சாரல் 48 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 48
மலைகளுக்கு
உரித்தான மந்தமான காலைப் பொழுது. திருமண பரபரப்பு என்பது மனிதர்களுக்கு தானே! சூரியனும்,
பனிக் காற்றும், மூடு பனியும் திருமணத்திற்காக விடுமுறை விட்டுக் கொள்ளுமா என்ன!
அந்த இன்பமான
காலை வேளையில் அரக்கு நிறப் புடவையில் எழிலும் ராகினியும் தயாராக இருந்தனர். மணமேடையில்
இரு பந்தல்கள் அமைக்கப்பட்டு அதில் வெள்ளை வேட்டி சட்டையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை
திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர் ரவியும் புகழும்.
சரோஜா அகலக்கறை
பட்டுச் சேலை சரசரக்க, வாயிலில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
ஶ்ரீதரன் மகனும்
மருமகனும் பார்த்து வைத்திருந்த வேலைகளை அவர்கள் கூறியது போலவே அந்த நேரத்துக்கு ஏவி
சிறப்பாக முடித்துக் கொண்டிருந்தார்.
ரகுராம் வந்திருந்த
சொந்தங்களை உள்ளே அழைத்து அமர வைக்க, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முகம் மாறாமல்
பதில் தர சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் வைதீஸ்வரி.
முகூர்த்த நேரம்
நெருங்க, பெண்கள் இருவரையும் அழைத்து மஞ்சள் சேலை வைத்துக் கொடுத்து உடுத்தி வருமாறு
ஐயர் அனுப்பினார்.
மணமகன்களுக்கும்
மஞ்சள் வேட்டி சட்டை கொடுத்து அனுப்ப, சில நிமிடங்களில் மங்களகரமான மஞ்சள் நிறத்தில்
நால்வரும் வந்து ஜோடியாக நின்று சபையை வணங்கிக் கொண்டனர்.
ரவீந்தர் எழில்
தம்பதிக்கு முதலில் திருமண சடங்குகளை ஆரம்பிக்க தாய் தந்தைக்கு பாத பூஜை செய்ய ஐயர்
அழைப்பு விடுத்தார்.
ரகுராமும் வைதீஸ்வரியும்
வந்து ரவி அருகில் நிற்க, ஶ்ரீதரனும் சரோஜாவும் எழிலிடம் நின்றனர்.
தாம்பாளத்தில்
அவர்கள் காலை வைத்து துடைத்து பொட்டிட்டு வணங்கி அவர்கள் ஆசிகளைப் பெற்றனர் இருவரும்.
தொடர்ந்து சில
நிமிடங்களில் மங்கல வாத்தியங்கள் முழுங்க எழிலின் கழுத்தில் மஞ்சள் கயிறாலான பிணைக்கப்பட்ட
பொன் தாலியைப் பூட்டி ரவியின் வெளிச்சக் கதிர்கள் இனி எழிலிசை தான் என்று ஊருக்கு அறிவித்தான்.
அவள் நெற்றியில்
அவன் திலகமிட, உயிர் வரை சிலிர்த்தாள் எழில். அவளது சிலிர்த்த தன்மையை அருகிருந்து
உணர்ந்த ரவி மென்மையாக அவளை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான்.
தன் நெஞ்சில்
புரளும் மாங்கல்யம் சொல்லும் செய்தியான 'நீ இனி திருமதி ரவீந்தர்' என்ற உண்மையை நெஞ்சு
முட்டும் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் எழில்.
எழுந்து நின்று
சபையை தம்பதியாக அவர்கள் வணங்க, ரகுராம் ரவியின் முகத்தில் தெரியும் நிம்மதியையும்
மகிழ்வையும் கண்டு தானும் மகிழ்ந்தார்.
அடுத்த சில
நிமிடங்களில் புகழேந்தி ராகினி இருவருக்குமான திருமண சடங்குகள் ஆரம்பிக்க, ரவியும்
எழிலும் கைகோர்த்து தங்கள் மணமேடையில் இருந்து அதனைக் கண்டனர்.
பாதபூஜை செய்ய
பெற்றோர்களை அழைக்க, சரோஜாவின் கண்களில் வன்மம் மின்ன பந்தலுக்கு வந்து சேர்ந்தார்.
ஆனால் அவரோடு துணைவனாக வர வேண்டிய ஶ்ரீதரன் அங்கு இல்லாமல் போக, சில நொடிகளில் அங்கே
சலசலப்பு உண்டானது.
"அக்கா
கல்யாணம் பார்த்து அப்பா கொஞ்சம் கலங்கி எங்காவது இருக்கலாம். முகூர்த்த நேரத்துக்கு
வந்திடுவாரு." என்று புகழ் அனைவருக்கும் சமாதானம் கூற,
ஐயரோ,
"பாதபூஜை பண்ணனும் தம்பி" என்றார்.
"ராகினிக்கு
அவங்க பெரியம்மா பெரியப்பா வந்துட்டாங்க. எனக்கு என் அக்காவும் மாமாவும் வரட்டும்.
அப்பா கண்டிப்பா அட்சதை போட வந்திடுவார்." என்று அனைவருக்கும் பொதுவாக புகழ் சொல்வது
போல இருந்தாலும் அதில் இருந்த சூசகமான செய்தியை கண்களில் அலட்சியம் மின்ன சரோஜாவுக்குக்
கடத்தினான் புகழ்.
ரவியும் எழிலும்
எழுந்து வந்து நிற்க, இளையவர்கள் பாதபூஜை செய்து நல்லாசி பெற்றனர்.
ரவி புகழை அழுத்தமாகக்
கட்டி அணைத்தான். ராகினி சரோஜாவின் இளக்கார பார்வை மாறி இருப்பதைக் கண்டு மனம்
தெளிந்தவளாக அண்ணனையும் தன் கழுத்துக்கு மஞ்சள் கயிறுடன் நெருங்கும் புகழையும் கண்டு
உள்ளம் பூரித்தாள்.
அவளின் இன்ப
துன்பங்களில் துணை இருப்பேன் என்று வாக்கு கொடுத்து தன் மனைவியாக ஏற்றான் புகழேந்தி.
நால்வரும் தம்பதி
சமேதராக நின்று ஊராரிடமும் சொந்த பந்தங்களிடமும் நல்லாசி பெற்றனர்.
எழிலின் கண்கள்
ஶ்ரீதரன் தேட அவரோ மணமேடையில் அவளுக்கு அருகே நின்று அவளது பார்வைக் கண்டு சிரித்தபடி
வந்து அணைத்துக் கொண்டார்.
அவரின் விழிகள்
மகிழ்ச்சியான கண்ணீரை பொழிந்த வண்ணம் இருக்க ரவி தன் அருகே அழகுப் பெட்டகமாக நிற்கும்
மனைவியைக் கரம் கோர்த்து நின்று கண் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வந்தவர்கள்
வரிசையாக வந்து வாழ்த்தி பரிசு, பணம் என்று தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்க,
சக யூடியூப்
சேனல் நடத்தும் பல பிரபலங்களும் அங்கே கலந்து கொண்டிருந்தனர்.
இன்று யூடியூப்
வரலாற்றில் எங்கும் காணாத அளவுக்கு பல சேனல்களில் ரவி எழில் திருமணத்தை தான் நேரடி
ஒளிபரப்பாக ஒளிபரப்பி இருந்தனர்.
இந்த மகிழ்விலும்
கூட்டத்திலும் சரோஜாவை யாரும் கண்டுகொள்ளவில்லை.
தன்னை தன் மகன்
அழகாக ஒதுக்கி நிறுத்தி விட்டு தன் மனைவிக்காக ரவியின் பாதத்தை பூஜை செய்தது அவரை மேலும்
அவர்கள் மேல் வெறி கொள்ள வைத்தது.
தான் பெற்ற
பிள்ளைகள் என்பது மறைந்து போய் என்னை அவமானம் செய்தவர்கள் என்று அவர் மனதில் இருந்த
சாத்தான் உள்ளே பேயாய் ஆடிக் கொண்டிருந்தது.
திருமண பந்தலில்
இருக்கப் பிடிக்காமல் அவர்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சரோஜா.
வாயிலை தாண்டும்
நேரம் சிலர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பது அவர் காதில் தெளிவாக விழுந்தது.
"இவன்
ஏற்கனவே பல லட்சம் சப்ஸ்கிரைபர் வச்சு இருக்கான். இதுல டிராவல் வீடியோ மட்டும் இல்லாம,
இப்படி ஒரு இடத்தில உட்கார்ந்து விவசாயம், கன்டெய்னர் வீடு, டாப்சிலிப் இயற்கை காட்சின்னு
போஸ்ட் பண்ணினா இவன் தான் இனி வளருவான். நம்மளை போல உள்ளதையும் இல்லாததையும் கலந்து
கட்டி வீடியோ போடுற எல்லாரும் காணாம போக வேண்டியது தான்." என்று கூறிக் கொண்டிருக்க,
ரவியை பழி வாங்க
அழகான திட்டம் ஒன்றை நொடியில் போட்ட சரோஜா, தன் காதில் செல்போனை வைத்துக் கொண்டு அவர்களுக்கு
பின்னே சென்று நின்றார்.
"என்ன
டி பண்ண சொல்ற? அவன் நல்லவன்னு ஊரே சொல்லுது. ஆனா அவன் போலீஸை காட்டி மிரட்டி என் பையனை
பணிய வச்சு அவன் தங்கச்சியை என் பையன் தலைல கட்டினதும் இல்லாம, ஏற்கனவே கல்யாணம் நின்னு
மனவேதனைல இருந்த என் மகளையும் மிரட்டி கல்யாணம் பண்ணிட்டான்.
எங்க பையன்
எங்க உயிருக்கு பயந்து அவன் தங்கையை கட்டி இருக்கான். என் பொண்ணு தம்பி வாழ்க்கையை
காப்பாத்த தன் வாழ்க்கையை அடமானம் வச்சிட்டா. ஒரே நேரத்துல இவன் ஒருத்தனால என் ரெண்டு
பிள்ளைங்க வாழ்க்கையும் போச்சு." என்று கூறியவர்,
"என்ன
யாரு யாருன்னு கேட்டுட்டு இருக்க, எல்லாம் அந்த ரவீந்தர் பயலை தான் சொல்றேன்."
என்று சத்தமாக கூறிவிட்டு நகர,
தங்களுக்கு
லட்டு மாதிரி கண்டென்ட் கிடைத்ததும்,
'அப்பாவிப்
பெண்ணின் வாழ்வை பலி கேட்ட யூடியூபர்.'
'தன் தங்கை
வாழ்வை சீரமைக்க, அபலைப் பெண்ணை சீர்குலைத்த ரவி.'
'பயணம் போகிறேன்
என்று பலர் வாழ்க்கையை பணயம் வைக்கச் சொன்ன தொடரும் பயணங்கள் ரவி'
என்று கலர்
கலர் ரீல்களுடன், தம்நெயில்களுடன் களை கட்ட ஆரம்பித்தது யூடியூப் சேனல்கள்.
தன் திட்டம்
வெற்றி பெற்றதை பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் செல்போனில் இருந்த யூடியூப் பதிவுகளைக்
கண்டு வில்லத்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார் சரோஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக