்களையும் பார்க்க தானே போறீங்க! மெதுவா என் ஏஞ்சல் பத்தி தெரிஞ்சுக்கோங்க. இப்போ என் தங்கையும் என் மச்சானும் இங்க இருக்காங்க. அவங்களை வாழ்த்துங்க ஃப்ரெண்ட்ஸ்." என்று கேமராவை அவர்கள் பக்கம் திருப்ப, ராகினியும் புகழும் மலர்ந்த முகத்தோடு தங்கள் திருமண கதையைப் பேசி இறுதியில் இரு ஜோடிகளும் கையசைத்து வீடியோவுக்கு விடை கொடுத்தனர்.
அதை கண்டபின் யாரும் இவர்கள் திருமணம் மிரட்டலால் நடந்தது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். எழில் கண்ணில் அத்தனை மரியாதை. ரவியின் விழிகளில் எழில் மேல் கொள்ளையாய் காதல்.
புகழ் ராகினியை ‘ராணி’ என்று அழைத்தது, அவள் அவனிடம் சரிக்கு சரியாக வாயாடியது என்று வீடியோ அத்தனை இயல்பாக இருக்க, வதந்திகள் எல்லாம் வயிற்றெரிச்சல் பேர்வழிகளின் வாந்திகள் என்று பார்வையாளர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
மீண்டும் நால்வரும் முன்னே நடக்க, ரவி இளையவர்களுக்கு நன்றி கூற," இது எங்க அம்மா செஞ்ச வேலையால வந்த பிரச்சனையா மாமா?" என்று இறுக்கமான குரலில் வினவினான் புகழ்.
"விடு புகழ். அவங்க இன்னும் புரிஞ்சுக்கல. புரியும் போது வருத்தப்படுவாங்க." என்று ரவி நகர முயல,
"அவங்க மாற மாட்டாங்க. இனிமே நாம தான் மாறணும். " என்று எழில் கோபமாகக் கூற அவள் கரத்தைப் பற்றிய ரவி,
"நம்ம நிம்மதியை கெடுக்கிறது தான் அவங்க ஆசைன்னா நாம ஏன் டென்ஷனாகி அவங்களை ஜெயிக்க வைக்கணும் இசை? என்ன வேணாலும் செய்யட்டும். நாம சந்தோஷமா இருப்போம். இன்னிக்கு நம்ம வாழ்க்கையில முக்கியமான நாள். இதை இந்த மாதிரி சில்லறை பிரச்சனைக்காக கெடுத்துக்க எனக்கு விருப்பம் இல்ல." என்று கூறிய ரவி அவள் தளிர் விரலில் முத்தமிட, புகழும் ராகினியும் சிரித்தபடி விலகிச் சென்றனர்.
இந்த முத்தக் காட்சியை ஓலி இல்லாமல் ஒளி வடியில் தொலைவிலிருந்து கண்ட சரோஜாவுக்கு உள்ளம் பற்றி எரிந்தது. தன் மகள் மேல் ஆத்திரம் பிறந்தது.
ஆனால் அதற்கு வேட்டு வைக்க அவர் பின்னால் வந்து நின்றனர் புகழும் ராகினியும்.

கருத்துகள்
கருத்துரையிடுக