சாரல் 33 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 33

 


சரோஜா நடந்ததை நம்ப முடியாமல் பார்த்திருந்தாள். தன்னை எதிர்த்து பேசுவது கூட வீணான நேர விரயம் எனும்படி ஒதுங்கி ஒதுங்கி செல்லும் மனிதர் இன்று தன்னை அடித்ததை அவரால் ஜீரணிக்க இயலவில்லை.

 

"என்ன தைரியம் உங்களுக்கு? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? இவளோட ராசி என்னனு எனக்கு தெரியாதா? எவ்வளவு கஷ்டபட்டு அந்த மோகனரங்கத்தோட கல்யாண ஏற்பாடு பண்ணினேன். லட்ச லட்சமாக செலவு பண்ணி எல்லாம் செஞ்சேன்ல? ஆனா இவ என்ன பண்ணினா? கடைசில அந்த கல்யாணம் நடக்காம மொத்த காசும் கைவிட்டு போற சூழ்நிலை வந்தப்ப நான் இவ கிட்ட எவ்வளவு கெஞ்சினேன்? இவ மட்டும் தர்மாவை கல்யாணம் பண்ண சரின்னு சொல்லி இருந்தா, இன்னிக்கு வாடகைக்கு கேட்டுட்டு நிக்கிற காம்ப்ளெக்ஸ் என் மகன் பேர்ல இருந்திருக்கும்." என்று அவள் அங்கலாய,

 

"வாயை மூடு. என்ன வாய் உன்னோடது? நீ பெத்த மகளை நீயே இப்படி இழிவா பேசுற. ஆனா ஊர்ல போய் கேட்டுப் பாரு, உன்னையும் என்னையும் புகழையும் தான் இந்த ஊரு திட்டி தீர்க்குது. எழிலை போல ஒரு பொண்ணு உண்டான்னு அவளை கொண்டாடுது. உனக்கெங்க அதெல்லாம் தெரிய போகுது? உனக்கு காசு, பணம், சொத்து, அந்தஸ்து இதெல்லாம் தான் கண்ணுல தெரியும். என் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழி கிடைச்சு இருக்கு. இன்னிக்கு அடிச்ச அடியை நான் முன்னாடியே தந்திருந்தா நீ இவ்வளவு ஆடி இருக்க மாட்ட. என்ன பண்ணுறது பொம்பளையை கைநீட்டி அடிக்கிறது ஆம்பளைக்கு அழகு இல்லன்னு எங்கம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க." என்று அவர் கூற,

 

"இன்னிக்கு அடிச்சு இருக்கீங்களே இது மட்டும் ரொம்ப அழகா?" என்று எகிறிய சரோஜாவைக் கண்டு எரிச்சலுடன்,

 

"பொறுத்து போகவும் ஒரு எல்லை இருக்குன்னும் எங்கம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்க. இன்னிக்கு தான் அவளுக்கு கல்யாணம் பேசி இருக்கோம். இப்போ போய் பழசை பேசுற, அப்ப உன் மனசுல சொந்த பொண்ணு மேலையே எவ்வளவு வன்மம் இருக்குன்னு பாரு" என்று அவர் அவளை நெருங்கி வர,

 

"ஆமா யா வன்மம் தான். நல்ல பணக்கார இடம் கட்டிக் கொடுத்தா, அம்மா வீட்டுக்கு இது வேணும், அது வேணும்ன்னு இவ அங்க பேசி நம்மளை கொஞ்சம் கை தூக்கி விடுவான்னு நம்பி முதலா நெனச்சு தான் லட்ச லட்சமா செலவு பண்ணி கல்யாண ஏற்பாடு பண்ணினேன். ஆனா என் ஆசையில மண்ணை போட்டதும் இல்லாம, என்னை கடைசில கடங்காரியா நிக்க வச்சது யாரு? உன் மக தானே? அப்ப என் மனசுல வன்மம் இருக்காம பாசமா இருக்கும்?" என்ற சரோஜாவின் பேச்சைக் கேட்டு, "ச்சீ" என்று ஒதுங்கிப் போனார் ஶ்ரீதரன்.

 

புகழ் ஏதும் பேசாமல் வாசலைப் பார்த்து அமர்ந்திருக்க,

 

"டேய் புகழு இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்காத டா. அவனுக்கு உன் அக்கா மேல கண்ணு. இதையே சாக்கா வச்சு அவன் தங்கச்சியை கட்ட மாட்டேன்னு சொல்லு. அக்காவை கட்டிக்கணும்னா காசு பணம் காரு பங்களா எல்லாம் கொடுத்தா தான் அவன் தங்கச்சியை கட்டுவேன்னு நில்லு டா. அம்மா உன் நல்லதுக்கு தான் டா சொல்றேன்." என்று அவன் தாடையை தடவ,

 

"என்னம்மா இவ்வளவு தானா இல்ல இன்னும் இருக்கா? ஆரம்பத்துல நான் கூட நீ எனக்காக தான் எல்லாம் செய்யறன்னு தப்பா நினைச்சுட்டேன் மா. ஆனா இப்ப யோசிச்சா, நீ சந்தோஷமா இருக்க, நீ செலவு பண்ண, நீ கஷ்டப்படாமல் இருக்க என்னை காரணம் காட்டி சம்பாதிக்க பார்த்திருக்க மா. ரவி சார் கிட்ட டிமாண்ட் பண்ணுறதா? இந்த நிமிஷம் அவர் நினைச்சா அவர் தங்கச்சியை நான் கடத்திட்டு போனதா கேஸ் கொடுத்து என்னை லாக் அப்ல வைக்க முடியும். ஆனா அவர் அதை செய்யல. ஏன்னா அவர் குணம் அப்படி. எனக்கு அவர் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்து, நான் படிச்ச படிப்புக்கு வேலை வாங்கி தர்றேன் இல்லன்னா அவரோட சேனல் வேலையை பார்க்கலாம்ன்னு தாராள மனசோட சொல்லி இருக்காரு. இதுக்கு நான் அவருக்கு நன்றியுள்ளவனா இல்லாம போனாலும் நீ சொல்ற மாதிரி துரோகியா இருக்கவே கூடாது மா.” என்று கூறியவன்,

 

“தயவுசெஞ்சு இனிமே என்கிட்ட இது சம்மந்தமாக பேசாத. நான் இனிமே ரவி மாமாவுக்கு தான் சப்போர்ட். என் அக்கா வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்." என்று தன் வண்டியை ஸ்டாண்டில் இருந்து எடுத்து வரக் கிளம்பினான்.

 

அவன் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போன சரோஜா, "யாரு டா இந்த ரவி? ஒரே நாள்ல பொட்டி பாம்பா இருந்த ஆளை என்னை அடிக்க வச்சுட்டான், என்னை பார்த்து கூட பேசாத அந்த கிறுக்கு பிடிச்சவளை என்னோட சண்டை போட வச்சுட்டான். இதுக்கு எல்லாம் மேல, என் பேச்சைத் தட்டாத என் மகனை என்னை எடுத்தெறிந்து பேச வச்சுட்டான். உனக்கு என் வீட்டு மாப்பிள்ளை ஆகணுமா? வா டா வா. உன்னை நான் என்ன பாடுபடுத்த போறேன் பாரு. உன் தங்கச்சி தினமும் கண்ணீர் விட்டு கதறிக்கிட்டு உன்கிட்ட ஓடி வந்து இந்த வாழ்க்கை வேண்டாம்னு சொல்லுவா பாரு. சொல்ல வைப்பேன்."என்று சூளுரைத்துக் கொள்ள,

 

ராகினி மனதில் சரோஜாவை பற்றிய பிம்பம் மிகவும் மோசமாக இருந்ததால் அண்ணனுக்கு முந்திக் கொண்டு புகழிடம் சில விஷயங்களை பேசித் தீர்க்க முடிவு செய்தாள்.

 

புகழை அவள் கைபேசியில் அழைக்க, வண்டியை ஸ்டாண்டில் இருந்து எடுத்த பின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தவன், அவள் எண்ணைக் கண்டு துணுகுற்றவனாக அதனை ஏற்றான்

 

"நாம கொஞ்சம் பேசலாமா?" என்று ராகினி வினவ,

 

"கல்யாணத்தை நிறுத்த மட்டும் சொல்லாதீங்க. என் அக்கா வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு." என்று நேரடியாகவே கூறிவிட்டான் புகழ்.

 

"இல்ல. எனக்கு உங்க அம்மா பத்தி பேசணும்." என்றவள் சந்தேகம் மிகுந்தவளாக,

 

"அது உங்க அம்மா தானே? அப்பாவோட இரண்டாவது தாரம், அதாவது சித்தி இல்லையே?" என்று கேட்டு வைக்க புகழ் கடகடவென்று சிரித்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels