சாரல் 39 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 39
எழில் எவ்வளவோ
கேட்டும் டாப்சிலிப்பின் அழகை அழகாக அவர்கள் திருமண ஆல்பத்தில் கொண்டு வரும் முயற்சி
அது இது என்று காரணம் சொல்லி அவளை மோகன் சம்மதிக்க வைத்தார்.
அவளுக்கு பயம்
வேறு நெஞ்சை உலுக்கியது, என்ன தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற ஆணாகவே இருந்தாலும்
இது போன்ற நெருக்க காட்சிகள் எல்லாம் தேவையில்லை என்று பல போட்டோக்களுக்கு அவள் முடியாது
என்று பிடிவாதம் பிடித்தாள்.
மோகனுக்கு அவள்
செய்கையில் லேசாக கோபம் துளிர்க்க,
"சரி பாட்டு
கூட அப்பறம் எடுப்போம், இப்போ முக்கியமா சில போட்டோ மாடல் செலக்ட் பண்ணி வச்சிருக்கேன்.
அது எல்லாம் எடுத்து முடிப்போம்" என்று வற்புறுத்த, ஒரு அளவுக்கு மேல் மறுக்க
முடியாமல் சின்ன சின்ன முக பாவங்கள் பொருந்திய க்ளோசப் புகைப்படங்களுக்கு எழில் சம்மதித்தாள்.
எல்லாம் அவள்
தனிப்பட்ட புகைப்படங்கள்.
அடுத்தது இருவரும்
இணைந்து எடுக்கும் முதல் படம், அதில் மலை முகட்டில் இருந்து சரிவலில் அவர் அவளுக்குப்
பின்னே குதித்து வருவது போல வேறு யாரோ எடுத்த புகைப்பட மாடலை காட்டி புகைப்படக்காரர்
கூற,
மோகன் வேகமாக
தலையசைக்க, "சார் இங்க கொஞ்சம் சரிவல் எல்லாம் பாசமா இருக்கும், இல்லனா வழுக்கற
மாதிரி புல்லு இருக்கும். இதெல்லாம் தேவையா?" என்று மோகனிடம் கேட்டாள்.
"நான்
யூத்ஃபுல்லா இருக்க நினைக்கிறேன். நீ ஏன் இப்படி கிழவி போல பேசுற?" என்று அவளை
அடக்கி அப்புகைப்படம் எடுக்க ஏற்பாடு ஆனது.
முன்னே நடந்து
வருவது போல எழிலுக்கு ஒருவர் நடை சொல்லிக் கொடுக்க வந்த கோபத்தை மறைத்துக் கொண்டு,
அவர் பணம் கொடுத்து வாங்கிய பொருள். அவர் அதை விருப்படி பயன்படுத்துகிறார். இதற்கே
தான் சுணங்கினால் திருமணத்துக்கு பின் அவரோடு வாழ்வது எப்படி என்று தன்னைத் தானே கேட்டுக்
கொண்டு அவர்கள் பயிற்றுவித்தது போலவே நடை பயின்றாள் எழில்.
"சார்
நீங்க வாங்க" என்று கேமராமேன் குரல் கொடுக்க முகட்டின் ஓரத்தில் நின்றிருந்த மோகன்
ஆர்வமாக காலை எடுத்து எக்கி குதிக்க, அதுவோ அவரை வழுக்கி பின்னோக்கி விழ வைத்தது.
அவரின்
"ஐயோ" என்ற அலறல் கேட்டு எழில் பின்னால் ஓட, முகடின் நுனியை பற்றி தொங்கிக்
கொண்டிருந்தார்.
எப்படியும்
பிடித்து காப்பாற்றி விடலாம் என்று தான் அனைவரும் நம்பினர்.
எவ்வளவோ போராடி
அவரை அங்கிருந்து மேலேயும் ஏற்றி விட்டனர். ஆனால் அவர் தான் எழுந்து கொள்ளவில்லை.
விழுந்த அதிர்வில்
மயங்கி இருப்பார் என்று எண்ணி அனைவரும் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல,
அவரின் உயிர்
பிரிந்து விட்டது என்பதை உறுதி செய்த முதல் ஆள் ஶ்ரீதரன் தான்.
எழிலுக்கு என்ன
நடந்தது என்று புரிந்து கொள்ளவே நேரம் பிடித்தது. ஆனால் அப்பொழுதும் தந்தையை அவள் உலுக்கினாள்.
"நாங்க
தான் விழாம தூக்கிட்டோமே பா?" என்று மரத்த குரலில் வினவ,
"அவருக்கு
கீழ விழவும் பயத்துல மேசிவ் ஹார்ட் அட்டாக் மா. பயம் மனுஷ உயிரை குடிச்சுடுச்சு."
என்று அருகில் இருந்த மருத்துவர் தான் எழிலுக்கு விளக்கினார்.
ஒரு நிமிடம்
தான். அவள் வாழ்க்கை சூனியம் ஆனது. அருகில் இருந்த அனைவரும் ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர்.
அதில் எழிலின்
ராசி தொடங்கி, சரோஜாவின் அலட்டல், மோகனின் ஆசை, அவர் வயது என்று அனைத்தும் மருத்துவமனை
வாசலிலேயே அலசப்பட்டது.
ஆனால் இதை எல்லாம்
விட பெரிய கொடுமையை எழிலுக்கு செய்ய தயாரானார் சரோஜா.
மோகனின் உடலை
பெற்றுக்கொள்ள பெரியவர் குணசேகரனும் தர்மாவும் வந்திருந்தனர்.
அவர்கள் முன்னே
சென்ற சரோஜா, "யோவ் பெரிய மனுஷங்களா? உங்க சொந்தக்காரன்னு சொல்லி தானே கல்யாணத்துக்கு
சம்மதம் சொன்னேன். இப்போ அவன் இந்த வயசுலேயே வியாதி வந்து இறந்து போயிட்டான். இப்போ
ஊரு என் பொண்ணை தானே தப்பா பேசும்? என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லிட்டு பிணத்தை வாங்குங்க"
என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதை சற்றும்
எதிர்பாராத அனைவரும் திகைக்க, எழில் இதையெல்லாம் உணரும் மனநிலையில் இல்லாமல் இருந்தாள்.
அவளுக்கு மனம்
முழுவதும், அவ்வளவு சிரமப்பட்டு அவர் விழுந்து விடக் கூடாது என்று காப்பாற்றியும் பலன்
இல்லையே என்று எண்ணிக் கொண்டவள், அவள் அந்த இடம் வழுக்கும் என்று சொல்லியும் அவர்கள்
யாரும் அவள் பேச்சைக் கேட்காமல் இப்படி எடுத்தால் தான் இளமையாக இருக்கும், அழகாக, துள்ளலாக,
மற்றவரை கவரும் விதமாக இருக்கும் என்று பூசி மொழுகி, கடைசியில் விழுந்து விடுவோமோ என்ற
பயமே அவரை கொன்று விட்டது.
ஒருவேளை அவர்
தவறி விழுந்திருந்தால் எழில் மீது கண்டிப்பாக வழக்கு விசாரணை எல்லாம் நடந்திருக்கும்.
அது வரையில் அவர் மரணம் இயற்கையானதாக போனதால் எழில் தப்பினாள் என்று அவளுக்குள்ளேயே
அவள் குமைந்து கொண்டிருக்க,
அவள் கைகளை
பற்றி இழுத்து நடுவில் நிறுத்தினான் தர்மா.
"வாயை
திறந்து பேசு. உன் அம்மா என்ன சொல்றாங்க பாரு" என்று கத்த,
அவளுக்கு தான்
இங்கே என்ன நடந்தது என்றே தெரியாதே, அதனால்,
"என்ன
ஆச்சு அண்ணா?" என்று திருதிருத்தாள்.
"உன் அம்மா
என்ன பேசுறாங்கன்னு உனக்கு புரியலையா? நானா உன்னை மோகன் அத்தானை கல்யாணம் பண்ணிக்க
சொன்னேன்? அவர் என் சொந்தம்னு அவருக்காக உன்கிட்ட நான் வந்து பேசினேனா?" என்று
அவளை இரு கரங்களையும் பற்றி உலுக்க,
வலி தாளாமல்,
"அண்ணா வலிக்குது. நீங்க அப்படி எதுவும் சொல்லல. அவரை கல்யாணம் பண்றது தேவையான்னு
தான் யோசிக்க சொன்னிங்க" என்று எழில் உண்மையைப் பேச,
இப்பொழுது அவளை
இழுப்பது சரோஜாவின் முறையானது.
"உளறாத.
லட்சலட்சமா இந்த கல்யாணத்துக்கு செலவு பண்ணி இருக்கேன். நான் சொல்றதை கேட்டு தலையாட்டு.
இல்லனா ரொம்ப கஷ்டப்படுவ. இந்த சந்தர்பத்தை விட்டா உனக்கு கல்யாணம் நடக்காது எழில்"
என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு,
"இங்க
பாரு தர்மா என் பொண்ணை மிரட்டுற வேலையெல்லாம் வச்சுக்காத. நான் சொன்னது சொன்னது தான்.
குறிச்ச தேதில நீ என் பொண்ணு கழுத்துல தாலி கட்டணும். உன் சொந்தக்காரன் செத்த காரணத்தை
எல்லாம் நீ சொல்ல முடியாது. கன்னிப் பொண்ணு சாபம் உங்களை சும்மா விடாது." என்று
தைரியமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் சொல்லி
முடித்து தான் தாமதம், "ச்சீ" என்று கையை உதறிக்கொண்டு அன்னையிடமிருந்து
திமிறி விலகினாள் எழில்.
"என்னம்மா
பேசுற? தர்மா அண்ணன் எனக்கு கூடப் பிறக்காத அண்ணன் மாதிரி மா. அன்னைக்கு கூட என் நல்லதுக்கு
தான் வந்து அட்வைஸ் பண்ணிட்டு போனாரு. அவரைப் போய்…" என்று எழில் மறுக்க,
"அண்ணன்னு
வாய்ல கூப்பிட்டா அவன் அண்ணன் ஆகிடுவானா? இங்க பாரு இப்போதான் ஒருத்தன் செத்து போயிருக்கான்.
தேவையில்லாம பேசி வேற எதையும் கிளறாம நான் சொன்னதை செய்." என்று மிரட்ட,
சரோஜா விழுந்து
விழுந்து போட்ட நாடகங்கள் யாவும் எழிலின் முடியவே முடியாது என்ற பிடிவாததில் தவிடு
பொடியானது.
தர்மாவும் குணசேகரனும்
மறுக்க, எழில் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் முடியாது என்று மறுத்து விட, ஶ்ரீதரன்
யோசிக்காமல் மகள் பக்கம் நின்றார்.
சரோஜாவும் அனைவருக்கும்
எத்தனையோ ஆசை வார்த்தை, மிரட்டல் எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் அன்று என்னவோ அவரது
எந்த முயற்சியும் வெற்றி பெறாமல் எழில் திருமணம் நின்றதோடு, கடன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது.
தங்கள் பெயர்
சொல்லி வாங்கிய கடனுக்காக சரோஜாவை வேலையில் வைத்துக் கொண்டார் குணசேகரன்.
ஆனால் எழிலை
வர வேண்டாம் என்று தர்மா கூற,
"கூப்பிட்டாலும்
வரல அண்ணா" என்று மறுத்துச் சென்றாள் எழில்.
அன்று முதல்
ஊரார் எழிலை எதுவும் சொன்னதில்லை. ஆனால் சரோஜாவை வறுக்காத நாளே கிடையாது.
இன்னும் இதையே
காரணம் காட்டி தர்மா அவள் போகும் இடத்தில் எல்லாம் கோபம் கொள்வதும் உதாசீனம் செய்வதும்
என்று சரோஜாவின் மகளாக மட்டுமே எழிலை பார்க்க ஆரம்பித்தான். என்று தன் வாழ்க்கையின்
வருத்தம் நிறைந்த பக்கங்களை கூறி முடித்தாள் எழில்.

கருத்துகள்
கருத்துரையிடுக