சாரல் 45 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 45

 


வீட்டிற்கு வந்த எழிலுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ராகினி இப்படி யோசிப்பாள் என்று கனவிலும் அவள் எண்ணவில்லை.

 

இப்படிச் செய்யாதே என்றோ, ரவியிடம் அவளைப் பற்றியோ கூற முடியாது என்பதில்லை எழிலுக்கு.

 

ஆனால் அதை செய்தால் பின்னாளில் அவள் வாழ்க்கையை அவள் விருப்பப்படி வாழ விடாமல் தடுத்த குற்றவுணர்வு தன்னை ஆட்கொள்வதோடு தன்னால் ரவியுடன் நிறைவான ஒரு வாழ்வை வாழ முடியாது என்று எண்ணியே முடிவை ராகினியே எடுக்கும் படி கூறிவிட்டு வந்தாள் எழில்.

 

அவள் மனம் ராகினி எடுக்கப்போகும் முடிவால் தன்னுடைய திருமணமும் தடைபடும் என்று உணர்ந்தே இருந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்று தன்னை சமாதானம் செய்து கொள்ள விழைந்தது.

 

மகளின் கண்களில் இருக்கும் அலைப்புறுதலைக் கண்ட ஶ்ரீதரன், "என்னாச்சு செல்லம்? ஏன் உன் முகம் வாடி இருக்கு?" என்று அவளை தனியே அழைத்து விசாரிக்க,

 

இங்கு எது பேசினாலும் சரியாக இருக்காது என்றெண்ணி,

 

"வாங்கப்பா"என்று மெல்ல நடந்து ஓடை வரை அழைத்துச் சென்றாள்.

 

மனம் பொறுக்காமல் தன் தந்தையின் தோளில் சாய்ந்து மௌனமாக கண்ணீர் விட,

 

"ஐயோ செல்லம் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். எதுக்கு டா அழுதுட்டு இருக்க? அப்பா பக்கத்துல தானே டா இருக்கப் போற?" என்று ஶ்ரீதரன் மகளின் மனம் தெரியாமல் ஆறுதல் மொழி கூறினார்.

 

"இந்த கல்யாணம் நடக்குமான்னு தெரியல பா" என்று கண்களை துடைத்துக் கொண்டே கூறினாள் எழில்.

 

பதறிய ஶ்ரீதரன், "என்னம்மா பேசுற? ரவி தம்பி உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கு? உங்க அம்மாவை அத்தனை அழகா கையாளுது. புகழ் கூட ரொம்ப மாறி பொறுப்பா இருக்கான் செல்லம். அப்பறம் ஏன் உனக்கு இப்படி ஒரு எண்ணம் வருது?" என்று மகளின் தாடையை பற்றி நிமிர்த்தி வினவினார்.

 

"நீங்க எல்லாரும் எங்க மூணு பேரை தான்  பார்க்கறீங்க. ராகினியை மறந்து போறீங்க?" என்று ராகினி தன்னிடம் கூறியதை அவள் தந்தையிடம் கூற,

 

"என்னம்மா கிறுக்குத்தனம் பண்ணி இருக்க? அந்த பொண்ணு கேட்டா நீ என்ன பண்ணனும்? அதெல்லாம் சரியா வராது, என் தம்பி உன்னை நல்லா பார்த்துப்பான், இப்ப நீ வெளில போனா உன் அண்ணனுக்கு அவமானம்னு சொல்லி புரிய வைக்கலாம்ல?" என்று மகளை ஆற்றாமையோடு நோக்கினார்.

 

"அப்படி சொல்றது சுலபம் பா. இன்னிக்கு அவளை பிடிச்சு வைக்கலாம். நாளைக்கு கல்யாணத்துக்கு பின்னாடி அவ, அன்னைக்கே போயிருக்கலாம்னு நினைச்சு மனசு நொந்து வாழ்ந்தா போகப் போறது என் தம்பி வாழ்க்கையும் தான். நாளைக்கே அவன் வருத்தப்பட்டு வாழும்போது என்னால மட்டும் நிம்மதியா இருக்க முடியுமா?" என்று கேட்க,

 

"உன் எண்ணம் எப்பவுமே தூய்மையானது தான் இசை." என்று அவளை பின்னாலிருந்து மென்மையாக அணைத்தான் ரவி.

 

அவனின் வரவை எதிர்பார்க்காத எழிலும் ஶ்ரீதரனும் திகைக்க,

 

அவள் முன்னே வந்தவன், "இதை நீ என்கிட்டயும் சொல்லி இருக்கலாம் இசை.  என்ன நடந்தாலும் நம்ம கல்யாணம் நிற்காது. அதை மனசுல வை. அவ என்ன பண்றான்னு பார்ப்போம். என்ன தான் அவ என் கூடப்பிறந்தவளா இருந்தாலும் எப்பவும் அவளை நான் கட்டுப்படுத்தி வைக்க நினைக்கல. இப்பவும் அவளோட வாழ்க்கை, நான் நல்லதை தேர்வு செய்து கொடுத்தேன். அவளுக்கு அந்த ஏமாற்றுக்காரன் தான் வேணும்ன்னா போகட்டும்." என்று மனம் வெதும்பி கூறினான் ரவி.

 

அவனது எண்ணத்தை புரிந்துகொண்ட ஶ்ரீதரன் அவன் தோளில் தட்டிக் கொடுத்து மகளுக்கும் அவனுக்குமான தனிமையை கொடுத்து நகர்ந்து சென்றார்.

 

ராகினி அறைக்குள் அமர்ந்து அந்த செய்தியை மறுபடி மறுபடி வாசித்துக் கொண்டிருந்தாள்.

 

"எனக்கு எதுவும் தெரியாது. என் அப்பா பேசியதுக்கு நான் பொறுப்பில்லை. நான் உன்னை விரும்புறேன். நீ சென்னை கிளம்பி வா" என்று அவன் எழுதியதை வாசிக்க வாசிக்க ஏதோ நிரடியது.

 

சட்டென்று எழுந்து கொண்டாள். வெளியே வந்து பார்க்க புகழ் சிலருடன் சேர்ந்து பந்தலில் அலங்காரம் செய்து கொண்டிருந்தான்.

 

"புகழ்" என்று அவள் அழைக்க, அவனுக்கு உதவிக்கு வந்த மைக்கேல், "டேய் உன்னை உன் ஆளு கூப்பிடுது டா." என்று தோளில் இடித்தான்.

 

"டேய் இந்த கல்யாணம் நடந்து, அவ கழுத்துல நான் கட்டுற தாலி ஏறும் வரையிலே அவ எனக்கு சொந்தம் இல்ல டா. சும்மா ஆளு அது இதுன்னு பேசாத." என்று கூறிய நண்பனை அவன் விசித்திரமான பார்வை பார்த்து வைத்தான்.

 

"என்ன ராணி?" என்று அவளிடம் அவன் சென்று நின்றதும்,

 

அவன் இடது கையைப் பற்றி வீட்டினுள் இழுத்துச் சென்று, அறையின் கதவை தாழிட்டாள்.

 

புகழ் அவளது செய்கை புரியாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம் தன் கைபேசியை நீட்டினாள்.

 

புரியாமல் வாங்கிப் பார்த்தவன், அதில் இருந்ததை படித்ததும்,

 

"உனக்கு என்ன தோணுதோ அதை செய் ராகினி." என்று சொல்லி நகர எத்தனிக்க,

 

"என்ன டா நீயும் உன் அக்காவும் ஒரே மாதிரி பேசுறீங்க?" என்று அவனை தடுத்தாள்.

 

"அக்காவா?" என்று திகைத்தான் புகழ், பின் அக்காவின் மனநிலை உணர்ந்து,

 

"சரியா தானே சொல்றோம். நாளைக்கு எங்க பேச்சைக் கேட்டு உன் வாழ்க்கை கெட்டுப் போயிட்டாதா நீ பேசிடக் கூடாது. உன் வாழ்க்கை முடிவை நீயே எடு." என்று மீண்டும் அவன் நகர நினைக்க,

 

அவனது கரத்தைப் பற்றி தன் புறமாக இழுத்து அவன் சட்டையை கொத்தாகப் பற்றினாள்.

 

அவன் அவளது செயல் புரியாமல் திகைத்த நொடியில் அவனது இதழில் பட்டும் படாமல் முத்தம் ஒன்றை பதித்து நகர்ந்தாள்.

 

"நான் என் அண்ணன் சொன்னப்ப நம்பல. ஆனா இப்ப நம்புறேன். நீ நல்லவன் தான். பணம் மட்டும் வச்சு நான் ஒருத்தரை மதிப்பிட்டது தப்பு. அன்னைக்கு உன்னை ஏதேதோ பேசிட்டேன். என்னை மன்னிச்சிடு புகழ்." என்று முகம் சுருங்க மன்னிப்பு வேண்டினாள் ராகினி.

 

நடப்பதை நம்ப முடியாத புகழ், அவளை தன் பக்கம் திருப்பி, "இப்போ நீ என்ன சொன்ன? என்ன செஞ்ச?" என்று தன் உதடை அவன் வருட, நாணம் கொண்டவள், அவன் மார்பில் தஞ்சமானாள்.

 

"என்ன செய்தேன்? நீ செய்ய வேண்டியதை உனக்கு நினைவுப்படுத்தினேன். நான் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டேன்." என்று கூறியவளை நிமிர்த்தி காரணம் என்ன என்பது போல புருவத்தை தூக்கி வினவினான் புகழ்.

 

அவள் கூறிய பதிலில் அவன் திருப்தி அடைந்து, அதற்கு ஆச்சாரமாக அவள் பிறை நுதலில் தன் முதல் முத்தத்தைப் பதித்தான் புகழ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels