சாரல் 31 | Tamil Novels | Jeyalakshmi Karthik

 

சாரல் 31

 


ரவி அனைவரையும் தீர்க்கமான பார்வை பார்த்து, "நல்ல நாள் பார்த்து ரெண்டு கல்யாணத்தையும் முடிச்சுக்கலாம். ரெண்டு நாளா ஒரே மன சஞ்சலம். முதல்ல அது போக எல்லாரும் ரெஸ்ட் எடுப்போம். அப்பா நீங்க இசையும், புகழையும் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க. நான் நாளைக்கு பெரியப்பா பெரியம்மா கூட வந்து வீட்ல கல்யாண விஷயம் பேசுறேன்." என்று ஶ்ரீதரனிடம் கூறி எழிலிடம் கண்களால் விடை கொடுத்தான்.

 

கிளம்பும் போது புகழ் வந்து ரவியை அழுத்தமாக அணைத்து விட்டு சென்றான்.

 

அவன் செயலில் ரகுராம் சிரித்தபடி, "என்ன ரவி, உன் மச்சான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறான் போல." என்று முதுகில் தட்ட, வைதீஸ்வரி அவனை கடந்து உள்ளே சென்றார்.

 

அவனும் ரகுராமும் வீட்டில் நுழைய வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ராகினி எழுந்து கொள்ளாமல் கண்ணீர் மழை பொழிந்த வண்ணம் இருந்தாள்.

 

அதைக் கண்ணுற்ற வைதீஸ்வரி, "ரவி ரொம்ப அவசரப்படுறியோ? என்ன இருந்தாலும் நம்ம பிள்ளைக்கு பிடிக்காத வாழ்க்கையை அமைச்சு கொடுக்க கூடாது பா." என்று ராகினிக்காகப் பேசினார்.

 

"எனக்கு புரியுது பெரியம்மா. ஆனா அவளை பார்த்தீங்களா? இன்னும் அந்தஸ்து, இடம், உயரம்னு பேசிட்டு இருக்கா. கண்ணெதிரே அப்பா வீட்டை தொலைச்சதை பார்த்திட்டு தானே வந்தா, காதால மாமா பேசின அற்புதமான வார்த்தைகளை கேட்டா தானே, அப்பறமும் தன்னோட தப்புக்கு மன்னிப்பு கேட்க அவளுக்கு மனசு வரல பாருங்க. அவளை மாத்த இசையால முடியும். அதே போல புகழ் முன்ன தப்பு பண்ணி இருந்தாலும் அது புரிஞ்சு, திருந்தி மன்னிப்பு கேட்டு தன்னை மாத்திக்க தயாரா இருக்கான். கொஞ்சம் உதவி செஞ்சா போதும் கண்டிப்பா நல்லா வருவான். அவளுக்கே அப்பறம் புரியும், நான் நல்ல வாழ்க்கையை தான் ஏற்படுத்தி கொடுத்து இருக்கேன்னு." என்று உறுதியாக கூறினான்.

 

"என்னவோ ரவி, நீ சொல்ற, நாங்களும் நம்புறோம். நாளைக்கே அவ பிரச்சனைன்னு வராம இருந்தா சரி." என்று பெரூச்சு விட்டவருக்கு வயிறு என்று ஒன்று இருப்பது அப்பொழுது தான் உறைத்தது.

 

"நேத்தில இருந்து யாரும் சாப்பிடல, இருங்க நான் சீக்கிரம் சமையல் பண்ணுறேன்." என்று எழுந்து கொண்டார்.

 

ரகுராமும் "ஆமா ஈஸ்வரி, இவ்வளவு நேரம் ஒன்னும் தெரியல. திடீர்னு பசி வயித்துல என்னவோ செய்யுது." என்று சாய்ந்து அமர்ந்தார்.

 

"இருங்க பெரியம்மா, இப்போ எதுவும் செய்ய வேண்டாம். நான் கடையில வாங்கிட்டு வர்றேன்."என்று அவன் எழுந்து கொள்ள, ராகினி வாடிய முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

அவளைக் கண்டு ரவி அவளருகில் செல்ல, அவள் பின்னால் எழில் நின்றிருந்தாள்.

 

அவளைக் கண்டதும் ரவியின் முகத்தில் வெளிச்சம் பரவியது. கண்கள் ஒளிர்ந்தது.

 

"என்ன இசை?" என்று அவன் ஆர்வமாக வர,

 

"இல்ல யாரும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க, அதான் உங்களுக்கும் சமையல் பண்ணி வச்சிருந்தேன். எடுத்துட்டு வந்தேன். சாதம், ரசம், உருளைக்கிழங்கு பொரியல் தான் செய்தேன். அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க." என்று சொல்லிக் கொண்டு வந்த கூடையை அங்கிருந்த உணவு மேசையில் வைத்தாள்.

 

ராகினி இன்னும் கண்ணீர் விட்டபடி இருக்க,

 

"ராகினி, இப்படியே அழுதா என்ன அர்த்தம் டா? சாப்பிட்டு படுத்து தூங்கு. எழுந்துக்கும் போது கண்டிப்பா ஃப்ரெஷ்ஷா இருக்கும். கல்யாணம், அது இதுன்னு எதையும் யோசிக்காத. உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது." என்று எழில் அவளை அணைத்து ஆறுதல் கூற,

 

"அக்கா" என்று வாய்விட்டு அழுதவள், "இனிமே எதையும் மாத்த முடியாது கா. அண்ணா சொன்னப்ப எனக்கும் கோபமா வந்தது. ஆனா… நான் தானே உங்க தம்பி பேர் கெட்டுப் போக காரணம். கல்யாணம் பண்ணினா எல்லாம் சரியா போகும்னா பண்ணிக்கிறேன். ஆனா எனக்கு உங்க அம்மாவை பிடிக்கல." என்று அழுதபடி கூற, இவள் எவ்வகையில் சேர்த்தி என்று தெரியாமல் மற்றவர்கள் விழித்தனர்.

 

"இங்க பாரு ராகினி. நீ ஒன்னும் குழந்தை இல்ல. சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத." என்று ரகுராம் அமைதியாகவே கூறினாலும் அதில் கண்டிப்பு இருந்தது.

 

"மாமா, விடுங்க. சின்ன பொண்ணு தானே போக போக எல்லாமே புரிஞ்சு நடந்துக்குவா. நீங்களே ஆச்சரியமா சொல்லுவீங்க பாருங்க, எங்க ராகினியா இதுன்னு!" என்று கேலி போல கூறி பெரியவர்களையும் சமாதானம் செய்து ராகினியை உணவு உண்ண வைத்தாள் எழில்.

 

பெரியவர்களுக்கு தட்டில் உணவைக் கொடுத்தவள், கைகள் நடுங்க ரவியிடம் நீட்டினாள்.

 

"என்ன இசை, பேச்சு எல்லாம் சும்மா தரமா இருக்கு. ஆனா கிட்ட வந்தா என்னவோ உள்ள நடுங்குதே." என்று குறும்பாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் வினவ,

 

"ரவி இது வெறும் பத்துக்கு நாப்பது கண்டெய்னர் தான். நீ அங்க பேசினா எனக்கு தெளிவா கேட்குது." என்று வைதீஸ்வரி அவனை வாரி விட,

 

ராகினி கூட மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்.

 

பின் மெல்ல வாய் திறந்து, "அண்ணா அப்ப அப்பாவோட பிஸ்னஸ், நம்ம கெஸ்ட் ஹவுஸ், தோட்டம் எல்லாமே போயிடுச்சா?" என்று வினவ,

 

"நான் கிளம்பறேன் அத்தை. நைட்டு டிபன் எடுத்துட்டு வரேன்." என்று எழில் நழுவ முயல,

 

"இரு இசை." என்று அவளை நிறுத்தினான் ரவி.

 

பின் தங்கையிடம், "யாரோ புது காண்ட்ராக்ட் ஜெர்மனில இருந்து தர்றதா கேள்விப்பட்டு பெரிய அளவுல அப்பா கடன் வாங்கி இருக்கார் ராகினி. அதுக்கு கொலாட்ரல்காக எல்லா டாகுமெண்ட்டும் கொடுத்து இருக்கார். கிட்டத்தட்ட ஆறு மாசமா பிரச்சனை நடந்தும் அப்பா எங்கிட்டயோ உங்கிட்டயோ ஒரு வார்த்தை கூட சொல்லல. நானும் அவங்க இறப்புக்கு பின்னாடி எல்லாத்தையும் சரி பண்ண பார்த்தேன். ஆனா எல்லாமே ஏற்கனவே அவங்க பேருக்கு மாத்திட்டாங்க. லீகலா எதுவுமே முடியாதுன்னு தெரிஞ்ச பின்னாடி, கையில இருக்குற பணத்துல வாடகைக்கு வீடு பார்க்க தான் அக்கவுண்ட்ல எவ்வளவு இருக்குனு பார்த்தேன்.

 

ஏற்கனவே பெரியப்பா சொல்லி போட்ட மியூச்சுவல் ஃபண்ட், இன்வெஸ்ட்மென்ட் பண்ணி வச்ச ஷேர், கையிருப்பு, அப்பா போட்ட எஃப்.டி எல்லாம் எடுத்து பார்த்தப்ப, அந்த சூழ்நிலைக்கு பெரிய அமவுண்ட் வந்தது. சென்னையில் ஒரு வீடு வாங்கிட்டு நான் வேலைக்கு போய் உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு வாழ்ந்திருக்க முடியும். ஆனா எனக்கு சிட்டி லைப் பிடிக்கல. சென்னையில வீடு வாங்கற பணத்துக்கு இங்க இவ்வளவு பெரிய இடத்தை வாங்க முடிஞ்சுது. உனக்கும் பெரிய இடம், இயற்கை எல்லாம் அப்பா அம்மா இழப்புல இருந்து வெளில வர உதவியா இருக்குன்னு நெனச்சு தான் இதெல்லாம் செய்தேன்." என்று நிதானமாக விளக்கினான் ரவி.

 

அவன் அருகே வந்து நின்ற எழில், "இன்னிக்கு அவளுக்கு இப்படி சொல்றத, நிதானமா முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு அனர்த்தம் நடந்து இருக்காது ரவி சார்." என்று கூற,

 

"இல்ல அவ இவ்வளவு பொறுமையா கேட்டு இருக்க மாட்டா."என்று கூறினான் ரவி.

 

அதை ராகினி ஆமோதிக்க, எழில் அவள் கரத்தைப் பற்றி, "எல்லாமே சரியா ஆகும் ராகினி. ரெஸ்ட் எடு." என்று அவளை அனுப்பிவிட்டு, பெரியவர்களிடம் விடை பெற்றாள்.

 

அவளது அன்பும் அக்கறையும் கண்ட ரகுராமும் ஈஸ்வரியும் ரவீந்தர் சரியான முடிவு எடுத்திருக்கிறான் என்று அவனை மெச்சினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels