சாரல் 37 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 37
எழிலிசை கல்லூரி இறுதியாண்டு முடித்துவிட்டு வீட்டில் இருந்த நேரம் அது.
சரோஜா சிறுவயது முதலே அவளை ஒரு மாதிரியும் புகழை ஒரு மாதிரியும் நடத்துவதை அறிந்து கொண்ட எழில் அதிகம் எதையும் எதிர்பார்க்காத குணத்தை வளர்த்துக் கொண்டாள். தந்தை அவள் ஆசைப்பட்டதை செய்ய முயல்வதைக் கண்டவள், அதற்காக அவர் படும் சிரமத்தை ஓரிரு முறை கண்டுகொண்டு அதன் பின் தன் ஆசைகளை வெளியே கூறுவதை குறைத்துக் கொண்டாள். அவளுக்கு இன்னது படிக்க வேண்டும் என்ற ஆசையை கூட அவள் வளர்த்துக்கொள்ள வில்லை. அதனால் தான் சரோஜா அவளை தமிழில் சேர்த்துவிட்டு வந்த போதும் அதை ஏற்று அமைதியாக படித்து முடித்தாள்.
அவளது பேராசிரியர் அவளை எம்.ஏ படிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தார்
"நீ எம்.ஏ படி எழில் நானே உனக்கு காலேஜ்ல ஜூனியர் லெக்சரர் வேலை வாங்கித் தரேன். வேலையோட எம். ஃபில் முடிச்சிட்டன்னா லெக்சரர் ஆகிடலாம். உன் வாழ்க்கை செட்டில் ஆகிடும் மா." என்று எடுத்துக் கூற, அன்னையின் மனநிலையும் வீட்டின் பணநிலையும் அறிந்தவள்,
"இல்ல மேடம், இது போதும். நான் டியுஷன் எடுத்து சமாளிச்சுக்கறேன். இதுக்கு மேல வீட்ல படிக்க வைக்க வசதி இல்ல" என்று சொல்லிவிட்டு தான் கடைசி நாள் திரும்பி இருந்தாள்.
இதே யோசனையுடன் செல்போனில் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தான் ரவியின் சேனலை முதன் முதலில் நோக்கினாள்.
எந்த கவலையும் இல்லாத பட்டாம்பூச்சி போல தனக்கென்று ஒரு வாகனத்தை வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று அங்கிருக்கும் அழகை ரசித்து, கடவுள்களை வணங்கி, அருவியின் குளித்து, அவன் காட்டிய இயற்கை எழிலில் எதற்கும் ஆசைப்படாத எழிலுக்கே அந்த இயற்கையில் கரைந்து போக ஆசை வந்தது.
இத்தனைக்கும் ஆனைமலை ஒன்றும் இயற்கை குறைவான இடமில்லை என்றாலும் அவள் ஒன்னும் பட்டாம்பூச்சி இல்லையே என்ற ஏக்கம் பிறந்தது.
இப்படியான சூழலில் எழிலை வேலைக்கு போகச் சொல்லி சரோஜா கூற,
"அம்மா நான் படிச்சது தமிழ், என்னை டியூஷன் எடுக்க விட்டா நான் சம்பாதிச்சு தருவேன் மா. கடையில நாள் முழுக்க நின்னு சேல்ஸ் பார்க்க நான் ஏன் மா மூணு வருஷம் கஷ்டபட்டு தமிழ் படிக்கணும்." என்று முதல் முறையாக சரோஜாவை எதிர்த்து கேள்வி கேட்டாள் எழில்.
அவளை முறைத்த சரோஜா, "இங்க பாரு உன்னை படிக்க வச்சது வேலை பார்க்க இல்ல, என் பொண்ணும் படிச்சு இருக்கான்னு காட்டி பெரிய இடத்துல கட்டிக் கொடுக்க தான். எங்க கடைக்கு வேலைக்கு வர சொல்லி கூப்பிடுவேன் தான். ஆனா அங்க வந்தும் நீ நேர்மை எருமைன்னு என்னை இம்சை பண்ணுவ. அதான் ஓனர் கிட்ட கேட்டு அவரோட துணிக் கடை இல்லன்னா காம்ப்ளெக்ஸ்ல வேலை போட்டு தர சொல்லி இருக்கேன்" என்று பேசினார்.
அன்னையின் மனம் புரிந்ததும் எழிலின் மனம் வாடிப் போனது. தன்னை படிக்க வைத்தார் என்ற நன்றியில் அவரை எதிர்த்து பேசத் துணியாமல் இருந்தவளுக்கு அவரின் காரணம் புரிந்ததும் ச்சீ என்று போனது. அன்றிலிருந்து அன்னை என்று இத்தனை நாள் செலுத்தி வந்த பாசம் கூட நின்று போனது எழிலுக்கு.
கடனே என்று வீட்டு வேலைகளை கவனித்துவிட்டு சில வருடங்கள் வீட்டில் டியூஷன் எடுத்தாள் எழில். அதில் வருமானம் இல்லை என்று சரோஜா அவளை அரித்து எடுக்க வேறு வழி இல்லாமல் வேலன் எண்டர்பிரைஸ் முதலாளி குணசேகரனிடம் வேலை கேட்டு நின்றாள்.
அவரும் அவள் படித்த பெண் என்பதால் அவர்களின் துணிக்கடை ஒன்றை கவனித்துக் கொள்ளும்படி கூறினார். அவளும் அங்கிருக்கும் விற்பனை பெண்களுக்கு தேவையான சில அடிப்படை வசதிகளை அவர்களுக்காக அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொடுக்க தன்னை விட சிறியவள் மேற்பார்வையாளரா என்ற அப்பெண்களின் புகைச்சல் எரிச்சல் எல்லாம் முடிவுக்கு வந்து எழிலை அன்புடன் நடத்தினர்.
எல்லாம் ஆறு மாதங்கள் வரை நன்றாக சென்று கொண்டிருந்தது. அவளின் சம்பளத்தை நேரடியாக சரோஜாவே முதலாளியிடம் பெற்றுக்கொள்ள இரண்டு மாதத்தில் அவளது வேலைத்திறன் மற்றும் நல்ல குணத்தைக் கண்டு அவளிடம் பேட்டா என்று தனியாக ஒரு தொகையை கொடுக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் அவரது தங்கை மகன் அவரை சந்திக்க மும்பையிலிருந்து வந்திருந்தார். அவர் வந்த காரணம் என்னவோ டாப்சிலிப் சென்று சுற்றுலா போல நாட்களை கழிக்க தான். வழியில் மாமனையும் சந்தித்து செல்லும் நோக்கில் வந்தார். இரண்டு நாட்களுக்குப் பின் மாமாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப அவரைத் தேடினார்.
அவர் தன் மாமாவைத் தேடி அவரது காம்ப்ளெக்ஸ், கடைகள் என்று அன்று அலைய அவரோ ஏதோ வேலையாக ஆனைமலை வரை சென்றிருந்தார்.
இதை எழில் தான் அவருக்கு கூறினாள்.
முதலில் வாடிக்கையாளர் என்று நினைத்து அழைத்து உபசரித்து என்ன வாங்க வேண்டும் என்று வினவி, அவர் கடை முதலாளி தர்மாவின் தந்தை குணசேகரனைத் தேடி வந்தது தெரிந்ததும், அவர் யாரென்று விசாரித்து பெரியவர் எங்கே என்று விசாரித்து அவரை மேலும் அலைய விடாமல் செய்த எழிலின் நடவடிக்கை பிடித்துப் போனது அவருக்கு.
அவரை அவர் அவர் என்று சொல்லக் காரணம், அவருக்கு வயது முப்பத்தி ஏழு.
அவருக்கு எழிலை பிடித்திருப்பதாக தனது மாமாவிடம் அவர் தெரிவிக்க, அவரோ வயதை காரணம் காட்டி வேண்டாமே என்று சொல்ல, பிடிவாதமாக நின்று சரோஜாவை சந்திந்து எழிலை பெண் கேட்டார்.
விஷயம் தர்மா காதுக்கு போக, எழில் அவன் கடைக்கு வரும்போதெல்லாம் 'அண்ணா அண்ணா' என்று அன்புடன் பழகுவதால், நேராக எழிலிடம் வந்தான்.
"இந்த கல்யாணம் உனக்கு தேவையா எழில்? அவருக்கு என்னை விட வயசு கூட, அதுவும் இல்லாம அவர் இத்தனை வருஷம் எங்க கூட எந்த தொடர்பிலும் இல்ல. அவர் வாழ்க்கை முறை எப்படின்னு கூட எங்களுக்கு தெரியாது. உங்க அம்மா அவர் பொண்ணு கேட்டு போனதும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க. நீயாவது அவங்களுக்கு எடுத்து சொல்லு. உனக்கு வயசும் இருக்கு, நல்ல வாழ்க்கையும் இருக்கு. உன் அம்மா அவசரத்துக்கு நீயும் சரின்னு சொல்லாத." என்று அறிவுரை வழங்கிச் சென்றான்.
அவன் சொல்வதும் சரிதானே, அன்னையிடம் இதனைப் பற்றி பேசி புரிய வைப்போம் என்ற எண்ணத்துடன் வீட்டிற்கு வந்தவளுக்கு அவளது அன்னை தந்தையை சமாதானம் செய்து இந்த திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்திருந்ததைக் கண்டு பேரதிர்ச்சி பிறந்தது.
அவள் நடந்ததை நம்ப முடியாமல் தந்தை அருகில் சென்று நிற்க, "உனக்கு இந்த அட்டைபெட்டி வீட்டுல இருந்து விடுதலை கிடைக்கும் செல்லம். அதுவும் இல்லாம அவர் உன்னை விரும்பி கேட்கிறார். நல்லபடியா வச்சுக்குவார். உன் வாழ்க்கை நல்லா இருக்கும் செல்லம்." என்று ஶ்ரீதரன் கூறியதும் எழில் மௌனியானாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக