சாரல் 38 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 38
தனக்கு நல்லது
மட்டுமே நினைக்கும் தந்தை இந்த திருமணம் உன் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் என்று சொன்ன
பின் எழில் அமைதியாக திருமணத்திற்கு சம்மதித்தாள்.
புகழ் கூட முதலில்
அன்னை மாப்பிள்ளையின் வயதைக் கூறியதும், “என்னம்மா நம்ம அக்காவுக்கு நல்ல மாப்பிள்ளை
கிடைக்கும் எதுக்கு அவசரப்பட்டு முப்பத்தி ஏழு வயதுள்ள ஆளுக்கு கொடுக்கணும்?” என்று
கேட்டான்.
"டேய்
நீ வயசை பார்க்கற. அம்மா காசை பார்க்கறேன் டா. அவரு ஒத்த ஆளு. எக்கச்சக்க சொத்து, உன்னை
வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி இருக்கார் டா. என்ன ரெண்டு பேருக்கும்
பதிமூனு வருஷம் வித்தியாசம். அந்த காலத்துல இருபது வயசு வித்தியாசத்தில் கூட கல்யாணம்
பண்ணினாங்க டா." என்று அவனை பேசிப் பேசிக் கரைத்தார்.
ஏனெனில் வந்த
மாப்பிள்ளையையும் பேசி பேசி தான் தன் வழிக்கு கொண்டு வந்திருந்தார். அவர் பெண் கேட்டவுடன்
எல்லாம் சரோஜா தலையசைக்கவில்லை. அவரின் சொத்து விபரம் முதல் குடும்ப நிலவரம் வரை கேட்டு,
தன் மகனுக்கு வெளிநாட்டில் வேலை, இவர்கள் இங்கு கவுரவமாக வாழ பெரிய வீடு எல்லாம் கேட்டு
அதற்கு மோகனரங்கம் ஒப்புக் கொண்ட பின்னர் தான் சரோஜா இந்த திருமணத்துக்குச் சம்மதம்
தெரிவித்தார்.
அதே போல ஶ்ரீதரன்
அவ்வளவு எளிதில் இத்தனை ஏற்கவில்லை. ஒரே வாக்கியத்தில் அவரின் வாயை அடைத்து சம்மதிக்க
வைக்கும் ஆற்றல் சரோஜாவிடம் இருந்தது.
"அவளாவது
நல்லா வாழட்டும்" என்று அவர் மோகனரங்கன் குறிப்பிட்ட சொத்து விபரங்கள், இது அத்தனைக்கும்
அவர்கள் மகள் தான் ராணி என்று அவரை மகளைக் கொண்டு கனவு காண வைத்து சம்மதிக்க வைத்தார்.
எழிலை பற்றி
அவர் நினைக்கவே இல்லை. ஏனெனில், மாட்டேன் என்று சொல்லும் உரிமை அவளுக்கு இல்லை என்றே
எண்ணினார் சரோஜா.
அவருக்கு கட்டளையிடும்
வேலையை கூட எழில் வைக்கவில்லை. தந்தை சொன்னதும் அவள் தலையசைத்து உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் தான் ஏற்கனவே
மோகனரங்கத்தைப் பார்த்து விட்டாளே. அவ்வளவு வயது என்று சொன்னால் தான் தெரியும். மற்றபடி
ஓரளவு முதிர்ந்த இளைஞர். தோற்றத்தை வைத்து எழில் என்றும் எடை போட்டதில்லை. அவள் மனதில்
தந்தை சொன்ன பின் தட்ட முடியவில்லை என்பதையும் தாண்டி, சரோஜாவை விட்டு வெகு தொலைவு
சென்று சிரமம் கொண்டால் கூட அது நிம்மதி தான் என்ற நிலையை எழில் அடைந்திருந்தாள்.
பெற்றெடுத்த
அன்னை, சீராட்டி பாராட்டி வளர்க்காமல் போனாலும், சமீபகாலமாக திருமணச் சந்தையில் தன்னை
ஆடாக நிறுத்தி விலை பேசிய விதத்தில் வெறுத்துப் போனாள்.
அவர்கள் தந்தை
வழி சொந்தத்தில் ஒருவர் பெண் கேட்டு வந்தபோது சரோஜா அவரை பேசிய பேச்சுகள் யாவும் அவரை
கிழித்ததோ இல்லையோ, தன்மானம் மிக்கப் பொருந்திய எழிலை வெகுவாக கிழித்து எறிந்தது.
ஒருவேளை இந்த
திருமணம் நிகழ்ந்து அன்னையின் ஆசை நிறைவேறிவிட்டால். அந்த வாழ்கையில் வரும் இன்ப துன்பங்களை
சமாளிப்போம் என்று தன்மானத்தை தூரமாக வைத்து திருமணத்துக்கு தயாரானாள்.
பெரியவரும்
தர்மாவும் எவ்வளவோ சொல்லியும் மோகன் கேட்காமல் பிடிவாதம் பிடிக்க,
"சரி கல்யாண
செலவெல்லாம் பொண்ணு வீட்டுது தான்" என்று சரோஜாவை முடக்க பெரியவர் திட்டம் போட,
அதை தூசி போல
வட்டிக்கு கடன் வாங்கி செய்துவிட்டு மாப்பிள்ளையிடம் திருமணத்திற்கு பின் வாங்கிக்
கொள்ள முடிவு செய்த சரோஜா அதையே மோகனிடம் கேட்க, ‘பொண்ணு கொடுக்கும் மகராசி’ சொன்னதெல்லாம்
மறுவார்த்தை இன்றி உத்தரவானது அவருக்கு.
இப்படித்தான்
புகழின் படிப்புக்கான கடன் போக எழில் திருமணத்துக்கு என்று சரோஜா கடன் வாங்கினாள்.
அவளா திருப்பித்
தரப்போகிறாள் என்ற எண்ணத்தில் பணத்தை தண்ணீராக இரைத்தனர் சரோஜாவும் புகழும்.
புகழுக்கு பாஸ்போர்ட்
விண்ணப்பித்து, மண்டபம், வீடியோ, போட்டோ, விருந்து என்று எல்லாவற்றுக்கும் முன் பணம்
கொடுத்து தடபுடல் செய்து விட்டார் சரோஜா.
இப்படியான சூழலில்
தான் தர்மா மீண்டும் எழிலை சந்தித்தது.
"என்னம்மா
எழில் நான் அவ்வளவு தூரம் உனக்கு சொல்லியும் நீ என் பேச்சைக் கேட்கலையே!" என்று
வருத்தமாக வினவ,
"அப்பாவே
கல்யாணம் பண்ணிக்க சொல்லிட்டார் அண்ணா. எப்படி தட்டிப் பேசுறது. அதுவும் இல்லாம அவர்
ஒன்னும் மோசமான ஆளா தெரியல. வயசு கூட. அவ்வளவு தானே பார்த்து சமாளிச்சு வாழ்ந்துக்குவேன்
தர்மா அண்ணா." என்று பதில் கொடுத்தாள்.
"என்னவோ
போ. எனக்கு இது ஒன்னும் சரியா படல. அவர் வயசுக்கு தக்க நடந்த மாதிரி இந்த கொஞ்ச நாள்ல
எனக்கு தெரியல எழில். நீ சின்ன பொண்ணு. கல்யாணம் பண்ணி தெரியாத ஊருக்கு போய் அவரோட
என்ன செய்வ? அம்மா அப்பா சொல்றது எல்லாமே நல்லதுக்கு இல்ல மா. சிலதை நீ புரிஞ்சுக்கணும்."
என்று சரோஜாவை அடிக்கோடிட்டு அவன் பேச,
"உங்க
அப்பா சொன்னா நீங்க தட்ட மாட்டீங்க தானே அண்ணா. அப்ப நானும் அப்படிதான். எங்கப்பா சொன்னா
தட்ட மாட்டேன்." என்று அழுத்தமாக சொல்லி தன் வேலையை கவனிக்கலானாள்.
இதற்கு மேல்
சொல்லி பயனில்லை என்று உணர்ந்த தர்மா விலகிக் கொள்ள, திருமண செலவுகளுக்கு பணம் போதாமல்
வேறு ஒருவரிடம் தர்மாவின் பெயரைச் சொல்லி உறவுக்காரி என்று காட்டி பணத்தை கடன் வாங்கினார்
சரோஜா.
வீடு வீடாக
பத்திரிகை வைக்க செல்லும்போது அவர்கள் எல்லாம் உணவுக்கு வழியில்லாதவர்கள் போல பேசி,
அவரிடம் பணம் இருப்பதாகவும் மாப்பிள்ளை கொழுத்த பணக்காரர் என்றும் சரோஜா காட்டிக்கொள்ள,
ஊரார் அவரை தூற்றி ஒதுக்கினர்.
புகழும் பைக்கை
எடுத்துகொண்டு ஊராரிடம் வம்பு வளர்த்து திரிந்தான்.
எல்லாமே ஒருநாள்
முடிவுக்கு வந்தது.
ஆம் அனைத்துக்கும்
முற்றுப்புள்ளி வைக்கும் நாளும் நிதானமாக விடிந்தது.
எழில் வாசல்
தெளிக்கும் நேரம் காரில் வந்து இறங்கிய மோகனரங்கன்,
"அத்தை
எங்க கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு. அதுனால நான் பிரீ வெட்டிங் போட்டோ
ஷூட் பண்ண ஊர்ல இருந்து ஆள் அழைச்சிட்டு வந்திருக்கேன்." என்று ஒப்புதல் பெற்று
எழிலை போட்டோ எடுக்க அழைத்துச் சென்றான்.
அவளும் ஏதோ
நிற்க வைத்து நாலு போட்டோ எடுத்துவிட்டு அனுப்பி விடுவர் என்று நினைத்து வர,
அவர்களோ ஏதோ
திரைப்பட பாடல் போல ஒன்றை ஒலிக்க விட்டு வித விதமான உடையில் இருவரும் நடனமாடுவது, மரக்களையில்
சாய்ந்து நின்று காதல் செய்வது, மலை முகட்டில் முத்தம் வைப்பது என்று காட்சிகளை இருவருக்கும்
விவரிக்க, மோகனின் முகத்தில் ஆசை ஜொலிக்க, எழிலோ ஐயோ என்று முகத்தை சுருக்கி தன்னை
நொந்தபடி இதெல்லாம் வேண்டாம் என்று மன்றாடினாள்.
ஆனால் விதி
யாரை விட்டு வைத்தது?

கருத்துகள்
கருத்துரையிடுக