சாரல் 43 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 43
எழிலின் எளிய
கோலமே அவளை மிகவும் எழிலாய் காட்டியது. அதை விட அவளின் பொறுமையும் அமைதியும் அவளுக்கு
மிகப்பெரிய அணிகலனாக அவளை ஒளிரச் செய்தது.
பெரியவர்களின்
வழக்கமான பேச்சுக்குப் பின் திருமணத் தேதி பற்றி ஆரம்பிக்க, ரவி எழுந்து,
"தேதி
தள்ளி எல்லாம் பார்க்க வேண்டாம். அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் நடக்கட்டும்."
என்று கூறிவிட ரகுராம் அதனை ஆமோதித்தார். ஆனால் வைதீஸ்வரி தான் ரவியின் திருமணத்தை
விமரிசையாக செய்து கண்குளிர காண வேண்டும் என்று எண்ணிய தன் ஆசையை மறைக்க படாதபாடு பட்டுக்
கொண்டிருந்தார்.
"அடுத்த
முகூர்த்தம் வர இன்னும் மூணு நாள் தான் இருக்கு தம்பி. அதுக்குள்ள ஏற்பாடு பண்ண முடியுமா?"
என்று ஊர்த் தலைவர் கேட்க,
"சொந்தம்
எல்லார்க்கும் போன்ல கூப்பிட்டு சொன்னா போதும், மண்டபம் பார்க்க தேவையில்லை. நம்ம இடத்தில
பந்தல் போட்டா ஊரே கூட்டி எல்லாம் செய்ய முடியும். சாப்பாடு ஆர்டர் பண்ணினா நேரத்துக்கு
கொண்டு வந்து பரிமாறிடுவாங்க. துணி எல்லாம் எடுக்க ரெண்டு நாள் போதாதா?" என்று
ரவி அனைவரையும் பார்க்க,
"தம்பி
சொல்றபடி பண்ணிக்கலாம்." என்று ஶ்ரீதரன் கூறினார்.
"தம்பிக்கு
ஏன் இந்த அவசரம்? எழில் மேல பிரியமா? இல்ல தங்கையை கட்டிக் கொடுக்க அவசரமா? "
என்ற ஊர்க்காரர் ஒருவரின் பேச்சைக் கேட்டு சிரித்த ரவி,
"இனிமே
நானும் இந்த ஊர்க்காரன் தான் அண்ணா. எனக்கும் வேலை இருக்கு. நடந்த பிரச்சனையில நான்
யோசிச்சு, முடிக்க நினைச்ச பல வேலை பாதில நிக்குது. இனிமே அதை நானும் இசையும் சேர்ந்து
செய்வோம். என் அன்றாட வாழ்க்கையை பார்க்க போகணும் அண்ணா. அதான் இந்த அவசரம்."
என்று மென்னகை புரிந்தான்.
அவன் பேச்சை
சமையலறை சுவரின் சாய்ந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த எழில் முகத்தில் முறுவல் பிறந்தது.
"நீங்க
சொல்லிட்டீங்க, புகழும் மாப்பிள்ளை தானே, அவனையும் ஒரு வார்த்தை கேட்போம்." என்று
ஊரார் கூற,
அவனோ சற்றும்
யோசிக்காமல், "மாமா சொல்றது தான். எனக்கு எந்த மறுப்பும் இல்ல." என்று சொன்னதும்,
"ஆனா எனக்கு
இருக்கு." என்று கூறினாள் ராகினி.
பெண்பிள்ளைகள்
பேச அனுமதி இல்லாத பழங்காலம் இல்லையென்றாலும் சபை நாகரிகம் கருதி குறுக்கே பேசும் அளவுக்கு
யாரும் செல்லாத வழக்கம் இருந்தபோது, ராகினி தடுதலாக பேச, அனைவரும் முகமும் சுருங்கியது.
ஆனால் ரவி அதனை
பெரிதாக கருதாமல் பெரியப்பாவிடம் தட்டு மாற்றக் கூறி விட,
"அண்ணா
நான் இந்த வீட்ல வந்து இருக்க மாட்டேன்." என்று பிடிவாதக் குரலில் கூறியவளை கண்டவன்
முடிந்தவரை முகத்தை மாற்றிக்கொள்ளாமல்,
"உனக்கு
ஒரு கன்டெய்னர் ஆர்டர் பண்ணியாச்சு. நாளைக்கு அதோ அந்த இடத்தில ரெடியா இருக்கும். புகழுக்கு
கடை தயாரா இருக்கு. கல்யாணம் முடிஞ்சு அவன் திறக்க நினைக்கும் போது திறக்கலாம். எல்லாமே
ஏற்பாடு பண்ணிட்டு தான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன். சும்மா ஒன்னும் வரல. எல்லாமே
என் சம்பாத்தியம். இதை சொல்லிக் காட்ட தேவையில்லை தான் ஆனா உனக்கு மனசுல நிக்கணும்.
அப்பா காசு இல்ல. உன் மேல உள்ள அன்புல நான் செய்யறேன். இப்படி சபை நடுவுல பேசி சங்கடப்படுத்த
பார்க்கற?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படியான பல்லைக் கடித்தபடி கூறினான்.
அவள் முகம்
இரத்தப்பசை இழந்து வெளுத்தது. அவர்களின் தனிப்பட்ட பேச்சைக் கவனித்த அனைவரும் அமைதியாக,
சரோஜா சின்ன செருமலோடு,
"என்ன
தம்பி பொண்ணு எங்க கூட இருக்க மாட்டேன்னு சொல்லுது. பேசாம உங்க கிட்ட உள்ளது போல ஒரு
இரும்பு வீட்டை அவளுக்கும் வாங்கிக் கொடுங்க." என்று கூற, அனைவரும் இவர் என்ன
இப்படி பேசுகிறார் என்று பார்க்க,
இவருக்கு எப்படி
தெரிந்தது என்று தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ரவி அருகே வந்த
சரோஜா, "எனக்கே கணக்கு சொல்லி தர்றியா நீ? இப்போ என்ன பண்ணுவ? நீயே ஏற்பாடு செஞ்சாலும்
அது நான் சொல்லி நடந்ததா தான் உலகத்துக்கு தெரியும்." என்று அவனுக்கு மட்டும்
கேட்குமாறு கூற,
ரவி அவரை ஆழ்ந்து
நோக்கினான். பின் சத்தமாக,
"ஏன் அத்தை புகழ்
என்ன தான் உங்க பையனா இருந்தாலும், எனக்கு மாப்பிள்ளை இல்லையா? அவனுக்காக செய்ய நீங்க
ஏன் பணம் தரணும்? நான் தான் கன்டெய்னர் வாங்கி வைக்கிறேன்னு நேத்தே உங்க கிட்ட சொன்னேன்ல?
நீங்க ஏன் இப்படி பாதி பணம் சபைல வச்சுக் கொடுப்பேன்னு பிடிவாதம் பண்ணுறீங்க? என் தங்கச்சிக்கு
மேல உங்க பிடிவாதம் இருக்கே!" என்று கண்களால் அவன் சிரித்துக் கொண்டு கூற சரோஜா
வாயடைத்துப் போனார்.
இதை அவர் முற்றிலும்
எதிர்பார்க்கவில்லை. பணம், அதுவும் சபையில் வைத்து… இவனை தன் காலுக்கு கீழ் அவர் இழுக்க
நினைக்க, ஏனோ அவரை தலை குப்புறத் தள்ளி விட்டான்.
அவர் திருதிருக்க,
"ஆமா அந்த கல்யாண பேச்சுலயே சரோஜா அக்கா கடன் வாங்கி எழிலுக்கு செய்தது, இப்போ
இவ்வளவு நல்ல இடம் வரும்போது செய்யாதா என்ன?" என்று ஊர்க்காரப் பெண் உசுப்பேத்தி
விட, சரோஜாவால் இல்லை என்று வாய் திறக்க இயலவில்லை.
ஆனால் தன் மனைவி
அப்படி சொல்லும் ரகமில்லை என்று நன்குணர்ந்த ஶ்ரீதரன் மகளை ஆழமான பார்வை பார்த்துவிட்டு
ரவியை புரியாமல் ஏறிட, அவனோ அவரைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தான்.
தட்டுகள் இடம்
மாறி, ரவி எழிலின் விரலில் மோதிரம் அணிவிக்க, புகழும் ராகினி அருகில் நின்றான்.
அவன் கையில்
தன் கரத்தை சேர்த்த ராகினியின் மனதில் புரியாத உணர்வுகளின் கலவை.
அவனை பிடிக்கிறது,
ஆனால் கணவனானால் தன் வாழ்வில் என்ன மாற்றம் வரும் என்று கேள்வி வேறு அவளை வருத்தியது.
அவள் முகத்தில்
இருந்த குழப்பத்தைத் கண்ட எழில் தம்பியை அருகே இழுத்து, அவளை தேற்றும் படி ஜாடை செய்தாள்.
கையில் மெல்லிய
அழுத்தம் கொடுத்த புகழ், "உன் அப்பா, அம்மா பார்த்துக்கிட்ட அளவு இல்லன்னாலும்
கண்டிப்பா நீ கஷ்டப்படுறது போல வச்சுக்க மாட்டேன் ராணி. ஊருக்கு நீ ராகினியா இருந்தாலும்
எப்பவும் என் மனசுக்கு நீ தான் ராணி" என்று கூற அவள் முகம் தெளிவடைந்தது.
இதையெல்லாம்
கவனித்த ரவி எழிலை யாருக்கும் தெரியா வண்ணம் இடையைப் பற்றி அருகே இழுத்து, "தம்பிக்கு
காதல் பாடம் டியூஷன் எடுத்தது போதும், கொஞ்சம் உங்க எக்சாம் மேல கவனம் வைங்க மேடம்."
என்று அவளது வெற்றிடையில் விரலால் கோலமிட்டு அவளை நெளிய வைத்தான்.
"ரவி சார்
கை எடுங்க. கூசுது." என்று காற்றையும் குரலையும் சரி விகிதமாக கலந்து அவள் பேச,
"நீ என்னை
உரிமையா கூப்பிடு, விடுறேன்." என்று மேலும் அவன் விரல்கள் முன்னேற,
"பிளீஸ்
சன்ஷைன்." என்று அவள் மிகவும் குழைவாக கேட்டதும் அவன் கண்கள் ஆச்சரித்த்தில் விரிந்தது.
அவன் விரல்களுக்கு அவன் செயலிழந்த மூளை கட்டளையிடாமல் போனதால் உணர்வின்றி அமைதியாக
இருக்க, கிடைத்த இடைவெளியில் நகர்ந்து தன் பெரிய மாமியாரை அடைந்தாள் எழில்.

கருத்துகள்
கருத்துரையிடுக