சாரல் 40 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 40
அமைதியாக எழிலிசை
கூறிய அனைத்தையும் கேட்டு முடித்தான் ரவீந்தர்.
"அந்த
ஆளுக்கு மனசுல காம்ப்ளெக்ஸ், நமக்கு வயசாகிடுச்சு, கல்யாணம் வச்சா சிரிப்பாங்கன்னு.
அதுனால இளமையா காட்டிக்க என்னல்லாம் பண்ணனுமா பண்ணினார்.
அந்த பிரீ வெட்டிங்
போட்டோ ஷூட் கூட அதுக்கு ஏற்பாடு பண்ணினது தான். சராசரியா இருக்குற யாரும் இதை விரும்ப
மாட்டாங்க. ஏன்னா வாழ்க்கை ஒன்னும் பாட்டு பாடி ஆடுறது இல்லன்னு அவங்களுக்கு நல்லாவே
தெரியும்.
அடுத்தவன் செய்யறான்
அதுனால நானும் செய்யறேன், இது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல், என்னோட குறையை மறைக்க நான் இதை
பெருசா செய்து காட்டுவேன். இப்படி மனநிலை உள்ளவங்க தான் தேடி போய் இந்த மாதிரி வித்தியாசமா
போட்டோ எடுக்கிறேன்னு கிறுக்குத்தனம் பண்ணி அவங்க சாகறதோ இல்ல அவங்க கூட வர்றவங்க சாகறதோ
நடக்குது.
பேப்பர்ல இது
மாதிரி செய்தி படிக்கும் போதே ஏன் டா சந்தோஷமா கல்யாணம் பண்ணி வாழாம, மாயையான விஷயத்துக்காக
போய் அல்பமா உங்க உயிரை விட்டுறீங்களேன்னு தோனும். ஆனா அதுவே என் வாழ்க்கையில நடக்கும்ன்னு
நான் நினைக்கவே இல்ல ரவி சார்.
அதுக்காக கல்யாணத்துக்கு
முன்னாடி போட்டோ எடுக்க கூடாதுன்னு சொல்லல. அதை நல்ல அழகான இடமா, பாதுகாப்பா எடுத்துக்க
வேண்டியது தானே! ஆத்துல, குளத்துல, கடல்ல, மலை உச்சியில, பாறை ஓரம்ன்னு தேடி தேடி ஏன்
போய் சாக பாக்கறாங்க?
இவங்க ஏதோ வழுக்கி
விழுந்தோ, அடிபட்டோ இறந்து போயிருப்பாங்க. அவங்க குடும்பம் அதை கடந்து வர எத்தனை வருஷம்
ஆகும் தெரியுமா? ஆனா இங்க கதையே வேற, விழுந்து செத்துடுவோம்ன்ற பயத்திலேயே அவர் இறந்து
போனார். அப்ப என் நிலையை நினைச்சு பாருங்க ரவி சார்.
அம்மா பண்ணின
காரியத்தால தான் ஊர்க்காரங்க என்னை அதிகம் ராசி இல்லாதவனு சொல்லாம இருக்காங்க. ஏன்னா
அவங்க கொஞ்ச நஞ்சம் பிரச்சனை பண்ணல. தர்மா அண்ணனை கல்யாணம் பண்ணலன்னு என்னோட சண்டை
போட்டாங்க. அண்ணான்னு வாய்வார்த்தையா சொன்னா அவன் உன் அண்ணாவான்னு எத்தனை சண்டை தெரியுமா?
சண்டை போட்டு
நான் கல்யாணம் பண்ணி அங்க போனா மட்டும் அங்க இருந்து காசை எடுத்து இவங்களுக்கு கொடுக்க
முடியுமா? முதல்ல உழைக்காத காசு உடம்புல ஒட்டுமா ரவி சார்?" என்று இத்தனை நேரம்
தரையை பார்த்தே பேசிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவன் கண்ணை பார்க்க, அது முழுவதும்
காதல் நிரம்பி வழிந்தது.
அவளுக்கு அவன்
அப்படி பார்த்ததும் சட்டென்று உள்ளே எழுந்த உவகை ஊற்றை மறைக்க மீண்டும் குனிந்து கொண்டாள்.
ரவி அவள் கையைப்
பற்றி, "நீ சொன்னதுல இருந்து எனக்கு ஒரு விஷயம் நல்லா புரியுது. அந்த கல்யாணத்தை
நீ விரும்பி சம்மதிக்கல, அவருக்கு நடந்தது உன்னை பாதிச்ச விதம் வேற, இந்த கல்யாணத்துக்கும்
நீ முழு மனசா சம்மதம் சொல்லல. உன் தம்பி வாழ்க்கை, ராகினி, உன் அப்பா சந்தோஷம் இதெல்லாம்
யோசிச்சு, கடைசில தான் ஓகே சொன்ன." என்று இழுத்தான்.
ஆனால் அவளோ
வேகமாக இல்லை என்று தலையசைத்து, "உங்களை எனக்கு பிடிச்சது." என்று தயங்கி
கூறினாள்.
"தேங்க்ஸ்"
என்று அவள் கையில் சிறு அழுத்தம் கொடுத்தான்.
"இப்போ
இதெல்லாம் என்கிட்ட சொல்ல காரணம் உன்னோட பயம். சரிதானா?" என்ற வினவினான் ரவி.
"ஆமா.
வேறு யாராவது வந்து இதை வேற மாதிரி சொல்லி, அப்பறம் நான் விளக்கி, அது திசை மாறி, ம்ச்ச்
எனக்கு அதுல உடன்பாடு இல்ல. இப்போ கூட சொல்றேன் ரவி சார், நேத்து அந்த பிரச்சனையோட
தீவிரத்தால கல்யாணம் வரை பேசியதா இருக்கட்டும். இந்த நொடி எதுவும் வேண்டாம்னு தோனினா
நிறுத்திக்கலாம். யாருக்கும் நாம விளக்கம் சொல்ல வேண்டிய தேவை இல்ல சார். அவங்க யாரும்
நமக்கு ஒரு கஷ்டம்னா அவங்க வீட்டை விட்டுட்டு வந்து இருந்து சரி பண்ணி தரப்போறது கிடையாது.
அதுனால யோசிங்க." என்று சொல்லிவிட்டு எழுந்து கொள்ள முனைந்தாள்.
ஆனால் அவள்
கைகள் அவனிடம் சிக்கிக்கொண்டு அவளை நகர விடாது தடுத்தது.
"நீ என்ன
நெனச்சு இதை சொல்ற இசை? நான் எதையும் யோசிக்காம என் தங்கைக்கு உன் தம்பியையும் உன்னை
எனக்கும் கேட்டேன்னு தோனுதா உனக்கு? அவ காணாம போன ஒருநாள்... அந்த ஒருநாள் என் மனசுல
வந்த தாக்கத்தை வார்த்தையால சொல்ல முடியாது இசை.
நான் அம்மா,
அப்பா கூட வளரல. பெரியப்பா, பெரியம்மா என்ன தான் அன்பு காட்டினாலும் அதுல லேசான பயம்
இருக்கும். எப்ப வந்து அம்மா என்னை பிரிச்சு கூட்டி போவாங்களோ? இல்ல அவங்க கண்டிச்சா
நானே கோவிச்சிட்டு வர மாட்டேனோனு கண்ணுக்குத் தெரியாத ஒரு நூல் இடைவெளி விட்டு தான்
அன்பு இருக்கும்.
ராகினி பத்தி
நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டாம். அவளுக்கு என் அன்பு புரியல, எனக்கு அவளோட டிப்பென்டன்சி
பிடிக்கல.
எனக்கு இனி
வாழ்க்கையில அன்பு காட்டக் கூடிய உறவு மட்டும் தேவையில்ல, இந்த விரிசல் விட்ட குடும்பத்தை
ஒட்ட வச்சு அதுல நடக்கத் தெரியாத என்னை கைப்பிடிச்சு நடக்க வைக்கிற துணை வேணும். அதுலயும்
என்னை புரிஞ்சு என் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கணும். ஆனா இதுக்கு எந்த
தேவையும் இல்லாமலே நீ அப்படித்தான் இருக்க. அப்ப உன்னை நான் எப்படி மிஸ் பண்ணுவேன்
இசை?
ராகினியை யாருக்கு
கல்யாணம் பண்ணி வச்சாலும் கண்டிப்பா தினமும் சண்டையும் பிரச்சனையும் தேடி வரும். அதுல
புகழ் பிரச்சனையும் ஒன்னு. ஆனா அது புகழாவே இருக்குற பட்சத்துல எல்லாமே கொஞ்சம் ஈசியா
இருக்கும். ஆனா அதுக்காக புகழ் வாழ்க்கையை கெடுக்க நினைக்கல இசை. ராகினி கொஞ்சம் அடம்,
பிடிவாதம், புரியாம பண்றா. உன்னைப்போல தட்டிக்கொடுத்து சொல்லித்தர உறவு இருந்தா கண்டிப்பா
அவ வழிக்கு வந்திடுவா." என்று கூறினான் ரவி.
"அது எப்படி?
பார்த்ததும் நம்பிக்கை வந்தது? இப்படி எங்காவது அவசரமா ஒரு கல்யாண பேச்சு நடக்குமா?"
என்று சிரித்தபடி எழில் அவனை வினவ,
"அரென்ஜ்ட்
மேரேஜ் எப்படி நடக்குது இசை? ஒரு புரோக்கர் போட்டோ காட்டுவார், குடும்பம் பத்தி ஆகா
ஓகோன்னு சொல்லுவார், போய் பஜ்ஜி சாப்பிட்டு ரெண்டு நிமிஷம் பேசி இந்த பொண்ணு ஓகே, ஓகே
இல்லன்னு தானே முடிவாகுது. அப்படி இருக்கும் போது ஒருநாள் முழுக்க எனக்காக மெண்டலி
சப்போர்ட் பண்ணின உன்னை என் மனைவியா ஏற்க எனக்கு தோனக் கூடாதா?" என்று எதிர் வினா
தொடுத்தான்.
"நல்லா
பேசுறீங்க. ரெண்டு நாளாச்சு நீங்க வீடியோ போட்டு. கொஞ்சம் எல்லாத்தையும் ஓரமா வச்சுட்டு
வீடியோ வேலையை பாருங்க." என்று எழுந்தவள் பின் ஏதோ யோசனை வந்தவளாக அவன் அருகில்
வந்து அமர்ந்தாள்.
அதே நேரம் காரை
கேட்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு பைகளை கையில் சுமந்தபடி உள்ளே வந்தார் ரகுராமும்
வைதீஸ்வரியும்.
"நான்
ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்க தானே ரவி சார்?" என்று எழில் தயங்க,
"நீ என்ன
வேணாலும் கேளு இசை, ஆனா இந்த சாரை விடு" என்று சிரித்தான்.
அவள் அவனிடம்
தயக்கத்துடனும் உரிமையாகவும் முதல் முறையாக ஒன்றைக் கேட்டாள்.
அவள் கேட்டதை
காதில் வாங்கியபடி பின்னால் நின்ற பெரியவர்கள் இருவரும் திகைத்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக