சாரல் 42 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 42

 


இரவு கவிழ்ந்து அப்பிரதேசத்தில் குளிரை பாரபட்சம் இல்லாமல் பரப்பிக் கொண்டிருக்க, நிலவும் தன் பங்குக்கு நிலவொளியைப் பாய்ச்சியது.

 

தன் தந்தை அருகில் அமர்ந்திருந்த எழிலின் கண்கள் ஈரமாயிருந்தது.

 

"என்ன டா செல்லம் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. கேட்டா சொல்லவும் மாட்டேன்னு அடம் பிடிக்கிற, அப்பா என்னனு நினைக்கட்டும்?" என்று அவள் தலைகோதி வினவினார்.

 

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பா” என்று கண்களை துடைத்துக் கொண்டவள் அன்னை இங்கே இருக்கிறார் என்று கவனித்துவிட்டு,

 

"அப்பா ரவி சார் என்னைக் கூப்பிட்டு பேசினார் பா. தர்மா அண்ணன் காம்ப்ளெக்ஸ்ல நான் புகழுக்கு ஒரு கடை வாடகைக்கு பார்த்து வச்சிருந்தேன் இல்லையா அதை அவர் பேசி விலை குறைவா பத்திரம் போட்டுட்டு வந்துட்டார் பா. அது மட்டும் இல்லப்பா." என்று அவள் தயங்க,

 

ஶ்ரீதரன் அவளை ஆழ்ந்து நோக்கிவிட்டு, "நீ உன்னைப் பத்தி எல்லாமே சொல்லிட்டியோ செல்லம்?" என்றார் வெறுமையான குரலில்.

 

அவளும் தலையை தாழ்த்திக் கொண்டு, "ஆமா பா. சொல்லிட்டேன். நான் கல்யாணம் வேண்டாம்னு தோணுச்சுனா நிறுத்திடுங்கன்னும் சொன்னேன்."என்று நிறுத்த,

 

"ம்ம் சொல்லு மா. இன்னும் எத்தனை பெருசா இடி இறக்க முடியுமோ இறக்கு. உங்க அம்மா வாழ்ந்த குடும்பம்னு சொல்லி புலம்பி புலம்பியே என் சம்பாத்தியம் ஒன்னுக்கும் ஆகாதுன்னு என்னையே தாழ்வா நினைக்க வச்சா. அவ தப்பு பண்ணி நான் கண்டிக்க முயற்சி செஞ்சப்ப ஊரைக் கூட்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவும் மானம் மரியாதைக்கு பயந்து நான் வாயை மூடி இருந்து பழகினேன்.

 

உன் விஷயத்துல தான் நான் அறிவிருந்தும் முட்டாளா, கண்ணிருந்தும் குருடா இருந்துட்டேன். ஏதோ ஒரு நல்ல மனுஷன் உன் வாழ்க்கைக்குள்ள வர்றாரு. நீ அமோகமா வாழப்போறன்னு இந்த ரெண்டு நாளா தான் மா நான் சந்தோஷமா இருந்தேன். சொல்லு… அவர் என்ன பதில் சொன்னாருன்னு சொல்லி என் சந்தோஷத்துக்கு சமாதி கட்டு." என்று முகத்தை மூடிக் கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார்.

 

"அப்பா என்னப்பா நீங்க? நான் தான் பா பைத்தியம் மாதிரி அப்படி சொன்னேன் அவர் கிட்ட. ஆனா அவர் அதை பெரிய விஷயமாவே பார்க்கல. இப்போ மணமேடை வரை வந்து கூட கல்யாணம் நின்னு போகுது. நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறனு கேட்டாரு." என்று தந்தையை ஆதரவாக கரம் பற்றி,

 

"அவருக்கு என் மேல அன்பு இருக்கு பா. நான் கண்டிப்பா நல்லா இருப்பேன்." என்று கூற,

 

"நீ நல்லா இருந்தா அதை விட சந்தோஷம் இந்த அப்பாவுக்கு என்னம்மா இருக்கு? வேற எதுவும் விஷயம் இருக்கா மா?" என்று அவள் முகம் பார்த்தே அவர் வினவினார்.

 

"அது… ஆமா பா. தம்பியை தனிக்குடித்தனம் வைக்க உங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லையே பா?" என்று அவரையே நோக்கினாள்.

 

"நான் அவனை இந்த வீட்டுல உள்ள மனுஷன்னு மறந்து பல நாள் ஆச்சு. அந்த தம்பி தான் இவன் மேல பெரிய நம்பிக்கை வச்சிருக்கு. அதை இவன் காப்பாத்தினா அதுவே போதும் செல்லம். அவன் தனியா போனாலும் சேர்ந்து இருந்தாலும் எனக்கு அதுல எதுவும் இல்ல." என்றுவிட்டு,

 

"அவர் கிட்ட இனியும் எதையும் எதிர்பார்க்காத செல்லம். ஒருத்தர் செய்யுறாருன்னா நாம அதை சாதகமா எடுத்து குளிர்காயக் கூடாது. அவனுக்கு நானே ஊருக்குள்ள வீடு பார்த்து தனியா வச்சு தர்றேன்." என்று பொறுமையாகக் கூறினார்.

 

"நான் அவர் கிட்ட இதை சொன்னேன் பா. ஆனா வீட்டு வேலை எதுவும் ராகினிக்கு தெரியாது, அதுனால தள்ளி தனியா வச்சா சமாளிக்க முடியாதுன்னு பின்னாடி உள்ள இடத்தில அதே போல கன்டெய்னர் ஏற்பாடு பண்றேன்னு சொல்றாரு பா." என்று தயங்கி,

 

"தம்பி கடைக்கு வச்சிருந்த காசை வீடுக்கு கொடுக்கறேன்னு சொல்லிட்டேன் பா. உங்க கிட்ட கேட்காமலே சொல்லிட்டேன்னு தப்பா நினைக்காதீங்க பா" என்று கூறினாள் எழில்.

 

"அது உன் சம்பாத்தியம். உனக்காக வச்சுக்கோ. நான் அந்த தம்பிக்கு பணம் கொடுத்துடுறேன்." என்று மகளின் தலையை வருடினார்.

 

"அப்பா அவர் செஞ்சது எதுவும் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்னு சொன்னாரு பா." என்று அவள் குரலை தாழ்த்தி கூற,

 

"உயர்ந்த குணம் உள்ளவங்க அப்படி தான் செல்லம். இடது கை கொடுக்கிறது வலது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைப்பாங்க. ஆனா அதுக்காக அவளை பேச விட்டு இனி என்னால வேடிக்கை பார்க்க முடியாது." என்று யோசனையாகக் கூறினார்

 

தந்தையும் மகளும் தனியே பேசியதாக எண்ணிக் கொண்டிருக்க,

 

சரோஜா இது அனைத்தையும் ஜன்னலுக்கு அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

 

அவர் முகத்தில் நல்ல பிரகாசம் காணப்பட்டது. அவன் பெண் கொடுத்து எடுப்பது என்று தன்னை ஏமாற்றியதாக அவர் குமைந்து கொண்டிருக்க, அவன் அவருக்குத் தெரியாமல் இத்தனை செய்வதானால் இனி பணத்திற்கு கவலை இல்லை என்று அவர் மனம் கணக்குப் போட்டுக் கொண்டது.

 

ராகினிக்கு வேலை செய்யத் தெரியாது என்று எழில் சொல்லி விட்டதால் இதை வைத்து பேசியே ரவியிடம் பணம் கறக்க முடிவு செய்தார் அவர்.

 

அடுத்த நாள் விடியல் அவருக்கு பொன் பொருளை அள்ளித் தரும் நாள் என்று எண்ணிக் கொண்டு உறங்கச் சென்றார்.

 

ராகினியை தயாராக வைத்த வைதீஸ்வரி அவள் முகத்தில் எந்த உணர்வும் பிரதிபலிக்காமல் இருக்க கண்டு,

 

"ராகினி உன் அண்ணன் உனக்கு நல்லது தான் செய்வான். அவனை நம்பி இந்த கல்யாணத்தை சந்தோஷமா ஏத்துக்கோ. கண்டிப்பா உன் வாழ்க்கை அழகா இருக்கும்." என்று அவளுக்கு தலை நிறைய பூச்சூடினார்.

 

ராகினி பதில் கூறாமல் அமைதியாக இருந்து கொண்டாலும் முகத்தில் புன்னகை ஒன்றை தவழ விட அவரும் நிம்மதியாக சீர் தட்டுகளுடன் எழில் வீட்டை நோக்கி அனைவரோடும் இணைந்து நடந்தார்.

 

நிச்சயம் என்று முடிவானதும், ஊர் பிரசிடென்ட், கிராம அலுவலர், அன்று வந்த சில மனிதர்களையும் ரவி முறையாக அழைத்திருந்தான்.

 

அனைவரும் எழில் வீட்டு வாயில் நிற்க, வெள்ளை வேட்டி, கருநீல சட்டை அணிந்து அவர்களை வரவேற்றான் புகழ்.

 

அவன் பின்னே ஶ்ரீதரனும் இணைய, சரோஜா பட்டுப் புடவை சரசரக்க வந்து அனைவரையும் வரவேற்றாள்.

 

தட்டுகளை வீட்டின் கூடத்தில் அடுக்க, இருந்த மூன்று நாற்காலியில் ரகுராம், ஊர் தலைவர், ரவி மூவரும் அமர, ராகினியை கீழே இருந்த ஜமக்காளத்தில் அமரச் சொல்ல, அவளோ சட்டென்று முகம் சுழித்து,

 

"இதென்ன இவ்வளவு அழுக்கா இருக்கு? எப்படி உட்கார முடியும்?" என்று சத்தமாக கேட்டுவிட,

 

உள்ளிருந்து எளிய மெல்லிய சரிகையிட்ட கைத்தறி புடவையில் வெளியே வந்து அதனை நகர்த்தி விட்டு வேறு நல்ல விரிப்பை விரித்தாள் எழில்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels