சாரல் 29 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 சாரல் 29

 


"ரவி சார் நான் சொல்றத கேளுங்க. ராகினி ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு. இப்படி திடீர்னு யாருக்கோ கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன் நீ போகணும்னு சொன்னா அவ என்ன பண்ணுவா?" என்று எழில் ரவிக்கு எடுத்துக் கூறும் பொருட்டு பேசிக் கொண்டிருக்க, சரோஜா அவளை இழுத்து அந்த பக்கம் தள்ளினார்.

 

"என்ன டி ரொம்ப தான் பேசுற? அதான் அந்த பையன் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிடுச்சுல்ல."என்று எழிலை விலக்க,

 

ஶ்ரீதரன் ரவியிடம் வந்தவர், "தம்பி அவன் என் பையன் தான். இன்னிக்கு உங்க கண்ணுக்கு நல்லவனா தெரியலாம். ஆனா நிறைய தப்பு பண்ணி இருக்கான் பா. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க." என்று ரவியிடம் கூற, ரகுராம் மனதில் ரவியின் முடிவு சரி என்ற எண்ணம் பிறந்தது.

 

அவர் ஶ்ரீதரன் கையைப் பற்றிக்கொண்டு, "சார் பெத்த பையனுக்கு பத்து பைசா லாபமா கிடைக்குதுன்னா, அவனை ஆகா ஓகோன்னு புகழ்ந்து இல்லாததெல்லாம் சொல்றவங்களை தான் பார்த்திருக்கேன். ஆனா எங்க ரவி கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியும் நீங்களும் உங்க மகளும் நியாயம் பேசுறீங்க பாருங்க. கண்டிப்பா உங்க பையன் தப்பானவனா இருக்க மாட்டான். எனக்கும் அந்த நம்பிக்கை வந்திடுச்சு." என்று கூற, புகழ் ஒன்றும் புரியாமல் நின்றிருந்தான்.

 

ராகினி தன் கடைசி வாய்ப்பாக எண்ணி புகழிடம் வந்து நின்றாள்.

 

"இங்க பாருங்க, எனக்கு உங்க பேர் கூட சரியா தெரியாது. எங்கண்ணன் சொல்றான்னு நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா வாழ்க்கை முழுக்க நீங்க தான் கஷ்டப்படணும். கண்டிப்பா என்னால உங்களை ஏத்துக்க முடியாது. தயவு செஞ்சு என் அண்ணன் கிட்ட இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க." என்று கையெடுத்து வேண்டி நின்றாள்.

 

புகழ் அவளைக் கடந்து ரவியிடம் வந்தான்.

 

"சார் உண்மையிலேயே நான் நிறைய தப்பு பண்ணி இருக்கேன் சார். வேலைக்கு போன புதுசுல பார், பப் எல்லாம் போய் அங்க கொடுக்கிறது என்னனு கூட தெரியாம முழு சம்பளத்தையும் கண்டதுக்கு செலவு பண்ணி இருக்கேன் சார். அப்படி பார்த்த என் அப்பா அதுக்கு அப்பறம் என்னை வெளியூர் போகக் கூடாதுன்னு இங்கேயே இருக்க வச்சாரு. அந்த கோபத்துல நிறைய குடிச்சு இருக்கேன் சார். அக்கா கல்யாணம் பேசும்போது அம்மா பேச்சைக் கேட்டு நிறைய தப்பு பண்ணி இருக்கேன். ஊர் இன்னிக்கு எங்களை சேர்த்து வச்சு பேசும், அப்பறம் மறந்து போயிடும் சார். அதுக்காக உங்க தங்கச்சிக்கு பிடிக்காத வாழ்க்கையை கொடுக்காதீங்க சார்." என்று ரவியின் கரம் பற்றி கண்ணீரோடு வினவினான்.

 

"அண்ணா அவன் சொன்னத கேட்டியா? அவனுக்கு நான் வேண்டாமாம். பிளீஸ் இந்த கல்யாணம் வேண்டாம் அண்ணா. நீ சொல்ற பேச்சு கேட்டு நடக்கறேன். இதே ஊர்ல இருக்கணுமா? இருக்கேன். இங்க வேலை செய்யணுமா? செய்யறேன். ஆனா இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம் அண்ணா." என்று ராகினி அவன் கைகளைக் கட்டிக்கொண்டு அழ ரவிக்கு அவளது நிலை பரிதாபமாக இருந்தது.

 

ஆனால் அவன் மனது அடித்துச் சொன்னது அவள் நடிக்கிறாள் என்று. இந்த சூழ்நிலையில் இருந்து தப்பத் தான் அவள் இப்படி பேசுகிறாள். கண்டிப்பாக மனம் திருந்தி அல்ல என்று அறிந்த ரவி புகழிடம் வந்தான்.

 

"தப்பு செய்யாத மனுஷன் இல்ல புகழ். எப்ப உனக்கு நீ செய்தது தப்புன்னு புரிஞ்சுதோ அப்பவே இனி அதை செய்ய உன் மனசு இடம் கொடுக்காது. அது இப்ப நீ பேசுறதுல இருந்தே தெரியுது. நல்ல பையன் தான் நீ. அதுனால எதையும் யோசிக்காத. இன்னிக்கு நிலைக்கு பிடிக்காம இந்த கல்யாணம் நடந்தாலும் அது உன் வாழ்க்கைக்கு நல்லதா தான் அமையும்." என்று சமாதானம் செய்தான்.

 

சரோஜா வேகமாக, "சரி தம்பி என் பையனுக்கு பொண்ணு கொடுக்க சம்மதம் சொல்லிட்டிங்க. அடுத்து பேசுவோமா?" என்று ஜம்பமாக வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர, அதுவரை குடும்ப விவகாரம் என்று தலையிடாமல் இருந்த ஊர் பெரியவர்,

 

"தம்பி சொல்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம், இது உங்க வீட்டு விவகாரம் அதான் இத்தனை நேரம் ஒதுங்கி நின்னேன். ஆனா என்னவோ சரியா படலையே பா. இது தேவையா? நான் ஊர்ல யாரும் இவங்களை பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு கூட சொல்லி வைக்கிறேன். இதுக்காக உங்க வீட்டு பொண்ணை இப்படி கல்யாணம் பண்ணி கொடுக்கணுமா?" என்று கேட்டார்.

 

சரோஜா வேகமாக எழுந்து அவரிடம் வந்து, "என்ன பிரஸிடென்ட் என் பையனுக்கு வர்ற நல்ல சம்பந்ததை கெடுத்து விட பார்க்கறியா? ஏன் இவளுக்கு கல்யாணம் பேசும்போது நீங்க பண்ணின நல்லது போதாதா? உங்களை யாரு இங்க கூப்பிட்டது? இது என்ன ஊர் பிரச்சனையா? அதுவும் இல்லாம பொண்ணு கொடுக்குற அவருக்கும் சம்மதம். பையனோட அம்மா எனக்கும் சம்மதம் நடுல நீ ஏன் வர்ற? " என்று அவரை அடக்கினார்.

 

மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தவர், "கல்யாணம் நல்லா விமரிசையா பண்ணனும் தம்பி. நகை ஒரு அம்பது பவுன், ரொக்கமா அஞ்சு லட்சம், ஒரு கார். அப்பறம் குடித்தனம் பண்ண வீட்டுக்கு தேவையான பொருள். எல்லாம் கொடுத்து சீர் வச்சிடு." என்று அடுக்கிக் கொண்டு போக,

 

ரகுராம் ரவியின் பக்கத்தில் வந்து நின்று அவனையே பார்த்தார்.

 

அவன் முகத்தில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அமைதியாக,

 

"அவ்வளவு காசு என்கிட்ட இல்ல." என்று மட்டும் கூறி நின்றான்.

 

"சரி அவ்வளவு செய்ய முடியாதா? நகை கூட நாற்பது போடு. மத்ததை சரியா செய்திடு பா. எங்களுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு." என்று சரோஜா கூற சட்டென்று வாய் விட்டு சிரித்து விட்டான் ரவி.

 

அமைதியாக ஶ்ரீதரனிடம் சென்றவன், "அப்பா… எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கு. அதை நீங்க தப்பா நினைக்காம சரியா எடுத்துக்கணும்." என்று பீடிகை போட,

 

"இங்க பாருங்க தம்பி, காசு பணம் எல்லாம் எங்க வீட்ல என் கட்டுப்பாடுல இருக்கு. அவர் கிட்ட போய் அஞ்சு லட்சம் இல்ல, அறு பவுன் இல்லன்னு சொல்லி புண்ணியம் இல்ல. நான் தான் இங்க முடிவு பண்ணனும்." என்று சரோஜா எகிற,

 

"நான் உங்களுக்கு சல்லி பைசா கொடுக்க மாட்டேன்." என்று சரோஜாவிடம் அழுத்தமாக கூறிய ரவி, ஶ்ரீதரனிடம்,

 

"நான் என் தங்கச்சியை புகழுக்கு கொடுக்கறது போல, நீங்க உங்க இசையை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்." என்று கேட்க, மீண்டும் அவ்விடத்தில் அசாத்திய அமைதி நிலவியது.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels