சாரல் 46 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 46

 


ஓடைக் கரையில் நின்றிருந்த எழிலின் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு ரவி அவள் கன்னம் வருடினான்.

 

"நான் சொல்றேன்ல, இன்னும் ஏன் இசை உன் முகம் சோர்வா இருக்கு?" என்றதும் முதல் முறையாக அவன் தோளில் சாய்ந்து எழில்,

 

"என்னன்னு தெரியல. இப்போ தான் புகழ் கிட்ட நிறைய மாற்றத்தை பார்த்தேன். நம்மளை நம்பி ஒருத்தர் பொண்ணு கொடுக்குறாரு, வியாபாரத்துக்கு ஏற்பாடு பண்ணுறாரு, அவர் நம்பிக்கையை காப்பாத்தியாகணும்னு அவன் முகத்துல ஒரு தீவிரம் தெரியுது. என் தம்பி எப்படியும் முன்னேறி வந்திடுவான்னு நம்பிட்டு இருந்தேன். ஆனா இப்போ ராகினி அவன் வேண்டாம்னு முடிவு எடுத்தா அவனோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்? பயமா இருக்கு." என்று அவன் இடது கையை வளைத்து தன் கையை அதில் மாலையாக்கி முகத்தை தன் கரத்தின் மீது பதித்துக் கொண்டாள்.

 

அவளது உச்சியில் தன் கன்னத்தை பதித்த ரவீந்தர்,"எனக்கு என்னவோ ராகினி எந்த முடிவும் எடுக்காம அமைதியா இருப்பான்னு தோணல. போகற முடிவுல இருக்குறவ அதை உன்கிட்ட காட்டி இருக்க மாட்டா இசை. அவளுக்கு குழப்பம் அதிகமா இருக்கு. அதான் கேட்டிருப்பா. பார்ப்போம். நீ கவலைப்படாத மா" என்று அவள் தலையில் மெல்லிய அழுத்தத்தைக் கொடுத்தவன், லேசாக திரும்பி அவள் உச்சியில் முத்தம் பதிக்க,

 

எழில் நாணம் கொண்டு விலகி நின்றாள்.

 

"என்ன, ஏன் தள்ளிப் போற?" என்று குறும்புடன் ரவி அவளருகில் வர, 

 

"சன்ஷைன், உங்க ஆசையும் அன்பும் புரியுது. ஆனா… இன்னும் குழப்பம் தீரல." என்று இழுக்க,

 

"அவ குழம்பினா என்ன, தெளிஞ்சா என்ன? நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன். எனக்கு என் இசை மனைவியா வரப் போறான்னு…" என்று அவளை அருகே இழுத்து தோளோடு அணைத்து வீடு நோக்கி நடக்கலானான்.

 

எழில் முகத்தில் இருந்த கலக்கமெல்லாம் கரைந்தோடி ரவியின் இசையாக முகம் நெகிழ்ச்சியில் விகசித்தது.

 

இருவரது கரங்களும் இணைந்து ஒரு விதமான மோன நிலையில் வீடு நோக்கி திரும்பினர்.

 

அவர்கள் வருவதற்கும் புகழ் ராகினி கதவை திறந்து வெளியே வருவதற்கும் சரியாக இருக்க, என்ன நடக்கிறது என்று புரியாதவர்கள் அவர்களையே கூர்ந்து நோக்கினர்.

 

ராகினி எழிலைக் கண்டு, "என்ன அண்ணி ஒரே ரொமான்ஸ் தானா?" என்று சிரிக்க, எழில் கண்ணீரோடு அவளை தாவி அணைத்தாள்.

 

இத்தனை நாளும் ‘அக்கா’ என்றவள் தன் தம்பியை கணவனாக வரித்த காரணத்தால் தானே தன்னை ‘அண்ணி’ என்று விளிக்கிறாள் என்றுணர்ந்து எழில் பூரித்தாள்.

 

பெண்களின் பேச்சின் சூட்சமம் புரியாமல் நின்ற ஆண்கள் இருவர் முகமும் ராகினியின் கேள்வியின் விளைவால் நாணத்தை தத்தெடுத்து இருந்தது.

 

எழிலின் கண்ணீரும், ராகினி மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்த சமாதானமும் அதன் பின் அவர்கள் கருத்தில் பதிய, புகழுக்கு ராகினி அந்த குறுஞ்செய்தியை தன் அக்காவிடம் காட்டியதாக கூறிய நினைவு வந்தது.

 

"என்ன அண்ணி நான் அந்த பிரதீஷ் கூப்பிட்டதும் போயிடுவேன்னு பயந்துட்டியா?" என்று எழிலின் முகத்தை நிமிர்த்தி உரிமையாக வினவினாள் ராகினி.

 

"இல்ல டா அவன் படிச்சவன், பணக்காரன், அவனே வான்னு சொல்றான்... அதான்." என்று இழுத்தாள் மூத்தவள்.

 

"அதான் அண்ணி எனக்கும் இடிச்சுது. அவனுக்கு என் மேல அன்பு இருந்திருந்தா, நீ எங்க இருக்க, நான் வந்து கூட்டிட்டு போறேன்னு தானே சொல்லி இருக்கணும்? நீ கிளம்பி வான்னு என்னை ஏவுறான். அப்ப ஏதோ சரி இல்ல தானே?" என்று ராகினி வினவ,

 

"சரியோ சரி இல்லையோ, என் தம்பி முகம் பிரகாசமா இருக்கு. நீயும் முகமெல்லாம் மலர்ந்து சிரிக்கிற. எனக்கு இது தான் வேணும்.' என்று அணைத்துக் கொண்டாள்.

 

ராகினி குறும்பாக, "அண்ணி நீ என்னை கட்டி பிடிச்சிட்டு நிக்கிற, ஆனா என் அண்ணன் மூக்குல புகை வருது பாரு." என்று கேலி செய்ய, ரவி சற்றும் சளைக்காமல்,

 

"நானாவது லேசா தான் புகை விடுறேன், புகழைப் பாரு ரயில் இஞ்ஜின் மாதிரி விடுறாப்புள்ள" என்று கூறிவிட்டு, தன் தங்கை பேசும் விதம் கண்டு மனதில் மெச்சினான்.

 

ராகினி நாணம் மிகுந்தவளாக புகழுக்குப் பின்னே மறைந்து கொண்டாள்.

 

நால்வரும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டு நிற்பதை தொலைவிலிருந்து கண்ட ஶ்ரீதரன் உள்ளம் நெகிழ்ந்தது.

 

இரண்டு ஜோடிகளும் காதலை கண்ணாமூச்சி ஆட்டமாக விளையாடிக் கொண்டு இரண்டு நாட்களைக் கழித்தனர்.

 

மறுநாள் திருமணம் என்ற நிலையில், பெண் அழைப்பு என்று ரகுராம் வைதீஸ்வரி இருவரும் எழில் வீட்டில் இருந்து திருமணப் பந்தலுக்கு எழிலை அழைத்துச் செல்ல, ஶ்ரீதரனும் சரோஜாவும் ராகினியை கன்டெய்னர் வீட்டில் இருந்து பந்தலுக்கு அழைத்து வந்தனர்.

 

சரோஜா ராகினியின் அருகில் நின்று யாரும் கவனிக்காத வண்ணம், "புதுசா வந்த கன்டெய்னர் வீட்டை போய் பார்த்தியா? எல்லா ஏற்பாடும் பண்ணி வச்சிருக்கானா உன் அண்ணன்? ஏதும் செய்யாம விட்டிருக்க போறான்?" என்று கேட்க,

 

சளைக்காமல், "நீங்க உங்க மகளுக்கு செய்யுறதை விட நல்லாவே ஏற்பாடு பண்ணி இருப்பார்." என்று பதில் கொடுத்தாள்.

 

அவளது இந்த சுருக்கென்ற பதிலில் சரோஜா திகைத்து நிற்க,

 

"என் அண்ணிக்கும் என் அண்ணன் எல்லாம் செய்வான், எனக்கும் நல்லாவே செய்வான். இன்னொரு தடவை எதையாவது கேட்க வந்தா அதை உங்க மகளுக்கு செஞ்சிட்டு வந்து கேளுங்க." என்று கூறி எழில் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

தன் அன்னை ஏதோ பேசியதும் அதற்கு ராகினி பதில் பேசியதும் அவர் முகம் சுருங்கி நிற்பதையும் கண்ட எழில் என்னவென்று வினவ,

 

"என்ன அண்ணி மாமியார் மருமகளுக்குள்ள எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் சொல்ல முடியுமா?" என்று சிரிக்க,

 

"நீ நிறைய மாறிட்ட ராகினி" என்ற எழிலுக்கு,

 

"நான் எதுவும் மாறல அண்ணி. சிலது இப்போ தான் புரியுது. சிலது இன்னும் புரியல. ஆனா ஒன்னு, அன்போட அர்த்தம் லேசா புரிஞ்சு இருக்கு. முழுசா புரிஞ்சா மாறிடுவேன் போல" என்று கண் சிமிட்டினாள்.

 

ரவியும் புகழும் எதிரில் இருந்த விரிப்பில் அமர்ந்து இவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தனர்.

 

"உன் அம்மா சும்மா இருக்க மாட்டாங்க போல புகழ். கொஞ்சம் அன்பா அவங்களுக்கு சொல்லி புரிய வை. நான் சொன்னா அப்படி இருக்காது. நீயும் என் மேல வருத்தப்படுவ" என்று ரவி இறுகிய குரலில் பேசினான்.

 

"என்ன மாமா விடிஞ்சா கல்யாணம், ஏன் டென்ஷன் ஆகுறீங்க?" என்று அவனை சமாதானம் செய்த புகழுக்கு தெரியவில்லை அடுத்த அரை மணி நேரத்தில் அவனே அவன் அன்னையின் பேச்சில் கோபம் கொண்டு செய்ய இருந்த காரியம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels