சாரல் 35 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 35
புகழ், ராகினி
தன்னிடம் பேசிய விஷயத்தை அசை போட்டபடி வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவனை இடையில் கைகாட்டி நிறுத்தினார் சாலமன்.
அவரைக் கண்டதும்
வாகனத்தின் வேகத்தைக் குறைத்து அருகே வந்து நின்றான் புகழ்.
"என்ன
சாலமன் தாத்தா, எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரிக்க,
"நான்
நல்லா இருக்கேன், அன்னைக்கு நீயும் எழிலும் வந்து கடைக்கு கேட்டிங்களே அப்பறம் அதை
ஒத்தி வச்சாச்சா?" என்றார் யோசனையாக.
"இல்ல
தாத்தா. பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். இடையில வேற சில பிரச்சனைகள் வேற"
என்று இழுத்த புகழைக் கண்டவர்,
"உண்மையா
உனக்கு நான் உதவி செய்யவே கூடாது. ஆனா உன் அக்காவோட நல்ல மனசுக்காக செய்ய ஆசைப்படுறேன்.
உங்க வீட்டு பிரச்சனை ஊர் பூரா மணக்கும் போது எனக்கு தெரியாம போகுமா? உனக்கு கல்யாணம்னு
கேள்விப்பட்டேன். தர்மா தம்பி அன்னைக்கு உங்க மேல உள்ள கோபத்தில் படி, வாடகை எல்லாத்தையும்
ரெண்டு மடங்கா சொல்லிடுச்சு. அதுனால நீங்க நேரா பெரியவரை பார்த்து வாடகைக்கு கேளுங்க.
போகும்போது தர்மா தம்பி இல்லாத நேரமா பார்த்து போங்க." என்று கூறினார்.
"ரொம்ப
நன்றி தாத்தா. நான் அன்னைக்கு அறிவு இல்லாம தப்பு பண்ணிட்டேன் தாத்தா. இனி அப்படியெல்லாம்
பண்ணவே மாட்டேன். அக்கா எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாங்கன்னு இப்போ எனக்கு புரிஞ்சுடுச்சு",
என்று அவன் உணர்ந்து கூற,
"எழில்
கிட்ட நீ உதவின்னு கேட்க கூட வேண்டாம் பா, உனக்கு கஷ்டம்ன்னு அவளுக்கு தெரிஞ்சாலே போதும்
ஓடி வந்து உதவி செய்வா. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத குணமான பிள்ளை அது. உன் அம்மா
அவளை பணம் கொண்டு வர்ற மிஷின் மாதிரி பார்க்கிறாங்க. ஏன் உன்னையும் அப்படி தான் பார்த்துட்டு
இருக்காங்க, என்ன நீ ஆம்பளை பையன் உன்கிட்ட முகம் காட்டினா கடைசி காலத்துல கஞ்சிக்கு
இல்லாம நிக்க வேண்டி வருமேன்னு கொஞ்சம் பிரியமா பேசி காரியம் சாதிக்கிறாங்க. ஆனா உன்
அக்கா பொம்பள பிள்ளை இல்லையா, போற வீட்டில கேட்டு இங்க பொருள் சேர்க்க அவ கிட்ட பாசம்
காட்ட வேண்டியது இல்லையே, திட்டி கொண்டு வான்னு சொன்னா போதும்ல" என்றவர்,
"என் பொண்டாட்டி
எஸ்தர் படுத்த படுக்கையா கிடந்தா. அப்ப எனக்கும் ரொம்ப பண முடை. கடன் வாங்கி செஞ்சும்
பத்தல. ஒருநாள் உன் அம்மா கொடுத்த வட்டிக் காசை ராமசாமி கிட்ட கொடுக்க வந்த எழில் நான்
கடன் கேட்டு நிக்கிறத பார்த்துட்டு உன் அப்பா கிட்ட சொல்லி, அவங்க ஆஸ்பத்தரி பெரிய
டாக்டர் கிட்ட பேசி, ஏதேதோ தன்னார்வ நிறுவன ஆளுங்க கிட்ட எல்லாம் கேட்டு எஸ்தர்க்கு
மருந்து வாங்கி கொடுக்க வச்சா. அவ கிட்ட இல்லனாலும் இருக்கறவங்க கிட்ட எனக்காக அவ உதவி
கேட்டு நின்னா. அந்த மனசு இருக்குல்ல புகழு… அது தெய்வத்துக்கு சமம். கடைசி காலத்துல
என் எஸ்தர் வலி இல்லாம கர்த்தர் கிட்ட போக எழில் தான் காரணம். அவளுக்காக மட்டும் தான்
உனக்கு இந்த தகவலை சொல்றேன் பா." என்று கூறிவிட்டு வேகமாக வழியைப் பார்த்து நடக்கலானார்.
புகழ் ஸ்தம்பித்து
சிலையென நின்றிருந்தான்.
அவன் அறிந்த
அவனது அக்கா எழில் அவனிடம் அன்பானவள். எத்தனையோ வலிகளை தாங்கி நிற்கும் தைரியம் உடையவள்.
ஆனால் அவளுக்கு பின்னால் இப்படி ஒரு தாய்மை குணமும், தேடிச் சென்று உதவும் உள்ளமும்
இருக்கும் என்று அவன் எண்ணியதே இல்லை.
தடுமாற்றத்துடன்
வாகனத்தை அவன் செலுத்திக் கொண்டு வர, அவனை தொலைவிலேயே கவனித்துவிட்ட ரவீந்தர் கை நீட்டினான்.
அவனும் சுய
உணர்வு பெற்று வாகனத்தை ரவியின் அருகில் நிறுத்தி, "சொல்லுங்க மாமா" என்று
பதற்றாக வினவ,
"ஏன் புகழ்
பதறிட்டு பேசுற? எங்க இருக்கு உன் எண்ணம் எல்லாம்? வண்டி ஓட்டிட்டு வந்த விதமே சரி
இல்லையே!" என்று கேட்க புகழ் தலை குனிந்தான்.
“என்னாச்சு?”
என்று ரவீந்தர் அழுத்திக் கேட்க,
சாலமன் தன்னிடம்
கூறியதை பகிர்ந்தான்.
கூடவே,
"என் அக்காவோட நல்ல மனசு புரியாம எங்கம்மா பேச்சைக் கேட்டு போன வருஷம் ரொம்ப ஆடிட்டேன்
மாமா. எனக்கே அசிங்கமா இருக்கு." என்று மனம் குமைந்தான்.
"விடு
புரியாம செஞ்சுட்ட. அதுக்காக இசை என்ன உன்னை வெறுத்து ஒதுக்கி வச்சாளா? இல்லையே! அது
தான் அவ குணம். இப்போவாவது புரிஞ்சுதேன்னு சந்தோஷப்படு." என்றவன்,
"ஆமா அந்த
காம்ப்ளக்ஸ் எங்க இருக்கு?" என்று கேட்டுவிட்டு நேரம் இருக்கும் போது இசையை சந்திக்க
வருவதாகக் கூறி புகழை அனுப்பினான்.
புகழும் ரவி
தன் அக்கா மேல் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் எண்ணி வியந்தவனாக வீட்டுக்குச்
சென்றான்.
வாசலில் அழுத
முகமாக அமர்ந்திருந்த சரோஜா மகனைக் கண்டதும்,
"வா டா
வா. உன் அப்பா என்னை கை நீட்டி அடிக்கிறார் டா. பக்கத்து இடத்துக்காரன் அவன் தங்கச்சி
மேல விழுந்த பழியை துடைக்க உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டுட்டு, தங்கச்சிக்கு
பத்து காசு செலவு பண்ண விருப்பம் இல்லாம உன் அக்காவை கல்யாணம் பண்ணி கணக்கை சரி பண்ண
பார்க்கறான் டா. இதை சொன்னா உன் அப்பா புரிஞ்சுக்க மாட்டேங்கறார். அது மட்டும் இல்ல
டா உன் அக்கா கதையை யாரோ சொல்லி இருக்கணும். அதான் அவளைக் கேட்டா கண்டிப்பா சுமுகமா
எல்லாம் முடிஞ்சுடும்ன்னு பிளான் பண்ணி பண்ணி இருக்கான் டா." என்று குற்றம் சாட்ட,
தொலைவில் செல்போனில்
எதையோ பார்த்துக் கொண்டு நின்றிருந்த ரவியை ஆழ்ந்து நோக்கிய புகழ், அம்மாவின் பக்கம்
திரும்பி,
"மா அவர்
உன் புருஷனா போயிட்டார் அதான் அடிச்சு இருக்கார். ஆனா நான் உன் புள்ள. அதை செய்ய முடியாது,
செய்யவும் மாட்டேன். ஆனா இனிமே வாழ்க்கையில எப்பவும் என்னோட பேசாதன்னு என்னால சொல்ல
முடியும் பேசாம இருக்கவும் முடியும். புரியுதா? இப்படி கிறுக்குத்தனமா நீ பேசாம இருந்தா
கடைசி காலத்துல சோறு போடுவேன். இல்லன்னு வை" என்று இழுத்தவன் உள்ளே சென்று விட,
அவனை அருகே வந்து அணைத்துக் கொண்டார் ஶ்ரீதரன்.
தன்னிடம் இத்தனை
நாட்களாக பேசாத தந்தை கட்டியணைத்து நிற்பதைக் கண்ட புகழின் விழிகள் ஈரமாயின.

கருத்துகள்
கருத்துரையிடுக