சாரல் 32 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 32

 


அன்றைய நாள் அனைவரும் நிம்மதியான உறக்கத்தில் கழித்தனர்.

 

ராகினி தன் தவறை மறந்து, திருமணத்தை ஏற்க முடிவு செய்தாள். அவளுக்கு புகழ் பற்றி ஏதும் தெரியாமல் போனாலும் தன் தாய்மாமன் பேச்சுக்குப் பின் தான் அண்ணன் தனக்கு எத்தகைய பாதுகாப்பை கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது.

 

தன் மகனுக்கு மணக்கக் கேட்ட தன் தங்கை பெண்ணை இன்று கைபேசியில் அழைத்ததற்கே உணவுக்கு வழி இல்லையா என்பது போல அவர் பேசிய விதத்தில் கண்டிப்பாக அவர் தன்னை பிரதீஷுக்கு மணம் முடித்து வைத்திருக்க மாட்டார் என்று வெட்ட வெளிச்சமாகி இருந்தது.

 

எந்த பாதுகாப்பும் இல்லாமல் அவளால் கண்டிப்பாக வாழ முடியாது. அன்னையின் நிழலில் வாழ்ந்து பழகிய அவளுக்கு தனித்து வாழும் தைரியம் என்பது அறவும் இல்லை. இதை அவள் முழுவதும் உணராது போனாலும் அண்ணன் தந்திருக்கும் நிழலின் அருமை அவன் சரோஜாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே செல்ல முடியுமென்றால் செல் என்று சொன்ன போது உறைத்தது.

 

ஆழ்ந்த யோசனைக்கு பின் திருமணம் தனக்கு பாதுகாப்பு அதே நேரம் அண்ணன் சொல்லுக்கு முழுவதுமாக கட்டுப்பட தேவையிருக்காது என்று கடைசியில் சுயநலமான முடிவுக்கு வந்து உறக்கத்தை தழுவி இருந்தாள்.

 

ரவியின் மனநிலை வேறு விதமாக இருந்தது. அவன் மனதில் ராகினி பற்றிய நினைவே இல்லை. அவன் மனதிற்குள் எப்பொழுது எழிலிசை நுழைந்தாள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

 

அவன் கைபேசியில் முதல் நாளில் இருந்து வந்து குவிந்திருந்த அறிவிப்புகளைக் கண்டு அதில் கவனம் செலுத்த,

 

நெடுநாட்களுக்குப்பின் அவனது தீவிர பார்வையாளரான ‘அழகி’ கமெண்ட் செய்திருந்தாள்.

 

"என்னை தேடினிங்களா? எனக்கு வேலை கிடைக்கவும் யூடியூப் பக்கம் வர முடியல. அப்பப்ப உங்க வீடியோ பார்த்தேன். கொஞ்ச நாளா பழைய உற்சாகம் உங்க கிட்ட இல்லையே. உங்க அழகிய சிரிப்போடு கூடிய துள்ளல் பேச்சை கேட்க மிகவும் ஆவலா காத்துகிட்டு இருக்கேன்." என்று எழுதி இருந்தாள்.

 

அதற்கு நன்றி தெரிவித்து விட்டு கண்டிப்பாக பழைய படி உற்சாகத்தோடு வீடியோக்களை பதிவிடுகிறேன் என்று கூறினான்.

 

மீண்டும் எண்ணங்கள் எழிலிசை பக்கம் நகர, அவளின் முகத்தில் தெரியும் அந்த அன்பு அவனுக்கு ஆச்சரியத்தைத் கொடுத்தது.

 

அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அவனை காந்தம் போல கட்டி இழுப்பதை உணர்ந்தான். அவள் கைகளை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்த போது உள்ளே சிலிர்த்து அடங்கிய மனதை புரிந்து கொள்ள முயன்றான்.

 

அவளின் எண்ணங்களின் ஊடே மெல்ல மெல்ல நித்திரைக்குள் கரைந்தான்.

 

உணவுக்குப் பின் ரகுராமும் வைதீஸ்வரியும் வெளியே இருந்த டேபிள் சேரில் அமர்ந்து நேற்றிலிருந்து நடந்த நிகழ்வுகளை அசை போட்டனர்.

 

"ஏங்க நாம என்ன நினைச்சு இங்க கிளம்பி வந்தோம்? அருணகிரி குடும்பத்துல பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தா ரெண்டு பேர் வாழ்க்கையும் நல்லபடியா போகும்னு தானே? ஏற்கனவே பணம், சொத்து எல்லாம் போய் இருக்குற இவங்க, இப்படி கடனும் பிரச்சனையும் உள்ள ஒரு வீட்டுல கல்யாணம் பண்ண நினைக்கிறது சரியா வருமா?" என்று தன் மனக் கிலேச்சத்தை வெளிப்படுத்தினார் வைதீஸ்வரி.

 

"நீ உன் பார்வையில இந்த பிரச்சனையை பார்த்து கேள்வி கேட்குற ஈஸ்வரி. ஆனா ரவி வேற மாதிரி அதை பார்க்கறான். அவன் ஆரம்பத்துல இருந்தே பணத்துக்கு பெருசா மதிப்பு கொடுக்காதவன். ஆனா அதோட முக்கியத்துவம் தெரிஞ்சவன். அதுனால தான் யூடியூப்ல வந்த வருமானத்தை இப்படி பெருக்கி, மோசமான சூழ்நிலையில் இருந்து வெளில வந்து இருக்கான். அவன் மனசுக்கு எழில் மேல பெரிய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கு. அதுக்கு சரியான காரணமும் இருக்கு. எழில் ரொம்ப பொறுப்பா இருக்கா. அக்கறை, அன்புக்கு பஞ்சம் இல்ல. இப்போவே ராகினியை அழகா ஹேண்டில் பண்ணுறா. கண்டிப்பா நாளைக்கு அவளோட சண்டைக்கு நிற்க மாட்டா. அந்த பையன் புகழும் தெளிவா இருக்கான். ராகினி ஒருத்தி தான் இதுல ‘ஆட் மேன் அவுட்’ மாதிரி தனியா நிக்கிறா.

 

ஆனா அவளை எழிலை வச்சு சரி பண்ண முடியும்னு ரவி நம்புறான். அந்தம்மா சரோஜா கொஞ்சம் பேராசை பிடிச்சவங்களா இருக்காங்க தான். ஆனா அவங்களை ரவி ஒரு மாதிரி சரி பண்ணி எல்லாத்தையும் நேராக்கிடுவான். எனக்கு நம்பிக்கை இருக்கு." என்று ரகுராம் கூற,

 

"நல்லா இருந்தா சரி. நாம சாயங்காலம் போய், சீர் தட்டு, ரெண்டு பொண்ணுங்களுக்கு பட்டுப் புடவை எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்." என்று வீட்டின் பெண்மணியாக வைதீஸ்வரி கூற ரகுராமும் ஆமோதித்தார்.

 

இருவரும் சற்று ஓய்வெடுக்க அறைக்குள் வர, பக்கத்து அறையில் ரவி அன்று சொன்னது போல வாயில் விரல் வைத்து தூங்கிக் கொண்டிருந்த ராகினியைக் கண்டு அவர்கள் முகத்தில் புன்னகை அரும்பியது. இன்னும் வளராத குழந்தை அவள். அவளுக்கு அனைத்தையும் கற்பிக்கும் பொறுமை கண்டிப்பாக எழிலுக்கு உண்டென்று நம்பினர் இருவரும்.

 

சரோஜா வீட்டில் நிலைமை தலைகீழாக இருந்தது.

 

சரோஜா வாய் ஓயாமல் புலம்பியபடி பாத்திரங்களை சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தாள்.

 

எழில் அமைதியாக தன் எம்பிராய்டரி வேலையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, ஶ்ரீதரன் மகள் முகத்தைப் பார்ப்பதும் தன் கையில் இருந்த நாளிதழைப் பார்ப்பதுமாக இருந்தார்.

 

சில நிமிடங்களில் தந்தையின் கண்களில் தெரியும் தவிப்பை உணர்ந்து, "என்னாச்சு பா? என்கிட்ட ஏதாவது பேசணுமா?" என்று கையிலிருந்த எம்பிராய்டரி ஃப்ரேமை கீழே வைத்துவிட்டு தந்தையைப் பார்த்து அமர்ந்தாள்.

 

"அது… உனக்கு அந்த தம்பியை பிடிச்சு இருக்கா? அவர் கேட்கவும் நானும் வேகமா தலையை ஆட்டிட்டேன். நீயும் ஒன்னும் சொல்லல. அதான்… ஒரே குழப்பமா இருக்கு. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசைப்பட்டேன் தான். ஆனா அது உனக்கு பிடிச்ச வாழ்க்கையா தான் இருக்கணும். எதையும் மறைக்காம உன் மனசுல உள்ளதை சொல்லு செல்லம்." என்று நயமாய்க் கேட்டார்.

 

"எனக்கு ரவி சாரை முன்னாடியே தெரியும் பா. அவரோட சேனல் பார்த்திருக்கேன். ராகினி இங்க வந்ததுல இருந்து பழக்கம். கொஞ்சம் விளையாட்டுத்தனமும் பிடிவாதமும் அதிகம் உள்ள பொண்ணு. மத்தபடி அவ ரொம்பவே நல்ல குணம் உள்ளவ தான். ரவி சார் பத்தி சொல்ல எதுவும் இல்லப்பா. அவர் நினைச்சு இருந்தா புகழ் மேல தப்பு சொல்லி என்ன வேணாலும் செய்திருக்க முடியும். அதுக்கான ஆள் பலம், பண பலம் இருந்தும் நேர்மையா நடந்துக்கிட்ட அவரை வேண்டாம்னு சொல்ல எந்த காரணமும் இல்ல. இது எல்லாத்தையும் விட, அவர் என்னை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்க கேட்கறார் பா. நாம விரும்புறவங்களை விட நம்மளை விரும்புறவங்க கூட அமையற வாழ்க்கை தான் உண்மையிலேயே அழகா இருக்கும் பா. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல. அதுனால நாளைக்கு எந்த வருத்தமும் எனக்கு வராது. புகழும் இனி நல்லபடியா இருந்தா, நானும் உங்க பக்கத்திலேயே நல்லபடியா வாழ முடியுங்கும்போது வேற என்ன பா வேணும் எனக்கு?" என்று கேட்டவள்,

 

"புகழ், அவர் உனக்கு வேலை வாங்கித் தரேன்னு சொல்லி இருக்கலாம். ஆனா அக்கா முன்னாடி சொன்னது போல கடை போடு, அவர் சொல்ற வேலையை கடை மூடி வைக்கிற நேரம் செய். உனக்கான அடையாளம் உன்னால ஏற்பட்டதா, உன் திறமையால கிடைச்சதா இருந்தா தான் உனக்கு பெருமை. நாளைக்கே யாரும் புகழ் உயர அவங்க அக்கா வீட்டுக்காரர் காரணம், பொண்டாட்டியோட அண்ணன் காரணம்னு சொல்லக் கூடாது." என்று அழுத்தமாக கூற,

 

"சரிக்கா. ஆனா கடையோட அட்வான்ஸ், வாடகை, முதலீடு இதுக்கெல்லாம் என்ன பண்றது? குறைந்தது இரண்டு லட்ச ரூபா வேணும் கா."என்று யோசனையாக பேசினான் புகழ்.

 

"கிடைக்கும் டா. நம்பிக்கையோடு செய்வோம். உன் மனைவி வர்ற நேரம் உனக்கு பெரிய உயரம் காத்திட்டு இருக்கலாம்ல?" என்று தன் தமையனுக்கு ஆதரவாகப் பேசினாள் எழில்.

 

"எப்படி உனக்கும் மோகனரங்கத்துக்கும் கல்யாணம் பேசினதும், நீ போக இருந்த நேரம் அவன் நல்ல உயரத்துக்கு போனானே அப்படியா?" என்று நக்கலாகக் கேட்டார் சரோஜா.

 

எழில் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட, வேகமாக அவர் அருகில் வந்த ஶ்ரீதரன் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கைத்தடத்தை அவர் கன்னத்தில் பதித்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels