சாரல் 36 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 36

 


ரவி வெளியே சென்றிருப்பதை அவனது வேன் இல்லாததை வைத்து அறிந்த ரகுராமும் வைதீஸ்வரியும் ராகினியிடம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பினர்.

 

"புடவை மட்டும் போதுமா, நகை எடுக்கணுமா ஈஸ்வரி?" என்று ரகுராம் மனைவியிடம் கேட்க,

 

"இப்போதைக்கு புடவை போதும்ங்க. இவங்க கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் நகை எங்க போகுது, வாங்கிக் கொடுக்கலாம். இப்போதைக்கு பணத்தை இவங்க பேர்ல டெபாசிட் பண்ணி வைங்க தேவைக்கு கொடுத்து உதவலாம்." என்றார்.

 

"எனக்கு ரவி மேல நம்பிக்கை இருக்கு ஈஸ்வரி, அந்த பொண்ணு எழிலும் சிக்கனமா இருக்குற மாதிரி தான் தெரியுது. ராகினி தான் பிரச்சனை. அதுக்கும் இவங்க ரெண்டு பேரும் வழி பண்ணிடுவாங்க." என்று மனைவியை சமாதானம் செய்து பட்டுப் புடவை எடுக்க புறப்பட்டுச் சென்றனர்.

 

வீட்டில் தனியே இருந்த ராகினி பொழுது போகாமல் இன்ஸ்டாகிராமில் சுற்றிக்கொண்டு இருக்க, அவளது மாமன் மகன் பிரதீஷ் ஏதோ ஒரு மாலில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி இருந்தான். அதைக் கண்டு கோபத்துடன் அவனுக்கு அதிலேயே தனிச் செய்தியாக அனுப்பினாள்.

 

"உன் அப்பா என் அப்பா கிட்ட வந்து உனக்காக என்னை பொண்ணு கேட்ட அன்னைக்கு நீ என்ன சொன்ன? மாமா ஏன் ஒத்துக்க மாட்டேன்றாரு இப்போவே கல்யாணம் பண்ணி வைக்கலன்னா உன்னை தூக்கிட்டு போயிடுவேன்னு சொல்லவா? அப்பவாவது மாமா ஓகே சொல்லுவாரா? இப்படி தானே பேசின? என் அப்பா அம்மா இல்லாம போனதும், காசு இல்லன்னு தெரிஞ்சதும் அப்படியே மாறிட்ட தானே! உன்னை நினைக்கவே எரிச்சலா இருக்கு." என்று அனுப்பிவிட்டு அவனை பின் தொடர்வதை திரும்பப் பெற்றுக் கொண்டாள்.

 

எரிச்சல் மிகுதியாக வெளியே வந்து நின்றவள் சரோஜா ஏதோ புலம்பியபடி வாசலில் அமர்ந்திருப்பதை கண்டு மேலும் எரிச்சல் வர காலாற நடக்க ஆரம்பித்தாள்.

 

ரவி எங்கோ வெளியே சென்று இருந்தவன் கேட்டுக்குள் வாகனத்தை கொண்டு வந்து விட்டு எதிரே தங்கை செல்வதைக் கண்டு ஹார்ன் அடித்தான்.

 

அவளும் வண்டியைப் பார்த்ததும் திரும்பி வந்தாள்.

 

"எங்க போயிருந்த?" என்று வினவ,

 

"ஒரு சின்ன வேலையா போனேன். பெரியப்பா எங்க?" என்று கேட்க,

 

"ஏதோ வாங்கணுமாம் வெளில போயிருக்காங்க." என்று எரிச்சலாக கூறினாள்.

 

அவன் அதை கண்டுகொள்ளாது கைபேசியில் புகழை அழைத்தான்.

 

"சொல்லுங்க மாமா." என்று உடனே ஏற்றவனை எண்ணி முகிழ்ந்த புன்னகையுடன்,

 

"நீயும் உன் அக்காவும் கொஞ்சம் இங்க வாங்களேன். பேசணும்." என்று அழைத்தான்.

 

"அக்கா..." என்று இழுக்க,

 

"கூட்டிட்டு வா. நான் ஒன்னும் செய்ய மாட்டேன்." என்று சிரித்தபடி கூற,

 

"ஐயோ அப்படி எல்லாம் நினைக்கல மாமா. அம்மா வாசல்ல உட்கார்ந்து இருக்காங்க. பின்னாடியே வந்து சண்டை போட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சேன்." என்றான் தயக்கமாக.

 

"அட உன் அக்காவை கல்யாணம் பண்ணி இனி வாழ்க்கை முழுக்க இவங்க என்ன சொல்லுவாங்கன்னு பயந்தே வாழ முடியுமா? சண்டைக்கு வந்தா வரட்டும். நாமளும் சண்டை போடலாம்." என்று சிரித்தான்.

 

"சரி மாமா." என்று புகழ் எழிலை அழைத்துக் கொண்டு வந்தான்.

 

எழில் வாடிய முகத்துடன் வந்தவள் அமைதியாக ரவீந்தர் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

 

புகழும் அவளருகில் அமர, "ராகினி இங்க வா." என்று அவளையும் அழைத்து அமர வைத்தவன் ஒரு பத்திரத்தை எடுத்து டேபிளில் வைத்தான் . மூவரும் புரியாமல் அவனை நோக்க,

 

"எடுத்து பாரு புகழ்." என்று கூறியதும், அவன் பார்த்துவிட்டு,

 

"என்ன மாமா இது?" என்று திகைத்தான்.

 

"அது அந்த காம்ப்ளெக்ஸ் ஓனர் கூட உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்னல்ல அதான் நான் போய் கேட்டேன். எனக்கு சாதா விலையில கடையை வாடகைக்கு தர சம்மதிச்சாரு மிஸ்டர் தர்மா. நீ சொன்ன மாதிரி அவர் அப்படி ஒன்னும் வில்லங்கமான ஆளா தெரியல. அவர் சரின்னு சொல்லவும் நானும் உடனே அக்ரிமென்ட் போட்டுட்டு வந்துட்டேன்." என்றான் சாதாரணமாக.

 

"ஆனா உடனே பத்திரம்?" என்று எழில் இழுக்க,

 

"அவருக்கு நான் யாருன்னு தெரிஞ்சா கண்டிப்பா கொடுக்க மாட்டார்ல, அதான் ஏற்கனவே இந்த இடம் ரெஜிஸ்டர் பண்ண, கன்டெய்னர் ஆபிஸ் அது இதுன்னு தேவைப்படுதேன்னு 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் எக்ஸ்ட்ரா வச்சிருந்தேன். அதையும் கையோட எடுத்துட்டு போனேன். அவர் வாடகைக்கு தர்றேன்னு சொன்னதும், தேவையானதை  மொபைல்ல டைப் பண்ணி அவங்க பிரிண்டர்லயே பிரிண்ட் போட்டு கையெழுத்து வாங்கிட்டேன்.

 

இது ஒன்னும் இடம் வாங்கி விக்கிற மாதிரி பெரிய பிராசஸ் இல்லையே. ரெண்டு பார்ட்டிக்குள்ள வர்ற சாதாரண அக்ரிமென்ட் தானே. ரெஜிஸ்டர் பண்ண தேவையில்லை. கையெழுத்து இருந்தாலே செல்லும்" என்று சிரித்தான்.

 

"ஆனா நீங்க ஏன்?" என்று எழில் வினா எழுப்ப,

 

"நான் ஏன்னா? புகழுக்கு நான் செய்யணும்ல. அவனுக்கு என்ன தான் நான் வேலை போட்டு கொடுத்தாலும் நாளைக்கு அது பிரச்சனையில் முடிஞ்சா எல்லாருக்கும் மன சங்கடம் தானே? அதான் அவனுக்கு தொழில்னு வச்சுட்டா அவன் உழைப்புல அவன் மேல வந்திடுவான்." என்று அவனைத் தட்டிக் கொடுத்தான் ரவி.

 

புகழ் எழுந்து அவனை அணைத்துக் கொள்ள,

 

"இதை என் தங்கச்சிக்காக நான் செய்யல, உன் அக்காவுக்காகவும் செய்யல. உன் மேல உள்ள நம்பிக்கைல செஞ்சிருகேன். உன் அம்மாவுக்கு தெரிய வேண்டாம்." என்று கூறி அவனை ராகினியிடம் சற்று நேரம் பேசிச் செல்லுமாறு இருவரையும் அனுப்பி வைத்தான்.

 

எழில் ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க, "என்னா ஆச்சு இசை? ஏன் உன் முகம் இவ்வளவு வாட்டமா இருக்கு?" என்று அருகே வந்தான்.

 

"நீங்க அவசரப்படுறீங்க ரவி சார். ராகினி புகழ் கல்யாணமே அவசியமான்னு யோசிக்க வேண்டிய நேரத்துல என்னோட உங்க வாழ்க்கையை இணைக்க ஆசைப்படுறீங்க, எனக்கு இதுவே இன்னும் முழுசா ஜீரணிக்க முடியல. இதுல இந்த கடை, இதெல்லாம் நன்றிக் கடனா ஏறுது சார். எப்படி அடைக்கிறது?"என்று கண்களில் தேங்கி நின்ற நீரை தலை குனிந்து அவள் மறைத்துக் கொள்ள,

 

மெல்ல அவள் தாடை தொட்டு நிமிர்த்தி, "நான் கல்யாண விஷயம் சொல்லும் போது கூட உன்கிட்ட இவ்வளவு குழப்பமோ கலக்கமோ இல்லையே இசை. இப்போ என்ன திடீர்னு?" என்று தன் கண்களை அவள் கண்களுக்குள் ஊடுருவி அவளைத் திணறச் செய்தான்.

 

"எனக்கு பயமா இருக்கு." என்றாள் எழில் கண்ணீருடன்.

 

"ஏன் என்ன பயம்?" என்று அவளை தன்னருகே இழுத்து வைத்து, அவள் கண்ணீரை துடைத்தபடி வினவினான்.

 

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமாகி நின்னு போச்சு." என்று தயக்கமாகக் கூறினாள் எழில்.

 

"இது ஒன்னும் பெரிய விஷயம்  இல்லையே இசை. பல வீடுகள்ல ஏதோ காரணத்துக்காக ஏற்பாட்டை நிறுத்துறது இப்போ அடிக்கடி நடக்குதே!" என்று அவன் எதார்த்தமாக கூற,

 

"இங்க அப்படி இல்ல ரவி சார். கல்யாணத்தை யாரும் நிறுத்தல, தானே நின்னு போச்சு. ஏன்னா என் பக்கத்துல நிக்க வேண்டியவர் இல்லாமலே போனதுனால அதுவே நின்னு போச்சு." என்று முகத்தை மூடிக் கொண்டு கதறினாள்.

 

ரவி எதுவும் பேசாமல் அவளை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels