சாரல் 44 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 44
திருமண வேலைகள்
அனைத்தும் வேகமாக நடந்து கொண்டிருந்தது. மணமகன் என்பதை மறந்து புகழேந்தி தன் அக்காவின்
திருமண வேலைகளில் கவனமாக இருக்க, ராகினி அமைதியற்ற மனநிலையில் உலவிக் கொண்டிருந்தாள்.
சரோஜா தன் முன்னே
நிற்கும் பந்தல்க்காரரை முறைத்துக் கொண்டிருக்க, ஶ்ரீதரன் எந்த சலனமும் இல்லாமல் அவர்களை
கடந்து வெளியே சென்று கொண்டிருந்தார்.
"இங்க
பாருங்க, இவன் பந்தல் போட்டு விட வந்திருக்கான், மொத்த பணத்தையும் வாங்கிக்க சொல்லி
அந்த ஆளு இங்க அனுப்பி வச்சு இருக்கான்." என்று கோபத்தில் கத்த,
அவர் முன்னே
வந்து நின்ற எழில் "யாரை அந்த ஆளுன்னு சொல்லிட்டு இருக்கீங்க?" என்று சற்று
உஷ்ணமாக வினவ,
"ஏன் அந்த
ரவியை தான் சொல்றேன், அவன் இடத்தில அவ்வளவு பெரிய பந்தல் போட்டுட்டு காசை நம்ம கிட்ட
வாங்கிக்க சொல்லி இருக்கான்." என்று அவேசமாக அவர் பேச,
"நீ தானே
என் அம்மா? நீ தானே என்னை பெத்த? என் கல்யாணத்துக்கு செலவு செய்ய உனக்கு வலிக்குதா?
புடவை, தாலி, சாப்பாடு எல்லாமே அவர் செய்யும்போது, பந்தல், மேளதாளம், வீடியோ இதை நாம
பாக்கறதுக்கு தானே முறை? சொல்லப் போனா நமக்கு தான் செலவு கம்மி." என்று எழில்
எரிச்சல் கலந்து பேசினாள்.
"என்ன
டி இன்னும் கழுத்துல தாலியே ஏறல அதுக்குள்ள அவனுக்கு கொடி பிடிச்சுகிட்டு வர்ற?"
என்று சரோஜா கோபம் கொள்ள,
"என் புருஷனுக்கு
நான் கொடி பிடிப்பேன் இல்ல குடம் தூக்குவேன், உனக்கு என்ன? அதோட அருமை புருஷனை மதிக்காத
உனக்கு எப்படி தெரியும்? முதல்ல பந்தல் போட வந்தவங்களுக்கு காசு கொடுத்து அனுப்பு."
என்று சொல்லி அவள் உள்ளே சென்று விட்டாள்.
"இந்த
பிள்ளைப்பூச்சி திடீர்னு இவ்வளவு வாய் பேசுறா, எல்லாம் அவன் இவளை தாங்குவான்னு நினைப்பு
தான். ஏதோ அழகா இருக்கான்னு மயங்கி போய் இருக்கான். அப்பவே கல்யாண செலவை செய்ய அவனுக்கு
வலிக்குது. நாளைக்கே இவளை அவனுக்கு அலுத்து போச்சுன்னா, சோறு கூட போடுவானோ என்னவோ?"
என்று கறுவியபடி பந்தலுக்கு பணத்தை எண்ணிக் கொடுத்தார்.
அவர் பேச்சு
காதில் விழுந்தாலும் ஶ்ரீதரனும் எழிலும் பதிலுக்கு ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.
இது ரவியின் அன்பான வேண்டுகோள். திருமண செலவுகளை பிரித்துக் கொள்வதாக சபையில் பேசி
முடித்தபோது சரோஜா அதை கணவர் கவனித்துக் கொள்வார் என்று எண்ணி விட, ஶ்ரீதரன் ரவியின்
சொல்படி, தனக்கு வரவேண்டிய பணம் கிடைக்க காலதாமதம் ஆகும் என்றும் சரோஜா இப்பொழுது செலவு
செய்தால் பின்னர் அவர் பணத்தைக் கொடுப்பதாகக் கூறிவிட வேறு வழியின்றி செலவு செய்து
கொண்டிருந்தார் அவர்.
ரவிக்கு அவரை
வருத்தும் எண்ணம் இல்லை என்றாலும் அவர் பணத்தின் மீது கொண்டுள்ள மோகத்தை உடைக்கவும்,
குடும்பத்தின் மீது அவருக்கு பற்றுதல் வர வேண்டியும் அவரின் சூட்சமம் தெரிந்து காய்
நகர்த்தி அவரை தன் கைப்பிடியில் வைத்திருந்தான் அவன்.
எழிலுக்கு அவன்
செயல் தவறாகப் படவில்லை. அவளிடம் அத்தனை அன்பும் கனிவுமாக பேசினான் ரவி. திருமணத்திற்குப்
பின்னான வாழ்க்கையை பற்றி அவர்கள் அதிகம் பேசிக்கொள்ள வில்லை. அவர்கள் பேச்சு அதிகம்
புகழ், ராகினி, சரோஜாவைப் பற்றியே இருந்தது.
அதிலும் சரோஜா
எந்த சந்தில் புகுந்து ரவியை மடக்க முடியும் கணக்கு போட்ட படி இருக்க அவனுக்கு அவரை
சமாளிப்பது சுவாரஸ்யமாக இருந்தது.
ராகினி அவ்வப்போது
புகழை பார்ப்பதும், குழப்ப முகம் சூழ அவனைக் கடப்பதுமாக இருக்க, இதனை எழில் கவனித்து
வந்தாள்.
இருநாள் இடைவெளியில்
ராகினியின் குழப்பம் அதிகமாகி இருப்பதை கணித்தவள், அவளிடம் நேரடியாக சென்று கேட்டு
விட்டாள்.
"என்னம்மா
உனக்கு குழப்பம்? நாளை மறுநாள் கல்யாணம், ஆனா உன் முகத்துல சந்தோஷம் இல்லையே?"
என்று கேட்க,
"இல்ல
அக்கா என்னவோ இதெல்லாம் சரியான்னு உள்ள கேள்வி ஓடுது. அதுவும் இல்லாம…" என்று
இழுத்தாள் ராகினி.
"எதுனாலும்
சொல்லு ராகினி. உன் அண்ணனுக்கு பயப்படாத. இது உன்னோட வாழ்க்கை." என்று எழில் தட்டிக்
கொடுக்க,
"இங்க
பாருங்க" என்று தன் செல்போனை அவளிடம் கொடுத்தாள்.
அதில் இன்ஸ்டா
மெசேஜில் பிரதீஷ் அவளை பார்க்க வேண்டும் என்றும் அவள் குடும்ப நிலை அவனுக்கு தெரியாது,
தந்தையின் முடிவுக்கு அவன் காரணமல்ல என்றும் ராகினியை அவன் விரும்புவதாகவும், அவளை
உடனே புறப்பட்டு சென்னை வரும்படியும் தகவல் அனுப்பி இருந்தான்.
அதனை வாசித்த
எழில், "உன் முடிவு என்ன?" என்று ராகினியை வினவ,
"எனக்கு
குழப்பமா இருக்கு கா. பிரதீஷ் இத்தனை நாள் எதுவும் பேசினது இல்ல. ஆனா இப்போ கிளம்பி
வர சொல்றான். அவன் வீடு நல்ல வசதி. அவன் படிப்பும் அதிகம். போனா வாழ்க்கை நல்லா இருக்கும்
தான். ஆனா..." என்று அவள் மீண்டும் இழுக்க,
"ம்ம்
சொல்லு. ஆனா என்ன? ஏன் புகழை ஒரு மாதிரி பார்த்துட்டே இருக்க?" என்று நேரடியாகவே
கேள்வியைத் தொடுத்தாள் எழில்.
"என்னவோ
எனக்கு உங்க தம்பி கிட்ட பணம் இல்லன்னாலும் அவர் கண்ணுல ஏதோ ஒன்னு தெரியுது. அதை
நான் இதுவரை பிரதீஷ் கிட்ட பார்த்தது இல்ல." என்று சொல்லி யோசனை முகமாகவே இருந்தாள்.
"இங்க
பாரு ராகினி, உனக்கு உன் மாமா பையனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தா இப்போவே கிளம்பி
போயிடு. தயவு செய்து தாலி கட்டுற நேரத்துல போயிடாத. என் தம்பிக்கு அவமானம் வரும்ன்னு
நான் இதை சொல்லல. உன் அண்ணன் என்ன பண்றதுன்னு புரியாம கையை பிசையுற நிலையில அவரை நிறுத்திடாத.
என்னை கல்யாணம் பண்ணனுமா வேண்டாமா? உன் நிலைமை என்ன? உன் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு உன்
அண்ணன் கவலையில கரைஞ்சு போயிடுவார்." என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து
அகன்றாள்.
தன் கைபேசியை
பார்ப்பதும், அங்கும் இங்கும் வேலையாக அலையும் புகழை பார்ப்பதுமாக இருந்த ராகினி, யோசனையில்
அப்படியே நடந்து புகழுக்கு அருகில் வந்து நின்றாள்.
தன்னருகே நிழலாடுவதை
கவனித்து திரும்பிய புகழ் அவள் முகத்தில் முடிக் கற்றை வந்து கண்ணை மறைத்துக் கொண்டிருக்க,
அதை ஒதுக்கி,
"வெயில்ல
ஏன் ராணி வந்து நிக்கிற? உள்ள வெக்கையா இருக்கோ? இன்னும் ஒரு மணி நேரத்துல வெயில் ஓடிப்
போய் மேகம் மூடிக்கும். ரூம்ல ஏசி போட்டு ரெஸ்ட் எடு மா." என்று அக்கறையாக கூறியதும்,
மேலும் குழம்பி
நின்றாள்.
புகழ் கையில்
இருந்த சீரியல் விளக்கை தோரணமாக மாட்டிக்கொண்டு நகர்ந்து செல்ல, சரோஜா புயலென ராகினி
அருகில் வந்தார்.
"என்ன
டி ஒரே நாள்ல என் பையனை மயக்கி மடில போட்டுக்க பார்த்தியா? வாயே திறக்காம அவனை உன்
வலையில விழ வைக்க திட்டமா? என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை டி. எல்லாம் புதுசா கல்யாணம்
ஆகுற ஜோர்ல உன் பேச்சுக்கு கொஞ்சநாள் தலையாட்டுவான். ஆனா எப்பவும் என் சொல் தான் அம்பலம்
ஏறும். ஒழுங்கா உன் வாலை சுருட்டிட்டு வாழ வா. இல்லன்னா ஒட்ட நறுக்கி விட்டுடுவேன்."
என்று எச்சரித்து விட்டு சாலையை நோக்கி நடந்து சென்றார்.
அவர் போவதையே
வெறித்த ராகினி, ஒரு முடிவோடு தங்கள் கன்டெய்னர் வீடு நோக்கி நகர்ந்தாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக