சாரல் 27 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

 

சாரல் 27



 

"என்ன உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்து போச்சா? இல்ல சித்திக்கும் போன் பண்ணி காது குளிர ஏதாவது கேட்க விரும்புறியா?" என்றான் ரவி சற்று நக்கலாக.

 

"அண்ணா. மாமா ஏன் இப்படி பேசுறாரு? போன வருஷம் நம்ம வீட்டுக்கு அவர் பையன் பிரதீஷை எனக்கு மேரேஜ் பண்ணி வைக்க கேட்டு வந்தாரு. அப்பா தான் எனக்கு மேரேஜ் பண்ண இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்ன்னு இவரை அனுப்பி வச்சாரு. அது மட்டும் இல்ல. எப்ப நான் ஆபிஸ் வரேன்னு சொன்னாலும் நீ ஏன் மா கஷ்டப்படணும்னு என்னை எதுலையும் தலையிட விடல. நான், அப்பா அம்மா ரெண்டு பேரும் ஹேப்பியா இருக்கறதா நெனச்சு தான் நானும் ரொம்ப கேர்லெஸ்ஸா இருந்தேன்." என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

 

தன் தங்கை இப்படி உடைந்து அழுவதைக் காண வருத்தமாக இருந்தாலும் அவளுக்கு நிதர்சனம் புரிய வேண்டிய தருணம் இது என்று உணர்ந்த ரவி,

 

"பிஸ்னஸ்ல பெரிய அளவுல ஏதோ இன்வெஸ்ட் பண்ணி இருக்காரு. ரொம்ப பெரிய அளவு. அகலக்கால் வச்சிருக்காங்க. நினைச்ச மாதிரி லாபம் வரல. கடன் ரொம்பவே அதிகமாகி இருக்கு. அன்னைக்கு அவங்க பெரிய பேமென்ட் செட்டில் பண்ண வேண்டிய நாளாம். ஆனா ஆக்சிடென்ட் ஆகவும் மாமாவுக்கு ரொம்பவே கோபம். வேணும்னு தான் பண்ணி இருப்பாருன்னு போலீஸ்ல அவர் தான் சூசைட் அட்டெம்ப்ட்னு கேஸ் கொடுத்து இருக்காரு. போலீஸ் விசாரிச்சு பார்த்தப்ப அப்பா தான் கவனக் குறைவா இடிச்சது சிசிடிவில தெரியவும். அவங்களும் சூசைட்னு முடிவு பண்ணிட்டாங்க.

 

உண்மையா என்ன நடந்ததுன்னு அம்மா அப்பாவே வந்து சொன்னா தான் ராகினி தெரியும். ஏற்கனவே நீ அம்மா அப்பா இறப்புனால ரொம்ப துவண்டு போய் இருந்த, பணம் எப்படி செலவு பண்ணனும்னு தெரிஞ்ச உனக்கு, அதை சம்பாதிக்கிறது பத்தி எந்த ஐடியாவும் இல்ல. அது போல நீ பெருசா யாரையும் மதிக்கவும் இல்ல. உன்னை கொஞ்சம் மாத்திட்டு அப்பறமா உண்மையெல்லாம் சொல்லலாம்ன்னு நான் தான் பெரியப்பா கிட்ட சொன்னேன்.

 

ஆனா அதுக்குள்ள நீ உன் வாழ்க்கையை கம்பிளிகேட் பண்ணிகிட்டதும் இல்லாம அந்த பையன் வாழ்க்கையையும் இப்போ கேள்விக் குறியா ஆக்கி விட்டுட்ட." என்று பொறுமையாக ஆரம்பித்து எரிச்சலுடன் முடித்தான்.

 

"அவனுக்கு என்ன பிரச்சனை? அவனும் சென்னைக்கு கிளம்பி தானே வந்தான். எனக்காகவா வந்தான்? அதுவும் இல்லாம ஒரே பஸ்ல எத்தனையோ பேர் ஒண்ணா போறாங்க. எல்லாரும் சேர்ந்து போனதா கணக்கா? ரொம்ப இடியாட்டிகா இருக்கு அண்ணா நீ சொல்றது." என்று கண்களைத் துடைத்தபடி அவனிடம் கோபம் கொண்டாள்.

 

"நீ சொல்றது அவனும் நீயும் தனித் தனியா பஸ்ல போய் இருந்தா சரி. அவன் கூட வண்டில போய், அவனோட சேர்ந்து பஸ்ல ஏறி, இறங்கின பின்னாடியும் அவனை நீ போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போனா, அவனை எப்படி சக பயணின்னு நீ சொல்ல முடியும்? அவனை நீ கூட்டிக்கிட்டு ஓடினாதா தான் இப்ப ஊரெல்லாம் பேச்சு.

 

அப்பா வச்சு இருந்த கடனை அடைக்க அவர் அடமானம் வச்ச எல்லா சொத்தையும் விட்டுக் கொடுத்து, உன் பேர்ல இருந்த இடம், என் பேர்ல இருந்த காம்ப்ளெக்ஸ் எல்லாத்தையும் வித்து மொத்தமா அடச்சு நிமிரும் போது அப்பா காசுன்னு ஒரு பைசா கூட பாக்கி இல்ல. சென்னையில வாடகை வீட்டுல உன்னை வாழ வைக்கவும் விருப்பம் இல்ல எனக்கு. அப்ப தான் யூடியூப் சேனல் வருமானம் எவ்வளவு இருக்குன்னு பெரியப்பா கிட்ட கேட்டேன். ஏன்னா பணம் வர வர நானும் அவரும் அதை எங்காவது இன்வெஸ்ட் பண்ணி வைப்போம். அப்படி இருந்த எல்லாத்தையும் வித்டிரா பண்ணினா ரெண்டு கோடி ரூபா வந்தது. நான் நினைச்சு இருந்தா அதை அப்படியே வச்சுகிட்டு உன்கிட்ட அப்பா பணம் எதுவும் இல்லன்னு சொல்லி பெரியப்பா பெரியம்மா கூடவோ, இல்ல உன் அன்பு மாமா கூடவோ அனுப்பி இருக்க முடியும்.

 

ஆனா அதை நான் செய்யல. ஏன் தெரியுமா? உன்னை சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ கஷ்டப்படக் கூடாதுனு தான் பணத்தை இந்த ஊர்ல முதலீடு பண்ணி இங்கேயே இருக்க முடிவு பண்ணினேன். பெரிய இடம், முதலாளி அந்தஸ்து, உனக்கும் விஷயம் தெரிஞ்சாலும் பெருசா வித்தியாசம் தெரியாத மதிப்பான வாழ்க்கையைக் கொடுக்க நெனச்சேன். நீயே இப்போ எல்லாத்தையும் கெடுத்து வச்சுட்ட. அந்த பையன் வாழ்க்கை இப்போ உன்னால கெட்டு போச்சு. இது சிட்டி இல்ல. அதே போல பழைய கால கிராமம் இல்லன்னாலும் ஒரு பையனும் பொண்ணும் ஒண்ணா கிளம்பி போய் இரவு தங்கி அடுத்த நாள் திரும்பி வர்றத சாதாரணமா எடுக்குற அளவுக்கு வளரல.

 

இப்போ முடிவை நான் உன் கிட்ட கொடுக்கறேன். அந்த பையன் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லு. நாளைக்கு அவனுக்கு பொண்ணு தேடி போனா, யாரையோ கூட்டிக்கிட்டு போனவன்னு அவனுக்கு பேர் போகாது." என்று அவளுக்கு முதுகு காட்டி நின்றான் ரவி.

 

"வாட் ரப்பிஷ். நான் அவனை டிரைவர் மாதிரி நினைச்சு தான் கூட்டிக்கிட்டு போனேன்." என்று ராகினி பதில் சொல்லும்போது,

 

"வாடியம்மா வா. என் பையன் உனக்கு டிரைவரா? உனக்கென்ன காசுள்ள கண்ணாட்டி அவனை கூட்டிக்கிட்டு போயிட்ட. நாளைக்கு அவனை எப்படி நான் நாலு வீடு ஏறி பொண்ணு கேட்டு கட்டி வைப்பேன்? என் பிள்ளையை இன்ஜினியருக்கு படிக்க வச்சு நல்ல இடமா பார்த்து அவன் வாழறத பார்க்க நான் எவ்வளவு ஆசைப்பட்டேன். இப்படி என் ஆசையை கெடுத்து வச்சுட்டியே? ஊர்க்காரன் எல்லாம் கேவலமா சிரிக்கிறாங்க. எப்படி இந்த ஊர்ல நாங்க வாழறதாம்?" என்று சரோஜா அவ்விடம் வந்து ராகினியுடன் வம்புக்கு நின்றார்.

 

ஏற்கனவே எழிலிடன் அவர் பேசும் விதம் பார்த்திருந்த ராகினி, முகத்தை சுழித்துக் கொண்டு,

 

"இந்த ஊர்ல வாழ முடியலனா வேற ஊருக்கு போங்க. என்னை ஏன் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. நான் கூப்பிட்டா உங்க பையன் ஏன் என்னோட வந்தான்? அவன் என்ன குழந்தையா மிட்டாயை காட்டி நான் கடத்திட்டு போக? யார் கேட்டாலும் துணைக்கு போனேன்னு சொல்ல தைரியம் இல்லாதவன் அன்னைக்கு ஏன் என்னோட துணைக்கு வரணும்?" என்று அவளும் சரோஜாவுக்கு சமமாக கேட்க,

 

எழில் முகத்தில் வருத்தம் வந்தது. புகழ் முன்னே வந்து, "இங்க பாருங்க நான் என் ஃப்ரெண்ட் கூப்பிட்டான்னு சென்னை கிளம்பினேன். சென்னையில இறங்கினதும் அவன் பைக் எடுத்துட்டு என்னைக் கூப்பிட வந்திருந்தான். நீங்க தானே உங்க வீட்டுக்கு போக வேற ஆப்ஷன் இல்லனு, என்னை ட்ராப் பண்ண சொல்லி கேட்டிங்க. உங்களுக்கு ஹெல்ப் பண்ண தானே அவனை வெயிட் பண்ண சொல்லிட்டு அவன் வண்டியை கடன் வாங்கிட்டு உங்களை கூட்டிகிட்டு போனேன். இப்போ உங்களால என் ஃப்ரெண்ட் வண்டி போலீஸ் கிட்ட இருக்கு. நான் போக வேண்டிய இண்டர்வியூவுக்கு போக முடியல. இனி என் ஃப்ரெண்ட் என்னை மதிக்க கூட மாட்டான். எவ்வளவு கஷ்டத்துக்கு நடுவில அந்த வேலை கிடைச்சது தெரியுமா?" என்று புகழ் வருத்தமாகக் குறிப்பிட்டான்.

 

"அதுக்கு நான் என்ன செய்ய? உங்களுக்கு அறிவு இருந்திருக்கணும்." என்று ராகினி அலட்சியமாக கூற அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் வைதீஸ்வரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாரல் 1

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels