சாரல் 47 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 47



திருமண சடங்குகள் பற்றி பெரியவர்கள் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தனர்.


ரவி எந்த விதத்திலும் திருமணத்தில் குறை வராதபடி பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளை செய்திருந்தான்.


புகழ் அவனுக்கு தூணாக துணை நின்றான். இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது.


வைதீஸ்வரி கேலியாக ரவியிடம் "நீ எழிலை லவ் பண்ணுறியா இல்ல புகழையா?" என்று கேட்டு ஆண்கள் இருவரையும் கேலி செய்தார். 


புகழும் ரவி தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அன்பையும் புரிந்து கொண்டு தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டிருந்தான்.


மறுநாள் காலை சடங்குகள் பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்க, கன்னத்தில் ஊரார் வைத்த சந்தனம் மணக்க எழிலும் ராகினியும் மகிழ்ச்சியாக சபையில் அமர்ந்திருந்தனர்.


சரோஜாவின் உள்ளம் ராகினியின் சிரிப்பைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் காந்தியது.


தன்னையே எதிர்த்து பேசும் தைரியம் இவளுக்கு வந்திருக்க கூடாது, இனி வரவும் கூடாது என்று மனதில் எண்ணிக் கொண்டவர் சரியான நேரத்திற்கு காத்திருந்தார்.


எழிலை விட்டு எதற்கோ ராகினி விலகி அமர, வேகமாக அவள் அருகில் வந்த சரோஜா,


"நாளைக்கு காலைல பாத பூஜை பண்ண, எழிலுக்கு அம்மா அப்பாவா நாங்க வந்து நிப்போம். நீ தான் என் பொண்ணுக்கு செஞ்சிட்டு வந்து உனக்கு கேட்க சொன்னல்ல, இப்போ உங்க அண்ணன் நான் செஞ்சத எப்படி உனக்கு செய்வான்? எங்கிருந்து உன் அப்பா அம்மாவை கூட்டிட்டு வருவான்?" என்று ராகினியின் மனதை கூறு போடும் கேள்வியைக் கேட்க,


அவளிடம் பேச அருகே வந்திருந்த புகழின் காதுகளை சரோஜாவின் வார்த்தைகள் நிறைத்தது.


தாயை ஒரு புழுவினும் கேடாய் பார்த்தவன், ராகினியின் கலங்கிய விழிகளைக் கண்டு, "ராணி, என்ன இதுக்கெல்லாம் அழுதுட்டு இருக்க? நீங்க வெறும் அம்மா அப்பா தான் எங்க அண்ணன் என் பெரியம்மா பெரியப்பாவை கூப்பிட்டு வந்து இருக்காரு, அவங்க பெரியவங்கன்னு தைரியமா சொல்லு மா" என்று அவளது கண்ணில் இருந்து வழிந்த நீரை துடைக்க, சுற்றம் மறந்து அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் ராகினி.


அவளின் அன்னை மீதான அன்பை தன் சகோதரி மூலம் அறிந்திருந்த புகழுக்கு தன் அன்னையின் வார்த்தைகள் அவளை எவ்வாறு பாத்தித்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது.


அவன் அவளை சமாதானம் செய்ய, "தள்ளி நில்லு புகழு, இன்னும் கல்யாணம் நடக்கல, அதுக்குள்ள சபை நடுல அவனை கட்டிக்கிட்டு நிக்கிற?" ராகினியை விலக்க நினைத்தார் சரோஜா.


புகழ் "அம்மா" என்று கர்ஜிக்க, அனைவரது பார்வையும் இப்பொழுது இங்கே இடம் மாறி இருந்தது.


தங்கையின் கண்ணீரைக் கண்டு ரவி பதறி வர, "கல்யாணம் நாளைக்கு நடக்குறது ஊருக்காக தான். அவ என் பொண்டாட்டி. அவளை ஏதாவது சொன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன். என்னவோ அவ கிட்ட பேசினல்ல, எதை நினைச்சு நீ பேசினியோ தெரியாது. ஆனா வாழ்க்கை முழுக்க அதுக்காக வருத்தப்படுவ. பட வைப்பேன்." என்று கூறிவிட்டு தங்களுக்காக ரவி வாங்கிக் கொடுத்த கன்டெய்னர் வீட்டை நோக்கி ராகினியை அழைத்துச் சென்றான் புகழ்.


எழில் தன் அன்னை அருகில் வந்து, "ஏன் இப்படி இருக்கீங்க? உங்களுக்கு தான் புகழை பிடிக்குமே, அவன் சந்தோஷமா இருக்கும் போது ஏன் அதை தடுக்க நினைக்கிறீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்?" என்று கோபத்துடன் வினவினாள்.


"ம்ம் உண்மை வேணும். ஒழுங்கா இருந்த உங்க மனசை எல்லாம் இவன் எதைக்காட்டி மயக்கினான்?" என்று சரோஜா ரவியை முறைக்க,


"அன்புக்கு மயங்காத மனுஷங்க இல்ல சரோஜா. நீ ஒரு ஆள் தான் விதிவிலக்கு போல." என்று பதில் தந்த ஶ்ரீதரனை அழைத்தான் புகழ்.


மகனின் நெடுநாளைக்குப் பின்னான அழைப்பில் நெகிழ்ந்தவர் அவனை நோக்கிச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது இருவேறு மனநிலையில் வந்தார்.


மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, வருத்தம் மறுபுறம் அழுத்த, மகளை வந்து ஆதரவாக அணைத்து நின்றார்.


அவர் கண்களில் தெரிந்த அலைப்புறுதலைக் கண்ட ரவி, "மாமா நான் இருக்கேன்." என்று தட்டிக் கொடுக்க அவருக்கு சொல்லத் தெரியாத மகிழ்ச்சி மனதில் பரவியது.


திருமணத்திற்கு முதல் நாள் இரவு என்பது திருமணத்தை எதிர் நோக்கும் தம்பதிக்கு பல கனவுகளையும் ஆசைகளையும் தூண்டி நிலையான உணர்வுக்குள் சிக்காமல் தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் விசித்திரம் பொருந்தியது.


ரகுராம் ரவியின் அருகில் அமர்ந்து அவனது கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ தன் மார்பில் சற்று நேரம் முன்பு சாய்ந்திருந்த மெல்லியலாளை எண்ணி இன்பக் கனவில் மிதந்தான்.


அவர் ஏதோ கேட்க, இவன் ஏதோ உளற, மகனின் நிலையறிந்து சிரித்துக் கொண்டு எழுந்து சென்றார்.


ராகினி தன் அன்னையின் நினைவில் வாடி அமர்ந்திருந்தவள் புகழ் தனக்காக அவனது அன்னையிடம் பேசிய விதம் கண்டு சமாதானமாக முயன்று கொண்டிருந்தாள்.


புகழின் அணைப்பில் இருந்த பாதுகாப்பு உணர்வை தன் அன்னையிடம் உணர்ந்திருந்த ராகினிக்கு இத்திருமணம் பற்றிய சிறு சிறு குழப்பங்கள் கூட மறைந்து மகிழ்ச்சி மனம் எங்கும் மணம் வீசியது.


எழில் தன் தந்தை மடியில் தலை வைத்து பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தாள். அவருக்கும் அவளுக்குமான பொழுதுகள் எல்லாம் எத்தனை மகிழ்வாய் இருந்தது என்று திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரின் மனதிலும் பாசமழை.


புகழ் மனதில் திருமணத்தை எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிக்க ரவி செய்யும் முயற்சிகள் அனைத்தையும் அறிந்தும், தான் இதை செய்யலாமா? என்ற கேள்வி மூளையை குடைந்தவண்ணம் இருந்தது.


ஆனால் இதை இப்பொழுது செய்யாமல் போனால் வாழ்நாள் முழுவதும் அன்னையின் குத்தல் பேச்சை ராகினி கேட்க வேண்டி இருக்கும். தன் அக்காவை அவர் பேசும்போதே தான் தடுத்து அவருக்கு புரிய வைத்திருக்க வேண்டும் என்று காலம் கடந்து யோசித்தான்.


அவனது முகம் காட்டும் பாவங்களைக் கண்டு சிரித்தபடி வந்த ரவி, "என்ன மாப்ள, விடிஞ்சா கல்யாணம், கனவுல டூயட் பாடுறத விட்டுட்டு ஏன் முகத்தை இவ்வளவு சீரியஸா வச்சிருக்க?"என்று கேட்டு சிரிக்க,


"மாமா நான் ஒன்னு சொல்லுவேன் நீங்க என் பேச்சைக் கேட்கணும்." என்று பீடிகை போட்டு அனைத்தையும் கூறி தன் முடிவையும் தெளிவாக உரைத்து விட்டு ரவியின் பதிலுக்காகக் காத்திருந்தான் புகழ்.


அவனை அணைத்த ரவி, "என் தங்கைக்காக நீ யோசிக்கிறது புரியுது. ஆனா இதுல உங்க வீட்டு மரியாதையும் அடங்கியிருக்கு. மாமாவை யோசிச்சியா?" என்று கண்டிக்கும் குரலில் ரவி பேச, 


"அவன் சொல்லிட்டான் தம்பி. எனக்கு சம்மதம். இதுல நான் வருத்தப்பட ஒன்னும் இல்ல. நீங்க தடுக்காம இருந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்" என்று கூறி இருவருக்கும் வாழ்த்தை தெரிவித்து அங்கிருந்து அகன்றார் ஶ்ரீதரன்.


மறுநாள் விடியல் பல மகிழ்ச்சிகளையும் சில அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு விடிந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels