சாரல் 41 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 41
அவள் தயங்குவதில் இருந்தே அவளுக்கு இன்னும் தன்னிடம் உரிமையாக பேச வரவில்லையென உணர்ந்தான் ரவி.
அவர்கள் சந்தித்து சில நாட்கள் தான் ஆகிறது என்பதை முழுவதுமாக மறந்திருந்தான் அவன்.
அவள் அவன் முகத்தை ஆராயும் பார்வை பார்த்து, "ராகினிக்கும் புகழுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் சரி, ஆனா அவ எங்க இருப்பா?" என்று கேட்க,
பின்னால் நின்றிருந்த பெரியவர்கள் திகைக்க, ரவி வெகு இயல்பாக,
"இதுல என்ன சந்தேகம் உங்க வீட்ல தான்." என்றான்.
"அது சரியா வராது சார்." என்று கூறியவளே தொடர்ந்தாள்.
"உங்களுக்கு என் அம்மா ஏன் இப்படி இருக்காங்கன்னு தோணுச்சா? ராகினிக்கு அவங்க என் அம்மா தானான்னு கூட சந்தேகம். இதுக்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா? அவங்க வளர்ந்த விதம்." என்று நிறுத்தினாள்.
"அம்மா வீடு ரொம்பவே பணக்கார குடும்பம், திடீர்னு எல்லாம் போய் ஏழையானதும் அம்மாவால அதை தாங்க முடியல. அப்பாவை கல்யாணம் செய்தும் அவங்க வாழ்க்கை மாற்றம் அடையல. அதோட அவங்க தேடல் பணமா இல்லாம அதை சம்பாதிக்க அவங்க ஆளுங்களை எதிர்பார்த்தாங்க. அப்பா இல்லன்னதும், குழந்தையா என்னை எதிர்பார்க்க, பொண்ணா போகவும் வெறுத்தாங்க.
அப்பறம் பிறந்த புகழை பணம் சம்பாதிக்கற வழியா பார்த்தாங்க. அவனுக்கு படிப்பை கொடுத்து சம்பளத்தை எதிர்பார்த்தாங்க. அவன் ரெண்டு மாசம் பணம் அனுப்பல. அப்பா போனாரு. அவன் பப்ல கண்டதை குடிச்சு ஏதேதோ போதை வஸ்து எடுத்தது தெரிஞ்சு இழுத்துட்டு வந்துட்டார்.
அப்பறம் என் அம்மாவுக்கு பெருசா சம்பாதிக்க வேற எந்த வழியும் தெரியல. என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க டிரை பண்ணினாங்க, அவனை வெளிநாடு அனுப்ப பார்த்தாங்க. எல்லாமே வீணா போச்சு. கடன் கழுத்தை நெரிக்குது. நேத்து என் அம்மா பண்ணின அவ்வளவு டிராமாவும் பணத்துக்காக தான்." என்று பெருமூச்சு விட்டு,
"ஆனாலும் நான் ஏன் என் அம்மாவை இன்னும் பொறுத்து போறேன் தெரியுமா? அவங்களுக்கு வாழ்க்கை புரியல. அவங்க அம்மா வீடு பஞ்சம் வந்ததும் அதை ஏத்துக்க அவங்க மனசு இடம் கொடுக்கல. வர்றவங்க பணம் கொண்டு வருவாங்கன்னு கனவுக் கோட்டை கட்டி, அது உடையவும் தான் இவ்வளவும். ராகினி இப்படி மாறணுமா?" என்றாள் தயக்கமாக.
"எனக்கு புரியல இசை. உன் அம்மாவை பத்தி சொல்லிட்டு இருக்க. இப்போ இடையில ராகினி??" என்று ரவி குழம்ப,
"நீங்க ராகினி எங்க வீட்ல போய் வாழட்டும்னு நெனச்சா ராகினி இன்னொரு சரோஜாவா தான் மாறுவா. என் தம்பி சம்பாதிப்பான் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா விதி, நேரம், காலம் எல்லாம் இருக்கே! ஒருவேளை அவன் முன்னேற முடியாம இதே கோட்டுல பயணிக்கிற நிலை வந்தா ராகினி என் அம்மாவா மாறுவா ரவி சார்." என்றாள் தீர்க்கமாக.
"சரி என்ன செய்யலாம்?" என்று அவளிடமே அவன் கேள்வி எழுப்ப,
"மேல உள்ள கன்டெய்னர் சும்மா தானே இருக்கு அதை அந்த வீட்டுக்கு பின்னால உள்ள காலி இடத்தில் செட் பண்ணி அவங்களுக்கு தனியா வீடு ரெடி பண்ணி கொடுத்திடுங்க. என்ன டா இப்போவே தம்பிக்கு வீடு கட்டிக் கொடுன்னு இவ கேட்குறான்னு நினைக்காதீங்க. என்னோட எம்பிராய்டரி பணம் கொஞ்சம் இருக்கு. அதை நான் கொடுத்துடறேன். அதை புகழ் கடைக்கு அட்வான்ஸ் கொடுக்க வச்சிருந்தேன். நீங்க அந்த வேலையை எனக்கு வைக்காததால, இந்த வீடு அவங்களுக்கு அந்த பணத்துல செய்து கொடுங்க. அதே மாதிரி ராகினிக்கு தனியா அக்கவுண்ட் ஒன்னு வச்சு பணம் செலவுக்கு போட்டுக் கொடுங்க. அவ அவளோட நிதிநிலை இறங்கி இருக்குனு புரிஞ்சுக்கணும், ஆனா அவளுக்கு ஒன்னுமே இல்லன்னு வெறுத்து போயிடக் கூடாது." என்று கூறி ரவியின் முகத்தைப் பார்க்க,
அவனோ, "மேல உள்ளது எம்டி கன்டெய்னர். அதுக்கு தனியா பொருள் வாங்கி நானே ரெடி பண்ணி சேனல் வீடியோ போட யோசிச்சு வச்சிருக்கேன். மெட்டீரியல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வரும். அதை ராகினிக்கு இப்போ எடுத்து வைக்க முடியாது." என்று கூறி இடைவெளி விட்ட ரவி எழில் முகத்தை நோக்கினான்.
அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்து, பின் வேகமாக, "அப்ப பக்கத்துல ஏதாவது வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுப்போம்." என்று கூற, ரவி சிரித்து விட்டான்.
"ஏன் எப்படியும் நீ தான் உன் அப்பாவை கவனிச்சுக்கணும். இதுல ராகினியை தனியா வச்சா, மூணு வீட்டு வேலையை நீ செய்ய வேண்டி வரும். கண்டிப்பா நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன். பெரிய போர்க்களம் இங்க நடக்கும். தேவையா? நான் இன்னொரு ரெடிமேட் கன்டெய்னர் ஆர்டர் கொடுக்கறேன். நீ கவலைப்படாத. ஆனா என் தங்கைக்காக நீ இவ்வளவு யோசிக்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு." என்று அவன் கன்னத்தை கைகளில் தாங்கி அமர்ந்தான்.
"நான் அவளை உங்க தங்கையா பார்க்கல. இந்த சமுதாயத்துக்கு இன்னொரு சரோஜா வேண்டாம். அந்த மாதிரி மனநிலை உள்ள ஒருத்தருக்கு மகளா இருக்கற துர்பாக்கியம் என்னோட முடியட்டும்." என்றவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
ரவியின் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல இருக்க, அவளை அருகே வந்து அணைத்துக் கொண்டான்.
வந்த சுவடு தெரியாமல் ரகுராமும் வைதீஸ்வரியும் அவர்களின் கண்ணில் படமால் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்கள்.
ரவிக்கு எழில் மனதில் இருக்கும் வலி புரிந்தது. அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் மனதில் இனி அவள் கண்ணீர் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது போல, தங்கள் நிலை புரியாமல் இப்படி அவளை வருத்திய சரோஜா மேல் கட்டுக் கடங்காமல் கோபம் வந்தது.
"என்னோடவே இருந்திடுறியா இசை?" என்று அவன் அவள் காதருகே மென்மையாக வினவ, அவனது சூடான மூச்சுக் காற்று பட்டதும் எழிலின் பெண்மை விழித்துக் கொண்டது.
சட்டென்று விலகி நின்றவள், "அதான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லிட்டீங்களே ரவி சார்!" என்று தயங்கி வார்த்தைகளை வெளியிட்டு விட்டு, "நான் வர்றேன் சார்" என்று வேகமாக விலகி ஓடினாள்.
அவள் முகத்தில் இருந்த வெட்கம் சொன்னது அவள் மனதில் அவன் பதிய ஆரம்பித்துவிட்டான் என்று.
மறுநாள் நிச்சயம் செய்ய தேவையானதை எடுத்துத் தயாராக வைத்தனர் ரகுராமும் வைதீஸ்வரியும்.

கருத்துகள்
கருத்துரையிடுக