சாரல் 28 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 28
"நீ வீட்டை விட்டு போனது ஏதோ கோபத்துலன்னு விட்டுடலாம். உன் அம்மா அப்பா உனக்கு வீட்டோட பண நெருக்கடி தெரியாம வளர்த்ததால ஏதோ புரியாம பேசினன்னு வச்சுக்கலாம். ஆனா சும்மா வேலையைப் பார்க்க கிளம்பின ஒரு பையன் கிட்ட உதவி கேட்டு அவனை பிரச்சனையில் மாட்டி விட்டுட்டு இப்போ என்னமோ அவன் உதவி பண்ணினது அவன் தப்புனு பேசுற? மனுஷங்க நமக்கு செய்யற உதவி, நம்ம தேவை தெரிஞ்சு கடவுள் அனுப்பி வைக்கிற வரம். அதை தப்பா பேசுற? என்ன குணம் இது ராகினி?" என்று வைதீஸ்வரி மீண்டும் கையோங்கி வர,
சரோஜா இடையில் புகுந்தார். "இந்தா பாருங்க பெரியம்மா, நீங்க உங்க வீட்டு சண்டையெல்லாம் அப்பறம் வச்சுக்கங்க. முதல்ல எனக்கு பதில் சொல்லுங்க." என்று சட்டமாக கேட்க, ரகுராம் அவர் கேட்பது புரியாமல்,
"உங்க கிட்ட நாங்க என்ன பதில் சொல்லணும்? புகழுக்கு வேலை போட்டுத் தர்றேன்னு ரவி சொல்லிட்டான்ல?" என்று சரோஜாவை நோக்கினார்.
"வேலை! என்ன பெரிய வேலை? எவ்வளவு சம்பளம் கொடுப்பாரு? என் பிள்ளை சென்னை போயிருந்தா எவ்வளவு சம்பாதிச்சு இருப்பான் தெரியுமா?" என்று அளக்க,
"இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நான் ரெஃபர் பண்ணுறேன். நல்ல கம்பெனில சேரட்டும்." என்று ரகுராம் முடிக்க, நிலைமை அவர் நினைத்த மாதிரி இல்லாமல் கை நழுவுவது பொறுக்காத சரோஜா,
"ஓ... நீங்க சொல்லி வேலை வாங்கி கொடுத்ததா ஊருக்குள்ள சொல்லிடுவிங்க. உங்க பொண்ணு என் பையனோட போனதுக்கும் இதுக்கும் சரியா போச்சா? நாளைக்கு என் சொந்தக்காரன் கூட நம்பி அவங்க பொண்ணை என் பையனுக்கு கொடுக்க மாட்டான்." என்று கத்த,
"இப்போ உங்களுக்கு என்ன வேணும்?" என்று தீர்க்கமாக வினவினான் ரவி.
“ஒன்னு உங்க பொண்ணை என் பையனுக்கு கட்டி வைங்க. இல்லையா, என் பையனை வெளிநாடு போய் வேலை பார்க்க தேவையான அளவு பணம் கொடுங்க. நானே அனுப்பி அங்கேயே கல்யாணம் பண்ணி வச்சுக்கறேன்." என்று சட்டம் பேசிய சரோஜாவைக் கண்டு வைதீஸ்வரி வாயடைத்துப் போனார்.
ரவியைத் தவிர அனைவரும், ஏன் புகழ், எழில் உட்பட அனைவரும் சரோஜாவின் கூற்றைக் கேட்டு என்ன ஒரு அநியாயம் என்று வாயடைத்து போய் நிற்க,
சரோஜா முகத்தில் நல்ல வெளிச்சம். எப்படியும் இத்தனை பெரிய பணக்காரன் தங்கையை இப்படி யாரென்று அறியாத ஒருவனுக்கு மணம் முடிக்க ஒப்புக்கொள்ள மாட்டான். அதனால் கணிசமான தொகையை பெற்று புகழை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி விட்டு மீதி பணத்தை கடன் அடைத்து இனி நிம்மதியாக வாழலாம் என்று கணக்கு போட்டது அவரது நரி மனம்.
முதலில் அங்கிருந்த அமைதியை உடைத்து எரிந்தது ராகினி தான்.
"ஏய் என்ன வாய் ரொம்ப நீளுது? யாரை யார் கல்யாணம் பண்ணிக்கறது? ஆஃப்ட்ரால் இவன் இந்த ஊர்ல சும்மா சுத்துற ஒருத்தன். இவனுக்கு இந்த பரசுராம் பொண்ணு கேட்குதா?" என்று குதிக்க,
இங்கே பிரச்சனை நிகழ்வதாக தகவல் அறிந்து மீண்டும் ஊர் மக்கள் கூட ஆரம்பித்தனர். ஶ்ரீதரன் வேகமாக அவர்களை விலக்கிக்கொண்டு வந்தார்.
மகள் அருகே வந்து என்னவென்று வினவியவருக்கு மனைவியின் செயலில் அவமானம் பிடுங்கித் தின்றது.
வேகமாக ரவி அருகில் சென்றவர், "தம்பி அவ பேசுறது எதையும் பெருசா எடுக்காதீங்க. நீங்க புகழுக்கு வேலை தர்றேன்னு சொன்னதே போதும். அவ பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்." என்று கை எடுத்து கும்பிட, ரவி அவர் கரத்தைப் பற்றி தாழ்த்தினான்.
ஆனால் ராகினியோ, "உங்க பொண்டாட்டியை அமைதியா போக சொல்லுங்க. யாருக்கு என்ன இடம்ன்னு தெரிஞ்சு நடக்கணும்னு சொல்லுங்க." என்று கோபத்தில் கத்த,
ரவி அவர் கரத்தை அழுத்தமாகப் பற்றி, "அப்பா, என் தங்கச்சியை உங்க பையன் புகழுக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு பரிபூரண சம்மதம்." என்று கூறியது குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அவ்விடத்தில் நிசப்தம் நிலவியது.
"ஏய் என்ன டா பேசுற?" என்று ரகுராம் தான் முதலில் தெளிந்தார்.
"என்ன பெரியப்பா? நான் சரியான முடிவு தான் எடுத்து இருக்கேன். எப்படி பார்த்தாலும் அந்த பையன் பேரோட சேர்ந்து ராகினி பேர் அடிபட்டாச்சு. நாளைக்கு நாம என்ன தான் முயற்சி பண்ணி நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி வச்சாலும் இதை சொல்லி அவளை டார்ச்சர் பண்ணினா நாம என்ன பண்ண முடியும்?" என்று கேட்க,
"ஏன் ரவி, அதுக்காக யாருன்னு கூட தெரியாத பையனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்க முடியுமா?" என்று வைதீஸ்வரி அவன் புஜத்தைப் பற்றி வினவினார்.
"நேத்து அவன் கூட போன பொண்ணை அதே மாதிரி கூட்டிகிட்டு வந்திருக்கான். பி. ஈ. படிச்சிருக்கான். நல்ல வேலை செய்ய தெரியுது. நல்ல குடும்பம்." என்றவன் பார்வை சற்று ஏளனமாகவே சரோஜாவை தொட்டு மீண்டது.
"சரி ரவி, நீ சொல்றபடி எல்லாமே சரின்னு வச்சாலும் இந்தம்மா? இவங்க பேசுற விதம் தப்பு. இதை எப்படி ஏத்துக்க முடியும்? நாளைக்கே நம்ம பொண்ணுக்கு ஒரு கஷ்டம் கொடுத்தா நாம என்ன செய்ய முடியும்?" என்று வைதீஸ்வரி திகைப்புடன் வினவ,
"எங்க போக போறா? இதோ பக்கத்து வீட்டுக்கு தானே? என் கண்ணு முன்னாடி தானே இருக்க போறா. அவளுக்கு கஷ்டம் வர விடுவேனா?" என்று ரவி வினவியதும் பெரியவர்கள் அமைதியாகினர்.
ஆனால் ராகினி குதிக்க ஆரம்பித்தாள். "என்னை அப்பா பிரதீஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னாரு. அவன் அந்தஸ்து எங்க, இவன் எங்க? அண்ணா காசு இல்லன்னதும் என்னை தள்ளி விட பாக்கறியா?" என்று ரவியிடம் பாய்ந்தவளை சற்றும் சட்டை செய்யாமல் ஒதுக்கி,
"ஆமா ராகினி. அப்படித்தான்னு வச்சுக்க, இந்த பையனை கல்யாணம் பண்ண விருப்பம் இல்லையா? ஒரு பிரச்சனையும் இல்ல. அவங்க அம்மா கேட்கற காசை கொடுத்துட்டு நீ உன் வாழ்க்கையை பார்த்துக்க." என்று தயவு தட்சண்யம் இல்லாமல் கை விரித்தான் ரவீந்தர்.
அவனின் இந்த அதிரடியை கண்டு எழில் முன்னே வந்து, "என்ன ரவி சார் இது?" என்று கேட்க,
"அவளுக்கு மனுஷங்க குணத்தை பார்த்து மதிக்க யாரும் சொல்லித் தரல இசை. அவளுக்கு புரியணும். புகழ் ஒன்னும் கெட்ட பையன் இல்ல. சில கெட்ட பழக்கங்கள் இருக்கலாம். ஆனா இனி அப்படி செய்ய மாட்டான்னு நான் நம்புறேன். அவளுக்கும் நம்பிக்கை இருந்தா கல்யாணத்துக்கு ஒத்துக்கட்டும். இல்லன்னா உங்கம்மா கேட்குற காசை வச்சுட்டு போக சொல்லுங்க." என்று அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
ராகினி அவளின் நிலை புரிந்து முதல் முறையாக வெடித்து அழுதாள்.

கருத்துகள்
கருத்துரையிடுக